அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2026 - சில அனுபவங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளுக்கு நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடரின் சென்ற பகுதியில் ஸ்ரீகண்ட் கைலாஷ் மஹாதேவ் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தேன். தொடர்ந்து இந்தப் பகுதியில் சராஹன் என்கிற இடத்தில் நாங்கள் பார்த்த வேறொரு இடம் குறித்தும் மற்ற சில தகவல்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். காவலரிடம் பேச்சுக் கொடுத்ததில் கிடைத்த தகவல்களை எங்களுக்குள் பேசிக் கொண்டே ஆலய வளாகத்திலிருந்து வெளியே வந்த நாங்கள் அடுத்ததாகச் சென்ற இடம் ஒரு அரண்மனை. ஏற்கனவே ஒரு பகுதியில் இந்த ஊர் ராம்பூர் புஷஹரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த ராஜாக்கள் தான் இந்த ஊரில் இருக்கும் பீமா காளி ஆலயத்தினைக் கட்டினார்கள் என்ற தகவலைச் சொல்லி இருந்தேன் அல்லவா? அதே ராஜாக்கள் வம்சாவழியினர் இந்த ஊரில் தங்குவதற்காக ஏற்படுத்திய ஒரு பெரிய அரண்மனையினை நாங்கள் பார்க்கலாம் என்று சென்றிருந்தோம். காலை நேரத்தில் அங்கே சென்றால் ஒருவரும் இல்லை - Trespassing Not Allowed என்கிற தகவல் பதாகை வேறு இருந்தது. வாயில் கதவு பூட்டியிருக்க உள்ளே சென்று அரண்மனையினை எங்களால் பார்க்க முடியவில்லை.
வெளியே இருந்து பார்க்கும்போதே அதன் பிரம்மாண்டம் எங்களை மிகவும் ஈர்த்தது. எனது அலைபேசியிலும், நண்பர் பிரமோதின் அலைபேசியிலும் சில படங்களை வெளியிலிருந்தே எடுத்துக் கொண்டோம். அதன் அருகிலேயே The Sarahan Pheasantry என்கிற, பறவைகளின் ராஜா என்றும், உள்ளூரில் ஜுஜுராணா என்று அழைக்கப்படும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் மாநிலப் பறவைகளுக்கான வளர்ப்பு மையம் இயங்கி வருகிறது. நாங்கள் அந்தப் பகுதியில் உலா வந்த போது காலை 08.00 மணி! அந்த நேரத்தில் அரசு நிறுவனமான அந்த இடத்தில் யாரும் இருப்பது சந்தேகம் தானே! அதே போலவே அந்த இடமும் வெளியிலிருந்து தான் பார்க்க முடிந்தது. உள்ளே சென்றிருந்தால் அழகான அந்தப் பறவைகளை வளர்க்கும் முறை குறித்தும், அந்தப் பறவைகள் குறித்தும் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்திருக்கும். அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனதில் கொஞ்சம் வருத்தம் தான். ஆனாலும் இணையத்தில் இப்போது பல தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன - நேரமிருந்தால் இந்தப் பறவை குறித்த தகவல்களை தேடிப்பார்த்து படிக்கலாம். உங்கள் வசதிக்காக ஒரு 2022-23 ஆண்டு மலர் ஒன்றின் சுட்டியை இங்கே தந்திருக்கிறேன். அதில் இந்த இடம், பறவை குறித்த பல தகவல்கள் இருக்கின்றன. முடிந்தால் படித்துப் பாருங்கள்!
ஊரில் இருக்கும் இடங்களை பார்த்தபடி, இயற்கையை ரசித்தபடி, தங்குமிடம் திரும்பினோம். காலை உணவுக்காக, முந்தைய இரவே சொல்லி இருந்ததால் அது தயாராவதற்குள் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு உடமைகளைச் சரிபார்த்து எடுத்து வைத்து விட்டு, மீண்டும் தங்குமிட உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்தோம். பின்புறத்தில் அவரது ஆப்பிள் தோட்டம், மற்றும் ரோஜாத் தோட்டம் இருக்கிறது என்று சொல்ல, சென்று பார்க்கலாமா என்று கேட்டதற்கு, எதையும் பறிக்காமல், பாழ்படுத்தாமல் செல்வதென்றால் சென்று வாருங்கள் என்று எச்சரிக்கையுடன் சொல்லி அனுப்பினார். எங்களுக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லை என்று சொல்லி கீழே இறங்கிச் சென்று பார்த்ததோடு சில படங்களும் எடுத்துக் கொண்டோம். மீண்டும் திரும்பியபோது, உங்களுக்கு நேரமிருந்தால் உங்களை இங்கே ஒரு சிறு மலையேற்றத்திற்கும் கூட அழைத்துச் செல்வேன் - மலைப்பகுதியில் இன்னும் சில தோட்டங்கள் போட்டிருக்கிறேன் என்று சொன்னதோடு, உங்களுக்கு நேரம் இருக்கிறதோ இல்லையோ எனக்கு இப்போது நேரம் இல்லை - மாலை வரை இருந்தால் மலையேற்றம் செய்யலாம் என்றார். அதற்கு எங்களுக்கு நேரம் இல்லை!
