அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
தவறு செய்யும் மனிதர்களைப் பார்த்து தவறாகப் பேசாதீர்கள்; ஏனெனில், இன்னும் உங்கள் வாழ்க்கை முடியவில்லை.
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் - பேருந்துகளில் மகளிருக்கு பயணம் இலவசம்:
ஏற்கனவே தலைநகர் தில்லியில் சில வருடங்களாக இந்தத் திட்டம் இருக்கிறது. தலைநகரில் ஓடும் எல்லா பேருந்துகளிலும் மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை. ஆனால் எல்லாப் பெண்களுக்கும் ஒரு தனி வண்ணத்தில் பயணச் சீட்டு கொடுப்பார்கள். அந்த எண்ணிக்கையைப் பொறுத்து தில்லி ட்ரான்ஸ்போர்ட் கார்பொரேஷனுக்கு தில்லி அரசாங்கம் பணம் தரும். பெண் பயணிகளுக்கு இலவசம் என்றாலும் பேருந்துகளை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு அதிக நஷ்டம் இல்லை (ஏற்கனவே அவை நஷ்டத்தில் இயங்குகின்றன என்பது வேறு விஷயம்). இங்கே இதுவரை அப்படியான திட்டம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. பெண்களுக்குப் பயணச் சீட்டு ஏதும் தருவதில்லை. அதனால் எத்தனை பெண்கள் பயணித்தார்கள் என்ற புள்ளி விவரங்கள் அரசுக்குத் தெரியப்போவதில்லை. அரசுப் போக்குவரத்துத் துறைக்கு என்ன நஷ்டம் என்பதை கணக்கிட வழியில்லை. சமீபத்தில் (எட்டாம் தேதி) - லாக்டவுனுக்கு முன்னர் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பராய்துறை வரை சென்று திரும்பினேன். பேருந்தில் இருந்த பயணிகளில் 95 சதவீதம் பெண்கள் தான். மீதி ஐந்து சதவீதம் மட்டுமே ஆண்கள் - அவர்கள் மட்டுமே பயணச் சீட்டு வாங்கிக் கொள்ள நடத்துனர் இருக்கையில் அமர்ந்து கொண்டு பயணித்துக் கொண்டிருந்தார்.
சீட்டுக் கொடுக்கும் வேலை இல்லை என்றாலும், மற்ற வேலைகள் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு ஒரு ஆண் பயணி, ”நான் காசு கொடுத்து பயணிக்கிறேன் - எனக்கு உன் இருக்கையைத் தா” என்று சண்டை பிடித்துக் கொண்டிருந்தார். அடுத்த அடுத்த நிறுத்தங்களில் இறங்குபவர்கள் கூட பேருந்தில் பயணிப்பதைப் பார்க்க முடிந்தது. ஒரு சக ஆண் பயணியின் புலம்பல் - ராஜா காது கழுதைக் காது பகுதியாக இதே பதிவில்! இலவசங்கள் நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை - ஆனால் காசு கொடுத்து பயணிக்க முடிந்தவர்கள் அப்படிச் செய்தால் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குவதைத் தவிர்க்க முடியும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கல்வி மற்றும் மருத்துவம் தவிர மற்ற இலவசங்கள் தேவையில்லை என்பது தான் பலருடைய எண்ணமும் எனத் தோன்றுகிறது. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவம் என்பதை நோக்கிய பயணத்தினை நம் நாடு எங்கே எப்போது தொடங்கப் போகிறது என்பது பெரிய கேள்விக்குறி தான்.
******
ராஜா காது கழுதைக் காது - நாங்க என்ன பாவம் செய்தோம்:
பேருந்தில் பயணித்த ஆண் பயணி ஒருவர் காசு கொடுத்து பயணச் சீட்டு வாங்கிய பின்னர் - “நாங்களும் தான உங்களுக்கு ஓட்டு போட்டோம்! எங்களுக்கு மட்டும் இலவசமா பேருந்தில் பயணம் செய்ய வழி செய்யலையே! நாங்க என்ன பாவம் செய்தோம்? ஏய் கண்டக்டர், இதெல்லாம் அனியாயமா உனக்குத் தெரியலையா? பேசாம, நாளையிலிருந்து புடவை கட்டிட்டு வர வேண்டியது தான்”. அவர் கீழே இறங்கும்போது ஊரில் ஒருவர் கேட்ட கேள்வி இன்னும் அவரை கோபப்படுத்தியது - “என்ன பெரிசு, புடவை கட்டிட்டு வந்திருந்தா காசு இல்லாமல் பஸ்ல வந்திருக்கலாமே!” அதற்கு கோபமாக அவர் சொன்ன பதில் - “ஏலே ஏதாவது சொல்லிடப் போறேன்… நீ வேணும்னா புடவை கட்டிட்டுப் போ! என்ன சொல்ல வந்துட்டான்!”
