ஞாயிறு, 9 மே, 2021

மேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஐந்து - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


SMILE IS THE BEST CREDIT CARD BECAUSE IT IS ACCEPTED WORLD WIDE, AUTO RELOADED, UNLIMITED USAGE, NO PAYMENT IT KEEPS EVERYONE HAPPY. SO KEEP SMILING. 


******







நண்பரின் மேகாலயா பயணம் தொடர்பான கட்டுரையின் முதல் நான்கு பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தது நினைவில் இருக்கலாம்.  நினைவு இல்லாதவர்கள் வசதிக்காக, இதுவரை வெளிவந்த இந்த பயணத் தொடரின் பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!


முதல் பகுதி 


இரண்டாம் பகுதி


மூன்றாம் பகுதி


நான்காம் பகுதி


இதுவரை வெளிவந்த பகுதிகளை படித்து முடித்த பின்னர் இந்த ஐந்தாம் பகுதியைத்  தொடரலாம். இனி பயணத் தொடரை நண்பர் சுப்பு எனும் சுப்ரமணியன் அவர்களின் வார்த்தைகளில் படிக்கலாம் வாருங்கள்! - வெங்கட் நாகராஜ் 


******





சென்ற பகுதியில் எங்கள் ஓட்டுனர் மனோஜ் ஒரு பாதையைக் காட்டி இது வழி செல்லுங்கள் என்றார். நாங்களும் என்ன ஏது என்று பு(தெ)ரியாமல் லகான் கட்டிய குதிரைகளைப் போல் சென்றோம். சற்று தூரம் கான்கிரீட் நடை பாதையில் சென்றோம். அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்வதாக எழுதி இருந்தேன்.  இதோ அடுத்த பதிவுடன் உங்களைச் சந்திக்க வந்து விட்டேன்.  அந்த பாதையில் சென்ற போது, ஒரு சிறிய கைகாட்டி LIVING ROOT BRIDGE என கைகாட்டி, எங்களைப் பார்த்துச் சிரித்தது. பிறகு தான் புரிந்தது மேகாலயாவில் பிரசித்திபெற்ற மரங்களின் வேர்கள் பின்னிப்பிணைந்து உருவான, இல்லை இல்லை உருவாக்கப்பட்ட பாலத்தை காணச் செல்கிறோம் என்று. சற்று நேரத்தில் கற்களால் ஆன படிகளாகவும், கரடு முரடாகவும் நீண்டுகொண்டே சென்றது பாதை. 





போகுதே போகுதே என்ற பாடல் ஒலித்தார் போல் ஒரு நினைவு. ஒருபுறம் மலைப்பாதை. அதை அடுத்து அதலபாதாளம். இடையில் சிறு சிறு குடிசைகள் அமைத்து அந்த மாநில மங்கையர் பாரம்பரிய உடைகளில் கடைகளில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் அங்கே கிடைத்தவை அட்டகாசமான சுவையில் அன்னாசி, வெள்ளரிக்காய், வட இந்தியாவில் அதிகமாகக் கிடைக்கும் SHEHDOOT எனப்படும் ஒருவகை புளிப்பு பழம், குளிர்பானங்கள், குடிநீர், அதிக காற்றுடனும் சற்று பாதுகாப்புடனும் பாக்கெட்டுகளில் அடைபட்ட வருவல்கள்.  ஒரு வழியாய், நீண்ட பயணத்தின் பின் (கீழே இறங்கி விட்டோம் மேலே ஏறி விடுவோமா? ம்ம்ம்ம் .... பார்க்கலாம்) அந்த இடத்தை அடைந்தோம். ஆஹா இரு ராட்சத மரங்களின் பிரம்மாண்டமான வேர் குவியல்கள் (உயிருடன் உள்ள LIVING ROOT BUNCH) நேர்த்தியாகக் கட்டி பாலமாய் அமைத்துள்ளனர். 





