ஞாயிறு, 18 ஜூலை, 2021

கடந்து வந்த பாதை - பகுதி 11 - சுப்ரமணியன்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஒரு முறையாவது உங்களைப் பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். இல்லை என்றால் வாழ்க்கையின் மிகச் சிறந்த நகைச்சுவையைத் தவற விட்டுவிடுவீர்கள் - சார்லி சாப்ளின்.


******


தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முந்தைய பகுதிகளை நீங்கள் படித்திருக்கலாம்!  படிக்காதவர்கள் வசதிக்காக முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!  


கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று


பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு 


பகுதி ஒன்பது  பகுதி பத்து


வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.


******


கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்


அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம்.  வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம்.  MASK FIRST SHOE NEXT!  


சென்ற பகுதியில் சம்பளப் பட்டியலில் இருந்த EB என்றால் என்ன என்ற குழப்பத்தினைக் குறித்துச் சொல்லி முடித்திருந்தேன்.  இந்த வாரம், அது என்ன என்ற தகவலையும் மேலும் சில விஷயங்களையும் பார்க்கலாம். 



அலுவலகத்தில் சேர்ந்த மறு நாள், என்னை தேர்வு-18 (Exam-18) எனும் பகுதிக்கு அனுப்பினார்கள். பகுதியின் தலைவர் எனக்கு தில்லி குரு! என்னை முதல் நாளிலேயே அவருக்குப் பிடித்து விட்டது! ”மேலும் நீ உயர வேண்டும்! வேறு பல தேர்வுகளை எழுது” என அன்புக் கட்டளையிட்டார். அது வரை, ஆசிரியர், தந்தை, தனியார் அலுவலக முதலாளிகள், சில உறவினர்கள் என என்னைக் கட்டளை பிறப்பித்தே, கிட்டத்தட்ட அடிமையாகவே நடத்தியவர்கள் தான்.  இவரோ, அன்பு பொழிய வாஞ்சையோடு நடந்த விதம் - நேர் மாறாய் முதல் நாள் பணியில் சேரும் முன்பே ரகளை செய்த அதிகாரி! - என புதியவரின் அன்பிலும் கரிசனத்திலும் விக்கித்துப் போனேன். அவர் தான் எனது ஹிந்தி ஆசானும் கூட! தினமும் ஒரு மணி நேரம் முதல் பாதியிலும் ஒரு மணி நேரம் மறு பாதியிலும் எனக்கு ஹிந்தி போதனை செய்வார்.  


அந்த நல்ல மனிதரிடமே எனது சந்தேகத்தினை - EB என்றால் என்ன என்கிற சந்தேகத்தினை கேட்டுவிட்டேன்.  அதற்கு அவர் தந்த விளக்கம் - EB என்றால் Efficiency Bar!  ஒவ்வொரு முறை அந்தப் படிவம் வந்ததும், அடுத்த வருடாந்திர சம்பள உயர்வு பெற தகுதியுள்ளவர் தானா என்பதை அதிகாரிகள் சிலாகித்து முடிவெடுப்பார்களாம்.  1986-ஆம் ஆண்டுக்குப் பிறகு இம்முறை கைவிடப்பட்டது.  அதுவும் சம்பள உயர்வு எவ்வளவு என்று சொன்னால் உங்களில் சிலருக்கு அதிசமயாக இருக்கும்! முதல் பதினோறு வருடத்திற்கு, வருடா வருடம் ஆறு ரூபாய், அதன் பின்னர் எட்டு வருடங்களுக்கு வருடா வருடம் எட்டு ரூபாய், அதன் பின்னர் 10 ரூபாய் உயர்வு என கடைசியாக 400 ரூபாய் வந்து நிற்கும்!  எத்தனை வருடங்கள் என்பதை நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள்! 