******
பின்னோக்கிப் பார்க்கலாம் - தெனாலிராமன் – வெல்லட்டும்….டும்..:
2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட ஒரு பதிவு பற்றி தான் இங்கே பார்க்கப் போகிறோம். ஏழு வருடங்களுக்கு முன்னர் திருச்சியில் பார்த்த தெனாலிராமன் திரைப்படம் குறித்து இப்படி எழுதி இருக்கிறேன்.
தில்லியில் இருந்தபோதே திரையுலக மறுபிரவேசமாக வடிவேலு அவர்கள் நடித்த தெனாலிராமன் படத்தின் விமர்சனங்களை வலையுலகத் தோழர்கள் எழுதியதைப் படித்தபோது “வடிவேலுவிற்காக பார்க்க நினைத்திருக்கிறேன்” என பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன். திருச்சி வந்தவுடனே வீட்டிலும் தெனாலிராமன் படத்திற்குச் செல்ல வேண்டும் எனச் சொல்லவே கடந்த 4-ஆம் தேதி ஞாயிறன்று திருச்சி நகரின் பழைய திரையரங்குகளில் ஒன்றான ஊர்வசி திரையரங்கில் மாலைக் காட்சியாக தெனாலிராமன் படத்தினைப் பார்த்தேன்/தோம்.
மாலை 06.30 மணிக்குதான் காட்சி என்றாலும் ஐந்து மணிக்கே சென்றுவிட, 06.00 மணிக்கு தான் நுழைவுச் சீட்டுகள் தருவோம் எனச் சொல்லவே கொஞ்சமாக அப்படியே நடந்து பக்கத்தில் உள்ள நாகநாதர் கோவிலுக்குச் சென்றோம். வவ்வால்கள் நிறையவே குடியிருப்பதால் இருக்கும் ஒரு வித நாற்றத்தின் தாக்கத்தோடு கோவிலைச் சுற்றி வந்தோம். நாகநாத ஸ்வாமியிடம் இது போன்ற கோவில்களை பராமரிக்கும் பணியை விரைவில் நடத்திக்கொள்ள ஏதும் வழி செய்து கொள்ளக்கூடாதா என்ற கேள்வியைக் கேட்டு, “கொஞ்சம் கவனித்துக்கொள்ளேன்” என்று சொல்லி சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு வெளியே வந்தோம்.
மீண்டும் திரையரங்கு பக்கம் வர, ஊர்வசியின் படிக்கட்டுகளில் மக்கள் அனைவரும் பந்தியில் சாப்பாடு கிடைப்பதற்கு முன் அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தார்கள். திடீரென திரையரங்கின் ஊழியர் ஒருவர் ”டிக்கெட் 100 ரூபாய், 80 ரூபாய் – எல்லாத்துக்கும் ஒரே லைன்! வீட்டுக்கு ஒருத்தர் லைன்ல நில்லுங்க போதும்” என்று சொல்ல அனைவரும் முண்டியடித்து வரிசையில் நின்றார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நானும் நிற்க மூன்று நுழைவுச்சீட்டுகளை வாங்கிக் கொண்டேன்.
முழுப்பதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே…
தெனாலிராமன் – வெல்லட்டும்….டும்..
******
இந்த வாரத்தின் விளம்பரம் - காசு இருந்தால் எதையும் வாங்கி விடமுடியாது:
இந்த வாரத்தின் விளம்பரம்/குறும்படம் ஒன்று உங்கள் பார்வைக்கு. காசு இருந்தால் எதையும் வாங்கி விட முடியும் என நினைப்பது எத்தனை தவறு என்பதைச் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்கள் இந்த விளம்பரம்/குறும்படத்தில்… பாருங்களேன். (இங்கேயே காணொளி சேர்த்து வெளியான பிறகு Content Policy Violation என பதிவை நீக்கி விட்டது Blogger!). பிரச்சனை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதனால் கீழே சுட்டி மட்டும்!
