ஞாயிறு, 25 ஜூலை, 2021

கடந்து வந்த பாதை - பகுதி 13 - சுப்ரமணியன்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


மெதுவாகப் பேசு, அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும்; நல்ல எண்ணத்தோடு இரு, அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்  - வள்ளலார்.


******


தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முந்தைய பகுதிகளை நீங்கள் படித்திருக்கலாம்!  படிக்காதவர்கள் வசதிக்காக முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!  


கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று


பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு 


பகுதி ஒன்பது  பகுதி பத்து  பகுதி பதினொன்று  


பகுதி பன்னிரெண்டு


வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.


******


கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்


அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம்.  வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம்.  MASK FIRST SHOE NEXT!  


சாலைகளில் சுற்றிக் கொண்டிருந்த போது, நான் கண்ட காட்சி குறித்து அடுத்த பகுதியில் சொல்கிறேன் என்று சொல்லி இருந்தேன். அது குறித்துப் பார்க்கலாம் வாருங்கள்.



படம்: இணையத்திலிருந்து....




படம்: வெங்கட் நாகராஜ்....


சாலைகளில் சுற்றிக் கொண்டிருந்த போது, நான் அதுவரை கண்டிராத ஒரு காட்சியைக் கண்டேன். ஒரு பெரிய தள்ளுவண்டியில் பெரிய பெட்டி போல வைத்திருக்கும் - அதன் மேலே வளைவாக ஒரு குழாய். அதன் அருகே ஒரு கைப்பிடி அமைப்பு. அதனை நான்கு ஐந்து முறை அழுத்த, குழாய் வழியே குளிர்ந்த பருகும் நீர் வரும். அந்த நாட்களில் ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பத்து பைசா! தற்போது இரண்டு ரூபாய்.  அந்தப்  பெட்டியின் பக்க வாட்டில் எழுதி இருக்கும் பெயர் - “மெஷின் கா டண்டா பானி!” அதாவது இயந்திரம் மூலம் குளிர்வித்த நீராம்!”. அங்கே பார்த்து வியந்த மற்றொரு விஷயம், “தட்டில் தேங்காய் பத்தைகளை வைத்து ”Gகோலா gகரி” என்று விற்பனை செய்வது. அட தேங்காய் பத்தைக்கு இப்படி ஒரு பெயரா? கடவுளே!



படம்: இணையத்திலிருந்து....



படம்: இணையத்திலிருந்து....

மேலும் ஒரு பதார்த்தம் கண்டும் நான் அலறினேன்! ஆனால் அப்படி நான் அலறிய பதார்த்தம் பலரும் சுவைப்பது - குறிப்பாக வட இந்தியப் பெண்கள்! அது தான் தில்லியில்/வட இந்தியாவில் மிகவும் பிரபலமான பானி பூரி! சிறிய அளவிலான பூரியை,  மெனக்கெட்டு தலையில் கொத்தி, அதனுள்ளே சிறியதாக வெட்டிய, வேக வைத்த உருளைக் கிழங்கு! பின்னர் மொத்த கையையும் ஒரு பெரிய பாத்திரத்தில் இருந்த பச்சை திரவத்தினை எடுத்து, கொலை செய்யப்பட்ட பூரியின் தலையில் ஊற்றிக் கொடுக்க, வயது வித்தியாசமின்றி சிறியோர் முதல், மூத்தோர் வரை மொத்த பூரியையும் முழுவதுமாக வாய்க்குள் வைத்து, தனது முகத்தினையே பூரி போல ஆக்கி, அதனை உண்பார்கள். அதைப் பார்த்த எனக்கோ பயங்கர சிரிப்பு!



படம்: இணையத்திலிருந்து....

சாலையோரத்தில் பல தின்பண்டங்கள், கொத்திக் குதறி  தான் தருவார்கள் - உதாரணம் தஹி பல்லா பாப்டி (Dahi Balla Paapdi) எனப்படும் தயிர்வடை. உணவு எதுவாகிலும், குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கப்பட்டு, அதன் தலை மீது பல வித பொருட்கள்/திரவங்களை அபிஷேகம் செய்து, மேலாக, அவர்கள் ரத்தத்திலேயே கலந்த விஷயமான மசாலாவைத் தூவி, ஒரு மரஸ்பூனையும் குத்தி தந்து விடுகிறார்கள்!  


