புதன், 19 மே, 2021

மேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி எட்டு - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஆரோக்கியத்தை பெற்றுள்ள ஒருவர் நம்பிக்கையை பெற்றுள்ளார்; நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒருவர் எல்லாவற்றையும் பெற்றுள்ளார்.******


நண்பரின் மேகாலயா பயணம் தொடர்பான கட்டுரையின் முதல் ஏழு பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தது நினைவில் இருக்கலாம்.  நினைவு இல்லாதவர்கள் வசதிக்காக, இதுவரை வெளிவந்த இந்த பயணத் தொடரின் பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!


முதல் பகுதி 


இரண்டாம் பகுதி


மூன்றாம் பகுதி


நான்காம் பகுதி


ஐந்தாம் பகுதி


ஆறாம் பகுதி


ஏழாம் பகுதி


இதுவரை வெளிவந்த பகுதிகளை படித்து முடித்த பின்னர் இந்த எட்டாம் பகுதியைத்  தொடரலாம். இனி பயணத் தொடரை நண்பர் சுப்பு எனும் சுப்ரமணியன் அவர்களின் வார்த்தைகளில் படிக்கலாம் வாருங்கள்! - வெங்கட் நாகராஜ் 


******

எங்கள் மேகாலயா பயணத்தில் ஐந்தாம் நாள் (14 ஏப்ரல் 2021) அன்று நாங்கள் என்ன செய்தோம், எங்கே எல்லாம் சென்றோம் போன்ற தகவல்களை இந்தப் பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.  அஸ்ஸாம் மாநிலத்தின் கௌஹாத்தி நகரின் மையப்பகுதியில் கோவில் கொண்டுள்ள காமாக்கியா அன்னையை தரிசனம் செய்ய வேண்டும் என்பதே எங்களது திட்டமாக இருந்தது. கொரோனாவின் தாக்கத்தால் மதியம் 1 முதல் 3 மணி கோவில் மூடப்பட்டு விடும் என்பதால் காலை சீக்கிரமாகவே குளித்து முடித்து, ஷில்லாங்க் நகரிலிருந்து புறப்பட வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள்.  ஓட்டுநர் மனோஜ் வேறொரு வாகனத்துடன் வந்தார்.  தங்குமிடத்தில் சிறப்பான உபசரிப்பு அளித்த, அங்கே இருந்த அனைவரிடமும் விடைபெற்று, இந்தப் பயணத் தொடரின் முதற்பகுதியில் சொன்ன ஜீவா சைவ உணவகத்தில் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு புறப்பட்டோம். 
அருமையான சாலை பயணம் - தேசிய நெடுஞ்சாலை ஆதலால் இரு வழிப் போக்குவரத்து.   சுகமான பயணம் காட்டி நகரில் நுழைந்ததும் பிரசித்தி பெற்ற GS சாலை - கௌஹாத்தி - ஷில்லாங்க் சாலையை தான் அப்படி அழைக்கின்றனர். ”அம்மாடியோ எத்தாத் தண்டி” என வட்டார வழக்கில் சொல்லவைக்கும் பிரம்மாண்டமான சாலை. முழுக்க முழுக்க வர்த்தகம் நடைபெறும் சாலை. பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், அலுவலகங்கள், வியாபார வளாகங்கள், என சென்னை அண்ணா சாலையை போல் முடிவின்றி நீள்கிறது, இச்சாலை முடியும் இடத்தில் நகரின் பிரதான, பிரத்தியேகமான பல்டன் பஜார் எனும் வியாபார முனையம். அதைத் தாண்டி வேறு ஒரு சாலையில் பயணித்து, ஒருபுறம் கடல் போல பாயும் பிரம்மபுத்திரா நதி, மறுபுறத்தில் கௌஹாத்தி ரயில் நிலையம், மேலே சென்றால் அருளை வாரி வழங்கும் மிக மிக திவ்யயமான திருக்கோவில் ஆன காமாக்யா கோவில்.

