புதன், 14 ஜூலை, 2021

கடந்து வந்த பாதை - பகுதி பத்து - சுப்ரமணியன்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சுஜாதா எழுதிய பயணக் கட்டுரை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும்; உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை அமையும் - சாக்ரடீஸ்.


******


தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முந்தைய பகுதிகளை நீங்கள் படித்திருக்கலாம்!  படிக்காதவர்கள் வசதிக்காக அந்த முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!  


கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று


பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு 


பகுதி ஒன்பது


வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.


******


கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்


அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம்.  வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம்.  MASK FIRST SHOE NEXT!  


சென்ற பகுதியில் அதிகாரியின் பேச்சால் “அழுகை, ஆத்திரம், அவமானம் சேர்ந்த மாமிசக் கலவையாக நின்றேன்” என்று சொல்லி முடித்திருந்தேன்.  அதன் பின்னர் என்ன நடந்தது… தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!


என்ன செய்வது என்றே தெரியாமல், கலக்கத்துடன் சற்றே முன்னர் நடந்தேன்.  முதல் நாள் பார்த்த அந்த தமிழ்த் தோழர் (அவரது பெயர் இங்கே குறிப்பிடவில்லை! ஏனெனில் ஒன்றரை மாதம் முன்பு அவர் இயற்கை எய்திவிட்டார். அத்துயர் என்னை விட்டு இன்னும் அகலவில்லை!) - எதிரே வந்தார். என்னைப் பார்த்ததும், ”என்ன ஆயிற்று? பணியில் சேர்ந்து விட்டீரா?” எனக் கேட்க, அவ்வளவு தான்! கண்களிலிருந்து அருவி தன்னிச்சையாய் கொட்டியது!  இதில் கொடுமை என்னவென்றால், இவை அனைத்தையும் அந்த ஜெயின் எனும் ஹிந்தி வெறியர் அவரது அறை வாயிலிலிருந்து எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். ”இவர் இப்படித்தான் எல்லோரையும் அழ வைத்து ரசிப்பவர்!”(தூ…. என்ன ரசனையோ?) என்றார். 


அனைத்தையும் கேட்டு, நண்பர் உடன் வர, நேராகச் சென்று ஸ்தாபனம்-2 பகுதிக்குச் சென்று பணியில் சேர்ந்தேன்.  ”வாழ்த்துகள்!” என்றார்.  ”வாழ்த்துகளாகவது, கத்திரிக்காயாவது!” (கத்தரிக்காய் எனக்கு சற்றும் பிடிக்காத காய்கறி. அதனை பள்ளிப்பருவத்திலேயே துறந்தவன் நான்!” என நண்பருடன், 1964 வெளிவந்த எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற, கவியரசரின் வரிகளான, “மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்” என இன்னும் சில நண்பர்கள் புடைசூழ, வெற்றிகரமாக 24-ஆம் வயதின் இறுதிப் பகுதியில் (காகிதப்படி ஏப்ரல் 5-ஆம் தேதி! நிஜமாக அடியேன் ஜனித்த நாள் 26 ஜூன்!) 36 வருடங்கள் அரசு ஊழியனாய் தலைநகர் தில்லியில் வலம் வருவேன் என்று அறியாது பணியில் சேர்ந்தேன்! 



மதியம் உணவகத்தில் தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி, பரஸ்பர அறிமுகப் படலத்திற்குப் பின்னர் மாலை பேருந்தில் மீண்டும் ஒரு ஆச்சர்யம்! அந்நாளில் கடுமையான சில்லறைத் தட்டுப்பாடு இருந்தது! நான் 25 பைசா நாணயம் கொடுத்து, அன்று முழுவதும் நண்பர்களிடம் கற்ற ”பந்த்ரா (ஹிந்தியில் பதினைந்து) கா ஏக் டிக்கெட்” என வடிவேலுவிடம் தமிழில் ஒப்பிக்கும் மதன்பாப் போல நடத்துனரிடம் ஹிந்தியில் ஒப்பித்தேன்! அவர் என்னைப் பார்த்து, ”மத்ராஸி!” என்றார்.  ”ஐய்யயோ, என்னன்னு தெரியலையே, ஆனால் மத்ராஸ் என்கிறார். அதனால, ஆமாம் சொல்லி வைப்போம்” என்று பூம் பூம் மாடானேன். அப்போது வந்தது வில்லங்கம்! ஒரு பயணச் சீட்டை - இங்கே பயணச் சீட்டு தரும் முறையைச் சொல்கிறேன்! 




