புதன், 7 ஜூலை, 2021

கடந்து வந்த பாதை - பகுதி எட்டு - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உங்களிடம் அன்பு இருக்கிறதா? இருந்தால் உங்களால் ஆகாதது ஒன்றுமில்லை. நீங்கள் தன்னலத்தைத் துறந்தவர்களா? அப்படி என்றால் உங்களை எதிர்க்கும் சக்தி ஒன்றுமில்லை - சுவாமி விவேகானந்தர்.


******



தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முந்தைய பகுதிகளை நீங்கள் படித்திருக்கலாம்!  படிக்காதவர்கள் வசதிக்காக அந்த முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!  


கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று


கடந்து வந்த பாதை - பகுதி இரண்டு


கடந்து வந்த பாதை - பகுதி மூன்று


கடந்து வந்த பாதை - பகுதி நான்கு


கடந்து வந்த பாதை - பகுதி ஐந்து


கடந்து வந்த பாதை - பகுதி ஆறு


கடந்து வந்த பாதை - பகுதி ஏழு


வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.


******


கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்


அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம்.  வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம்.  MASK FIRST SHOE NEXT!  





தில்லி வந்த இரண்டாம் நாள் நான் சேரவுள்ள இந்திய பணியாளர் தேர்வாணைய அலுவலகம் (Union Public Service Commission - அன்போடு UPSC என அழைக்கப்படுவது!) உள்ள பகுதியைக் காண புறப்பட்டேன். அறையிலிருந்தோரும் மற்றும் அக்கட்டிடத்தில் இருந்த இன்னபிற தமிழ்த் தோழர்களும் எப்படியெல்லாம் செல்ல வேண்டும் என அறிவுறுத்தி ”அம்போ” என விட்டுவிட்டனர். அறையிலிருந்து நீண்ட தூரம் நடந்து Desh Bandhu Gupta Road (DB Gupta Road) எனும் சாலையை அடைந்து, அங்கிருந்து வழித்தடம் 45-இல் செல்ல வேண்டும். இன்றைய நாளில் தில்லி அரசுப் பேருந்தின் - DTC எனப்படும் Delhi Transport Corporation - மின் ஒளிர் தகவல் பலகை வசதியுள்ள முழுக்க முழுக்க இயற்கை எரிவாயுவில் இயங்கும் பேருந்துகள் - அதாவது Electronic Digital Board வசதியுள்ள CNG Buses! ஆனால் 1980-களில் (அந்நாளில்) இளம் பச்சை மஞ்சள் வண்ணத்துடன் இயங்கும் பேருந்துகள் தான்! 





அந்நாட்களில் நடத்துனராலும் சரி, ஓட்டுனராலும் சரி பேருந்தில் பயணிக்கும் பயணிகளை எதிரிகளாகவே கருதினர். ஓரிடத்தைக் கூறி பேருந்து அங்கே செல்லுமா என்றால், ”பெயர்ப் பலகையைப் பார்” என்பார்கள். அந்நாளின் DTC பேருந்துகளின் குணாதிசயங்களை சுருக்கமாகக் கூறி விடுகிறேன்! 


  1. பேருந்தின் முன்புறம் மட்டுமே பெயர்ப்பலகை இருக்கும் - அதுவும் ஹிந்தியில்!

  2. பின்புறம் ஆங்கிலத்தில் பலகை - ஆனால் 95 சதவீத பேருந்துகளில் அது இருக்காது!

  3. பெயர்ப் பலகையின் முன்னுள்ள கண்ணாடி மழை வந்தால் மட்டுமே தண்ணீர் காணும்! எனவே என்ன எழுதி இருக்கிறது என்பது மங்கலாக மட்டுமே தெரியும்! 

  4. அரசுப் பேருந்துகள் பலதிலும், கரும்பலகையில் கால்சிய சுண்ணாம்புக் கட்டியில் - அதுதாங்க நம்ம ஜனரஞ்சகமாகச் சொல்லும் சாக்கட்டி (அ) சாக்பீஸ் (ஆங்கிலம் நம் உயிரோடு கலந்த மொழியாயிற்றே!) கொண்டு எழுதி இருப்பார்கள். ஒரே நேரத்தில் முப்பரிமாண இல்லை இல்லை எண் பரிமாண வடிவில் - அது தாங்க 3D/8D - பல வழித்தட எண்களும் முனையப் பெயர்களும் (Destination Name) எழுதி இருக்கும்.  


இதைப் பற்றிய அறிவே இல்லாமல் இருந்த நான், 45-ஐக் கண்டவுடன் ”ஐய்யா, ஜாலி!” என ஏறிக் கொண்டேன்.  அந்த நாட்களில் அரசுப் பேருந்துகளில் 5/10/15 பைசா கட்டணமும், சில தனியார் பேருந்துகளில் ”டீலக்ஸ் கிராயா” ஒரு ருப்யா! அதாவது டீலக்ஸ் வகை பேருந்துகளில் எங்கே சென்றாலும் ஒரு ரூபாய் கட்டணம் (கிராயா)! எனவே எப்போது பயணித்தாலும், எங்கே பயணித்தாலும் சாதாரண பேருந்தாகில் 15 பைசா பயணச் சீட்டும், டீலக்ஸ் பேருந்து எனில் ஒரு ரூபாய்க்கும் பயணச்சீட்டு வாங்கி விடுவேன்!


