சனி, 16 மே, 2020

காஃபி வித் கிட்டு – சிநேகம் – இற்றை – யார் பையன் – அருவிகள் நகரம் – ஃப்ரூட் சாலட்



காஃபி வித் கிட்டு - 67


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

 

சிநேகமான புன்னகை, நம்பிக்கை தரும் வார்த்தைகள், மனம் நிறைந்த வாழ்த்துகள், இவைகள் போதுமே, ஒருவருடைய இன்றைய நாளை, அழகாய் மாற்ற, சிந்தாமல், அள்ளி வீசி விட்டு போங்கள். அவர்கள், வளர்ச்சியில் உங்கள் பங்கு இருக்கட்டும்.

 

இந்த வாரத்தின் ரசித்த முகப்புத்தக இற்றை:


நண்பர் முரளி எழுதிய முகப்புத்தக இற்றை ஒன்று – இந்த வாரத்தின் ரசித்த இற்றையாக…


நான் நிராயுதபாணியாக நிற்கும்போது சுற்றிச் சுற்றி வந்து கடிக்கும் கொசுக்கள் electrical bat எடுத்ததும் சட்டென்று மறைந்து விடுகின்றன. சொல்லப்போனால் கொசுக்கள் mosquito machine மீதே அமர்ந்து ஓய்வெடுத்துப் பின் புத்துணர்வு பெற்றவைகளாய் வந்து ஹிம்சிக்கின்றன. பேன் சீப்பால் வாரும்போது scalp நன்குக் கடித்துத்கொண்டு முகம் புதைத்துத் தப்பித்துப் பின் சில பேன்கள் பொறுமையாகத் தலைவலம் வருகின்றன. SARS ஆகிப் பின் MERS ஆகி COVID 19 ஆகி இவ்வாறு தன்னைப் பலவாறுப் பிரதியெடுத்துக்கொண்டு மனிதக்கண்களுக்கே புலப்பாடாத ஒரு சிறு கிருமி உலகத்தில் உள்ள மனிதர்களை ஒருவருக்கொருவர் பரம வைரிகள் போல சுற்ற வைக்கிறது.


நினைத்துப் பார்க்கிறேன், நித்தம் நம் வாழ்க்கையில் நாம் கடந்து வரும் வசனங்களில் ஒன்று, "உன்னை ஒரு கொசுவைப் போல் ஊதி விடுவேன், மூட்டைப்பூச்சிப் போல் நசுக்கி விடுவேன்". அவைகளின் survival instinct ஐப் பார்க்கும்போது இந்த வசனங்கள் சிரிப்பை உண்டாக்குகின்றன. திருவள்ளுவரின் "உருவு கண்டு எள்ளாமை வேண்டும்" என்ற தீர்க்கதரிசனத்தை மக்கள் நன்றாக உள்வாங்க வேண்டும். மேற்கூறப்பட்டுள்ளத் தொல்லைகள் கடந்து போகக்கூடியவையே. ஆனால் இப்போதிலிருந்தே என் மனதில் ஒரு அச்சம் பரவத் தொடங்கி விட்டது. சுனாமி வந்த பிறகு தமிழ் சினிமாவில் "நீ என் சுனாமி, என் மனதைக்கட்டிய மாமி" போன்ற கன்றாவிப் பாடல்களும், "நான் சுனாமிலேயே ஸ்விம்மிங் பண்ணவன், புயலிலேயே பீடி புடிச்சவன்" போன்ற வசனங்களும் நாறடித்தன. COVID-க்குப் பிறகு "மடோனா போல் பாட்டு இசைக்கிறாய், கொரோனா போல் நுரையீரலைப் பிசைகிறாய்...ம்ம்க்கும், ம்ம்க்கும்" என்று தமிழ்க்கவிஞர்கள் கிளம்பினால் அவர்களை POTA வில் கைது செய்ய வேணுமாய் அரசாங்கத்தைப் பிரார்தித்துக்கொள்கிறேன். 


