ஞாயிறு, 31 அக்டோபர், 2021

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - நினைவாற்றல் அதிசயங்கள்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


A PEACEFUL MIND CAN THINK BETTER THAN AN EXHAUSTED MIND. ALLOW A FEW MINUTES OF SILENCE TO THE MIND EVERY DAY AND SEE HOW IT SHAPES YOUR LIFE. 


******



அன்பின் நண்பர்களுக்கு, இந்த நாளில் நண்பர் அரவிந்த் அவர்களின் வாசிப்பனுபவம் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  வாருங்கள் அவரது வாசிப்பனுபவத்தினை வாசிக்கலாம்! - வெங்கட் நாகராஜ், புது தில்லி.


******


Memory Mind & Body: நினைவாற்றலின் பின் உள்ள அதிசயங்கள் 





நாம் அனைவரும் வியப்புடன் அண்ணாந்து நோக்கும் நபர்கள், சிறந்த நினைவாற்றல் கொண்டவர்களையே. 


தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்துவிட்டாலும், நினைவாற்றலின் தேவை அதிகரித்தவண்ணமே உள்ளது. 


மூச்சைத் திணறவைக்கும் போட்டி நிறைந்த இன்றைய உலகில், உலக நடப்போடு நம்மை தொடர்ந்து பொருத்திக்கொண்டு நிலையாக முன்னேற ஞாபக சக்தியின் பங்கு இன்றியமையாததே. 


அத்தகைய நினைவாற்றலின் ரகசியங்களை அறிந்து வளப்படுத்த உதவுவதே, தில்லியைச் சேர்ந்த திரு பிஸ்வரூப் ராய் செளத்ரி அவர்களின் 'Memory Mind & Body' நூல். 


மிகச் சாதாரணமான ஏழ்மை நிலையிலிருந்து தொடங்கிய நூலாசிரியரின் வாழ்க்கை, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் அளவு வளர்ந்த விதமும், அவர் குறிப்பிட்ட நினைவாற்றல்  குறித்த யுக்திகளும் படிக்கப் படிக்க பரவசமே. 


தேர்வறையில் மாணவர்கள் மறக்கும் விடைகள், வெளியே வந்ததும் நினைவுக்கு வருதல், கடைகளில் பொருட்களை வாங்க மறப்போர், அவை சம்மந்தமான தேவை ஏற்படும்போது மறந்ததை எண்ணி தலையில் அடித்துக்கொள்ளுதல், போன்ற சுவாரசிய உதாரணங்களோடு மனித மூளையின் அபார சேமிப்புச் சக்தியை விளங்க வைக்கிறார் ஆசிரியர். 


நினைவாற்றல் என்பதை ஒரு அபூர்வ சக்தியாகவும், அடையற்கரிய பெரும் பேராகவும் நாம் கருத, நம்மிடம் ஏர்க்கெனவே இருக்கும் ஒன்றைத்தான்  உணரவிருக்கிறோம் என்ற நூலின் மையக்கரு நம் ஊக்கத்தைப் பெருக்கவல்லது. 


நம் மூளைியிலிருந்து, சரியான தகவல்களை தக்க சமயத்தில் வெளிக்கொணரும் "Synesthesia" என்னும் புலன் வழி முறைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு "அடடா! இவை தெரியாமலா இவ்வளவு நாள் இவற்றையெல்லாம் உபயோகிக்கிறோம்" என்ற வியப்புணர்வு ஏற்படுவது உறுதி. 


நூல் முழுமையும், ஒரு கருத்தரங்கில் பேசப்படுவது போல் எழுதப்பட்டிருக்கும் பாங்கு, வாசிப்பை எளிமையாகவும், ஆர்வம் மிக்கதாகவும் மாற்றிவிடுகிறது. 