இந்தப் பகுதியில் செல்ல நுழைவுக் கட்டணம் உண்டு (ஒருவருக்கு 40 ரூபாய்). கூடவே நாலு பேருக்கு மேல் வேர்ப்பகுதியில் செல்லக்கூடாது, பாலத்தின் மேற்பகுதியில் நின்று புகைப்படம்/காணொளி எடுக்கக்கூடாது போன்ற தகவல்களும் எழுதி இருந்தது. ஆனால் நமது மக்கள் கேட்பார்களோ? எது கூடாதோ அதைத்தானே முதலில் செய்வோம்! ஆஹா! உண்மையான பிரமிப்பு. இப்படி அமைக்கப்பட்ட உயிருள்ள பாலத்தின் கீழே பாறை குவியல் - அதனூடே அட்டகாசமான நீரோடை அங்கங்கே கொட்டுகிறது. பேரானந்தம் அடைந்தோம். அங்கிருந்து புறப்பட மனமின்றி புறப்பட்டு சில அன்னாசிச் சுளைகளை நான் கபளீகரம் செய்தேன்.  அடுத்து இரண்டு நிமிட பயணத்தில் ஓரிடத்தில் நிறுத்த நுழைவு கட்டணத்துடன் 10 அடி கீழே இறங்கினால்…




ஒரு ராட்சத பாறை ஒரு குறு கல்லின் மேல் நிற்கிறது (Balancing Rock). ஒரு சில க்ளிக்குகளுக்குப் பின் பயணப்பட்டு சென்ற இடம் தான் MAWLYNNONG. ஆசியாவின் தூய்மை மிகு கிராமம். பெயருக்கு ஏற்றார் போல் அப்படி ஒரு தூய்மை. ஒவ்வொரு வீடும் ஒரு தோட்டமாய் மலர் மற்றும் வண்ண வண்ண மிகு தாவரங்களால் பரிமளிக்கிறது. மக்கள் (கிராம மக்கள்) தாங்களாகவே முன்வந்து பாதையை தூய்மைப் படுத்திக் கொண்டே உள்ளனர். மூங்கிலால் ஆன ஒரு பெரிய ஏணியின் மேல் பரண் அமைத்து ”பங்களாதேஷ் பார்வை” என நுழைவுக் கட்டணத்துடன் பார்க்க அனுமதிக்கின்றனர். வாகனம் ஒன்றுக்கு ரூபாய் 100 கிராம பராமரிப்பு கட்டணம் வசூலிக்கின்றனர். ஓரிரு உணவு விடுதிகள் உள்ளன. ஹோம் ஸ்டே வாடகைக்கு தங்கும் இடங்களும் நிறைய உள்ளன. நேரமும் ரொக்கமும் தாராளமாய் இருந்தால் இங்கேயே தங்கி இயற்கை எழிலை அனுபவிக்கலாம். 







கிராமம் முழுக்க காலார நடந்தோம். தூய்மையான கிராமம் ஆதலால் மகள் சாலையில் அமர்ந்து புகைப்படம் கிளிக்கினாள். அங்கேயே மதிய உணவை முடித்து மீண்டும் பயணப்பட்டோம். அடுத்த நாட்டு (பங்களாதேஷ்) எல்லையை ஒட்டிய பகுதியாதலால் வெப்பம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. சற்று தொலைவு தாண்டி எல்லை வேலி (BORDER FENCE) எங்களுடன் பயணித்தது. அப்படி பயணித்து, நாங்கள்  அடைந்த இடம் என்ன… அங்கே என்ன பார்த்தோம் என்பது குறித்த தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். தொடர்ந்து வாசித்து வரும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.


மேலும் பயணம் தொடரும்…


ஆர். சுப்ரமணியன் 


******


நண்பர்களே, தில்லி நண்பரின் மேகாலயா பயணத் தொடரின் ஐந்தாம் பகுதி உங்களுக்கும் பிடித்திருக்கலாம்!  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.  அவர் தொடர்ந்து எழுதுவது உங்கள் ஆதரவில் தான் இருக்கிறது! மீண்டும் நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

14 கருத்துகள்:

