திங்கள், 2 ஆகஸ்ட், 2021

உறவு தந்த வாழ்க்கைப் பாடம் - ஆதி வெங்கட்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


A STRONG POSITIVE MENTAL ATTITUDE WILL CREATE MORE MIRACLES THAN ANY WONDER DRUG..


******



கடந்து வந்த பாதை தொடரில் சுப்பு சார் ஒவ்வொரு பகுதியிலும் தன் வாழ்வில் கடந்து வந்த தருணங்களை பற்றி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் ஏதோ ஒரு வகையில் நம் வாழ்வோடும் தொடர்புடையதாய் இருக்கிறது அல்லவா! அப்படி என் வாழ்வில் கடந்த தருணங்கள் சிலவற்றை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 





2000-ஆம் ஆண்டு என் கல்லூரிப் படிப்பு முடிந்தது.. எனக்கு Machine drawing மிகவும் பிடித்த விஷயம்.. பார்க்கும் பொருள் எல்லாவற்றின் front view, Top view, Left side view, Right side viewகளை Drafter உதவியுடன் போட்டு பார்த்துக் கொண்டிருப்பேன். அதற்கு அடுத்த கட்டமாக அதை கம்யூட்டரிலேயே வரைவதை கற்றுக் கொள்ள கோவையில் உள்ள PSG காலேஜில் CADD (Computer Aided Designing & Drafting) கோர்ஸ் சேர்ந்து படித்தேன். 


அதற்கடுத்து CNC Turning & Milling கோர்ஸ் சேர்வதற்காக முதலில் சென்னையில் என் தாய்மாமா வீட்டிற்குச் சென்றேன். CNC என்பது computer numerical control turning & milling.. மெஷினில் நாம் நின்று செய்ய வேண்டிய வேலையை, ப்ரோகிராம் செட் செய்து விட்டால், மெஷின் தானே ஸ்டார்ட் ஆகி வேலையை முடித்து சரியான நேரத்தில் நின்றும் விடும்..ஆனால் அதற்குத் தகுந்த ப்ரோகிராம் செட் செய்ய வேண்டும். இல்லையெனில் product பாழாகி விடும். அதை கற்றுத் தருவது தான் இந்த கோர்ஸ். அப்போது CNC operaterகளுக்கு சிங்கப்பூரில் நல்ல வேலைவாய்ப்பு உண்டு என்பதைத் தெரிந்து கொண்டேன்.


அப்பா வழி உறவினர் ஒருவர் தான் இந்த கோர்ஸை கற்றுத் தரும் சென்டரை நடத்துகிறார் என்பதால் அவர்கள் வீட்டிலேயே தங்கி, நடக்கும் தொலைவில் இருந்த சென்டருக்கு சென்று வருவேன். வார இறுதியில் என் மாமா வந்து தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். மீண்டும் திங்கள் காலை சென்டருக்கு கொண்டு வந்து விடுவார்.


நான் தங்கிய என் உறவினர் வீடு.. ஒரு அபார்ட்மெண்ட் வீடு! வீட்டுக்குள்ளேயே மாடிப்படி! மாடியில் பெட்ரூம்கள் (இருக்கலாம்)! இன்றைய வில்லா டைப் வீடு அது. நான் தங்க வைக்கப்பட்டது அவர்கள் வீட்டு சமையல் செய்யும் பெண்மணியுடன்...:) ஆம்! அடுக்களை பக்கத்தில் சமையல்காரிக்கென ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.  அந்த அறையில் ஒரு மேஜை இருக்கும். மேஜையின் மேலேயே என் பெட்டியை வைத்துக் கொண்டு அங்கு தான் இருந்தேன். வீட்டின் எந்த பகுதிக்கும் செல்லவோ, உபயோகிக்கவோ எனக்கு அனுமதியில்லை..அந்த அறையிலேயே தான் இருக்க வேண்டும். பாத்ரூமும் அந்த அறையின் உள்ளேயே.