வெற்றிகரமாக மனப்பாடம் செய்ய உதவும் "இணைவாக்க விதி", நீண்ட கோட்பாடுகளை கற்க உதவும் "துவக்க வார்த்தை முறை", நீண்ட பத்திகளை நினைவு படுத்த உதவும் "சிலந்திக் குறிப்புகள் முறை", அதிக நேரம் படிக்க உதவும் "கலவை முறை", வாய்ப்பாடுகள் மற்றும் சூத்திரங்களுக்கான "தொடர்பு முறை" போன்ற இளம் மாணாக்கருக்கு உதவும் பல யுக்திகள் பயிற்சிகளோடு எடுத்தாளப்பட்டுள்ளன. 


மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையை முடிவுசெய்ய உதவும் "கண் மனம், காது மனம், மற்றும் இயந்திர மனம்" அடையாள முறை, கவனத்தை ஒரு நிலையில் குவிக்க உதவும் "நான் என்னும் காரணி", அறிவியல் பூர்வமான மறுபார்வை முறை போன்ற ஆசிரியர்களுக்கு பயன்படும் எண்ணற்ற வழிவகைகள் நூலெங்கும் உள்ளன. 


அறிவியல், பொருளாதாரம் மற்றும் பொறியியல் பயில்வோருக்கான "உருவகப்படுத்துதல் முறை", ஆயிரக்கணக்கான சட்டங்களைப் படிக்கும் வழக்கறிஞர்கள், கணக்கர்கள் போன்றோருக்கான "ஒலியியல் முறை", குறிப்பு ஏதுமின்றி மேடைப்பேச்சில் மிளிர உதவும் "Cheating or Journey method", விற்பனையாளருக்கோ அல்லது பட்டிமன்றப் பேச்சாளருக்கோ பயன்படும் "விவாத விளையாட்டு யுக்தி" உள்ளிட்ட அனைத்து துறையினரும் பயன்பெறத்தக்க எண்ணற்ற நினைவாற்றல் யுக்திகளுக்கு நூலில் பஞ்சமே இல்லை. 


இவற்றோடு, சாதாரண  மக்களுக்கும் பயன்படும் வேற்று மொழிகளை கற்கும் "தடையமுறை", தினசரி சந்திப்புகளைக் கையாளும் "BASIC PEG SYSTEM", இல்லத்தரசிகள் தேவையான பொருட்களை மறக்காமல் வாங்க உதவும் "மன ஆவணப்படுத்தும் முறை" உள்ளிட்ட வாழ்வின் அனைத்து கட்டங்களுக்கும் இன்றியமையாத பல நினைவாற்றல் யுக்திகள் நூலில் நிறைந்துள்ளன. 


அனைத்திற்கும் அஸ்திவாரமான உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஆழமான தூக்கத்தைப் பேணும் உக்திகள், தண்ணீரைப் பருகும் முறைகள், உணர்வுகளைக்  கட்டுப்படுத்தும் எளிய சுவாசப் பயிர்ச்சி முறைகள், ஆரோக்கியமான உணவுண்ணும் முறைகள் என நாம் மறந்த நம் பாரம்பரிய முறைகள் அணைத்தும் நூலின் இறுதிப் பகுதியில் சொல்லப்பட்டுள்ளன. 


இவ்வாறு மாணவர்கள், ஆசிரியர்கள், மேலாளர்கள், அறிஞர்கள், இல்லத்தரசிகள் என அனைவருக்கும் கை கொடுக்கும் நினைவாற்றல் யுக்திகள் நிறைந்த இந்நூலின் தமிழாக்கத்தை  பின்வரும் சுட்டியில் வாசித்து பயன்பெறலாம். 


Memory Mind & Body (Tamil Edition) eBook : Dr. Biswaroop Roy Chowdhury



இத்தோடு சேர்த்து, மூன்றே வாரங்களில் நினைவாற்றலை வலிமைப்படுத்தும் அறிவியல்பூர்வமான மூளைப் பயிற்சி முறைகள் குறித்து அறிந்துகொள்ள விரும்புவோர், ஆசிரியரின் மற்றொரு நூலான "Dynamic Memory Methods" என்ற நூலின் தமிழாக்கத்தை பின்வரும் சுட்டியில் வாசித்து மகிழலாம். 