******
இந்த வாரத்தின் செயலி - BYNGE:
சில வாரங்களுக்கு முன்னர் இந்த செயலி குறித்து தெரிந்து கொண்டபோது அலைபேசியில் தரவிறக்கம் செய்து கொண்டேன் - அதில் வந்து கொண்டிருந்த இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் ”நந்திபுரம்” தொடருக்காகவே. அத் தொடரை படித்துக் கொண்டிருக்கும் போதே, காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் “மயிலங்கி மங்கையின் மரகதப் பெட்டி” தொடரும் ஆரம்பிக்க, தொடர் பகுதிகள் வெளி வரும் நாட்களில் படித்து விடுகிறேன். இரண்டு தொடருமே ஸ்வாரஸ்யமாகச் சென்று கொண்டிருக்கிறது. இது தவிர, சா. விஸ்வநாதன் (சாவி) அவர்களின் விசிறி வாழை, வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு ஆகிய இரண்டு நூல்களையும் படித்து முடித்தேன். இந்த நூல்களைத் தவிர வேறு சில எழுத்தாளர்களின் நூல்கள் இந்த செயலியில் இருக்கின்றன. வாய்ப்பு இருப்பவர்கள் தரவிறக்கம் செய்து நூல்களை வாசிக்கலாம். வசதியாகவும் இருக்கிறது. கிண்டில் மூலம் படிப்பது தவிர இந்த செயலி மூலமும் வாசிப்பது தொடர்கிறது - நேரம் கிடைக்கிறபோது! அலைபேசியில் Google Play Store மூலம் இந்த செயலியைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
******
இந்த வாரத்தின் கேள்வி பதில் - உண்மையில் யார் கொடையாளி?
நான் ஒரு முறை கோவையில் இருந்து சேலம் செல்லும் போது என் உடன் பயணித்த 22 வயது பெண் தன் செருப்பை காணாமல் தேடினார். அவர் இறங்க வேண்டிய இடம் நெருங்கும் போது தான் ஒரு நேர்காணலுக்கு செல்வதாகவும் செருப்பு இல்லாமல் என்ன செய்வேன் என்று புலம்ப தொடங்கி விட்டார்.
அப்போது ஒரு குழந்தையுடன் இருந்த பெண்மணி சிறிதும் யோசிக்காமல் அவரது ஓரளவு புதிய செருப்பைத் தந்தார். இதற்கு அவர் பார்க்க வறுமையான குடும்பத்தை சேர்ந்தவராகவே தெரிந்தார்.
பாவம் படிக்கற புள்ள வெறுங்காலால் எப்படி போகும்? என்று கூறி அவர் வெறும் காலில் தன் கைகுழந்தையுடன் நடந்து போனார்.
என்னை பொறுத்த வரை தேவையான நேரத்தில் தேவையானதை தேவை அறிந்து கேட்காமல் கொடுப்பவர் தான் சிறந்த கொடையாளி.
- தமிழ் கோரா தளத்தில் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு ஒரு குடும்பத் தலைவி அளித்த பதிலும் மேலே - சிறப்பான பதிலைச் சொல்லி இருக்கிறார். உங்களிடம் இதே கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் என்று பின்னூட்டத்தில் சொல்லலாமே!
******
இந்த வாரத்தின் ரசித்த ஓவியம்:
சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு ஓவியம் உங்கள் பார்வைக்கு! எத்தனை அழகு இந்த ஓவியம்? வரைந்தவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
******
நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்கள். நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து...
பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் அளவை அறிந்து அரசாங்கம் காசு கொடுப்பது சிறந்தது என்றாலும் அதில் இவர்கள் பணம் அடிக்க வழி இல்லையே...
பதிலளிநீக்குதெனாலிராமன் என்றொரு வடிவேலு படம் வந்ததது என்பதே நினைவில் இல்லை!
BYNGE செயலி பற்றி எல்லாம் பேஸ்புக்கில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் உள்ளே நுழையவில்லை. கிண்டியில் படிப்பிப்பதே கொஞ்சம் அலுப்பு. மொபைலில்...
கோரா பதில்களில் நிறைய கற்பனையும் இருக்கும் என்று எனக்குத் தோன்றும். ஆனாலும் இது ஒரு சிறுகதைக்கான அம்சம்!
