செவ்வாய், 28 செப்டம்பர், 2021

கல்லூரி நாட்கள் பகுதி பதினைந்து - அடுத்த வேலை - விபத்து - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உணரும் வரை உண்மையும் ஒரு பொய் தான்… புரிகின்ற வரை வாழ்க்கையும் ஒரு புதிர் தான்... 


******


கல்லூரி நாட்கள் என்ற தலைப்பில் இது வரை சில பதிவுகள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த பகுதிகளுக்கான சுட்டி கீழே!


கல்லூரி நாட்கள் - முதல் பகுதி 


கல்லூரி நாட்கள் - இரண்டாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - மூன்றாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - நான்காம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஐந்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஆறாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஏழாம் பகுதி


கல்லூரி நாட்கள் - எட்டாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஒன்பதாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பத்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பதினொன்றாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பன்னிரெண்டாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பதிமூன்றாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பதினான்காம் பகுதி


சென்ற பகுதியில் நான் வேலைக்குச் சென்று  பணிபுரிந்த சில அனுபவங்களைப் பற்றியும் எனக்கு வந்த முதல் ஜாதகம் ஒன்றைப் பற்றியும் உங்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன். அதன் பிறகு நடந்தவற்றை பற்றியெல்லாம் இந்தப் பகுதியில் பார்க்கலாம்.


திருமணம் நடக்கப் போறதே என்று ஃபேன்சி ஸ்டோர் வேலையை விட்டாச்சு. ஆனால் அந்த வரன் 'ஒரு குழந்தையை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்' என்று சொல்லி விட்டார்...:) அந்த சமயத்தில் தான் என் தம்பிக்கு பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது.


நெருங்கிய உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அப்பா விழுப்புரத்திற்கு சென்றிருந்த  சமயத்தில், அம்மாவும் நானும் உள்ளூரில் இருந்த என் மாமா வீட்டிற்குச் சென்றிருந்தோம். அன்று விஜய தசமி!  எங்களுடன் வர வேண்டிய என் தம்பி பிறகு வருகிறேன் என்று சொல்லி விட்டு தன் நண்பனின்  இரு சக்கர வாகனத்தில் பின்னாடி அமர்ந்து சென்றிருக்கிறான். அப்போது எதிரே வந்த கார் ஒன்றில் மோதி தம்பி அந்தக் காரின் முன்புறக் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே போய் விழுந்து விட்டான். அப்போது அவன் கல்லூரியில் வேறு படித்துக் கொண்டிருந்தான்.


வண்டியை ஓட்டி வந்த நண்பனுக்கு பெரிதாக காயம் ஏதுமில்லை..! அவர்கள் வீட்டில் இருவரையும் கோவையின் பிரபலமான மருத்துவமனை ஒன்றில் சேர்த்த தகவலை தெரிந்து கொண்டு ஓடினோம்.  உடல் முழுக்க கண்ணாடித் துண்டுகளுடன் கிடந்த தம்பிக்கு பணத்தை கட்டினால் தான் முதலுதவியே செய்ய முடியும் என்று மருத்துவமனையில் சொல்லி விட்டார்கள்!


அதன் பிறகு நடந்ததெல்லாம் சினிமா பாணியில் தான் இருந்தது என்று சொல்லலாம். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நினைவும் தவறிப் போயிருந்தான்.  தொடர்ந்து அந்த மருத்துவமனையில் வைத்து பார்க்க வசதியில்லாததால் முதலுதவிக்கான பணத்தை மட்டும் கட்டி விட்டு, அப்பா அரசு அலுவலர் என்பதால் அரசு மருத்துவமனையிலேயே வைத்து  பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டேன். இப்போதைக்கு காலில் மாவுக்கட்டு மட்டும் போட்டு டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்பி விடுங்கள் என்றும் சொல்லி விட்டேன்.


இந்த சமயத்தில் தான் அந்த பிரபலமான மருத்துவமனையின் வெளியே இருந்த PCO விலிருந்து எங்கள் குடும்ப மருத்துவருக்கு ஃபோன் செய்து விவரங்களைச் சொன்னேன். அப்பாவை தொடர்பு கொள்ளவும் வழியில்லை. இரண்டு நாட்கள் கழித்து ஊருக்கு திரும்பிய அவருக்கு அக்கம்பக்கத்தவர்கள் விஷயத்தை சொல்லி தான் தெரியும்.