நாங்கள் பேசிக் கொண்டிருந்த போதே எங்கள் ஓட்டுனர் ஷிம்பு தயாராகி இருந்தார். அவரும் வந்து சேர எங்களுக்கான காலை உணவும் வந்து சேர்ந்தது. சஞ்சு என்கிற சமையல் கலைஞர் தான் எங்களுக்கு இரண்டு வேளைகளாக உணவு சமைத்துத் தந்தார். பார்த்துப் பார்த்துக் கவனித்து சுவையாகவே உணவை சமைத்திருந்தார். காலை உணவாக மிக்ஸ் வெஜ் பராட்டா, தயிர், ஊறுகாய் மற்றும் நண்பர்களுக்கு தனியாக ஆம்லேட்! தனித்தனியாக வந்த உணவை நண்பர்களும் ஓட்டுனருமாக சாப்பிட்டு முடித்தோம். முதல் நாள் இரவு உணவு, அன்றைய காலை உணவு என இரண்டும் சேர்த்து மொத்த செலவு 1680/- என்று அவர் சொல்ல, உரிமையாளரின் அலைபேசி எண்ணிற்கு பணத்தினை அனுப்பி வைத்தேன். கூடவே சமையல் கலைஞர் சஞ்சுவை அழைத்து அவருக்கும் 200/- பணம் கொடுத்தோம். அவருக்கு மகிழ்ச்சி! நமக்கும் மனதில் கொஞ்சம் திருப்தி. பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டாரே! அதிலும் இது போன்ற இடங்களில் விதம் விதமாக உணவு கிடைப்பது கடினம். உணவு கிடைக்கிறது, அதுவும், சுவையாகவும் இருந்தால் நல்ல விஷயம் தானே.
சாப்பிட்டு முடித்து வண்டியில் எங்கள் உடமைகளை வைத்து தங்குமிட உரிமையாளரிடம் சொல்லிக் கொண்டு விடைபெறும்போது ஓட்டுநர் ஷிம்பு, ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொன்னார். காலையில் எழுந்து பார்த்தபோது வண்டியில் இரு சக்கரங்களில் காற்று குறைவாக இருந்தது. Puncture ஆக இருக்கலாம்! என்னிடம் இருந்த Pump (வண்டியின் பேட்டரியில் இணைத்து காற்றடிக்க முடியும் வகை!) கொண்டு நான்கு சக்கரங்களிலும் Spare சக்கரத்திலும் அடித்து வைத்திருக்கிறேன். இங்கேயிருந்து புறப்பட்டு 15 கிலோமீட்டர் பயணித்தால் பிரதான சாலையில் இருக்கும் ஜியோரி என்கிற இடத்தில் வண்டியை நிறுத்தி Puncture எல்லாம் சரி செய்து கொள்ள வேண்டும் என்றார். நாங்கள் பயணிப்பதோ கரடு முரடான மலைப்பகுதி! இதில் இப்படி வந்தால் எப்படி என்று கேட்க, முதல் நாள் தான் வண்டியை மொத்தமாக Service செய்து பக்காவாகக் கொண்டு வந்தேன் என்று சொன்னார். அது உண்மையோ பொய்யோ போகப்போகத்தானே தெரியும் என்று நான் நினைத்தேன். நான் அவரைப் பற்றி அப்படி நினைத்தது சரியே என்று தொடர்ந்த பயணத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது. அது தனிக்கதை. பிறகு சொல்கிறேன்.
