செவ்வாய், 20 ஜூலை, 2021

கடந்து வந்த பாதை - பகுதி 12 - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட யவனராணியைத் தேடி பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். யாருக்கு அதை வழங்குவது என்பதை…. பணம் முடிவு செய்கிறது - கண்ணதாசன்.


******


தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முந்தைய பகுதிகளை நீங்கள் படித்திருக்கலாம்!  படிக்காதவர்கள் வசதிக்காக முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!  


கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று


பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு 


பகுதி ஒன்பது  பகுதி பத்து  பகுதி பதினொன்று


வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.


******


கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்


அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம்.  வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம்.  MASK FIRST SHOE NEXT!  


நாட்கள் நகர்ந்தன.  ஏப்ரல் மாதத்தின் இறுதி நாள், நிதித்துறைக்குச் சென்று இந்த மாதத்தின் சம்பளத்தினைப் பெற்றுக் கொள் என்றார்கள். அப்போதெல்லாம் ஒவ்வொரு பிரிவிலும் உள்ளவர்களின் சம்பளத்தை, பிரிவிலிருந்து செல்லும் ஒருவரிடம் கொடுத்து விடுவார்கள். அவர் வந்து பிரிவில் உள்ள அனைவருக்கும் அவரவர் சம்பளப்  பணத்தை பகிர்ந்து கொடுப்பார். மாதா மாதம் அப்படி  பெற்றுக் கொண்டு வருபவர் மாறுவார்.  இது எனக்கு ஒரே விந்தையாக இருந்தது.  யாரோ ஒருவர் வந்து தினக்கூலி கொடுப்பது போல, கூவிக் கூவி கொடுக்கிறாரே என்று தோன்றியது.  ஒருவர் ‘சுப்பு, உனது முதல் சம்பளம் ஆதலால், நிதிப் பகுதி (Cash Section) - ஹிந்தியில் ரோகட் அனுபாக்! - சென்று பெற்றுக் கொள்” என்றார்.  





அங்கே சென்றால், கம்பி வலைக்குள் இருவர் இருந்தனர்.  சிறையில் கைதிகளைச் சந்திப்பது போன்ற திரைப்படக் காட்சி போலவே இருந்தது.  என்னை நீதிபதி குற்றவாளியை விசாரிப்பது போல, ஏதேதோ கேட்டு, பின்னர் கையொப்பம் வாங்கிக் கொண்டு, “எண்ணிப் பார்” என்றார்.  வாழ்க்கையில் மொத்தமாய் அவ்வளவு பணம் கண்டதே கிடையாது. எண்ண எண்ண வந்து கொண்டேயிருந்தன பணத் தாள்கள். எண்ணி முடித்தால் மொத்தம் 905/- ரூபாய். அதுவரை தனியார் அலுவலகங்களில் வேலை பார்த்து, நான் சம்பாதித்த அதிக பட்ச மாத ஊதியமே 400 ரூபாய் தான். அதுவும் கையில் முழுதாகக் கிடைத்ததில்லை. 30/04/1985 அன்று உலகத்தையே கையில் பிடித்து விட்டது போல மட்டற்ற மகிழ்ச்சி. திக்கு முக்காடிப் போனேன்! 


வாழ்க்கையில் முதல் முறையாக தந்தைக்கும்/தந்தை வழி பாட்டிக்கும் பண ஆணை செய்தேன் - அதாங்க மணி ஆர்டர்! அன்றைய நாளில் நல்ல விலையில் இரண்டு முழுக்கை சட்டைகள் இரண்டு முழுக்கால்சராய்கள் வாங்கினேன். அப்போது தான். கணினிக் கல்வி கோலோச்சத் துவங்கிய நேரம். அலுவலகத்திலும், தங்கிய அறையிலும் இருந்த நண்பர்கள், ”நீ கூர்ந்து கவனிக்கிறாய், கணினியின் பொருளாதார மொழிகளான (Computer business/commercial languages) Basic, Cobalt, Lotus, D-base போன்றவற்றை கற்றுக் கொள். நல்ல எதிர்காலம் உண்டு” என்றார்கள்.  அதனைப் பற்றி தகவல் சேகரித்து, தந்தைக்கு கடிதம் எழுதினேன்.  