மெள்ள மெள்ளமாய், ஹிந்தி கற்பதில் பாலகப் பள்ளி மாணவனாயிருந்து ஆரம்பப் பள்ளி வரை முன்னேறினேன்.  சார்பில்லா கல்வி முறையில் (Non Formal Education) கற்றதால், அவசர/அவசியத் தேவைகளான, பெயர்களைப் படிப்பது, அத்தியாவசிய இடங்களான இரயில்/பேருந்து நிலையங்கள், மருத்துவர்/மருந்தகம்/மருத்துவமனை, அஞ்சல் அலுவலகம், வங்கி இது போன்ற தேவைகளுக்கு, வினா-விடை முறையில்  கற்றுத் தந்தார்.  சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் காலை சிற்றுண்டி முடித்து, ஒரு பேருந்தில் ஏறி, அதன் கடைசி நிறுத்தம் வரை செல்வோம். அங்கிருந்து வேறு ஒரு வழித்தடம் பிடித்து, அதன் மறுமுனை வரை செல்வோம். 





இப்படி ஊர் சுற்றிகளாய் திரிந்து, பல வழித்தடங்கள் மற்றும் தலைநகரின் பல்வேறு பகுதிகளையும் கண்டறிந்தோம். அது போல தில்லியில் வட்டச்சாலை (Ring Road) என்று ஒன்று உண்டு. மொத்த தூரம் 62 கிலோ மீட்டர்.  ஒரு முனையில் பிடித்தால் அதே இடம் வந்து சேர கிட்டத்தட்ட 2 ½ முதல் 3 மணி நேரம் ஆகும்.  இங்கே முத்ரிகா (MUDRIKA) என அழைக்கப்பட்ட அப்பேருந்துகளிலும்  வலம் வந்தோம். பல வருடங்கள் கழித்து 1 ரூபாய் பேருந்து முறை விலக்கப்பட்டது. பேருந்துக் கட்டணங்களும் 50 பைசா, 1 ரூபாய், 1.50 என ஆகி, 2-4-6-8 என மாறி தற்போது சாதாரண பேருந்துகளில் மூன்றே மூன்று டிக்கெட்டுகள் - 5, 10 மற்றும் 15 ரூபாய்.  குளிரூட்டப்பட்ட பேருந்துகள் எனில் 10, 15, 20 மற்றும் 25 ரூபாய் என நான்கே நான்கு டிக்கெட்டுகள் தான்! செல்லும் தூரத்தைப் பொறுத்து கட்டணம் மாறும் - இவை அனைத்தும் தில்லி நகர பேருந்துகளுக்கான கட்டணம் என்பதையும் இங்கே தெளிவுபடுத்தி விடுகிறேன். 


அலுவலகத்திலிருந்த தமிழர்களுடன் பரிச்சயமான பின்னர் சற்றே இதமாக இருந்தது. மாலை வந்தால் கட்டிடத்தில் இருந்த தமிழ் நண்பர்களுடனான அரட்டை. அந்த நாட்களில் எங்களின் பிரதான பொழுதுபோக்காக இருந்த விஷயம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!  கட்டிடத்திலிருந்த தமிழ் நண்பர்கள் யார் தமிழகம் நோக்கிச் சென்றாலும், அவரை வழியனுப்ப, கட்டாயமாய் இரயில் நிலையம் சென்று வழியனுப்பி விட்டு தான் வருவோம்! தமிழ்நாடு விரைவு இரயில் காலை 06.15 மணிக்கும் ஜி.டி. விரைவு இரயில் மாலை 06.15 மணிக்கும் புறப்படும்.  


இரயிலில் செல்பவர்களைவிட வழி அனுப்பச் சென்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.  அநேகமாக அனைவரும் சுவர்க்கடிகாரம்/மகளிர் கைப்பை, புகைப்படத் தொகுப்பு (Album), மின்னணு சாதனங்கள், கையடக்க வானொலிப்  பெட்டி போன்றவற்றை இங்கேயிருந்து வாங்கிச் செல்வார்கள். சில தைரியசாலிகள், மடக்கு கட்டில், மடக்கு நாற்காலி, மூங்கிலில் செய்யப்பட்ட மோடா எனப்படும் ஸ்டூல்   போன்றவற்றையும் இங்கேயிருந்து வாங்கிக் கொண்டு செல்வார்கள். வழியனுப்பச் செல்லும் ஒவ்வொருவருக்கும் ஏதோ தானே ஊருக்குச் செல்வது போன்ற ஒரு உணர்வு கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.  ஊருக்குச் செல்ல முடியாவிட்டாலும், செல்லும் உணர்வையாவது பெற முடிகிறதே என்கிற ஒரு சந்தோஷம். 