பதினைந்து கிலோ மீட்டர் பயணித்து ஜியோரி சென்று சேர்ந்து ஒரு சாலையோரக் கடையில் நிறுத்தி பரிசோதித்ததில் இரண்டு Tyre-களும் Puncture. இப்போதெல்லாம் Tubeless Tyre தான் வருகிறது. அதற்கு Puncture ஒட்டும் வசதிகளும் முந்தையது போல அல்ல! இரண்டு சக்கரங்களையும் ஒவ்வொன்றாகக் கழற்றி Puncture பார்த்து, சரி செய்து, எல்லாவற்றையும் முடிக்க அவருக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது. அது வரை நாங்கள் அப்படியே வாகனத்தில் அமர்ந்திருந்தோம். இப்படி பயணம் செய்யும்போது தடங்கல்கள் ஏற்பட்டால் மனதுக்கு ஒப்புவதில்லை. அந்த உழைப்பாளி வேலை செய்து கொண்டிருந்த போதே ஓட்டுநர் ஷிம்பு அவரிடம் Uniform எங்கே கிடைக்கும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் வாகனத்தில் அமர்ந்திருக்க, வண்டியின் பின்னால் வேலை நடந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று பார்த்தால் அவர் அங்கே இல்லை. உழைப்பாளி தனது வேலையை முடித்து விட்டு எங்களிடம் வந்து வேலை முடிந்தது என்றார். ஷிம்பு எங்கே என்று கேட்டால் Uniform வாங்கச் சென்று இருக்கிறார் என்று சொல்ல, ஓட்டுநரை அலைபேசியில் அழைத்தோம். பத்து நிமிடத்தில் ஆடி அசைந்து வந்து சேர்ந்தார். வரும் போது ஒரு செட் Uniform மட்டுமே கொண்டு வந்தாராம்! அதனால் இங்கே வாங்கினேன் - விலை மலிவாகவே இருந்தது என்றார்.
எங்கள் ஓட்டுநர் அதீத சுறுசுறுப்பாக இருந்தார் என்பதை தொடர்ந்து எங்களுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தார் மேலே சொன்னது போன்ற செயல்களால். ஒரு வழியாக வந்து சேர, எங்கள் பயணம் தொடர்ந்தது. நாங்கள் பயணிக்க இருந்த பாதைகள் கொஞ்சம் ஆபத்தானவை என்பதோடு, பல இடங்களில் தொடர்ந்து கிலோ மீட்டர் கணக்கில் ஊர்கள் இருக்காது. வழியில் மலைச்சிகரங்களிலிருந்து அவ்வப்போது கற்கள் பறந்து வருவது, மலைச்சரிவு ஏற்படுவது போன்ற ஆபத்துகள் இருக்க, வாகனம் சரியாக இல்லாமல் இருந்தால் என்னாவது என்று அவரிடம் மீண்டும் ஒரு முறை வாகனம் Service எல்லாம் செய்து தானே கொண்டு வந்தீர்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அது எல்லாம் பக்காவாக இருக்கு! என்று அவர் சொன்னாலும் என் மனம் நம்பவில்லை! தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம். அந்தப் பயணத்தில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்னென்ன, பாதை எப்படியானது? வழியில் என்ன பார்த்தோம். அன்றைய தினம் எந்த ஊரைச் சென்றடைந்தோம் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
26 ஜூன் 2026










பயணம் சொல்லும் பாடங்கள் கற்றுத்தருபவம் பற்றிய தகவல் படம் அருமை.
பதிலளிநீக்குமுதல் படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ராம்பூர் அரண்மனை பார்க்க அழகாக இருக்கிறது. ராம்பூர் கா லகஷ்மன் என்கிற ஹிந்திப் படம் நினைவுக்கு வருகிறது!
பதிலளிநீக்குஇந்த அரண்மனை இருப்பது சராஹன் என்ற இடத்தில் - ராம்பூர் புஷஹர் ராஜாக்கள், சராஹன் காளி ஆலயத்திற்கு வரும்போது தங்குவதற்காக கட்டிக்கொண்ட அரண்மனை.
நீக்குராம்பூர் கா லக்ஷ்மண் - :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
ஜூஜூராணா - பெயரே வித்தியாசமாக இருக்கிறது! எத்தனை விதமான பறவைகள்... படைத்த இறைவன் பெயர் வைக்க மறந்தான்! மனிதன் பேரேட்டில் குறித்து வைத்துக் கொள்கிறான்!!!
