வெள்ளி, 15 அக்டோபர், 2021

பொண்ணு மாப்பிள்ளை லேட் எண்ட்ரி - ஹோட்டல் மணிவிழா - மதிய உணவு - பூக்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கீதாம்மா வீட்டு கொலு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


UMBRELLA CANNOT STOP THE RAIN, BUT MAKE US STAND IN RAIN; CONFIDENCE MAY NOT BRING SUCCESS BUT GIVES POWER TO FACE ANY CHALLENGE IN LIFE.


******



செப்டம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு வந்தது பற்றி இதுவரை நான்கு பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே. 


ஓசியில் வேர்க்கடலை தருகிறார்களோ


Gகுரு Bபாயின் தங்கச் சங்கிலி


சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு - ஜன் ஷதாப்தியில்


மீன் செத்தா கருவாடு



தங்குமிடம் - வெளிப்புறத்திலிருந்து...

திருக்கடையூர் செல்ல திருவரங்கத்திலிருந்து புறப்பட்ட போது காலை உணவு சாப்பிட்ட பின்னரே வீட்டிலிருந்து புறப்பட்டேன். வழியில் எதுவும் சாப்பிடவில்லை - ஒரு முறை தேனீர் அருந்தியதோடு சரி - அதுவும் த்ராபையான தேனீர் என்ற பெயரில் இரயில்களில் கிடைக்கும் சுடு நீர்! பத்து ரூபாயாக இருந்தாலும் சரி, பதினைந்து ரூபாயாக இருந்தாலும் சரி அதன் தரம் என்னவோ இப்படியே இருக்கிறது - மாற்றமே இல்லாமல்!  மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் சென்று சேர்ந்த போதே மணி இரண்டரை மணிக்கு மேல்!  சஷ்டியப்தபூர்த்தி செய்து கொள்ளும் பொண்ணு மாப்பிள்ளையே வந்து சேர்ந்திருக்கவில்லை.  நான் அவர்களுக்கு முன்னரே சென்று சேர்ந்திருக்கிறேன் - அவ்வளவு சுறுசுறுப்பு! :)  நல்ல வேளையாக தில்லியிலிருந்து வேறு ஒரு நண்பரும் அவரது மனைவியும் ஏற்கனவே வந்து சேர்ந்திருப்பதை அவருடன் அலைபேசியில் தொடர்பு கொண்டபோது தெரிந்து கொண்டேன்.  வேறு யாரும் வரவில்லை என்று தெரிந்திருந்தால் திட்டத்தினை மாற்றி வேறு எங்கேனும் சென்று விட்டு பிறகு தங்குமிடம் சென்றிருப்பேன்.  



தங்குமிடத்தில் அழகான Wall Tiles...

நண்பர் தில்லியிலிருந்து வரும் எங்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் தங்குவதற்கு ஹோட்டல் மணிவிழாவில் ஏற்பாடு செய்திருந்தார்.  அதனால் நேரடியாக அங்கே சென்று தில்லியிலிருந்து வந்த நண்பர் ஸ்ரீபதி தங்கியிருந்த அறைக்குச் சென்றேன். சற்றே அமர்ந்து, நான் திருவரங்கத்தில் சாத்தார வீதி பூ மார்க்கெட்டில் வாங்கிய மல்லிகை மற்றும் ரோஜாப் பூக்களை நண்பரின் மனைவியிடம் கொடுக்க அவர் அதனை தொடுத்து வைக்க ஆரம்பித்தார்.  திருவரங்கத்தின் சாத்தார வீதி பூ மார்க்கெட்டில் எப்போதும் பூ விலை குறைவாகவே இருக்கும் - திருமண நாட்கள் தவிர! அதனால் அங்கே தான் பூக்கள் வாங்குவேன்.  கொண்டு வந்த பூக்களை கட்டுவதற்கு கொடுத்தவுடன் அவர்களுக்கு மகிழ்ச்சி.  வேலையில்லாமல் அமர்ந்திருந்தேன் - பூக்கள் கொண்டு வந்ததும் நல்லதற்கே! நான் இதனை தொடுத்துக் கொண்டிருக்கிறேன், நீ சென்று சாப்பிட்டு வா எனச் சொல்ல கீழேயே இருக்கும் அக்‌ஷயம் உணவகத்திற்குச் சென்றேன்.   சாப்பாட்டு நேரத்தினை தாண்டியிருந்தாலும், ஒரே ஒருவர் என்பதால் உணவு இருக்கிறது என்று சொல்ல அமர்ந்து கொண்டேன். 



குடிநீருக்கான குடுவையும் டம்ப்ளரும்...