இங்கே பயணச் சீட்டு, கிலோ மீட்டர் தூரத்தை பொறுத்து, 0 - 4 கிலோமீட்டர் வரை 5 பைசா, 4 - 10 கிலோமீட்டர் வரை 10 பைசா, 10 கிலோமீட்டருக்கு மேல் 15 பைசா! எனவே பயணச் சீட்டை எடுத்து, இடது கையில் பிடித்து, ஒரு நிலையிலிருந்து செல்லும் நிலை வரையுள்ள எண்களை ஒரு தொட்டி போல கிழித்து எறிந்து விடுவார். மீதப் பகுதி தான் நமது பயணச் சீட்டு. நடத்துனர் இருக்கையை விட்டு எழ மாட்டார். எனவே பல பேருந்துகளில் நடத்துனரின் காலடியில் பூத்தூவல் போன்று கிழிந்த தொட்டிப் பகுதிகள் கிடக்கும்!  சரி நம்ம கதைக்கு வருவோம்! 


அவர் மீண்டும் கிழிக்காமல் சிவப்பு கலரில்  ஒரு பயணச் சீட்டைக் கொடுத்தார். என்னடா இது தமிழகத்தில் நீண்ட தூரப் பேருந்துகளில் தான் பல வண்ணங்களில், பல அளவுள்ள பயணச் சீட்டுகள் ஒருவருக்கு வழங்கப்படும். இங்கேயுமா, என எண்ணியபடியே நின்றேன். நடத்துனர் கரடுமுரடான குரலில் ”ஆகே ஜாவ்!” (ரஜினி ஸ்டைலில் முன்னே போ!” என்றார். சக பயணியான, ஆங்கிலம் தெரிந்த ஒருவர், “சில்லறைக்குப் பதிலாக இது! அடுத்த பயணத்தில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.  டிக்கெட்டுக்கு டிக்கெட்டா? என வியந்த நான் இயல்பு நிலைக்குத் திரும்பினேன். 


மாலையில் கட்டிடத்தில் அனைத்துத் தோழர்களும் ஒன்று சேர, முதல் நாள் அனுபவத்தைச் சொல்லி முடித்தேன். பலத்த கரகோஷம். வெடிச்சிரிப்பு வானைப் பிளந்தது! அந்தச் சிரிப்பு அனுபவித்து சிரித்ததா? இல்லை ஏளனச் சிரிப்பா என யோசித்து, இரண்டும் கலந்ததாக இருக்கும் என சமாதானமடைந்தேன். இப்படியாகத் தானே நானும் வேலையில் சேர்ந்தேன். நான் சேர்ந்தபோது வாரம் 6 நாள் பணி - காலை 09.45 மணி முதல் மாலை 04.45 மணி வரை. சனிக்கிழமை மட்டும் மதியம் 02.45 மணி வரை! ஆனால் நான் சேர்ந்த அதிர்ஷ்டம், ஜூன் 3, 1985 முதல் வாரம் 5 நாள் பணிமுறை அமல்படுத்தப்பட்டது! காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை அல்லது காலை 09.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை! மதியம் 30 நிமிடம் உணவு இடைவேளை!