பதிலளிநீக்குபெயர் வைக்க மறந்த இறைவன்... ஆமாம்! பெயர்களே மனிதர்களாக ஏற்படுத்திக் கொண்டவை தானே! முன் காலத்தில் ஒருவரை ஒருவர் எப்படி அழைத்திருப்பார்கள் என்ற சிந்தனை வருகிறது ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
தோட்டத்தில் சாய்ந்திருக்கும் மரங்கள் எச்சரிக்கை உணர்வைக் கொடுக்கின்றன. மரத்தைப் பிடித்து நிற்கலாம் என்று போனால் சரிவில் சரிந்து மலையடிவாரத்துக்கு போய்விடுவோம் போல!
பதிலளிநீக்குஆமாம் - மலைச்சரிவுகளில் நடப்பது சற்றே சவாலான விஷயம் தான். மலைப்பகுதிகளில் இந்த சரிவுகளைப் பார்க்கும்போதே கொஞ்சம் பயம் வரத்தான் செய்யும் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அலட்சியமான அடாவடி டிரைவர் ஷிம்பு என்று தெரிகிறது. இவரை மாதிரி ஆட்கள் எப்போதும் தொல்லைதான்.
பதிலளிநீக்குஉண்மை - நடுநடுவே இழுத்துப் பிடிக்க வேண்டியிருந்தது. பல சமயங்களில் அசிரத்தையாகவும் இருந்தார். நடுநடுவே கொஞ்சம் டோஸ் கொடுக்க சரியானார். ஆனாலும் பயணத்தில் அவரால் சில சிக்கல்களும் உண்டானது. அவை குறித்து வரும் பகுதிகளில் எழுதுகிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
பஞ்சர் ஓட்டும்போது வண்டியிலேயே அமர்ந்திருந்தால் பஞ்சர் ஒட்டுபவருக்கு சிரமம் இல்லையோ.. அவ்வளவு வெயிட்டை எப்படி தூக்குவார்?
பதிலளிநீக்குநான் இறங்கி விட்டேன். நண்பர்கள் இருவரும் அமர்ந்திருந்தார்கள். இப்போது வரும் ஜாக்கிகள் சுலபமாக ஏற்றக் கூடிய வகை என்பதால் அந்த வேலை செய்த நபரே எங்களை வண்டியில் உட்கார்ந்திருங்கள் என்றே சொன்னார் ஸ்ரீராம். நான் கொஞ்சம் அப்படியே நடந்து சுற்றி வந்தேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஓட்டுனருக்கு சீருடையா? அங்கு சீருடை கட்டாயமா?.
பதிலளிநீக்குஆமாம் சீருடை கட்டாயம். அது மட்டுமல்லாது வேறு சில விஷயங்களும் கட்டாயம் - அந்த அனுபவமும் எங்களுக்குக் கிடைத்தது - அது குறித்த தகவல்களும் வரும் பகுதிகளில் சொல்கிறேன் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அரண்மனை வெளியிலேயே இவ்வளவு அழகு பெரியதாக இருக்கும் போலத் தெரிகிறது. ராம்பூர் பெயர்ப்பலகை அங்கு பார்த்த்டதோடு சரி ஊருக்குப் போகவில்லை. அரண்மனைப்பக்கம் பெரிய புல்வெளிப்பகுதி எல்லாம் பார்க்கவே ரம்யமாக இருக்கு.
பதிலளிநீக்குகீதா
இந்த அரண்மனை இருப்பது சராஹனில். ராம்பூர் புஷஹரில் வேறு அரண்மனை உண்டு. அங்கும் இந்தப் பயணத்தில் திரும்பி வரும்போது சென்றோம் கீதா ஜி. ஆமாம் மிக அழகான அரண்மனை. பார்க்கவே பிரமிப்பாக இருந்தது - அதுவும் முதல் மாடியில் அமர்ந்து பார்த்தால் எதிரே தெரியும் மலைச்சிகரங்கள் கண்களைக் கவர்ந்திழுக்குமே...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஜூஜூ ராணா!! ராணா பெயர் அரசன் பெயர் ல அதான் அதுக்கேற்ப இத்தனை கம்பீரமாக இருக்கு போலும்!
பதிலளிநீக்குதலைல ஹெல்மெட் போட்டிருப்பது போலவும் இருக்கு! வெள்ளைப் புள்ளி - மேல ஒவர்கோட் போட்டுக் கொண்டிருப்பது போலத் தெரிகிறது.