இது ஒரு சக்தி பீடம். சதி தேவியின் கதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். பல கூறுகளாக பிரிந்து விழுந்த சதி தேவியின் உறுப்புகள் விழுந்த அனைத்து இடத்திலும் கோவில் கொண்டிருக்கிறார். அவை சக்தி பீடங்களாக அழைக்கப்படுகின்றன. அப்படி சதி தேவியின் பிறப்பு உறுப்பு விழுந்த இடம் இந்த காமாக்கியா கோவில். அருவமாய் தான் மூலவர் அபயம் அளிக்கும் தேவியாக இருக்கிறார். பக்தர்களைத் தேடித் தேடி அபயமளிக்கும் கருணை தெய்வமும் அவள் தான் கண்கண்ட  தெய்வமும் அவள் தான். நீண்ட வரிசையில் காத்திருந்து திவ்யமான தரிசனத்தையும் பேரருளையும் பெற்றோம். அவளை வேண்டி இரண்டாம் முறை பயண முன்பதிவுகளைச் செய்ததால் எவ்வித குறைபாடும் இன்றி பயணத்தை முடித்து வைத்து தரிசனமும் தந்ததாய் நாங்கள் மனப்பூர்வமாய் நம்பினோம்.  

மிகப்பெரும் வளாகம், எக்கச்சக்க கடைகள், உணவகங்கள், இளைப்பாறும் இடங்கள், இயற்கை உபாதைகளைத் தீர்க்கவும் பிரத்தியேக இடம் என அதுவே ஒரு தனி ஊராய் செயல்படும் அளவுக்கு பிரமாண்டம். அனைவரும் பொறுத்தருள வேண்டும் - இந்தக் கோவிலில் ஒரு சில ஒவ்வாத விஷயங்களையும் கண்டேன். ஒன்று கோவில் வளாகம் முழுவதும் செவ்வாடை கட்டிய பண்டிதர்கள் விதிவிலக்கில்லாமல் ஆலயத்திற்கு உள்ளும் வெளியேயும், வெற்றிலை பாக்கு இத்யாதிகளை குதப்புவது! இரண்டாவது சகட்டுமேனிக்கு நான் சிறப்பு வழியில் தரிசனம் செய்து வைக்கிறேன் என 500 ரூபாய் முதல் பேரம் பேசுவது, ”மூலவரை இங்கே, தானாய் வரும் சுனை நீரை கைகளால் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்” என ஒரு பண்டிதர் கூறிக்கொண்டே இருக்க, ”மற்றொரு பண்டிதர் காணிக்கை அளியுங்கள்” என்று முதலாமவரை விட பலத்த குரலில் மிரட்டுகிறார்.

மூலவர் என்பதால் மின் விளக்குகளுக்கு அனுமதி இல்லை. எங்கு பார்த்தாலும் மலர் குவியலைக் கொட்டி வைத்துள்ளதால், என்ன எனவே காணமுடியவில்லை. இங்கு ஒளிவுமறைவின்றி கொடுக்கப்படும் ஆடு மிருகபலி கண்ணெதிரிலேயே அவை தழுதழுக்க துடிதுடிக்க பலியிடப்படுகிறது. அதன் ரத்தம் அம்மனுக்கு படைக்கப்படுகிறது. அங்கே பலிக்காக கட்டப்பட்டிருந்தவை பச்சிளம் ஆடுகள்.  மனது மிக வலித்தது. ஆனால் இது காலம் காலமாக அக்கோவிலின் நடைமுறை என்றனர். மேலே சொன்ன அனைத்தும் என்னுடைய மன ஆதங்கம்தான். குறையாய் கூறி யார் மனதையும் புண்படுத்தவோ தூண்டவோ முயலவில்லை. இருப்பினும் பொருத்தருள்க. இதன்பிறகு நேரடியாய் நீண்ட பயணத்தின் பின்னர் விமான நிலையம் வந்தடைந்தோம்.  இப்பகுதியை முடிக்கும் முன்னர்....