Dynamic Memory: Methods (Tamil Edition) eBook : Dr. Biswaroop Roy Chowdhury


"உண்மையான விஷயங்கள் என்னவோ அதன்படி நாம் செயலாற்றுவதில்லை. அவை எப்படி இருக்க வேண்டுமென்று நாம் எதிர்பார்ப்பதன்படியும், நாம் நம்புவதன்படியும், கற்பனை செய்வதன்படியுமே நாம் செயலாற்றுகிறோம்" என்பது மாவீரர் நெப்போலியன் அவர்களின் கூற்று. 


இக்கூற்றிற்கேற்ப, நம் கற்பனை வளத்தில் ஒளிந்துள்ள, நம் ஆழமான விருப்பத்தை கண்டறிந்து, அதன் மூலம் அளப்பரிய செயல்திறன் கொண்டவர்களாக மாறுவோம். 


நட்புடன்


இரா. அரவிந்த்


******


இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….

16 கருத்துகள்:

  1. அரவிந்தின் படிப்பார்வம் எப்போதுமே என்னை வியக்க வைக்கும்.  நல்லதொரு பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் ஊக்கமே என்னை தொடர்ந்து பல தேடல்களை நோக்கி வழிநடத்தும் ஐய்யா.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பொருண்மையில் அமைந்துள்ள நூல். நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விர்க்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐய்யா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் நூல் அறிமுகத்தை பொருமையாக படித்து கருத்துறையிட்டதற்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ஐய்யா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐய்யா.

      நீக்கு
  5. //நினைவாற்றல் என்பதை ஒரு அபூர்வ சக்தியாகவும், அடையற்கரிய பெரும் பேராகவும் நாம் கருத, நம்மிடம் ஏர்க்கெனவே இருக்கும் ஒன்றைத்தான் உணரவிருக்கிறோம் என்ற நூலின் மையக்கரு நம் ஊக்கத்தைப் பெருக்கவல்லது.//

    அருமை. நன்றாக சொன்னீர்கள்.

    //வெற்றிகரமாக மனப்பாடம் செய்ய உதவும் "இணைவாக்க விதி", நீண்ட கோட்பாடுகளை கற்க உதவும் "துவக்க வார்த்தை முறை", நீண்ட பத்திகளை நினைவு படுத்த உதவும் "சிலந்திக் குறிப்புகள் முறை", அதிக நேரம் படிக்க உதவும் "கலவை முறை", வாய்ப்பாடுகள் மற்றும் சூத்திரங்களுக்கான "தொடர்பு முறை" போன்ற இளம் மாணாக்கருக்கு உதவும் பல யுக்திகள் பயிற்சிகளோடு எடுத்தாளப்பட்டுள்ளன.//
    மாணவ, மாணவிகளுக்கு பரிசு அளிக்க நல்ல நூலாக தெரிகிறது.

    அனைவருக்கும் ஏற்ற புத்தகம்தான்.

    நீங்கள் புத்தகத்தை நன்கு படித்து அளித்து இருக்கும் விமர்சனம் மிக அருமை.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அம்மா.
      மாணவமாணவியருக்கு இளமையிலேயே சென்று சேரவேண்டிய நூல்.
      தங்களின் ஆழமான அழுத்தமான விமர்சன வாசிப்பிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதி அரசு அம்மா.

      நீக்கு
  6. நல்ல விமர்சனம். புத்தகத்தில் உள்ள அனைத்து முக்கியமான பகுதிகளையும் ஆராய்ந்து வாசகர்களுக்கு கொடுத்திருக்கும் ஆசிரியருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி Ramasamy ஐய்யா.

      நீக்கு
  7. நல்ல புத்தக அறிமுகம் அரவிந்த்.

    உங்கள் வாசிப்பு ஆர்வமும் புத்தகம் பற்றி எழுதும் ஆர்வமும் என்னை வியக்க வைப்பதுண்டு அரவிந்த்.

    வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு
  8. அரவிந்தின் விமர்சனத்திலிருந்து நல்ல புத்தகம் என்று தெரிகிறது.
    அரவிந்தின் புத்தக விமர்சனம் ஒவ்வொரு முறையும் மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  9. தங்களின் தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி துளசிதரன் ஐய்யா.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....