டிஸ்சார்ஜ் செய்து ஆம்புலன்சில் ஏறியதும் தான் அந்த ட்ரைவரிடம் எங்கள் குடும்ப மருத்துவரின் மருத்துவமனைக்கு செல்லும் படி சொன்னேன். அங்கு தான் ஒரு மாதம் தங்கியிருந்து காலுக்கு சர்ஜரியும் செய்து குணமாகி வீடு திரும்பினான்.  அம்மா தம்பியுடன் உடனிருக்க, அப்பா அலுவலகம் சென்று வர, நான் வீட்டில் சமைத்து எடுத்துச் செல்ல என்று மருத்துவமனைக்கும் வீட்டிற்குமாக அலைந்த நாட்கள். மறுபுறம் போலீஸ் கேஸும் பதிவாகி இருக்க அப்பா தான் சென்று அதை கையாண்டார்.



தம்பி குணமாகி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த பின் சில நாட்கள் கழித்து உறவினர் மூலம் மீண்டும் எனக்கு ஒரு வேலை கிடைத்தது. ரேஸ்கோர்ஸிலிருந்து 7ஆம் நம்பர் பஸ்ஸை பிடித்து கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இறங்கி அங்கேயிருந்து ராம்நகர் என்று பகுதிக்கு நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழியில் தாரகராம் என்று பிரபலமான ஜவுளிக்கடை கூட இருக்கும்.  Johnson tiles dealer ஒருவர் புதிதாக ஷோரூம் துவக்க அதில் தான் என்னுடைய வேலை.


பாலக்காட்டில் இருந்து அன்றாடம் வந்து கொண்டிருந்த அண்ணா ஒருவருடன் தான் பணிபுரிந்தேன். அவரிடம் தான் ஒவ்வொரு டைல்ஸின் டிசைன் பெயரையும் ஆர்வமாகத் தெரிந்து கொண்டேன். லோடு வரும் போது கணக்கெடுக்கணும்..டைல்ஸ் தேர்ந்தெடுக்க வருபவர்களுக்கு Anti skid tiles, border tiles, wall tiles, tilesக்கு பொருத்தமாக washbasin, closet, pipe fittings என்று எல்லாம் பரிந்துரை செய்யணும்.. இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


சரியாக ஒரு மாதம் வேலை செய்து சம்பளமும் வாங்கிய பின் வேலையை விடும்படியாகி விட்டது!!! ஏனென்று அடுத்த பகுதியில் சொல்கிறேனே..


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


26 கருத்துகள்:

  1. தம்பிக்கு நேர்ந்த விபத்து துரதிருஷ்டவசமானது.  அதன் வர்ணனை  முதுகுத்தண்டை சில்லிட வைக்கிறது.

    அடுத்து வரும் திருப்பம் திருமணம்தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்பிக்கு நேர்ந்த விபத்து மறக்க முடியாதது..

      திருமணம் தானா! - அடுத்த பகுதியில் தெரிந்து விடும் சார்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பொறுப்பான குழந்தை வெங்கட் நாகராஜ்க்கு என்று இறைவன் நினைத்து இருக்கிறார்.

    தம்பியின் கால் நல்லபடியாக குணமாகி வீடு திரும்பியது மகிழ்ச்சி.
    வேலை விட வேண்டியது எதனால் என்பதை அறிய தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா..உண்மை தான் அம்மா.

      அடுத்த பகுதியில் எல்லாம் தெரிந்து விடும்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. வேலையை விட்டது திருமணத்திற்காகவா?
    ஆவலுடன் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் இரண்டே பகுதிகள் தான் எல்லா விஷயங்களும் தெரிந்து விடும் ஐயா.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. தம்பியின் விபத்தை கைய்யாண்ட விதம் அருமை.
    தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சார்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  6. உடல் முழுக்க கண்ணாடித் துண்டுகளுடன் கிடந்த தம்பிக்கு பணத்தை கட்டினால் தான் முதலுதவியே செய்ய முடியும் என்று மருத்துவமனையில் சொல்லி விட்டார்கள்!//

    அடப் பாவி அப்போவே இப்படியா...திரைப்படங்களில் காட்டுவது போல ...ரொம்ப வேதனையாக இருந்தது வாசிக்கும் போது. ஆதி நீங்க நிஜமாவே நல்லா ஹேண்டில் செஞ்சுருக்கீங்க. முதல் அலையன்ஸ் போனது எல்லாம் 'இன்னார்க்கு இன்னாரென்று எழுதிவைத்தானே தேவன் அன்று' வரிதான்...வெங்கட்ஜி க்கு என்று தேவன் டிசைட் செஞ்சது!! எவ்வளவு நல்ல விஷயம்!!