இந்த வாரத்தின் ரசித்த பாடல்:


சமீபத்தில் ஒரு நாள் திடீரென ஞானோதயம் – பழைய பாடல்களைக் கேட்கலாம் என யூவில் ஏ.எம். ராஜா – ஜிக்கி சேர்ந்து பாடிய பாடல்களைத் தேடிப் பார்த்தேன். அப்படி பார்த்த ஒரு பாடல் எனக்கு பிடித்திருந்தது. ”யார் பையன்” என்ற திரைப்படத்தில் வரும் பாடல்.  உங்களுக்கும் பிடிக்கலாம் – உங்களில் சிலர் முன்னரே பார்த்திருக்கலாம் – ஆனாலும் மீண்டும் பாருங்களேன்.


 

அடுத்த மின்னூல் – அருவிகள் நகரம்


”அருவிகள் நகரம் எனது பதினைந்தாவது மின்னூல் வெளியீடு பற்றிய தகவலுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.


ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சி நகரை அருவிகள் நகரம் என்றே அழைக்கிறார்கள். தலைநகர் ராஞ்சியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவு பயணித்தால் நிறைய அருவிகள் – ஜோஹ்னா அருவி, ஹூண்ட்ரூ அருவி போன்ற பெரிய அருவிகளும், மற்றும் சில சிறு அருவிகளும் நிறைந்திருப்பதால் இந்த நகரத்திற்கே அருவிகள் நகரம் என பெயர் வைத்திருக்கிறார்கள். அருவிகள் தவிர, வனப்பகுதிகள், மலைப்பாங்கான பிரதேசம், ஏரிகள் என மிகவும் ரம்மியமான இடங்களைக் கொண்ட மாநிலம் ஜார்க்கண்ட். பீஹார் மாநிலத்திலிருந்து வருடம் 2000-த்தில் தனியாகப் பிரிக்கப்பட்ட பிறகு இங்கே நல்ல முன்னேற்றம். நிறைய விஷயங்கள் முன்னேற்றப் பாதையில் ஜார்க்கண்ட் மாநிலத்தினை அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. அப்படியான ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும், பீஹார் மாநிலத்திற்கு சென்ற போது சென்று வந்தோம்.


என்னுடைய முந்தைய மின்னூலான “பீஹார் டைரி வழி அந்தப் பயணத்தில் பீஹார் மாநிலத்தில் பயணித்த போது கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன் என்றால், இந்த “அருவிகள் நகரம் மின்னூல் வழி அதே பயணத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணித்தபோது கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அருவிகள் இருக்கும் பகுதிகள் தவிர, கிராமிய வழிகளில் சென்று பார்த்த ரஜ்ரப்பா கோவில், அங்கே சங்கமிக்கும் ஆறுகள், சிற்றருவி போன்ற விஷயங்களும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் சந்தித்த சில உழைப்பாளர்கள் பற்றியும் இந்த மின்னூல் வழி பார்க்க முடியும். கூடவே பாழும் வயிற்றுக்காக திருட்டுத் தொழிலில் – அதுவும் பல மைல் தூரம் நடந்து நிலக்கரி திருட்டில் ஈடுபடும் சில மனிதர்கள் பற்றியும் இந்த மின்னூல் வழி நீங்கள் அறிந்து கொள்ள முடியும். தரவிறக்கம் செய்ய சுட்டி:-


அருவிகள் நகரம்


என்னுடைய அனைத்து மின்னூல்களின் பட்டியலுக்கான சுட்டி:


மின்புத்தகங்கள் பட்டியல்


கூடவே இன்னும் ஒரு தகவலும்:  ஹனிமூன் தேசம் மின்னூல் வரும் செவ்வாய் கிழமை மதியம் வரை அமேசான் தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!