  1. வேர்ப்பாலம் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம். படங்களும் அருமை. பாரம்பரிய உடையில் கடைகளில் பெண்கள்.. அடடே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பயணக் கட்டுரை பதிவு அருமை. வேர்களால் உருவாக்கப்பட்ட பாலம் நன்றாக உள்ளது.அதன் படங்கள் அனைத்தும் நல்ல தெளிவாக உள்ளது. அந்த பெரிய பாறை கண்கள் வாய் அமைப்புடன் ஒரு முதலை மாதிரி காட்சியளிக்கிறது. அங்குள்ள மக்கள் ஒவ்வொரு வீட்டையும் மலர் தரும் தாவரங்களை வளர்த்து,அலங்கரித்து இருப்பதை நானும் கற்பனையில் கண்டு களித்தேன். பார்க்கும் இடங்கள் தூய்மையுடன் இருந்தால் கண்களுக்கு அழகுற இருக்குந்தானே...!

    அந்த உயரமான பரண் மீது ஏறி பங்களாதேஷை பார்வையிடுவது சந்தோஷம் தருவதாகத்தான் இருக்கும். அழகிய காட்சிகளை விவரித்து கூறியது உடன் பயணித்த திருப்தியை தருகிறது. தொடர்ந்து தங்கள் பயணத்துடன் பயணிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பயணக் கட்டுரை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. நீங்கள் விவரிக்க விரிக்க மனக்கண்ணில் இடங்களைப் பார்க்க முடிகிறது.

    வேர்ப்பாலம் பலமுறை படித்தது, படங்களாகவும் கண்டது. கொடைக்கானலில் வேர்களால் ஆன படிக்கட்டுகள் ரொம்பவும் கீழிறங்கிச் செல்கின்றன.

    இயற்கைச் சூழலான இடங்களில் பயணிக்கும்போது இங்கேயே வீடு வாங்கித் தங்கிவிட்டாலென்ன என்ற தோன்றும். உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லும் இடத்தில் தங்கிவிடலாம் என்று தோன்றுவது உண்டு. பல சமயத்தில், பல இடங்களில் இப்படித் தோன்றியதுண்டு. குறிப்பாக ஹிமாச்சலப் பிரதேசத்தில்!

      பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அன்பு வெங்கட் ,
    இது போன்ற படங்களைப் பார்த்ததில்லைமா.
    வேர்ப்பாலங்கள் எத்தனை அழகு.!!
    மேகாலயா இவ்வளவு சிறப்புகள் கொண்டதா?
    இயற்கையைப் பேணுவதில் இந்தியாவில்
    முதலிடம் இவர்களுக்குத் தான் போலிருக்கிறது.
    திரு.சுப்பு சொல்வது போல
    கைனிறையக் காசு வேண்டும்.
    செலவழிக்காமலேயே இந்த இடங்களைக் காணக் கொடுத்ததற்கு மிக
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கை நிறைய காசு இருந்தால் - ஹாஹா... நிறைய இடங்கள் பார்க்கலாம் தான் வல்லிம்மா.

      மேகாலயா அழகான ஊர் தான் அம்மா. படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. தூய்மையான கிராமம் படங்கள் வேர் பாலம் எல்லாம் அருமை.
    இயற்கை எழில் கொஞ்சும் ஊர்தான்.
    பயணக்கட்டுரை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக் கட்டுரை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. லிவ்விங்க் ப்ரிட்ஜ் அழகு இது வெங்கட்ஜியும் சொல்லியிருந்த நினைவு படத்தோடு.

    தூய்மை கிராமம் பற்றியும்..

    அழகான படங்கள் அந்தப் பெரிய பாறை அழகாக இருக்கிறது. பைனாப்பிள் துண்டம், குடிசை அந்த மக்கள் பாரம்பரிய உடையில் படங்கள் எடுக்கவில்லையோ?! அல்லது இங்கு பகிரவில்லையா?

    இன்னும் கொஞ்சம் படங்கள் பகிருங்களேன்..முடிந்தால்.

    அழகான பயணம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரம்பரிய உடையில் அந்த ஊர் மக்கள் - படம் எடுக்கவில்லை என்றே தெரிகிறது. என்னிடம் இல்லை.

      படங்கள் - நண்பரின் மகள் எடுத்த படங்கள் என்னிடம் இல்லை. இங்கே பகிர்ந்த படங்கள் நண்பர் அலைபேசியில் எடுத்தவை.

      பயணம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....