சனி, 25 ஏப்ரல், 2026

காஃபி வித் கிட்டு - 236 - தேரடி வீதியில் - மயில் வடிவ அடுப்பு - அன்பின் மொழி - காட்சிப் பிழை - Shahtoot Lassi - வாகன வாசகம் - ஒடிஷாவின் பாரம்பரியம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - அம்ருத் கங்கா அருவி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


பழைய நினைப்புடா பேராண்டி : தேரடி வீதியில்… 


2017-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - தேரடி வீதியில்... - திருவரங்கம் சித்திரைத் தேர் 2017 - இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. 



திருவரங்கம் நகரில் இன்று திருத்தேர்! சித்திரைத் தேர்.  வருடத்திற்கு இங்கே மூன்று முறை தேர் இழுக்கும் வைபவம். சித்திரைத் தேர் கொஞ்சம் ஸ்பெஷல்! சுற்றுப்பக்க கிராமத்தினர் அனைவரும் முதல் நாளே வண்டி கட்டிக்கொண்டு வந்து திருவரங்கத்து வீதிகளில் தங்கி, காவிரி/கொள்ளிடத்தில் குளித்து [அவ்வளவு தண்ணீர் இருக்கா என்ன?] தேரோட்டத்தில் பங்குபெற்று, மகிழ்ச்சியோடு இருக்கும் நாள். தேரோட்டம் என்றாலே அனைவருக்குமே சந்தோஷம் தானே.


வேட்டு, குதிரை, யானை, மாட்டின் மேல் வைத்து கட்டப்பட்ட மேளம், குழந்தைகளை மகிழ்விக்க பல்வேறு பொம்மைகளின் விற்பனை, கடவுளர்களின் வேடங்கள் தரித்து வரும் ஆட்கள், தின்பண்டங்கள் விற்பவர், ”கழுத்துச் செயினை தலைப்பால மூடும்மா” என்று அறிவிக்கும் காவல்துறையினர் என தேரடி வீதியே கலகலவென்று இருக்கும்! சித்திரை மாதத்துத் தேர், திருவரங்கத்தின் சித்திரை வீதிகளில் தான்! தைத் தேர் என அழைக்கப்படும் சிறிய தேர் தை மாதத்தில் கோவிலின் உத்திர வீதிகளில் ஓடும். இந்தச் சித்திரைத் தேர் தைத் தேரை விட பெரியது. ஆகவே, கொண்டாட்டங்களும் அதிகம்!


நேற்று தான் தலைநகரிலிருந்து திருவரங்கம் வந்து சேர்ந்தேன். தேர் சமயத்தில் இங்கே இருந்தால், வேறு என்ன வேலை – கையில் கேமராவுடன் காலையிலேயே சித்திரை வீதிக்குச் சென்று சில புகைப்படங்கள் எடுத்தாயிற்று! அனைத்து படங்களையும் இங்கே பகிர்ந்து கொள்வது முடியாதது! கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் என்பதால் இங்கே தேர்ந்தெடுத்த சில படங்கள் மட்டும். 


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் பகிர்வு : மயில் வடிவ அடுப்பு



நம் நாட்டில் திறமைக்கு பஞ்சமே இல்லை - எத்தனை எத்தனை திறமைகளை வைத்துக் கொண்டு மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். களி மண் கொண்டு அடுப்புகள் செய்த காலம் எல்லாம் போய்விட்டது - கிராமங்களைத் தவிர வேறு எங்கேயும் மண் அடுப்புகளை பார்க்கவே முடியாத அளவிற்கு மாற்றம் கண்டிருக்கிறோம்.  சில நாட்களாக, ஒரு தேவையில்லாத போர் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதாக பிம்பம் உருவானபோது கூட மண் அடுப்புகள் பற்றி யோசிக்க முடியாமல், எலெக்ட்ரிக் அடுப்புகள் குறித்து தான் யோசித்தார்கள் மக்கள்.  ஆனாலும், இப்போதும் சில கிராமங்களில் மண் அடுப்புகள் தான் அதிகமாக உபயோகிக்கிறார்கள்.  அப்படிப்பட்ட அடுப்பு கூட கலைநயத்தோடு உருவானால் எப்படி இருக்கும்! பெங்கால் பகுதியில் இருக்கும் ஒரு பெண்மணி உருவாக்கிய மயில் வடிவ மண் அடுப்பு குறித்து அவர் முகநூல் கணக்கில் பகிர்ந்த ஒரு காணொளி தான் இந்த வாரத்தின் பகிர்வு.  கீழே உள்ள சுட்டி வழி பாருங்களேன்!