45-ஆம் எண் பேருந்தினைப் பார்த்ததும் எனக்கு எதுவுமே தெரியாமல், 15 காசு கொடுத்து வீரமாக, ”டிக்கட்” எனக் கேட்க, நடத்துனரோ சற்றே கரடுமுரடான மொழியில் (ஹரியானா மாநிலத்தவர்கள் ஹிந்தியை அப்படித்தான் அடித்து உடைப்பார்கள்!) ஏதோ மந்திரம் ஓதி 10 பைசாவை திரும்பித் தந்து, ஐந்து பைசா டிக்கட் கொடுத்து விட்டார். எனக்கோ ஒன்றும் தெரியாது - முதல் நாள் வேறு - நம்மூர் நினைப்பில் பரிசோதகரிடமோ (Checker) அல்லது காவல் நிலையமோ தான் நமக்கு என நினைத்து அமர்ந்தேன். சற்று தூரத்தில் ஓட்டுனர் பேருந்தை ஓரங்கட்ட, பயணிகளுக்கு முன்னதாகவே நடத்துனர் இறங்கிச் சென்று விட்டார். 




எங்கு இருக்கிறேன் என்றே தெரியாமல் திக்குத் தெரியாத காட்டில் இருப்பது போன்று, சுற்றும் முற்றும் பார்க்க, ஒரு காவலர் இதைக் கவனித்து, என்னை அழைக்க, குலை நடுங்க, அவரிடம் சென்றேன். அவரும் ஏதோ மந்திரம் போல ஜெபித்தார்! அவர் சொல்வது எனக்கு புரியவில்லை! என்றால் அது தான் எனது வழக்கு முறை! அந்த இடத்தில் எல்லோரும் ”நயி தில்லி, நயி தில்லி” என்றார்கள். பின்னர் தான் புரிந்தது, அது நான் வந்து இறங்கிய புது தில்லி இரயில் நிலையம். காவலர் என்னை எதிரே உள்ள கடைப்பக்கம் அழைத்துச் சென்றார். ஓஹோ கப்பம் கட்டத்தான் அழைத்துச் செல்கிறார் போல (காவல்துறை என்றாலே கப்பம் கட்ட வைக்கும் துறை என்று தானே தோன்றுகிறது!) என நினைத்தால், அவர் என்னை அழைத்துச் சென்ற இடம் ஒரு உணவகம் - தில்லியில் அதன் பெயர் (D)டா(B)பா (Dhaba)!


எதற்காக என்னை அந்த காவலர் உணவகத்திற்கு அழைத்துச் சென்றார்? அடுத்த பகுதியில் சொல்கிறேனே! தொடர்ந்து, கடந்து வந்த பாதையில் பயணிப்போம்…


நட்புடன்


சுப்ரமணியன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...



14 கருத்துகள்:

  1. ஹா.. ஹா.. ஹா... முதல் நாளே யார் உதவியும் இல்லாமல் களத்தில் இறங்கிய உங்கள் துணிவு மெச்சத்தக்கது. அனுபவங்கள்தான் பாடம். இப்போது புன்னகைத்தாலும் அப்போது சிரமமாகத்தான் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவங்களே பாடம் - உண்மை ஸ்ரீராம். களத்தில் இறங்கிப் பார்த்தால் தான் அதில் உள்ள நெளிவு சுளிவுகள் தெரியும், புரியும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பேருந்துகளின் குணாதிசயங்கள்...! ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  3. ,முதல் நாளே காவலர் தயவில் சாயாவா. இல்லை உங்க தயவில் அவருக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா. பொறுத்திருந்து பாருங்கள் - அடுத்த பகுதியில் நடந்ததைச் சொல்லி இருக்கிறார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. உணவகத்தில் பில் கட்டியது யாரு ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவகத்தில் பில் கட்டினாரா? அடுத்த பகுதியில் விளங்கி விடும் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. அடுத்த பகுதியில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சுவாரசியமான அணுபவங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதிவு மிகச் சுருக்கமாக இருக்கிறதே மா.
    இன்னும் நிறையப் பதியலாமே.

    நல்ல அவஸ்தைப் பட்டிருக்கிறார்., உங்கள் நண்பன்.

    இப்படி ஒரு கொடுமையா தில்லியில்!!
    ஆனால் இப்போது சிரித்துப் படிக்கும் வகையில் எழுதி இருக்கிறார்
    பாராட்டுகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி வல்லிம்மா. சற்றே இடைவெளிக்குப் பிறகு தான் பதிலுரைத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....