நாட்கள் நகர்ந்தன.  கடந்து வந்த பாதையில் தொடர்ந்து பயணிப்போம்…


நட்புடன்


சுப்ரமணியன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


22 கருத்துகள்:

  1. என் அப்பா டெல்லிக்குச் சென்று வந்தபோது டெல்லி கட்டில் என்று சொல்லப்படும் மடக்கு கட்டில் வாங்கி வந்தார்.!  டெல்லி டிரான்சிஸ்டர் ரொம்ப பிரபலம் அப்போது என்று நினைக்கிறேன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டெல்லி மடக்கு கட்டில் - மிகவும் பிரபலம் தான். தற்போது அதிலேயே மரப்பலகை சேர்த்து கிடைக்கிறது. டெல்லி ட்ரான்சிஸ்டர்களும் பலரும் வாங்கிய ஒன்று தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நான் பணியில் சேரும் காலத்தில் EB இல்லை. இருப்பினும் தட்டச்சுப் பயிற்சியின்போது முதன்முதலாக இச்சொல்லாடல் பற்றி அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மத்திய அரசுப் பணியாளர்களுக்கும் இந்த EB பிறகு விலக்கப்பட்டது. நான் சேர்ந்தபோது இது இல்லை முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஊருக்கு செல்லா விட்டாலும் அந்த உணர்வு வரும்.

    உண்மை அயல்நாடுகளில் இவைகளை விமான நிலையத்தில் காணலாம்.

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரயில்/விமான நிலையங்களுக்குச் சென்று, நண்பர்களை ஊருக்கு வழி அனுப்பி வைக்கும்போது நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி வார்த்தைகளால் வடிக்க முடியாதது தான் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனையாக ஒரு mentor சரியான சமயத்தில் அமைந்திருந்திருக்கிறார்.

    நானும் ஆறு மாதங்கள் ஹிந்தி பேசக் கற்றேன், காலம் போன காலத்துல. அப்போ பேசிப்பார்க்க ஆளில்லை. (மூன்று வருடங்களுக்கு முன்). இங்க ஆட்கள் இருக்கு... கற்றது மறந்து போச்சு.

    இரயில் வழியனுப்புதல் - நாங்கள் 93களில் துபாயில் கடிதங்கள் எழுதி, சாப்பிடும் தமிழ் உணவகத்தில் அதற்குரிய பகுதியில் போட்டுவிடுவோம். யார் ஊருக்குச் சென்றாலும் (இந்தியா) இதனை எடுத்துக்கொண்டுபோய் போஸ்ட் ஆபீஸில் சேர்த்துவிடுவார்கள். ஸ்டாம்ப் ஒட்டலைனா, அவரே ஒட்டிவிடுவார்.

    மோடாவும் பழைய நினைவுகளைக் கொடுக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mentor கிடைப்பது தான் வரம். சரியானபடி ஒருவர் இப்படிக் கிடைத்துவிட்டால் எல்லாம் நலமே நெல்லைத் தமிழன்.

      கற்றுக் கொண்ட மொழி மறப்பதில்லை. பேச முயலுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் ஹிந்தி மொழியில் பேசிவிடலாம்.