உணவகம் நன்றாகவே இருந்தது - அங்கே தண்ணீர் கொடுக்க வைத்திருந்த குடுவை மிகவும் பளபளப்பாக இருந்தது.  பார்க்கவே அழகு!  சாம்பார், வெத்தக்குழம்பு, ரசம், மோர் என பரிமாறிய அனைத்தும் நன்றாகவே இருந்தது.  சுகமாகச் சாப்பிட்டு மீண்டும் நண்பரது அறைக்குச் சென்று சேர்ந்தேன்.  பொண்ணு மாப்பிள்ளை இன்னும் வந்து சேர்ந்த பாடில்லை.  அன்றைக்கு மாலையிலும் அடுத்த நாள் காலையிலும் நிகழ்ச்சிகள் இருக்கின்றனவே, இன்னும் வந்து சேரவில்லையே என பேசிக் கொண்டிருந்தோம்.  அவ்வப்போது அவர்களை அழைத்து எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டபடி இருந்தோம்.  பூக்கட்டும் வேலையைப் பார்த்தபடியே நாங்கள் பேசிக் கொண்டிருக்க, நேரம் கடந்து கொண்டிருந்தது.  தில்லியிலிருந்து வர வேண்டிய மற்ற சில நண்பர்களும் இன்னும் வந்து சேரவில்லை.  வழியில் கோவில்கள் சிலவற்றை பார்த்து விட்டு வருவதாக அவர்களுக்குத் திட்டம் இருந்ததிருக்கிறது.  




மாலையில் நான்கரை மணிக்கு மேல் மீண்டும் உணவகம் வந்து கொஞ்சம் காஃபியும் போண்டாவும் உள்ளே தள்ளினேன்.  நண்பரும் அவரது மனைவியும் முன்னதே சாப்பிட்டு விட்டதால் அவர்களுக்கும் பசி.  மாலை சிற்றுண்டி முடித்து அங்கே பேசிக் கொண்டிருந்த போது, ஒரு வழியாக பொண்ணு மாப்பிள்ளை வந்து சேர்ந்தார்கள்.  அவர்களை நாங்கள் வரவேற்றோம்!  சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த பிறகு தான் தெரிந்தது, அன்றைய மாலை நிகழ்ச்சிகள் நடப்பதில் சில சிக்கல்கள் என - ஞாயிற்றுக் கிழமை என்பதால் கோவில் மூடி இருந்தது - வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் கோவில்கள் திறக்கக் கூடாது என அரசாங்கம் அறிவித்திருந்தது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்.  அதனால் கோவிலில் நடக்க வேண்டிய நிகழ்வுகள் நடத்த முடியாது.  அடுத்த நாள் காலையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் சேர்த்து செய்து விடலாம் என்று சொல்லிவிட்டார்கள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்கள்.   





தங்குமிடம் சன்னதி தெருவிலேயே அமைந்திருக்கிறது - வசதியாகவும் இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.  அப்படியே காலாற நடந்து கோவில் வரை சென்று விசாரித்தேன். கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதால் கோபுரங்களில் பச்சை வண்ண திரை! விரைவில் கும்பாபிஷேகம் நடக்கலாம். கதவு திறந்திருக்கிறது என்றாலும், கும்பலாக விடுவதில்லை.  ஒன்றிரண்டு பேராக சென்று தரிசனம் செய்து கொள்ளலாம் எனத் தெரிந்தது.  சரி கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் வரலாம் என்று தங்குமிடம் திரும்பினேன்.  மாலையில் நடக்க வேண்டிய நிகழ்ச்சிகள் நடக்காததால், எங்களுக்கு ஒன்றும் வேலையில்லை.  நிகழ்ச்சிகளும் அடுத்த நாள் காலையில் தான் - என்ன செய்ய என்று யோசித்தோம்.  எங்கேயாவது செல்லலாம் என நண்பர் ஸ்ரீபதியும் நானும் பேசிக் கொண்டிருந்தோம்,.  உடனே நான் எனது திட்டத்தினைச் சொல்ல அது சரி என ஒப்புக்கொண்டு உடனே புறப்பட்டோம்.  அப்படி புறப்பட்டு நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.  அதுவரை…


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


26 கருத்துகள்:

  1. ஒரே ஒருமுறை மட்டும் வெளி ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டிருக்கிறேன்.  மற்ற மூன்று சந்தர்ப்பங்களில் சஷ்டியப்தபூர்த்திக்குழுவினர் கொடுக்கும் உணவு.  அக்ஷயம் உணவு சாப்பிட்டதில்லை.  கோவிலைச் சுற்றி வெளிப்பிரகாரத்தில் நாசம் செய்து வைத்திருப்பார்கள்.  இப்போதாவது சுத்தமாய் இருக்கிறதா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவகத்திலும் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தார்கள். கோவில் சுத்தமாக இல்லை. ஆனால் அதிகம் மக்கள் வருவதில்லை என்பதால் பரவாயில்லை ஸ்ரீராம். ஆனாலும் பராமரிப்பு சரியில்லை என்பதை பார்க்கமுடிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. திருக்கடையூரின் தங்குமிடம் அழகாக இருக்கிறது.