ஜூலை 1985 தான் என் வாழ்க்கையினி மிகப் பெரும் திருப்புமுனை. மத்திய சுகாதார அமைச்சகத்தில் சேர்ந்த தினம். ஒரு பெரிய நட்பு வட்டத்தை பெற்றதும் இங்கே தான். முதன் முதலில் எங்கு சேர்ந்தேனோ அங்கு 1983-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்த தோழர் என்னுயிர்த் தோழரானார்.  இன்றும் எங்கள் நட்பு அன்னியோன்யமாய் தொடர்கிறது.  அவர் தற்போது தலைநகரில் இல்லை - தமிழகத்தில் இருக்கிறார். ஆனாலும் எனது உள்ளத்தில் தொடர்ந்து உள்ளார்.  ஒரு வழியாய் நட்பு எனது வாழ்க்கையை முழுமையாக ஆட்கொண்டது. தன்னலம்/ஆற்றாமை/பொறாமை/காழ்ப்புணர்வு போன்ற எந்தத் தீய தன்மைகளுக்குள்ளும் அடங்காத ஒரே உறவு நட்புறவு தானே.  அன்றிலிருந்து இன்று வரை நான் பெற்ற நட்புகள் அனைத்தும் கள்ளம் கபடமற்ற அக்மார்க் நட்புகளே. சற்றே உயர்த்திச் சொல்ல வேண்டும் என்றால் என் வாழ்வின் வசந்தத்தை 1985 முதல் துவக்கி என் இறுதி மூச்சு வரை எடுத்துச் செல்லவிருப்பது இந்த நட்புகளே.  


சில பகுதிகளுக்குப் பின்னர் நான் கூறப் போகும் என்  இனிய நட்பு வட்டத்தில் பலர் இன்றைய நாளில் தலைநகரிலிருந்து வேறு ஊர்களிலும் வெளி நாடுகளிலும் தங்கியுள்ளனர்.  ஆனாலும் எங்கள் நட்பு முடிவில்லா வான் வெளியாய் பின்னிப் பிணைந்து தொடர்கிறது.  ஒரு வழியாக பணியில் உடனடியாக ஒரு உயர்வு கண்டவுடன் நம்மூர் பெரியோர் (என் தந்தை உட்பட) சொல் வழக்காக கூறும் “கால் காசு வேலைன்னாலும் கவர்மெண்ட் (Government) வேலை பார்க்கணும்” என்ற உணர்வு என்னுள்ளும் வேறூன்றத் துவங்கியது. சரி நீண்ட சுயபிரதாபம் ஆகிவிட்டது. இனி மீண்டும் தில்லி வாழ்க்கையைத் தொடர்கிறேன்.  




படம்: இணையத்திலிருந்து....
(இப்படி லிப்ஸ்டிக் ப்ரிண்ட் செய்த கண்ணாடி டம்ப்ளர்கள் விற்பனைக்கு வந்து விட்டன இப்போது!)

இங்கே ஒரு பிரிவில் சேர்ந்ததும், உங்களுக்கே உங்களுக்கென ஒரு கண்ணாடி டம்ளர் கிடைக்கும் - தண்ணீர் குடிக்கவென! அதை அடுத்தவர் ஆட்டை போட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஒரு ஊதா கலர் திரவம் (Stencil Correcting Fluid - இதைப் பற்றி விரிவாக பின் வரும் பகுதிகளில் எழுதுவேன்!) மூலம் கண்ணாடி டம்ளரின் அடிப்பாகத்தில் பெயரின் முதல் எழுத்து அல்லது வேறு ஏதாவது அடையாளம் செய்து வைத்துக் கொள்வார்கள். இது ஒரு ஆச்சரியம்.  அடுத்து சக பணியாளர்கள் கூறிய தகவல் “டம்ளரின் விளிம்புகளில் சாயமிருந்தால்” அது மகளிரின் டம்ளராக இருக்கும்.  இதை ஒரு வாரம் கூர்ந்து (!) கவ்னித்து ஆராய்ச்சி (அட என்ன ஆராய்ச்சி - இது கொஞ்சம் ஓவரா இருக்குல்ல!) செய்தேன்.  அந்த ஆராய்ச்சி குறித்து அடுத்த பகுதியில் சொல்கிறேனே!  தொடர்ந்து கடந்து வந்த பாதையில் பயணிப்போம். 



நட்புடன்


சுப்ரமணியன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


22 கருத்துகள்:

  1. குற்றுயிரும் குலையுயிரும் ஆக்கி, அதன் மேல் மசாலா தூவி...    ஹா ஹா ஹா இதைப் படித்ததும் சிரித்து விட்டேன்.  நண்பருக்கு பானி பூரியும் பிடிக்கவில்லை என தெரிகிறது.  எனக்கும் பிடிக்காது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலருக்கும் பானிபூரி பிடித்த விஷயம் என்றாலும், சிலருக்கு இது பிடிப்பதில்லை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நானும் பன் பட்டர் ஜாமோ என்று நினைத்தேன். தேக்காய் பத்தைகளா? அதன் உபயோகம் (சமையலில் தவிர) என்ன? சாலையில் விற்பதால் கேட்கிறேன்.