கீதா
ஆமாம் - ராணா என்றாலே பெரிய தல! இன்றைக்கும் ராணாக்கள் வடக்கில் உண்டு. அழகான பறவை தான் கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
The Sarahan Pheasantry என்கிற, பறவைகளின் ராஜா என்றும், உள்ளூரில் ஜுஜுராணா என்று அழைக்கப்படும் //
பதிலளிநீக்குஆ பாருங்க!!! ராஜா பெயர் அதான் கம்பீரமான்னு சொல்லிருந்தேன் முந்தைய கருத்தில் இப்ப இந்த வரி சொல்லிடுது! பறவைகளின் ராஜான்னு! pheasant வகை போல இருக்கே என்று சொல்ல நினைத்துவிட்டேன் இப்ப தெரிந்துவிட்டது.
கீதா
ஆமாம் கீதா ஜி. சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள். கம்பீரம் தான் அந்தப் பறவை. பார்க்கவும் அழகு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இணையத்தில் தகவல்கள் இருட்ந்தாலும் நேரில் பார்த்தால் அது மனதுக்குள் குட்டி சந்தோஷம்தானே ஜி. பரவால்ல இன்னொரு வாய்ப்பு அமைந்தாலும் அமையலாம்!
பதிலளிநீக்குதோட்டம், ஆப்பிள் காய் படங்கள் எல்லாம் செமையா இருக்கு
உணவு சுவையாக அமைந்தது நல்ல விஷயம்.
கீதா
ஆமாம் - எல்லா விஷயங்களையும் நேரில் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் வேறு வகை தான் கீதா ஜி.
நீக்குஆப்பிள் தோட்டம் - அழகு! உணவும் நன்றாகவே இருந்தது - இந்தப் பயணத்தின் பெரும்பாலான நாட்களில்! குறை ஒன்றுமில்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இப்படி பயணம் செய்யும்போது தடங்கல்கள் ஏற்பட்டால் மனதுக்கு ஒப்புவதில்லை. //
பதிலளிநீக்குரொம்பவே!ஜி
ஓ அங்கு ஓட்டுநர்களுக்கு யூனிஃபார்ம் வேண்டுமா? இதைப் பார்த்ததும் சமீபத்தில் ஒரு காணொளி லாரி ஓட்டுநர் ஒருவரை போலீஸ் பிடித்து யூனிஃபார்ம் கால்சராய் போடலைனு ஃபைன் போட்டது எதுக்கு ஃபைன் என்று கேட்டால் ஹெல்மெட் போடலை அதான்னு சொல்ல லாரி ஓட்டுநருக்கு எது க்கு ஹெல்மெட் என்று அவர் கேட்டிட அதுக்குப் போலீஸ் அபப்தான் சொல்லுகிறார் கால்சராய் யுனிஃபார்ம் போடாததற்கு என்று...வாக்குவாதம் ந
கீதா
ஓட்டுநருக்கு யூனிஃபார்ம் கட்டாயம். வேறு சில விஷயங்களும்! அந்த அனுபவங்களை வரும் பகுதிகளில் எழுதுகிறேன் கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இரு மலைகள் பாறைகளுகு நடுவில் மேகம் செம ஆங்கிளில் ஷாட்! ரொம்ப ரசித்தேன் ஜி
பதிலளிநீக்குபாதை கொஞ்ச்ம கரடு முரடு ஆபத்து என்றாலும் பார்க்க அழகாகத்தான் இருக்கிறது!
ஷிம்பு கொஞ்சம் பொறுப்பற்றவர் என்று தெரிகிறது.
கீதா
மலைப்பாறைகளுக்கு நடுவே மேகம் - படத்தினை ரசித்தமைக்கு நன்றி கீதா ஜி.
நீக்குஅழகான ஆபத்து - :)
பொறுப்பற்றவராகவே தெரிந்தார் எங்களுக்கும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வாசகம் நிஜம்!
பதிலளிநீக்குகீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குஅரண்மனை பெரிதாகவும் அழகாகவும் உள்ளது.
பதிலளிநீக்குசில ஓட்டுநர்களால் வரும் தொல்லை பயணங்களில் பல சிரமங்களையும் தந்துவிடும்.
அரண்மனை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. ஓட்டுநர்கள் சரியாக அமையாவிட்டால் பயணம் சுகமாக இருப்பதில்லை என்பது உண்மை மாதேவி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஹிமாச்சலப் பிரதேச மாநில பறவை மிக அழகாக உள்ளது.
பதிலளிநீக்குஅவை பற்றிய தகவல்களை உங்கள் சுட்டிமூலம் அறிந்தோம். நன்றி.
மாநிலப் பறவையான ஜுஜுராணா உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.