மயில் வடிவ மண் அடுப்பு


******


இந்த வாரத்தின் கவிதை :  அன்பின் மொழி



இந்த வாரத்தின் கவிதையாக ஒரு படமும் அதற்கான கவிதையும் - தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் முகநூலில் எழுதிய கவிதை ஒன்று.  படம் பார்த்ததில் உங்களுக்குத் தோன்றிய எண்ணம் என்ன? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். கவிதை குறித்தும் சொல்லலாமே!


கடைக்குட்டி மகளுக்கு விளையாட்டுத் தோழன்//

தலையை ஆட்டி  விழிகள் அகல //

கதை பேசும் பாங்கினில் -- இருவருக்கும்//

பரஸ்பரம் புரிந்ததும் தான் என்னவோ//

கிள்ளையின் கள்ளமில்லா கலகல சிரிப்புக்கு//

ஒத்திசைவாய் கழுத்தின் மணி அசைத்து//

தன் குதூகலத்தை உணர்த்துகிறது கன்றுக்குட்டி//

வார்த்தைகள் இல்லா மேன்மையான அன்பின் பகிர்வில்//

விரல்களின் சிறு வருடலும்  -- சுழற்றும் //

நாவின்கண் ஊறும் எச்சிலின் ஸ்பரிசமும் //

பரஸ்பரம் உணர்த்திடும் உள்ளங்களின் பேரன்பை //

அன்பைச் சொல்ல உலகில் தனிமொழியும் உண்டோ //

இதயங்கள் பேசும் மொழி அன்பன்றோ//


பி. தமிழ் முகில் #சிங்கப்பூர்த்_தமிழ்மொழி_விழா_2026

#நாள்18 #கவிதை18


******

 

இந்த வாரத்தின் ரசித்த குறும்படம் : காட்சிப் பிழை


சென்ற வருடம் வெளியான ஒரு நிமிட குறும்படம் - காட்சிப்பிழை. படம் குறித்து நான் இங்கே சொல்லிவிட்டால் உங்களுக்கு பார்க்கும் ஆர்வம் குறையலாம். ஒரு நிமிடம் வரக்கூடிய குறும்படம் தான் - நிச்சயம் பாருங்கள்! மனதைத் தொடும் விதமாக இருக்கும் என்பதற்கு நான் உத்திரவாதம்!


******


இந்த வாரத்தின் குளிர்பானம் - Shahtoot Lassi :



தலைநகர் தில்லியில் பல வீதிகளில் இந்த மரம் தானாகவே வளர்ந்திருக்கும்.  குழந்தைகள் பலரும் இந்த மரத்தின் பழங்களை பறித்து உண்பார்கள் - ஷஹ்தூத் என்று சொல்லப்படும் பழம் - முசுக்கொட்டை என்று தமிழில் சொல்லப்படும் மல்பெரி பழங்கள் தாம்.  இந்தப் பழங்கள் கொண்டு, இப்போதைய கோடைக்கு இதமாக ஒரு லஸ்ஸி தயாரித்துத் தந்தால் எப்படி இருக்கும் ! இங்கே இந்தப் பழங்கள் கிடைக்கிறதா என்பது தெரியவில்லை. கிடைத்தால் இந்தக் காணொளியில் சொல்வது போல செய்து பருகலாம்! 


Shahtoot Mishri Lassi - Sweet, Royal & Refreshing! #shorts - YouTube


******


இந்த வாரத்தின் வாகன வாசகம் :  தன் உயிர் மறந்து


பேருந்துகள், லாரி, வேன் போன்ற வாகனங்களில் ஓட்டுனர் இருக்கைக்கு வெளியே இருக்கும் கதவில் நிறைய விதத்தில் ஓட்டுனர் என்பதை எழுதி இருப்பார்கள்.  வடக்கில் இருக்கும் பல தனியார் பேருந்துகளில் ஓட்டுனரின் கதவில் “Pilot” என்று எழுதி இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.  அவர் ஓட்டுவது பேருந்து தான் என்றாலும் விமான ஓட்டி போல “Pilot” என்று எழுதி வைத்துக் கொள்வதில் அவருக்கு கிடைப்பது ஒரு அலாதி இன்பம் என்று நினைத்துக் கொள்வேன்.  பல பேருந்துகளில் இப்படி வித்தியாசமாக எழுதி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.  சமீபத்தில் தமிழகத்தில் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, எங்கள் பேருந்து மற்றொரு சிற்றுந்தைக் கடந்து கொண்டிருந்தது. அந்தச் சிற்றுந்தின் ஓட்டுனர் பக்கம் இருந்த கதவில் எழுதி இருந்த வாசகம் - மனதைக் கவர்ந்தது - பல சமயங்களில் அது உண்மை இல்லை என்றாலும்! அப்படி எழுதி இருந்த வாசகம் கீழே….