    அலுவலக நட்பு உயர்வானதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காய் பத்தைகள் - கோடை நாட்களில் அப்படியே Raw-ஆக சாப்பிடுவார்கள் நெல்லைத் தமிழன். குளிர்ச்சி தரும் என்று ஒரு நம்பிக்கை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. நல்ல நட்புகள் கிடைப்பதுகூட இறைவனின் அருள்தான் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல நட்பு இறைவனின் அருள் - உண்மை கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. சாலையோரத் திண்பண்டங்களை ஒருமுறையேனும் சுவைத்து பார்க்க ஆவல் கூடுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லிக்கு ஒரு முறை பயணித்தால் இப்படியான பல விஷயங்களைச் சுவைக்க முடியும் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. மெகா சீரியல் மாதிரியல்லவா ஓட்டுகிறார். ஒரு நாளைக்கு ஒரு சீன் மட்டும் தான். அடுத்து வருவது என்று போட்டுவிட்டு 4 நாள் காத்திருக்க வைக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெகா சீரியல் - இருக்கலாம். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் தில்லி வாழ்க்கை குறித்து எழுத வேண்டியிருக்கிறது. அதனால் சில பாகங்கள் வரும். வாரத்திற்கு இரண்டு பதிவுகள் வருகின்றன ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. தங்கள் நண்பரின் க. வ. பாதை தொடரும் சுவாரஸ்யமாக செல்கிறது.

    சாலையில் கண்ட உணவு/பருகும் நீர் பற்றிய அனுபவங்களை நகைச்சுவையுடன் அழகாக கூறியுள்ளார். தேங்காய் பத்தைகள் படம் அழகாக உள்ளது. இதைக் குறித்து உங்கள் பதிவிலும் முன்பே படித்து தெரிந்து கொண்டிருக்கிறேன்.

    பானி பூரி பற்றி உங்கள் நண்பர் விவரித்திருப்பதை ரசித்தேன். ஆம். அப்படியே அதை சாப்பிடுவது கொஞ்சம் கஸ்டந்தான். "எப்படித்தான் இவர்கள் சாப்பிடுகிறார்கள்..?" என நானும் இங்கு பார்த்து வியந்திருக்கிறேன்.

    நட்பைப் பற்றி தெளிவாக அருமையாக சொல்லியிருக்கிறார். அவருக்கும், அவரது நட்புறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    கண்ணாடி டம்ளரில் அடையாள சின்னங்கள் சுவாரஸ்யம். பார்த்துப் பார்த்து எடுத்து பயன்படுத்த வேண்டும்.(பொதுவாக கண்ணாடி டமளர்களையே பத்திரமாகத்தான் பயன்படுத்த வேணடும்:)) நல்ல எச்சரிக்கை மனப்பான்மை பழக்கமாகி வந்து விடும். அடுத்து அவரின் ஆராய்ச்சி சம்பந்தபட்ட அடுத்த பகுதியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு உங்களுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பதிவின் வழி சொன்ன விஷயங்கள் ஸ்வாரஸ்யமானவை தான் கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. ஹைதராவில் வேர்க்கடலையை டைம்பாஸ் என்று கூவிக்கூவி விற்பார்கள். அந்த நாள் மூர்மார்கெட்டில் ரொம்ஜா ரொம்ஜா என்று விற்பார்கள் - பன் பட்டர் ஜாமை கூறு போட்டு பத்தை பத்தையாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடக்கில் கூட வேர்க்கடலையை டைம் பாஸ் என்று விற்பதுண்டு அப்பாதுரை. ரொம்ஜா - புதிய சொல்லாடல்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. எனக்கு கோல் கப்பா பிடிக்கும்.
    அழகாகச் செய்து கச்ச முச்சா இல்லாமல்
    நன்றாகச் சாப்பிடலாம்.

    மருமகளிடம் தில்லி என்று சொன்னால்
    போதும் சொத்தில் பாதி எழுதி வைத்து விடுவாள்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோல்கப்பா நிறைய பேருக்கு பிடிக்கும் வல்லிம்மா. சிலருக்கு மட்டுமே பிடிப்பதில்லை.

      தில்லி என்று சொன்னால் சொத்தில் பாதி - ஹாஹா.... தில்லி வாசிகள் பெரும்பாலானவர்கள் அப்படித்தான். சில வருடங்கள் இருந்துவிட்டால் இங்கேயிருந்து புறப்பட மனம் இருக்காது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நட்புகளையும் தோழமையையும் அருமையாகச் சொல்லி இருக்கிறார்.
    என்ன இருந்தாலும்
    அரசு வேலை போல எதுவும் இல்லைதான்.
    ஆயுசுக்கும் கூட வரும்.

    டண்டா பானி, தேங்காய்ப் பத்தை அனைத்துமே சுகம்.
    அந்த ஊர் வெய்யிலுக்கு எல்லாம் தான் வேண்டும்.
    கட்டித் தயிர் கூட விற்பார்கள் என்று மாமா சொல்வார்.

    கூடவே அந்த மசாலா பால்.
    சாப்பிடுவதற்காக தில்லி செல்லலாம் போல இருக்கே.:)

    உங்களுக்கும் நண்பருக்கும் பாராட்டுகளும் அன்பும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மசாலா பால் - இப்போதெல்லாம் கிடைப்பது அரிதாகிவிட்டது வல்லிம்மா. முன்பெல்லாம் எல்லா பகுதிகளிலும் கிடைத்துக் கொண்டிருந்தது. தற்போது பழைய தில்லி பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....