அந்நாளில் தொலைபேசி, அதுவும் தொலைதூர தொலைபேசி மிகவும் கடினம். அனைத்தும் கடித வழி தான்.  தந்தைக்கு அனுப்பிய கடிதத்திற்கு படுபயங்கரமான ஒரு பதில் வந்து சேர்ந்தது! ”அரசு வேலை தவிர வேறு எந்த வேலைக்கும் போகவோ, அதற்கென தனியாக படிக்கவோ, நினைத்தால், நீ எங்களை அடியோடு மறந்து விடு” என்ற வரிகள் தான் அந்த பதில் கடிதத்தில் இருந்தது. அன்றோடு அந்த ஆசைக்கு முற்றுப் புள்ளிவைத்து விட்டேன்.  ஆனாலும், வேறு வழியில் தந்தையை எதிர்ப்பது என முடிவெடுத்தேன். அரசு வேலைகளிலேயே மேல் நிலைத் தேர்வுகள் எழுதுவது, அதற்கென படிப்பது என்பது தான் அந்த முடிவு. அதன் விளைவு, பணியில் சேர்ந்த  இரண்டு மாதங்களிலேயே தற்காலிக சுருக்கெழுத்தர் (Ad-hoc Stenographer) பணிக்கு விண்ணப்பித்து, வேறொரு அமைச்சகத்தில் தற்காலிகமாக சுருக்கெழுத்தர் ஆனேன். அடிப்படைச் சம்பளம் ரூபாய் 260/-லிருந்து ரூபாய் 330/- ஆனது!  1985 ஜூலை மாதத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கினேன்!





அறையில் வார விடுமுறை நாட்களில், வெளியில் வட இந்திய உணவகங்களில் உண்பது என தீர்மானித்து, ஒரு வார இறுதி நாளில் வட இந்திய உணவகம் (Dhaba) சென்றோம். உடன் வந்த நபர், “சப்ஜி க்யா ஹே?” என்றார். ஹிந்தி கற்றுக் கொண்டதன் விளைவு, ஹிந்தி புரியத் தொடங்கி இருந்த நேரம் அது. அது நாள் வரையில் தங்கும் அறையின் எதிரிலிருந்த/அருகாமையிலிருந்த தென்னிந்திய உணவகத்தில் மட்டுமே உண்டு வந்தேன். உணவக சிப்பந்தி சொன்னதில் பாதி புரியவில்லை. நம் ஊர் உணவகச் சிப்பந்திகள், “இட்லி, வடை, பொங்கல், பூரி” என இட்லியில் துவங்குவது போல, இங்கே (Dh)தால் எனும் பருப்பு வகையில் தான் துவங்குகிறார்கள். (Dh)தால் என்றால் துவரை/கடலை/உளுந்து பருப்பு வகைகள் தான். பெரும்பாலும் துவரை/கடலை பருப்பு தான். அதைச் சற்று தீய வைத்தால் (Dh)தால் ஃப்ரை (Dhal Fry) என்றும், அதன் மீது வெண்ணைக்கட்டி ஒன்றைப் போட்டு புரட்டினால்/வதக்கினால் (Dh)தால் மக்கனி!





உணவகச் சிப்பந்தி, திடீரென்று (Dh)தால்-லிருந்து தாவி, பாலக் என்கிறார், பன்னீர் என்கிறார், ராஜம்மா (ராஜ்மா) என்கிறார் என்க்கோ ஒன்றும் புரியவில்லை. உடன் வந்த நண்பரிடம், மெல்லிய குரலில், ”என்ன, இவர் என்னமோ, பன்னீர், ராஜம்மா, பெரியம்மா என்று நபர்களின் பெயர்களாகச் சொல்கிறாரே” என்றேன். குபீரென சிரித்த நண்பர், ”இவை அனைத்துமே ரொட்டிக்குத் தொட்டுக்கொள்ளும் பதார்த்த வகைகள்” என்று எனக்கு பதிலளித்தார். எனக்கு அவை எதுவும் தெரியாததால், அவராகவே வரவழைத்தார்.  தந்தூரி ரொட்டி என்றார்! பார்த்தால் நம் ஊர் நெல் தொம்பை போல ஒரு பெரிய கலவையின் உள்ளே நீண்ட கம்பியை விட்டு எடுத்தார் உணவகச் சிப்பந்தி ஒருவர். அதன் நுனியில் வலையில் சிக்கிய மீன் போல, சற்றே பெரிய வட்டமாய் ஒன்று வந்து விழ, அதன் தலையில் வெண்ணைக் கட்டியைத் தேய்த்து கொண்டு வந்து தட்டில் தொப்பென்று போட்டார். 