தன் உயிர் மறந்து உன் உயிர் காப்பவன்


******


இந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்தி - ஒடிஷாவின் பாரம்பரியம்  :



17 வருடங்கள் தனியார் துறையில் பணி புரிந்த பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு ஒடிஷாவின் பாரம்பரியமான கலைகளிலும் அந்த கலைகளுக்குச் சொந்தக்காரர்களான ஆதிவாசிகளின் வாழ்விலும் ஒன்றி, பெரிய முன்னேற்றத்தினை உருவாக்கி, சாதனை புரிந்து கொண்டிருக்கும் ரிச்சா மகேஷ்வரி என்பவரின் கதை.  படித்துப் பாருங்களேன்…. 


Boito: Odisha Tribal Textiles Reimagined as Global Luxury 


******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

25 ஏப்ரல் 2026


13 கருத்துகள்:

  1. பழைய பதிவு - ஸ்ரீரங்கம் தேர்த்திருவிழா சிறப்பைக் கண்டதும் எங்கள் மதுரையின் சிறப்பு நினைவுக்கு வந்தது!  அதுதான் கேட்டிருந்தேன், "சித்திரைத் தேரோடும் மதுரையில் ஒரு பத்தரை மாற்றுத் தங்கம் இருக்கு தெரியுமோ!?

    பதிலளிநீக்கு
  2. மயில் வடிவ அடுப்பு அழகாக இருக்கிறது.  எரிவாயு தட்டுப்பாடு பிம்பம் -  இன்னமும் எனக்கு சிலிண்டர் வரவில்லை.  புக் செய்து 20 நாட்களாகின்றன.  எலெக்ட்ரிக் அடுப்பைதான் நினைக்கிறார்கள் என்றால் இன்றைய அபார்ட்மெண்ட் நாகரீகத்தில் விறகடுப்பு எங்கே வைப்பது!  அதற்கு ஏதாவது மாடர்ன் வடிவம் வந்திருக்கிறதா என்று நான் கூட தேடிப்பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
  3. தமிழ்முகில் பிரகாசத்தை கவிதையை ரசித்தேன்.

    காட்சிப்பிழை கண்களை நனைத்தது.

    பதிலளிநீக்கு
  4. முசுக்கொட்டை என்னும் மல்பெரி பழங்கள் வைத்து லஸ்ஸியா..  ஜமாய்க்கலாமே...

    மாரடைப்பு வந்த சமயத்திலும் பேருந்தை பத்திரமாக 'ரோடி'ன் ஓரத்தில் நிறுத்தி உயிர் விட்ட நம்மூர் ஓட்டுனர்கள் நினைவுக்கு வந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  5. தேரடி வீதி - நினைவுஇருக்கு மீண்டும் போய்ப் பார்த்துக் கொண்டேன். candid photography!! இது ரொம்ப அழகாக அமையும் சில சமயம் அப்படி உங்கள் படங்கள் எலலமே சூப்பர். கேமரா கேமராதான் ஜி என்னதான் சொல்லுங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மயில் அடுப்பு வாவ்!!! ரொம்ப கலைநயமிக்கதாக அழகா இருக்கிறது. பக்கத்தில் எடுக்கும்படியாகப் பொருட்கள் அலல்து சமைத்ததை இறக்கி வைக்கும் படி மயிலின் உடலையும் அமைச்சிருக்காங்க போலத் தெரிகிறது

    ரசித்துப் பார்த்தேன் இதைச் செய்தவரை வியந்து மனதில் பாராட்டிக் கொண்டே

    கீதா

    பதிலளிநீக்கு
  7. மண் அடுப்பு காணொளியும் பார்த்தேன் ஜி. வாவ்!!! என்ன ஒரு ஈடுபாடு ஆர்வம், கலைக்கண்! அடுப்பு செய்வதில் கூட பொறுமையாக அழகாக வடிவமைக்கிறார். மீண்டும் அவருக்குக் கை கொடுத்துப் பாராட்டினேன் மனதில்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அன்பின் மொழி படம் பிரமாதம்.

    கவிதையை மிகவும் ரசித்தேன் ஜி.