    இதே டைல்ஸ் டிசைனை நான் இன்னொரு ஹோட்டலில் தங்கியபோது படமெடுத்திருக்கிறேன். அநேகமாக திருநெவேலியில் இருக்கும். கிடைத்தால் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் சென்னையில் ஒரு ஓட்டல் அல்லது மண்டபத்தில் இதே டைல்ஸை படம் எடுத்திருக்கிறேன்.

      நீக்கு
    2. தங்குமிடம் இப்படி நிறைய இருக்கிறது நெல்லைத் தமிழன். நன்றாகவே பராமரிக்கிறார்கள்.

      இதே போன்ற டைல்ஸ் - படம் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. நீங்களும் பார்த்திருக்கிறீர்களா? படம் பகிர்ந்ததாக நினைவில்லை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வால் டைல்ஸ், குவளைகள் அருமை ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டைல்ஸ், குவளைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ஹோட்டலில் டைல்ஸில் பதித்திருந்த ஓவியம் மிகவும் அழகு! ஹோட்டலின் பெயரை எழுதவில்லையே? உங்களின் அனுபவங்கள் மிகவும் சுவாரஸ்யம்! தொடர்கிறேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹோட்டல் மணிவிழாவில் //

      மனோ அக்கா கொடுத்திருக்கிறாரே!! அதுவும் ஃபோட்டோவிலும் தெரிகிறதே வலது புறம்...

      கீதா

      நீக்கு
    2. ஹோட்டல் மணிவிழா. எழுதி இருக்கிறேனே மனோம்மா. அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  5. சுவையான அணுபவங்கள் சார்.
    இன்ரு முதல் கோயில்களை திறக்க அணுமதி வந்துவிட்டது.
    நவம்பர் முதல், கடற்கரைக்கும் செல்ல அணுமதி கொடுத்துவிட்டார்கள்.
    தொற்றுநோய் முற்றிலும் அகலும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வாசகம் நல்ல வாசகம். ஒப்பீட்டுடன்!

    ஹோட்டல் டைல்ஸ் செம அழகு ஜி! அது போல தண்ணீர் ஜாடி, டம்ளர் எல்லாம்.

    தங்குமிடம் பெயர் மிகவும் ரசித்தேன். ஒன்று அதன் தமிழ்ப்பெயர். மற்றொன்று, 60 வயது/சஷ்டியப்தபூர்த்தி தமிழில் மணிவிழா இல்லையா!? பொருந்திப் போவதால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவு குறித்த தங்கள் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. விஜயதசமி வாழ்த்துகள்.
    திருக்கடையூர் செல்ல முடியாத குறையைத் தீர்த்து விட்டீர்கள்.
    ஹோட்டல் பேரே மணி விழாவா!! ஆஹா.

    ரோஜா,மல்லிகை பூத்தொடுத்தல் என்ன ஒரு தெரப்பி!!!
    நல்ல நண்பர்களும் அவர்களின் அன்பும் ஒரு
    கருணைதான்.

    உங்களுக்கும் நண்வ்பர்களுக்கும் என்னாளும் அன்னையின் கருணை தொடர வேண்டும். சுவையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்கடையூர் - நானும் முதல் முறையாக சென்றேன் வல்லிம்மா. பூ தொடுப்பது நல்லதொரு தெரப்பி - உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. நல்ல வேளை நாங்கதான் அந்த லேட்டா வந்த ஜோடி என்று எழுதவில்லை, தப்பித்தோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... நீங்களே முன்வந்து சொல்லி விட்டீர்களே ரங்கராஜன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் விஜயதசமி வாழ்த்துகள். டைல்ஸ் படம், மற்றும் திருக்கடையூர் கோவில் கோபுர படங்கள் அழகாக உள்ளது. மணிவிழா விஷேட அனுபவங்கள் நன்றாக உள்ளது. மணமக்களுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துகளும். மறுநாள் விஷேத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்குள், வந்த அந்த இடைவெளியில் நீங்கள் உங்கள் நண்பருடன் கலந்து பேசி எங்கு சென்றீர்கள் என அறியும் ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. ஊரே வெறிச் என்று இருப்பது போல இருக்கே
    கோவில் வாசலில் இப்படி ஆள் அரவம் இல்லாமல் பார்க்கவே முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் படம் எடுத்தது ஞாயிறு அன்று கோமதிம்மா. கோவில் பூட்டி இருந்தது. திங்கள் அன்றும் அதிக அளவு கூட்டம் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....