      வெளி நாட்டிலிருந்து கடிதங்கள் அனுப்புவது - நல்ல அனுபவம். நட்பின் வலிமை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. தங்கள் நண்பரின் அனுபவ பதிவும் அழகாக சென்று கொண்டிருக்கிறது. தில்லி நகர பேருந்து விபரங்களும் அறிந்து கொண்டேன். படிப்படியாக ஹிந்தி கற்றுக் கொண்டு இன்று சரளமாக பேசி, எழுதும் வல்லமை பெற்ற தங்கள் நண்பருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். ஊருக்கு செல்பவர்களை வழியனுப்ப செல்லும் போது ஏற்படும் அனுபவங்களை சுவாரஸ்யமாக சொல்லியுள்ளார். அடுத்த பகுதிக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      தொடர்ந்து வாசிக்க இருப்பதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வாசகம் அருமை.
    அனுபவ தொடரை அருமையாக சொல்லி வருகிறார்.

    //அலுவலகத்திலிருந்த தமிழர்களுடன் பரிச்சயமான பின்னர் சற்றே இதமாக இருந்தது. மாலை வந்தால் கட்டிடத்தில் இருந்த தமிழ் நண்பர்களுடனான அரட்டை. //

    உண்மைதான், நம் மொழியில் உரையாடுவது மனதுக்கு இதம் தரும்.

    டெல்லியில் நாங்களும் நிறைய வாங்கி வந்து இருக்கிறோம்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      அனுபவத் தொடர் சிறப்பாகச் செல்வதாக நீங்கள் சொன்னதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஊருக்குச் செல்லும் உணர்வைத் தரும்... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. பதிவின் வாசகம் இனிமை.
    திரு சுப்பு அவர்களின் எழுத்து நடை மிக சுவாரஸ்யம். கண்முன் நடப்பது
    போலையே எழுதி இருக்கிறார்.
    அவருக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்து
    ஊர் வழித்தடங்களையும் காண்பித்துகொடுத்தது மிக மிக அருமை.

    இப்படிக் கூட நல்ல மனிதர்கள் இருக்கிறார்களே.

    அந்த மேலதிகாரியின் மனைவி முணிமுணுக்காமல் இருந்தாரோ:)

    தில்லி மாமாவும் இங்கே குறிப்பிட்டிருக்கும் அத்தனையும்
    வாங்கி வருவார்.
    கூடவே அந்தத் தண்ணீர் பானை, நல்ல செருப்புகள்,
    மணிமாலைகள், லக்னோவி காட்டன் புடவைகள்,

    அரக்கு வளையல்கள் என்று நிறைய
    வரும்.
    உங்கள் நண்பர் ரயில் நிலையத்துக்குச் செல்லும்
    மகிழ்ச்சியை அழகாகச் சொல்லி இருக்கிறார்.
    மனம் நிறை பாராட்டுகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வாசகமும் நண்பர் சுப்பு அவர்களின் எழுத்து நடையும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      உங்கள் தில்லி அனுபவங்களையும் சொன்னதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. முதல் பதினோறு வருடத்திற்கு, வருடா வருடம் ஆறு ரூபாய், அதன் பின்னர் எட்டு வருடங்களுக்கு வருடா வருடம் எட்டு ரூபாய், அதன் பின்னர் 10 ரூபாய் உயர்வு என கடைசியாக 400 ரூபாய் வந்து நிற்கும்! எத்தனை வருடங்கள் என்பதை நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள்! //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////பழைய நாளைய நினைவுகளைத் தந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளை இப்பதிடு மீட்டெடுத்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. சுவாரசியமாகவும், முந்தைய தலைமுறையின் ஒரு பகுதியை நாங்கள் புரிந்துகொள்ளும் வகையிலும் சிறப்பாக எழுதுகிறார்.
    விரைவில் இது நூலாக வந்து பலரை சேரும் என எதிர்ப்பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய தலைமுறை செய்திகள் - உண்மை தான் அரவிந்த். உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நூலாக - வெளி வரலாம்! நண்பர் அனுமதித்தால்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. 30 வருடங்கள் தில்லி வாழ்க்கை. கடந்த கால நினைவுகளை உங்கள் எழுத்துக்கள் மனதை கலக்குகிறது. ஆனாலும விடாது படிக்க தூண்டும் நடை & பொருள். Awesome

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கோமதி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....