    இவர் வலைப்பூவும் வைத்திருக்கிறார் இல்லையா? அங்கும் கவிதைகள் தான் நான் வாசித்த நினைவு. அவர்தான் இவரா? இவர்தான் அவரா?!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. நான் பார்த்து ரசித்த படம், சில்லுசில்லாய் பதிவுக்கு எடுத்து வைத்திருந்த படம் ஜி!! காட்சிப்பிழை என்பதற்கு வேறு ஒன்றோடு சொல்ல பதிவுக்கு.
    இங்கு மீண்டும் பார்த்து ரசித்தேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. மல்பெர்ரி தோட்டங்கள் இங்கு இருக்கின்றன ஜி. பட்டுத் தொழிலுக்காகவும். neralu hannu என்று கன்னடத்தில். இங்குள்ள ஒரு சில கடைகளில் இந்த ஜூஸ். மங்களூர் கடைகள் என்று இங்கு கடைகள் அங்கு சர்க்கரை சேர்க்காத இதன் ஜூஸ் பாட்டிலில் கிடைக்கிறது.

    அருகில் இரு கடைகள் லஸ்ஸிக்கென்றே இருக்கின்றன. அங்கு ஒன்றில் Shahtoot Lassi பார்த்தேன். முதலில் புரியவில்லை அது என்ன என்று அப்புறம் உடனே கூகுளில் போட்டதும் அட நம்ம மல்பெர்ரி முசுக்கொட்டை... ஆனால் எப்படியும் லஸ்ஸி என்றாலே சர்க்கரை போடுவாங்களே என்று சாப்பிடவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ரயில் ஓட்டுபவர்களை நம்மூரில் loco pilot என்றுதானே சொல்கிறோம் அப்படி பேருந்து ஓட்டுபவரும் தன்னைச் சொல்லிக் கொள்வதில், நீங்க சொல்லிருக்காப்ல அவருக்கு ஒரு சந்தோஷம் போலும்! சோதனைப் பயிற்சியாக (இப்படியும் ஒரு அர்த்தம் உண்டே இதற்கு) ஓட்டாமல் இருந்தால் சரி!!!!!!

    வாசகம் நல்லாதான் இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ஓடிஷாவின் பாரம்பரியம் - இப்படி இப்போதைய சில இளைஞர்கள் யுவதிகள் தைரியமாக மிகவும் தன்னம்பிக்கையோடு தங்களுக்குப் பிடித்ததைச் செய்ய இறங்குவது பாராட்டத்தக்கது.

    ஒடிஷா என்றதும் நாங்கள் இருந்த பழைய வீட்டில் மாடியில் ஒடிஷாவைச்சேர்ந்த இளம் தம்பதியினர் typical இப்போதைய தலைமுறைத் தம்பதியினர்...ஆனால் ரொம்ப நல்ல குணம் உடைவங்க. நினைவுக்கு வந்தார்கள். இப்போதைய தலைமுறையினரின் அவங்க சிந்தனைகளை நாமும் திறந்த மனதோடு வரவேற்கும் போது நல்ல நட்பு உருவாகிறது. கூடவே எல்லைக் கோட்டில் நின்று கொண்டு. அவர்ங்கள் எங்களை ரொம்பவும் மிஸ் செய்வதாகச் சொன்னார்கள்! இப்போது நாங்கள் இருந்த இடத்தில் குடியிருப்பவர்கள் அவர்களுக்கு செட் ஆகவில்லையாம். highly conventional ஆம்.

    அந்தப் பையன் எங்களுக்கு ரொம்பவே ஆதரவாக உதவியாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும். தில்லுக்கு / குருகிராமத்திற்கு நாங்கள் பயணம் செய்த போது இரு நாளைக்காக அப்பாவைக் கூட்டிக் கொண்டு செல்ல முடியாது என்பதால் விட்டுச் சென்ற போது அந்தப் பையன் நன்றாகக் கவனித்துக் கொண்டார்.

    இப்ப இருக்கும் வீட்டில் மாடியில் இரு குடும்பங்கள் இருந்தாலும், யார் என்பது கூடச் சரியாகத் தெரியவில்ல்லை. நாம் புன்னகைத்தாலும் யோசித்துப் புன்னகைக்கிறார்கள். இரு குடும்பங்களும் இங்குள்ள குடும்பங்கள் கர்நாடகா.... இதே வட இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் கண்டிப்பாக நன்றாகப் பழகியிருப்பார்கள்! இந்த வித்தியாசத்தை நான் நன்கு உணர்கிறேன்.

    பாருங்க ஒடிஷா என்றதும் நினைவுகள் எங்கெல்லாம் போகுதுன்னு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ரிச்சா மகேஷ்வரிக்கு வாழ்த்துகள் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது இப்படியானோரை பார்க்கும் போது!

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....