காலை உணவாக இரண்டே இரண்டு இட்லி.. அதற்கு மூன்று வகை தொட்டுக்கை. தேங்காய் சட்னி, வெங்காயம் தக்காளி வதக்கியது, புதினா சட்னி..மூன்றாவது இட்லி வேண்டுமா என்றெல்லாம் கேட்க மாட்டார்கள்..:) மதியம் ஒரு கப் சாதம், இரவு இரண்டு சப்பாத்தி. தினமும் இதே மெனு தான். அரை டம்ளர் தண்ணீர் தான் தருவார்கள்..:) வார இறுதியில் மாமா வீட்டிற்கு செல்லும் போது மாமி வேண்டியதை செய்து தருவார். வயிறு நிறையப் போடுவார்.


உறவினர் வீட்டில் அவர்கள் வீட்டு துணிகளை எங்கு காயப் போடுவார்கள் என்று தெரியாது..ஆனால் நான் துவைத்த துணிகளை மொட்டை மாடியில் தான் காயப் போட வேண்டும்..:) குப்பைகளைக் கூட தனியே வைத்திருந்து குப்பை எடுக்க வரும் நபரிடம்  நான் தான் கொடுக்க வேண்டும்.


இப்படி அவர்கள் வீட்டுக்கென்று சில சட்ட திட்டங்கள் இருந்தன. ஆரம்பத்தில் என்னவோ போல் இருந்தாலும், பின்பு வந்த வேலையை கவனிக்கத் துவங்கினேன். அதாங்க! எந்த கோர்ஸுக்காக வந்தேனோ! அதில் மனதை ஈடுபடுத்தத் துவங்கினேன். 


விளையாட்டு போல ப்ரோகிராம் எழுதத் துவங்கினேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உறவினர் வீட்டிலும் வேறு வேலைகளும் இல்லை, பேசவும் யாரும் இல்லையே! 


இப்படியே சென்றன நாட்கள். ஒருவழியாக என் கோர்ஸும் நல்லபடியாக முடிந்தது. சான்றிதழும் பெற்றேன். அங்கேயே அடுத்த நிலை கோர்ஸும் படித்து அங்கேயே Instructor ஆக வேலை பார்க்கவும் சொன்னார்கள். ஆனால் கஞ்சியோ, கூழோ அப்பா அம்மாவோடு இருப்பது தான் சிறப்பு என்று மனதுக்குத் தோன்றியது அப்போது தான்.


ஊருக்குத் திரும்புவதாகச் சொல்லி அங்கிருந்து விடைபெற்று சில மாதங்கள் என் மாமா வீட்டிலேயே தங்கி வேலைகளுக்கு விண்ணப்பிக்கத் துவங்கினேன். Ashok Leyland, TVS Lucas, Sundaram motors என்று எல்லா இடங்களுக்கும் அப்ளை செய்தேன். Saint Gobain-ல் எழுத்துத் தேர்வு கூட எழுதினேன். வேலை தான் கிடைக்கலை..:) அப்படியே கிடைத்தாலும் 1500 ரூ தான் சம்பளம். ஹாஸ்டலில் தங்கினால் பற்றாக்குறைக்கு அப்பாவிடம் தான் கேட்க வேண்டுமென மீண்டும் கோவைக்கே திரும்பி விட்டேன்.


இப்படி வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டிய அனுபவங்களைத் தெரிந்து கொள்வதால் நாம் நிச்சயம் பக்குவப்படலாம். வேறு ஒரு அனுபவப் பாடத்துடன் சந்திக்கிறேன்..


நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாமே.. நாளை மீண்டும் வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


28 கருத்துகள்:

  1. தங்கி இருந்த இடம் குறித்த விவரங்கள் மனதைத் தொட்டன.  சுவாரஸ்யமான அனுபவங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 21 வருடங்கள் கடந்த பின்னும் மனதை விட்டு நீங்காத நினைவுகள் ஸ்ரீராம் சார். தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.

