அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - இரண்டு கோபுரம் - சுத்தம் - சயனம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
ரோஷ்ணி கார்னர் - ஓவியம் - 22-03-2026 :
மகள் சமீபத்தில் வரைந்த ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு!
பிறந்தநாள் - 25-03-2026 :
காலச்சக்கரத்தின் சுழற்சியில் அகவை கூடிக் கொண்டே செல்கிறது! ஒவ்வொரு நாளும் அனுபவங்களும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது! இந்த பிரபஞ்சத்தில் சிறு புள்ளியான இப்புவியில் நானும் ஒரு சிறுபுள்ளியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன் என்பதில் மகிழ்வும் மனநிறைவும் கொள்கிறேன்!
இத்தனை வருடங்களாக திருவரங்க வாழ்வில் தனித்துப் பிடித்து வைத்திருந்த பொறுப்புகள் எல்லாவற்றையும் இப்போது என்னவரின் வருகையால் சற்றே தளர்த்திக் கொண்டு விட்டபடியால் ரிலாக்ஸாக உணர்கிறேன்! எனக்கான நாட்கள், நேரம் என்பதாக நாட்கள் கடந்து செல்வது இறைவனின் அருள்! சின்னச் சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு கொள்வது என்பது மகிழ்ச்சியை அதிகரிக்குமாம்!
இன்று முதல் 45 ஆம் அகவையில் அடியெடுத்து வைத்திருக்கிறேன் என்பதில் முதலில் மகிழ்கிறேன்! நினைத்ததை பேசவும் எழுதவும் பகிர்ந்து கொள்ளவும் முடிந்ததில் மகிழ்கிறேன்! நேர்மறையான நற்சிந்தனைகளோடு செயல்பட முடிவதில் மகிழ்கிறேன்! ஒழுக்கமும், நேர்மையும், சிக்கனமும் கொண்ட பெண்மணியாக வாழ்வதில் மகிழ்வு கொள்கிறேன்!
பிறந்தநாள்! இதற்கென கொண்டாட்டங்களோ ஆர்பாட்டமோ எப்போதுமே இருந்ததில்லை! புத்தாடை என்பதெல்லாம் கூட நான் எதிர்பார்த்ததில்லை! உனக்கும் தான் பிறந்தநாள் வரப்போறதே! வாங்கிக்கோ! என்று சொன்னால் வாங்கிப்பேன்..🙂 இம்முறையும் கூட…!
புடவை செக்ஷனில் நுழைந்ததும் அங்கே ஹேங்கரில் தொங்க விட்டிருந்த புடவைகளை பார்த்துக் கொண்டிருந்த போது சட்டென ஒன்றைத் தேர்வு செய்தேன்! அதிகம் போனால் ஐந்து நிமிடங்கள் ஆகியிருக்கும்..🙂 புடவை உயரம் சரியா இருக்கான்னு பார்த்தேன்! அவ்வளவு தான்..🙂 நாங்கள் தான் உயர ஃபேமிலியாச்சே…:) மகள் தான் அது IKAT டிசைன் சாஃப்ட் சில்க் என்று சொன்னாள்!
எங்கிருந்தாலும் தன்னுடைய வாழ்த்தே முதல் வாழ்த்தாக இருக்கணும் என்று நினைக்கும் என்னவரும், அன்பு மகளும் உடனிருக்க இன்றைய நாள் நிஜமாகவே எனக்கான இனிய நாள் தான்! இன்று காலை கூட குடும்ப நண்பர் ஒருவர் கல்கத்தாவிலிருந்து மெசேஜ் செய்திருந்தார்! வெங்கட் வந்தப்புறம் வந்திருக்கும் முதல் பிறந்தநாள் என்று வாழ்த்து சொல்லியிருந்தார்!
உண்மை தான்! பசுமையான நினைவுகளை அசை போட்டு பார்க்கிறேன்! திருமணமான பின் வந்த முதல் பிறந்தநாளுக்கு மனதை வருடும் இதமான வண்ணத்தில் Lucknow cotton சுடிதார்கள் வாங்கித் தந்ததாக நினைவு..🙂 காலம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது! இதோ வருகின்ற மே மாதத்தில் 25 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறோம்.
இணைய உலகில் கடந்த 16 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன்! காலை முதல் முகநூல், வாட்ஸப், மெசஞ்சர் என்று எங்கும் பல அன்பான நட்புள்ளங்களின் வாழ்த்து மழையால் இன்று மலைக்கோட்டை நகரின் வெப்பம் கூட சற்று தணிந்துள்ளது என்று சொல்லிக் கொள்வேன்! அனைவரின் அன்புக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! பெரியோர்களுக்கு என் நமஸ்காரங்கள்!
இந்த நாள் இனிய நாள்!
********
காவிரி பாலத்தில் நடை - 28-03-2026:
நெடுநாட்களாக அதிகாலை நேரத்தில் காவிரி பாலத்தில் சூரிய உதயத்தை பார்த்தவாறு நடைப்பயிற்சி செய்யணும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது! வாரநாட்களில் வீட்டிலிருந்து புறப்பட்டு அரங்கன் கோவில் பிரகாரத்தை ஒட்டியுள்ள நான்கு உத்திர வீதிகளையும் வலம் வந்து வீட்டிற்குத் திரும்ப நடந்து வர சரியாக ஒரு மணிநேரம் ஆகும்!