பேருந்தில் இலவசம் குறித்த உங்கள் எண்ணமும் சரியே!
நீக்குதெனாலிராமன் - இப்போது வரும் படங்கள் பலவும் வந்த சில நாட்களிலேயே மறந்து விடும் விதத்தில் தானே இருக்கின்றன.
BYNGE - நன்றாகவே இருக்கிறது. தற்போது இரண்டு தொடர்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் ஸ்ரீராம்.
கோரா பதில்கள் - கற்பனை தான். சில ஸ்வாரஸ்யம். ‘சிறுகதைக்கான அம்சம்’ - யாராவது எழுதுகிறார்களா எனப் பார்க்கலாம்! எழுதினால் உங்கள் தளத்தில் வெளியிடலாமே! :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவம் என்பது கனவு தான்...
பதிலளிநீக்குகனவு நனவாக வேண்டும் என்பதே ஆசை தனபாலன். பார்க்கலாம்! என்றைக்காவது ஒரு நாள் கனவு நனவாகிறதா என.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
பதிலளிநீக்குகுலனுடையான் கண்ணே யுள (223)
யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு - விளக்கம் முவ!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
ஓவியம் அழகு.
பதிலளிநீக்குஇலவச டிக்கெட் - தமிழகம் தில்லியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். ஏற்கனவே அரசு போக்குவரத்து என்றால் அது டப்பா போக்குவரத்து என்று பெயர். கண்டக்டர், டிரைவருக்கு வரவில் கமிஷன் சுத்தமாகக் கிடைக்காது.
கோரா - இங்கு இருக்கும் கேள்வி பதில் அனேகமாக சாதி, மதம், அரசியல் கட்சி சார்ந்தது என்பதால் நான் படிப்பதில்லை.
ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குவரவில் கமிஷன் - இனிமேல் அப்படிக் கிடைப்பது கடினமே.
கோரா மட்டுமல்ல எல்லா இணைய தளங்கள், Social Media என எல்லாவற்றிலும் இப்படியான விஷயங்கள் தான் கொட்டிக் கிடக்கின்றன. நல்ல விஷயங்களைத் தேடித்தான் படிக்க வேண்டியிருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பின்ஜி தரவிறக்கம் செய்து பார்க்கிறேன்
பதிலளிநீக்குநன்றி ஐயா
நல்ல சில கதைகள், நாவல்கள் இதில் இருக்கின்றன. தரவிறக்கம் செய்து படிக்கலாம். பிடிக்கவில்லை எனில் நீக்கிவிடலாம் என்பதும் இந்த செயலிகளில் உள்ள வசதி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான கதம்பப் பதிவு....பெரும்பாலும் எல்லா நிறுத்தத்திலும் செல்லும் பஸ்ஸாக லோகல் பஸ் இருப்பதால் பெரும்பாலும் கொஞ்சம் வசதி உள்ளவர்கள் அதில் அதிகம் ஏறுவதில்லை...பெண்களுக்குப் பயன்பட்டால் சரிதான்...செருப்புக் கொடுத்தது பெரும் பாராட்டுக்குரிய விசயமே..
பதிலளிநீக்குகாஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
குறும்படம் மிக மிக அருமை ஜி.
பதிலளிநீக்குBYNGE கணினியில் செய்ய முடியாது போல!
அட பெண்களுக்கு இலவசமா?
பயணி கேட்ட கேள்வி நான் என் கதையில் வேறு ஒரு விதமாகச் சொல்லியிருக்கிறேன்....இன்னும் கதை முடிக்கவில்லை.
கீதா
குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குதற்போதைக்கு அலைபேசியில் மட்டுமே இயங்குகிறது BYNGE. அலைபேசியில் படிப்பதில் சில சிக்கல்கள் இருக்கத் தான் செய்கிறது.
உங்கள் கதை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஒவியம் அழகு. ரசித்தேன் ஜி..
பதிலளிநீக்குதெனாலிராமன் ந்னு படமா? கேட்டதே இல்லை...உங்கள் பதிவை வாசித்துவிட்டேன் உங்கள் தியேட்டர் அனுபவம் ப்ளஸ் படம் பற்றியும்.
//என்னை பொறுத்த வரை தேவையான நேரத்தில் தேவையானதை தேவை அறிந்து கேட்காமல் கொடுப்பவர் தான் சிறந்த கொடையாளி.//
அதே அதே டிட்டோ!