மேகாலயாவின் எந்த தங்கும் இடங்களிலும் பெரும்பாலும் மின்விசிறிகள் இருப்பதில்லை. காரணம் மாலை வேளைகள் சற்றே மிதமாய் இருக்கும். காலநிலை இன்றி எப்போது வேண்டுமானாலும் மழை பெய்து குளிர்வித்து விடும். ஜூன் - ஆகஸ்ட் மாதங்கள் நல்ல மழை காலம். அக்டோபரின் பின் பகுதி முதல் ஜனவரி வரை நல்ல உறை பனி படரும் காலம்.  பள்ளிகள் ஆண்டு தேர்வை முடிப்பது நவம்பரில். ஆண்டு விடுமுறை டிசம்பர் முதல் ஜனவரி வரை.  இந்த தகவல்கள் உங்களுக்கு பயன் தரலாம். நாங்கள் சென்று வந்த இந்தப் பயண பொதி ( TOUR PACKAGE) ஏமாற்றம் அளிக்காமல் இருந்தது. அனைத்து இடங்களுக்கும் வாகனம் நிறுத்த கட்டணம் மற்றும் நுழைவுக்கட்டணம் கட்டாயம். நீச்சல் அல்லது குளியல் பிரியர்கள் எப்போதும் ஒரு கூடுதல் உடை கையுடன் கொண்டு செல்வது பயனுள்ளது. மிளகு, மஞ்சள் தூள், Red Tea Bags, மூங்கில் பொருட்கள் வாங்க உகந்தவை. அன்னாசிப்பழம் அலாதியான சுவை. எங்கள் ஓட்டுனர் திரு மனோஜ் கிட்டத்தட்ட மூன்றரை மணிக்கே எங்களை விமான நிலையத்தில் விட்டு விட, நீண்ட நேரம் காத்திருந்தோம். சிறிய விமான நிலையம் ஆதலால், கடைகளோ உணவகங்களோ அவ்வளவாக இல்லை. 


எங்களது விமானம் ஏர் இந்தியா இரவு 7.30 மணிக்குத்தான். ஆனால் எங்கள் அதிர்ஷ்டம் ஆறே கால் மணிக்கே கூவினார்கள்! 06.50-க்கே விமானம் புறப்பட்டுவிட்டது. A320 ரக விமானத்தில் 196 இருக்கைகள் ஆனால் நாங்கள் 62 பேர்தான் இருந்தோம். இரவு உணவு விமானத்திலேயே வழங்கப்பட. பத்து மணி ஐந்து நிமிடத்திற்கு வரவேண்டிய விமானம் 9 மணி 25 கே தரை இறங்கியது. மீண்டும் விமான நிலைய மெட்ரோ மூலம் பயணித்து இரவு பத்தரை மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். ஒருவித THRILLING ஆகத் துவங்கி, தெவிட்டாத தேனாய் இனித்த எங்களுடைய பயணத்தை, ஆத்ம நண்பர் திரு வெங்கட் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி. அவரது வலைப்பூ மூலம் எழுதிய பதிவுகளில் குறை நிறைகளை கட்டாயம் தெரிவிக்கவும். பயணம் சிறந்தது ஆதலால் பயணம் செய்வோம்!! 


அன்புடன் 


ஆர். சுப்ரமணியன்******


நண்பர்களே, தில்லி நண்பரின் மேகாலயா பயணத் தொடரின் எட்டாம் பகுதி உங்களுக்கும் பிடித்திருக்கலாம்!  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.  அவர் தொடர்ந்து எழுதுவது உங்கள் ஆதரவில் தான் இருக்கிறது! மீண்டும் நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


22 கருத்துகள்:

 1. நண்பர் சொல்லி இருக்கும் குறைகள் எல்லோர் மனதிலுமே  உண்டு என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறைகள் - நான் செல்லும்போது எனக்கும் இப்படியே தோன்றியது ஸ்ரீராம். பல இடங்களில்/ஊர்களில் இப்படித்தான் இருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. அனைத்து செலவுகளும் விமான பயணம் இல்லாமல் தோராயமாக எவ்வளவு ஆகும் தற்போது இன்று தெரியப்படுத்தினால் வருங்காலத்தில் செல்வதற்கு அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கின்றேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூன்று பேருக்கு ஆன செலவு குறித்து இந்தத் தொடரின் இரண்டாம் பகுதியில் எழுதி இருக்கிறார். இரண்டாம் பகுதிக்கான சுட்டியும் மேலே பதிவில் தந்திருக்கிறேன் திரு நரசிம்மன். தங்களது முதல் வருகையோ?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. நல்லதொரு பயணம்... விரைவாக முடித்து விட்டாலும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணத் தொடர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   விரைவாக முடிந்து விட்டது - ஆமாம். அவர் எழுதும் முதல் தொடர்! அடுத்த பயணங்கள் குறித்து எழுதும்போது இன்னும் விரிவாக எழுதுவார்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. நீங்கள் கோயிலில் உங்கள் மனதை உறுத்தியவை என்று சொன்னது யார் மனதையும் புண்படுத்துமோ என்று நினைக்கவெ வேண்டாம். கண்டிப்பாக யாராலும் ஏற்க கடினமாகத்தான் இருக்கும். எனவே நீங்கள் தைரியமாகவே சொல்லலாம்.

  பயணம் இனிதாக அமைந்தது சந்தோஷமான விஷயம்.

  சிறப்பாக எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலருக்கும் நண்பர் மணிக்கு ஏற்பட்டது போலவே நடந்திருக்கிறது - மனதை உறுத்தி இருக்கிறது. என்னுடைய பயணத்திலும் எனக்கு இது தோன்றியது கீதா ஜி.

   பயணம் இனிமையாகவே இருந்தது. பயணத் தொடர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. நல்ல பயணத் தொடர்.
  சற்று மெறுகேற்றி புத்தகமாக வெளியிடலாம் ஐய்யா.
  அந்த கோயில் பெண்களுக்கு பல மறுத்துவப் பலன்கள் அளிப்பதாகவும் கேள்விப்பட்டுள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணத் தொடர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

   சற்று மெருகேற்றி புத்தகமாக வெளியிடலாம் - நண்பரின் ஒப்புதல் கிடைத்தால் மின்புத்தகமாக வெளியிடலாம்!

   மருத்துவப் பலன்கள் அளிக்கும் கோவில் - உண்மை தான் - இப்படியும் சில நம்பிக்கைகள் உண்டு. நேர்ந்து கொண்டது நடந்திருப்பதாகச் சொல்லியும் இருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. அருமையான பதிவு. காமாக்கியா அன்னையை தரிசனம் செய்த நினைவுகள் படிக்கும்போது மனதில் வந்து சென்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க உதவியது அறிந்து மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. நண்பரின் பயணம் சிறப்பாக முடிவடைந்திருக்கிறது.

  கோயில் பற்றிய நண்பரின் ஆதங்கம் ஏற்புடையதே.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் மணி எழுதிய பயணத் தொடர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. பயணத் தொடர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. அருமையான பயணத்தொடர்..படங்களும் அருமை...அம்மாடியோவ் எனச் சொல்லத்தக்க சாலையின் படத்தையும் போட்டிருக்கலாமோ எனத் தோன்றியது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாலையின் படம் - முந்தைய பதிவொன்றில் ஷில்லாங்க் சாலையின் படம் இணைத்திருக்கிறேன் ரமணி ஜி.