    வாசகம் நல்ல வாசகம்...

    அந்த மருத்துவமனை எது என்று கொஞ்சம் யூகிக்க முடிகிறது..

    நன்றாக எழுதுகிறீர்கள் கூடவே அழகா சஸ்பென்ஸும் வைக்கிறீர்கள் ஆதி.

    ஆதி உங்களுக்கு நன்றாக எழுத வருவதால் கதைகள் நிறைய எழுதலாமே...

    அடுத்த பகுதி அறிய ஆவல்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். திரைப்படங்களில் காண்பிப்பது போல தான்.

      இன்னாருக்கு இன்னாரென்று - விடாது கருப்பு என்றும் சொல்லலாம்..:)

      அடுத்த பகுதியில் சஸ்பென்ஸெல்லாம் உடைந்து விடும்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. வெங்கட்ஜி, கருத்து வந்திருக்கும் என்று நினைக்கிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வந்திருக்கிறது ப்ளாகர் படுத்தியதால் வந்ததோ என்று நினைத்தேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  9. உங்களின் தம்பி நல்லபடியாக மீண்டு வந்தது மகிழ்வான விஷயம் என்றாலும் அந்த நேரத்தில் உங்கள் எல்லோருக்கும் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும், பதட்டமான தருணங்களைக் கடந்திருப்பீர்கள் என்று உணரமுடிகிறது.

    நம் அனுவங்களே நமக்குப் பாடம்தான். நீங்கள் வேலையை விட்டதற்குக் காரணம் வெங்கட்ஜியின் என்ட்ரியோ!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதைய சூழல் மிகவும் பதட்டமானது..இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் உடல் முழுக்க கண்ணாடித் துண்டுகளுடன் சுற்றிலும் நர்ஸெல்லாம் நின்றிருக்க தம்பி கிடந்தது கண்முன்னேயே இருக்கிறது.

      வெங்கட்ஜி எண்ட்ரீயோ - எண்ட்ரீ அப்போது தானா என்பதெல்லாம் அடுத்த பகுதியில் தெரிந்து விடும்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  10. தம்பியின் விபத்து - ஐயோ...

    என்ன இது..வேலையெல்லாம் உடனுக்குடன் விட்டுடும்படி ஆகிவிடுகிறது? வேறு அருகில் வேலை கிடைத்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது!! எனக்கும் வேலைக்கும் அப்படியொரு ராசி..:)

      வேறு வேலை - அடுத்த பகுதியில் தெரிந்து விடும் சார்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.

      நீக்கு
  11. எல்லாம் கடவுள் செயல்..

    கஷ்டமான / நெருக்கடியான சூழ்நிலையைத் தச்ங்கள் கையாண்ட விதம் தங்களது மனோதைரியத்தைக் காட்டுகின்றது..

    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார்.. கடவுள் செயல்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. தங்கள் கடந்த கால அனுபவங்களை அழகாக எழுதி வருகிறீர்கள். தங்கள் தம்பிக்கு விபத்து என படித்ததும் எனக்கு இப்போதும் பதற்றமாக இருக்கிறது. அப்பாவும் ஊரிலில்லாத அந்த சமயத்தில் நீங்கள் உங்கள் பதற்றத்தை வெளிக்காட்டாமல், சமயோசிதமாக முடிவுகளை எடுத்திருக்கிறீர்கள். உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். தங்கள் தம்பி நலமடைந்து வந்தது பெரு மகிழ்ச்சி.

    வேலைக்கு செல்வதில் உள்ள சிரமங்களையும் விளக்கி வருகிறீர்கள். எது நடக்கிறதோ அதை சுலபமாக ஏற்றுக் கொள்ளும் உங்கள் மனோ தைரியத்திற்கு வாழ்த்துகள். நீங்கள் இன்னும் தொடரப் போவதை படிக்க ஆவலாக உள்ளேன். நேற்று இந்த பதிவுக்கு என்னால் உடனே வர இயலவில்லை. அதனால் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னால் மறக்க முடியாத நிகழ்வு இது. அந்த நேரத்தில் கடவுள் தான் மனோ தைரியத்தைக் கொடுத்தார்.

      நம் கையில் எதுவுமில்லை.. எது நடக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்..:)

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஜி..

      நீக்கு
  13. தம்பியின் விபத்து மனச்சங்கடத்துடன், நீங்கள் நன்கு சமாளித்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றைக்கு அந்த தைரியம் வந்தது கடவுள் செயல்..

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....