கீதா
ஓவியம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குதெனாலிராமன் - முந்தைய பதிவினை படித்து ரசித்ததற்கு நன்றி.
சிறந்த கொடையாளி - உங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தெனாலிராமன் என்றொரு வடிவேலு நடித்த படம் கேள்விப்பட்டேன். பார்த்த நினைவு இல்லை அப்போது பாலக்காட்டில் இருந்தேன். அங்கிருந்தவரை தமிழ்ப்படங்கள் பார்க்க முடிந்தது.
பதிலளிநீக்குபேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்பது செய்தி.
துளசிதரன்
தமிழ் படங்கள் - கேரளத்தில் சில இடங்களில் மட்டுமே வரும் என்பதும் ஒரு விதத்தில் வசதி! :)
நீக்குபேருந்தில் இலவசம் - சமீபத்தில் தான் ஆரம்பித்திருக்கிறார்கள் துளசிதரன் ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
விளம்பரம் குறும்படம் மிக அருமை. ரசித்தேன் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குஓவியமும் அழகாக இருக்கிறது
துளசிதரன்
விளம்பரம்/குறும்படம் மற்றும் ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தெனாலிராமன் படமெல்லாம் பார்க்கலை. இங்கே காமெடி ஷோவில் சில சமயங்கள் அவற்றில் இருந்து வரும். அநேகமாக யானையைப் பானையில் அடைக்கணும் என்கிற காமெடி தான். Bynge கணினியில் தரவிறக்க முடிந்தால் நல்லது. மொபைலில் எல்லாம் என்னால் படிக்க இயலாது. குறும்படம் இனித் தான் பார்க்கணும். செருப்பு தானம் செய்த கொடையாளிக்கூ வாழ்த்துகள். தியேட்டரில் எல்லாம் போய்ப் படம் பார்த்தே சுமார் 30 வருடங்கள் போல் ஆகி விட்டன. தொலைக்காட்சியில் அவ்வப்போது முன்னெல்லாம் பார்த்தேன். இப்போது அதுவும் இல்லை.
பதிலளிநீக்குகாமெடிக் காட்சிகளில் பார்க்கக் கிடைப்பதுண்டு - நானும் தியேட்டரில் சென்று படம் பார்ப்பது குறைவு தான் கீதாம்மா.
நீக்குBYNGE - கணினியில் இல்லை. இப்போதைக்கு அலைபேசியில் மட்டுமே!
குறும்படம் - முடிந்த போது பாருங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பது பின்னாட்களில் நிதிச்சுமையாக மாறலாம். இன்னிக்குத் தொலைக்காட்சியில் கொரோனா நிவாரண நிதிக்காக 2000 ரூ பணம் வாங்கக் கூடிய பெண்களைப் பார்த்தால் அலுப்பும், கோபமுமாக வந்தது. கொஞ்சமும் கட்டுப்பாடு இல்லாமல்! :( கொரோனா பரவாமல் எப்படி இருக்கும்?
பதிலளிநீக்குபெண்களுக்கு இலவசம் - நிதிச்சுமையாக மாறலாம் - லாம்! கீதாம்மா.
நீக்குதமிழகத்தில் இருக்கும் கூட்டம் பார்க்கும்போது பயமாகத் தான் இருக்கிறது - நமக்கு. அவர்களுக்கு பயமே இல்லை! வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்றே இருக்கிறார்கள் போல.
பரவல் அதிகமாகவே இருக்கிறது - தகவல்கள் மறைக்கப்பட்டாலும். திருவரங்கத்திலும் கேட்கும் பாசிட்டிவ் செய்திகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஓவியம் அழகோ அழகு! புடைவை பத்தி என்ன சொல்லி இருக்கீங்கனு தேடினேன். கிடைக்கலை/அல்லது என் கண்களில் படலை. :)
பதிலளிநீக்குஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஓஓஓஓஓஓ! ராஜா காது கழுதைக்காது! புடைவை கட்டிக் கொண்டு பயணிப்பது குறித்தா? சரி, சரி! :)
பதிலளிநீக்குஅதே தான் கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அனைத்தும் அருமை.
பதிலளிநீக்கு//பாவம் படிக்கற புள்ள வெறுங்காலால் எப்படி போகும்? என்று கூறி அவர் வெறும் காலில் தன் கைகுழந்தையுடன் நடந்து போனார்.//
மனதை கவர்ந்தார்.
காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.