      நீக்கு
  2. உறவினர் வீட்டில் தங்கி இருந்ததில் ஏன் இவ்வளவு கொடூரம்.

    இயல்பாக வாழ இயலாத வாழ்க்கை நரகம்தான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்த வரை எனக்கு வாழ்வின் நெறிமுறைகளை கற்று கொடுத்திருக்கிறார்கள்.அதுவும் ஒரு அனுபவம்..:)

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. இப்படியும் மனிதர்கள்! மன உறுதியுடன் கோர்ஸை முடித்துவிட்டுத் திரும்பியது பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..அப்போதிலிருந்து தான் மனிதர்களை புரிந்து கொள்ளத் துவங்கினேன்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ராமலஷ்மி.

      நீக்கு
  4. இப்படி கஷ்டப்பட்டு படித்து அதை பயன்படுத்தாமல் விட்டு விட்டீர்களா??????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதன் பிறகு அதை பயன்படுத்த வாய்ப்பே கிடைக்கலை..:) திருமணத்திற்குப் பிறகு சமையல், வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு என்று சிந்தனைகள் முற்றிலும் மாறி விட்டது...:)

      தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன் சகோ.

      நீக்கு
  5. சென்னையில் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவ்வப்போது பல இடங்களுக்கு விண்ணப்பித்து ஒவ்வொரு நிறுவனமாக சென்றுகொண்டிருந்தேன். ஒரு முறை நெருங்கிய உறவினர் ஒருவர் தனக்கு நெருக்கமான ஒருவர் வீட்டில் தங்கக்கூறி அவரின் முகவரியைத் தந்தார். அங்கு சென்று விவரங்களைச் சொல்லிவிட்டு அங்கிருந்து வேலைக்குப் போக யத்தனித்தேன். முதல் நாள் முதல் வேலை உணவை அவர்கள் வைத்த விதமும், பேசிய விதமும் வேண்டாவெறுப்பாக இருந்ததை உணர்ந்தேன். வெளிக்காட்டிக்கொள்ளலாமல் உடனே ஒரு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டேன். என் சூழலோ அல்லது அவர்களுக்கு என்னை ஏற்கா நிலையிலிருந்த மனமோ என்னை இப்படி ஆக்கியது. பிறகு எந்தவொரு நண்பர் வீட்டிற்கும், உறவினர் வீட்டிற்கும் போவதில்லை. தனியாகவே இருந்து சமாளித்தேன், இறைவன் துணையிருந்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அனுபவமும் வேதனைக்குரியது தான் ஐயா..மனிதர்கள் இப்படியும் இருக்கிறார்கள்..அவரவரின் சூழ்நிலை தான் காரணம்.

      தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. CNC போலவே அந்த அறையில் வாழ்ந்துள்ளார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாஸ்தவம் தான் சகோ..என்ன செய்வது!! அன்று இருந்த சூழ்நிலை அப்படி..:)

      தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க தனபாலன் சகோ.

      நீக்கு
  7. உண்மை தான் ஆதி, எல்லா அனுபவமும் நமக்கு ஒரு பாடம் தான். நல்ல பகிர்வு ப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்ப்பா..ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டே தான் இருக்கிறோம்.

      தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிப்பா.

      நீக்கு
  8. உறவு வீடு என்றாலும் இப்படியா?
    வேதனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா..இப்படியும் சில மனிதர்கள்..

      தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    உங்கள் அப்பாவுக்கு உறவு என்றும் கூட இப்படி ஒரு தனித்து தங்க விடும் அளவுக்கு உள்ள ஒரு உறவா? கேட்கவே சங்கடமாக இருக்கிறதே.. நீங்கள் எப்படித்தான் அங்கு தங்கியிருந்து கோர்ஸை முடித்து வந்தீர்களோ ? உங்களது பொறுமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். ஆனால், வாழ்க்கைப் பாடத்திற்கு இந்த அனுபவங்கள் ஒரு அரிச்சுவடி பாடந்தான். அதையும் கற்று தேர்ந்து இப்போது சிறப்பாக இருப்பதற்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் வாழ்க்கைக்கான ஒரு பாடமாகத் தான் எடுத்துக் கொண்டுள்ளேன்..

      தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி கமலா ஜி.

      நீக்கு
  10. படிப்பை முடிக்க சில துனபங்களைப் தாங்கி கொண்டு பொறுமையாக இருந்ததை பாராட்ட வேண்டும்.. இந்த மன உறுதி, மனபலம் எதையும் சாதிக்கும் மன பக்குவத்தை தந்து இருக்கிறது உங்களுக்கு.
    உறவு ஏன் அப்படி இருந்தார்கள்! வளரும் குழந்தைக்கு இரண்டு இட்லி எப்படி போதும்?
    அரை வயிற்றுடன் உணவு இருந்தால்தான் நன்கு படிக்க வரும் என்று நினைத்து விட்டார்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன பக்குவம் வந்தது உண்மை தான் அம்மா..அந்த இரண்டு இட்லியும் என்னை பக்குவப்படுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்..ஒருசிலர் வீடுகளில் குறைந்த அளவே சாதத்தை வைத்துக் கொண்டு எல்லோரும் சாப்பிடலாம் என்பார்கள்..:)

      தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. அன்பின் ஆதிமா,
    இவ்வளவு படித்திருக்கிறீர்கள் என்பது ஒரு நல்ல செய்தி. பொறுமையின் வடிவாக
    அங்கே தங்கி இருந்திருக்கிறீர்கள். தங்கள் பெற்றோருக்கு எத்தனை
    வருத்தம் இருந்திருக்குமோ :(

    இந்த அறிவு ரோஷ்ணிக்குப் பயன் படும்.
    எல்லா வளமும் பெற வேண்டும் அம்மா நீங்கள்.

    சில பேருக்கு வீட்டிற்கு வெளியே தான்
    மரியாதை மறுக்கப் படும். வீட்டிற்குள்ளேயே

    புண்பட்ட குழந்தைகளையும் நான் பார்த்திருக்கிறேன்.
    என்னால் முடிந்த அளவு சிங்கத்தின் இள வயது

    உதவியாளர்களுக்கும் முதல் சில மாதங்கள்
    உதவி செய்யும் நிலையும் கிடைத்தது.
    இறைவன் நம் எல்லோரையும் கௌரவமாக வைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே ஒரு அனுபவம் தான் அம்மா. கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள ஒருவர் வேண்டும் என்று நினைப்பேனே தவிர எதையும் ஏற்றுக் கொள்வது தான் என் வழக்கம்.

      தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  12. உறவினர் வீட்டில் தங்கினால் பலருக்கும் இவ்வணுபவங்கள் ஏற்படுவதுண்டு மேடம்.
    அணைத்தும் பாடமே.
    இப்போது கூட இன்றைய தேவைகளாந மெஷீன் லெர்ணிங், டீப் லெர்ணிங் "இயந்திரக்கற்றல் ஆழக்கற்றல்" குறித்த நித்யா துறைசாமி அவர்களின் நூல்களை Free tamil ebooks இலிருந்து தரவிறக்கம் செய்து மகளுடன் சேர்ந்து விவாதித்து படிக்கலாம்.
    நாட்கள் சுவாரசியமாக புதியதை தெரிந்துகொள்ளும் மகிழ்வோடு செல்ல வாய்ப்பிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் பரிந்துரைக்கு மிக்க நன்றி. வாய்ப்பு கிடைக்கும் போது வாசிக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க சகோ.

      நீக்கு
  13. நான் என் உறவினர் வீட்டில் தங்கிய அனுபவமும் இதையே ஒத்திருந்தது...ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல இதுவும் ஒரு அனுபவமே..தங்க அழைக்காதவர்களை விட இவர்கள் மேலானவர்கள் தானே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார்..எல்லாமே நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் தான்.

      தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      நீக்கு
  14. நிறையவே பொறுமையை கற்றுத் தந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்.

      தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....