எனக்கோ, “என்னடா இது, தொட்டியிலிருந்து ரொட்டி வருகிறதே” என்று ஆச்சர்யம். நண்பர், “சூடாக இருக்கும்போதே சாப்பிடு” என்று சொன்னார் - அது எதற்கு என்பது பிறகே புரிந்தது! நமக்கோ சூடு என்பது சுத்தமாக ஆகாது. விளைவு, ஆறிய ரொட்டியை பிய்க்க வரவே இல்லை! ஜவ்வு மிட்டாய் போல ஆனது ரொட்டி! அது தவிர சிறிய தட்டில் முள்ளங்கி, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை வைத்தனர்.  கேட்டால் அதன் பெயர் சலாட் (Salad) என்றனர்.  அதற்கு முன்னர் அவற்றைக் கண்டதே இல்லை. இப்படி ஒரு வழியாக வட இந்திய உணவுடன் நானும் விளையாடத் துவங்கினேன்! அறைத் தோழர்கள் வாரா வாரம், திரைப்படம் காண சென்று விடுவார்கள். நமக்கும் திரைப்படத்திற்கும் ஆகாது - ஒவ்வாத விஷயம் அது. ஆகவே அந்த நேரங்களில் நான், கரோல் பாக் (Karol Bagh) சாலைகளில் நடை பழகினேன். முழுக்க முழுக்க கடைவீதிகள் கொண்ட பகுதி அது. நேரம் போவது அறியாமல் சுற்றுக் கொண்டிருந்தேன். 


அப்படி சாலைகளில் சுற்றிக் கொண்டிருந்த போது, நான் கண்ட காட்சி குறித்து அடுத்த பகுதியில் சொல்கிறேனே! கடந்து வந்த பாதையில் தொடர்ந்து பயணிப்போம்…


நட்புடன்


சுப்ரமணியன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


18 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமாக செல்கிறது.  முதல் சம்பளம் வாங்கிய மூன்று மாதங்களிலேயே சம்பளத்தை உயர்த்திக்கொள்ள வழி செய்து கொண்டது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு ஸ்வாரஸ்யமாக செல்கிறது என்று சொன்ன உங்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இதன் மற்றைய பகுதிகளையும் படித்திருந்தாலும் பின்னூட்டமிடவில்லை. விறு விறு வென்று வார்த்தை சிக்கனத்தோடு அருமையாக எழுதுகிறார். வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வார்த்தை சிக்கனம் - நல்ல விஷயம். சிலருக்கு மட்டுமே இது கைவருகிறது பானும்மா. மற்ற பகுதிகளையும் படித்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. அனுபவம் பல விதம் தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பத்மநாபன் அண்ணாச்சிக்குப் போட்டியான நல்ல ரசிக்கக்கூடிய எழுத்தில் அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர்களுக்குள் போட்டி - நல்ல விஷயம் தானே நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. தங்கள் நண்பரின் எழுத்தில் அவர் அனுபவங்கள் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. அவர் தந்தையின் கட்டளைக்கு மீறாமல், அதே சமயம் அவர் கல்வி விருப்பங்களோடு உத்தியோகம் சம்பந்தபட்ட உயர்வுகளையும் தன் முயற்சியால் நிறைவேற்றி கொண்டதற்கு பாராட்டுக்கள். வட இந்திய உணவுகளை விவரித்த விதத்தில் வந்த நகைச்சுவைகளை ரசித்தேன். அடுத்த பகுதிக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. //”அரசு வேலை தவிர வேறு எந்த வேலைக்கும் போகவோ, அதற்கென தனியாக படிக்கவோ, நினைத்தால், நீ எங்களை அடியோடு மறந்து விடு” // - ஹாஹா.... என் பெரியப்பா (அவர் கல்லூரி HODயாக இருந்தவர்), என்னடா, அவன் வெவ்வேறு வேலைக்குத் தாவிக்கொண்டே இருக்கானே என்று ஆச்சர்யமாகச் சொன்னார். அவங்களுக்கெல்லாம் ஒரு வேலையில் சேர்ந்தால், அதிலேயே பெர்மனண்டாக இருக்கணும், ஸ்டபிலிட்டி வேணும், அதிலேயே இருந்து ப்ரொமோஷன் வாங்கி... இந்த மாதிரியே அவங்க நினைத்தாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாவிக்கொண்டே இருக்கானே - :) இப்படியான பேச்சுகளை நானும் கேட்டிருக்கிறேன் - என் உறவினர்கள் சொல்லும்போது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. மிகவும் நகைச்சுவை நிறைந்த பதிவு. ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. அனுபவங்கள் தொடரும் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அருமையான, தெளிந்த நடை மற்றும் கதை சொல்லும் பாங்கு...தொடரட்டும் உங்கள் எழுத்தோட்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகை - மகிழ்ச்சி ஸ்ரீனி ஜி. பதிவு பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....