சேர்ந்த அன்று உனது சம்பளம் இந்த விகிதத்தில் இருக்கும் என்று மட்டும் கூறி, பட்டத்தின் வால் போல ஒரு காகிதம் தந்தனர். அதில் 260 - 6 - 290 - EB - 6 - 326 - 8 - 366 - EB - 8 - 390 - 10 - 400 என இருக்க, ”என்னுடைய சம்பளம் என்னவாக இருக்கும்?” என்ற கேள்வியுடனேயே தூங்கச் சென்றேன். கட்டிடத்தில் எந்தத் தோழரும் அரசு அலுவலகத்தில் இல்லை. அது வரை EB என்றால் மிவா எனப்படும் மின்வாரியம் என்றே அறிந்திருந்தேன். EB6, EB8 எனப் படித்து, ஒரு வேளை மின்கட்டணமோ என எண்ணினேன்! எவரிடமும் கேட்க பயம் கலந்த வெட்கம்.  அது என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேனே! தொடர்ந்து, கடந்து வந்த பாதையில் பயணிப்போம்…


நட்புடன்


சுப்ரமணியன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


16 கருத்துகள்:

  1. அந்த நேரத்தில் முன்னூறு ரூபாய் சம்பளம் என்பது நல்ல தொகைதான் இல்லை? அந்த அதிகாரியின் மிரட்டல் என்னாயிற்று?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னூறு ரூபாய் அந்த நாட்களில் பெரிய தொகை தான்.

      ”நான் என் நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததை கவனித்தவர், சத்தமாக நான் தமிழ் phonetic (???) ஆக இருக்கக் கூடாது என்றும், ஹிந்தி கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று சொல்லி, தமிழ் நண்பரிடம் என்னை அட்மின் பகுதிக்கு அழைத்துச் செல்லச் சொன்னார்” - நண்பர் சுப்ரமணியன் அவர்களீன் பதில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. சுத்தமான கிராமத்தான் தலைநகரில் ஹிந்திவாலாக்களுக்கு இடையே மாட்டிக்கொண்டதை ரசனையாக எழுதியிருக்கிறார்.

    நாளுக்கு ஒரு வார்த்தை என்றாலும் ஐந்து வருடத்தில் ஹிந்தியைக் கரைத்துக் குடித்திருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிராமத்தான் தலைநகரில் ஹிந்திவாலாக்களுக்கு இடையே மாட்டிக் கொண்டது - உண்மை தான்.

      ஒரு வருடத்திற்குள்ளாகவே நல்ல ஹிந்தி பேச கற்றுக் கொள்ள முடியும் நெல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சிறிய விசயங்கள்கூட நினைவில் நிறுத்தி இருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் ஞாபகத் திறன் அப்படி. நல்லதொரு திறமைசாலி அவர் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பதிவு தொடர்ந்து ஸ்வாரஸ்யமாக இருப்பதில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. நல்ல வேளையாக முதல் நாளைக் கடந்தார். துல்யமான மெமரி.
    நல்ல விதமாக எழுதும் திறன்.

    6 நாள் ஐந்து நாட்களாக ஆன காலம் எனக்கும் நினைவில் இருக்கிறது.
    அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துகள் கண்டு மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. உங்கள் நண்பரின் கடந்து வந்த பாதை சுவாரஸ்யமாக செல்கிறது. நண்பர் போன பதிவில் மன பாரத்துடன் வேலை வேண்டாம் என சொல்லி வந்த பின் வேலையில் சேர்ந்ததாக குறிப்பிட்டிருக்கிறாரே என நினைத்தேன். சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் கருத்துக்கு தங்கள் நண்பரின் பதிலைக் கண்டு தெளிவு பெற்றேன்.

    எத்தனை இக்கட்டுகளுடன் புது இடத்தில், அறியாத மொழி பயில நிர்பந்தத்துடன் வேலை செய்ய இறைவன் விதித்துள்ளார். ஒவ்வொருவர் வாழ்க்கையும் இப்படி சில சிரமங்களுடன்தான் செல்கிறது. ஆனால், அதையும் கடந்து வர நல்ல சந்தர்பங்களையும் இறைவன் அவரவர் திறமைகளுக்கு பரிசாக அருளுகிறார். அந்த காலத்தில் நூறு, இருநூறு ரூபாய் சம்பளத்திற்கும் ஒரு மதிப்பிருந்தது. அடுத்தப் பகுதியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....