   பயணத் தொடர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. மிகவும் நன்றி தங்கள் பின்னூட்டத்திற்கு ஆமாம் நான் முதல் தடவையாக இங்கு இணைக்கின்றேன் நானும் திருச்சியிலிருந்து அதனால் மிகவும் மகிழ்ச்சி ஒரு நபருக்கு தோராயமாக விமான கட்டணம் இல்லாமல் 12 ஆயிரம் ரூபாய் ஐந்து நாளைக்கு பரவாயில்லை மிகவும் குறைவாக தான் உள்ளது யாராவது இதுபோல் குழுவாக இருந்தால் நானும் அதில் சேர்ந்து கொள்கிறேன்
  என்று நினைக்கின்றேன் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொதுவாக எங்கள் நண்பர்களின் குழு தலைநகர் தில்லியிலிருந்து தான் செல்வோம். இந்த முறை தீநுண்மி காரணமாக நண்பர் மட்டும் அவரது குடும்பத்தினருடன் சென்று வந்தார். தமிழகத்திலிருந்து செல்லும் வாய்ப்பில்லை. நீங்கள் செல்வதற்கு, பயணம் குறித்த சந்தேகம் இருந்தால் கேளுங்கள், நிச்சயம் என்னால் இயன்ற தகவல்களை தருகிறேன்.

   தொடர்ந்து பதிவுகள் வழி சந்திப்போம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நரசிம்மன் ஜி.

   நீக்கு
 11. பயணத்தொடர், போரடிக்காமல் நன்றாகக் கொண்டு சென்றிருக்கிறார். நன்கு ரசித்த பயணப்பதிவு.

  //”அம்மாடியோ எத்தாத் தண்டி” // - எங்க ஊர் ஆளோ இவர்?

  கோவில்களில் - பொதுவாக பக்தர்களுக்கு உள்ள பயபக்தி, அங்கேயே தொழிலாகச் செய்துகொண்டிருப்பவர்களுக்கு, அதாவது தெய்வத்தின் அருகிலேயே இருக்கும் அரிய வாய்ப்பு பெற்றவர்களுக்கு இருக்காது என்பது என் அனுமானம். அப்பா இருக்கும் இடத்திலேயே, சந்தைக் கடையாக நாம் கூச்சல் போடுவதற்கோ இல்லை குரலை உயர்த்திப் பேசுவதற்கோ தயங்குவோம். சில பல கோவில்களில் அர்ச்சகர்கள் பேசும் வார்த்தைகளை நம்மால் காதுகொடுத்துக் கேட்க முடிவதில்லை. கோவில் வளாகத்திலேயே துப்புவது என்பது கொஞ்சம் சகிக்கமுடியாத ஒன்றுதான். பெருமாள் சன்னிதி முன்னாலேயே, காசு கொடுங்கள் என்று கேபவர்களிடமும் எனக்கு உங்களுக்குத் தோன்றிய உணர்வுதான் எழுந்தது.

  இந்தத் தொடரில் உணவு என்ன என்ன கிடைத்தது (ஹோட்டலில்), அது உங்கள் அனைவருக்கும் உகந்ததாக இருந்ததா என்று குறிப்பிட்டிருக்கலாம். பயணக்கட்டுரையில் ஹோட்டல் உணவுக்கு என்ன வேலை என்று நீங்கள் நினைத்திருக்கலாம். என்னைப்போன்ற ஆட்களுக்குக்கு மோமோஸ் நூடுல்ஸ்லாம் சரிப்பட்டுவராதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் எழுதிய பயணப் பதிவுகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   //எங்க ஊர் ஆளோ இவர்?// சிறு வயதில் கடலூர், திருச்சி போன்ற இடங்களில் தான் இருந்தார். பிறகு நீண்ட வருடங்கள் தில்லியில்.

   கோவில்கள் குறித்த உங்கள் கருத்துகளும் நன்று.

   உணவு - பெரும்பாலான வட கிழக்கு மாநிலங்களில் சைவ உணவு கிடைப்பது கடினம் தான். ஆனாலும் சில உணவகங்களில் சைவமும் கிடைக்கும்! சைவம் மட்டுமே கிடைக்கும் உணவகங்கள் வெகு குறைவு - ஆரஞ்ச் ரூட்ஸ் என்ற உணவகம் முழு சைவம் - தமிழர் ஒருவர் நடத்துகிறார். அவரது ரிசார்ட்டும் உண்டு. நண்பரிடம் இன்னும் தகவல்கள் தரச் சொல்கிறேன். உணவு குறித்து முடிந்தால் தனியாக எழுதி வாங்கி இங்கே வெளியிடுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....