அது தான் எங்களுக்கும் வீட்டிற்கு திரும்பி வேலைகளை கவனிக்கவும் அலுவலகம் மற்றும் கல்லூரிக்கு தயாராகவும் சரியாக இருக்கும்! அதனால் வார விடுமுறை நாட்களில் வழக்கமான பாதையை விடுத்து வேறு ஏதாவது இடத்தில் நாம நடைப்பயிற்சி செய்யலாமா?? என்று என்னவரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்! அப்போது தான் காவிரிப்பாலத்தில் நடப்பது என்ற எண்ணம் உருவானது!
சரி! வீட்டிலிருந்தே காவிரிப்பாலத்திற்கு நடப்போமா?? என்றால் அது ரொம்ப தூரம்! உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா! என்றார் என்னவர்! உண்மை தான்! சென்ற வாரம் கூட அப்பாவும் மகளும் வீட்டிலிருந்து 10கிமீ தொலைவில் உள்ள சமயபுரம் கோவிலுக்கு நடந்தே சென்று வந்தார்கள்! அன்னையின் அருள்! என்னால் முடியாது என்பதாலும் என்னால் அவர்களின் நடையில் தடையேதும் வந்துவிடலாம் என்பதாலும் ஒதுங்கிக் கொண்டேன்!
சரி! ஒருநாள் காவிரிப்பாலத்திற்கு அருகே எங்கேயாவது இருசக்கர வாகனத்தை விட்டுட்டு போயிட்டு வரலாம்! என்று முடிவு செய்தோம்! நாட்கள் கடந்தன! ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வேலையால் அந்த எண்ணம் கிடப்பிலேயே கிடந்தது! எந்த ஒரு செயலும் ஒன்று சட்டென்று செய்து விட வேண்டும்! இல்லையென்றால் வேளை வரும் வரை காத்திருக்க வேண்டும்!
இன்றைய நாளில் அந்த எண்ணம் ஈடேறியது! அதிகாலையில் இருவரும் தயாரானோம்! இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு மாம்பழச்சாலை வரை சென்றோம்! அங்கேயிருந்து காவிரிப்பாலத்தில் நடை, ஒருபுறம் கதிரவனின் செக்கச் சிவந்த அழகால் கவர்ந்தோம் என்றால் எதிரே மலைக்கோட்டையின் கம்பீர அழகும் சேர பாலத்தின் இருபுறமும் காட்சிகளை ரசித்தபடியே நடந்தோம்!
காவிரியில் தண்ணீரும் இருந்திருந்தால் சில்லென்ற காற்றோடு நீரின் சலசலப்பும் பெருக்கெடுத்து கரைபுரண்டோடும் காவிரியின் அழகு கண்களுக்கு ரம்மியமாய் இருந்திருக்கும்! காவிரியின் குறுக்கே புதிய பாலம் கட்டும் வேலை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நீரின் ஓட்டத்தை தடுத்து வைத்திருக்கிறார்கள்! தவிர இப்போது அணையை பாசனத்துக்காக திறந்து விடும் பருவம் இல்லையென்று நினைக்கிறேன்!
அதிகாலை நேரத்திலும் மாலைநேரத்திலும் எங்களைப் போல நடைப்பயிற்சி செய்வோரை இங்கு காணலாம்! மாலைநேரம் என்றால் கூடுதலாக காதலர்களும் அவர்களுக்காக விற்கப்படும் வேர்கடலை, ஐஸ்கிரீம் போன்றவற்றை விற்கும் வியாபாரிகளும் கூட காணப்படுவர்! இந்தப் பாலம் நிறைய பேருக்கு இரவில் படுத்துறங்கும் இடமாகவும் பயன்படுகிறது!
இன்னும் சிலர் வீட்டிலிருந்து குப்பைகளை எடுத்து வந்து வீசியெறியும் இடமாகவும் பயன்படுத்துவதைப் பார்த்த போது வெறுப்பும் கோபமும் வந்தது! எப்படிப்பட்ட மனிதர்கள் இவர்கள்! சமுதாயத்தின் மேல் எந்தவொரு அக்கறையும் இல்லாத மனிதர்கள்! நீர்நிலைகளை நாம் பாதுகாக்க வேண்டாமா! எத்தனை தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது..🙁 தனி மனித ஒழுக்கம் மட்டுமே நம்மை சமுதாயத்திலும் வாழ்விலும் முன்னேற்றும்!
இன்றைய நாளில் இயற்கையை ரசித்தபடி நாங்கள் காவிரி பாலத்தில் நடைப்பயிற்சி செய்ததைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்.
********
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
1 ஏப்ரல் 2026









வாசகம் நன்று. ரோஷ்ணி ஓவியம் ரசனை. பிள்ளையார் ஏன் போர்த்திக் கொண்டிருக்கிறார்?!
பதிலளிநீக்குதிருமதி வெங்கட்டுக்கு இங்கும், இன்றும் வாழ்த்து சொல்கிறேன். வாழ்க வளமுடன்.
காவிரிப் பாலத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் கண்ணுக்கு குளுமை, இனிமை, அருமை.
பிறந்தநாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் வாழ்க.
பதிலளிநீக்குரோஷ்ணி கலக்கல் !
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள்.
காவிரிப்பாலம் ரம்யம்.
ரோஷனியின் ஓவியம் மிக அழகு.கண்ணை மூடிக் கொண்டிருக்கும் கணபதி அழகோ அழகு.வாசகம் நன்று.
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் புவனா!
விஜி.