படித்ததில் பிடித்தது – விளம்பர யுக்தி:

 

கண்ணாடியை உடைத்தால் உள்ளிருக்கும் 23 கோடியும் தங்களுக்கே. 2005 ஆம் ஆண்டில், கண்ணாடி உற்பத்தி நிறுவனம் வான்கூவர் (கனடா) பேருந்து நிறுத்தத்தில் ஒரு விளம்பர யுக்தியை கையாண்டது.  தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளின் வலிமை குறித்து உணர்த்த மிகுந்த நம்பிகை வைத்து, அந்த கண்ணாடி பெட்டிக்குள் 3 மில்லியன் டாலர்களை வைத்தார்கள்.( சுமார் 23 கோடி) அக்கண்ணாடிப்பெட்டியினை யாரொருவர் உடைக்கின்றாரோ பணம் அவர்களுடையது. விதிகள் கிடையாது, சுத்தியல் முதற்கொண்டு பயன்படுத்த அனுமதியுண்டு. எவராலும் உடைக்கமுடியவில்லை.  விளம்பர பிரச்சாரம் வெற்றி.  அதற்கு செய்த முதலீடு முதற்கொண்டு அனைத்தும் நிறுவனத்திற்கே. பி.கு.: 23 கோடியில் சில ஆயிரங்கள் மட்டும் சட்டப்படி செல்லும்( விளம்பரயுக்தி தான் முக்கியமே தவிர நியாயம் பார்த்தல் ஆகாது).


பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:


2014-ஆம் வருடம் இதே நாளில் என் வலைப்பூவில் எழுதிய பதிவு – ஃப்ரூட் சாலட் – 92-ஆம் பகுதி!  அந்தப் பதிவிலிருந்து ஒரு குறுஞ்செய்தி…


ஒரு கண்ணாடி தான் என்னுடைய மிகச் சிறந்த நண்பன் – நான் அழும்போது அந்த கண்ணாடி சிரிப்பதில்லை……  - சார்லி சாப்ளின்.


முழுப்பதிவும் படிக்க ஏதுவாய் சுட்டி கீழே...


ஃப்ரூட் சாலட் - 92


மனிதர்கள் பல விதம்:


வியாழன் அன்று மாலை வாயுவிற்கும் வருணனுக்கும் திடீர் கோபம்! அவர்களுக்குள் நீ பெரியவனா நான் பெரியவனா போட்டி! தில்லி நகரை ஒரு வழி செய்து விட்டு தான் மறு வேலை என அனைவரையும் கலங்கடித்தார்கள். ஆந்தி என இங்கே அழைக்கப்படும் சூறைக்காற்று மரங்களையும் கதவுகளையும் பிய்த்துப் போட்டு விடும் அளவுக்கு அடித்தது. அப்போது தான் அலுவலகத்திலிருந்து திரும்பி இருந்தேன். வீட்டின் எதிர் பகுதியில் இருக்கும் எட்டு அடுக்கு குடியிருப்பில் சில ஜன்னல் கதவுகள் திறந்து இருக்க, காற்றில் அடித்துக் கொண்டதில் கண்ணாடிகள் மேலிருந்து கீழே விழுந்து சிதறின. நல்ல வேளை யாருக்கும் அடி பட வில்லை! கண்ணாடிகளே சிதறும்போது மாங்காய் எந்த மூலைக்கு! நன்கு காய்த்திருந்த மாங்காய்கள் (வீட்டின் எதிரே மரம் இருக்கிறது!) கீழே விழுந்து சிதறின.  இலையுதிர் காலம் என்பதால் இலைகளை பெருக்கி சுற்றுச் சுவர் ஓரம் சேமித்து வைத்திருந்தார்கள். அதன் மேல் விழுந்தவை மட்டும் தப்பித்தன!


குடியிருப்பின் காவலர் ஒருவர் கீழே விழுந்த மாங்காய்களை சேகரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்த துணியில் கட்டிக் கொள்ள நினைத்தபோது அது பற்றவில்லை.  சரி சேகரித்ததை இளைகள் குவியலில் ஒளித்து வைத்து விட்டு பை எடுத்துக் கொண்ட வரப் போனார்.  அதனை சுவற்றின் இந்தப் பக்கம் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தார் ஒரு பெண்மணி.  அந்த காவலர் அந்தப் பக்கம் போனதும் இந்தப் பக்கம் அவரது மகனை அனுப்பி, காவலர் சேர்த்து வைத்த மாங்காய்கள் அனைத்தையும் எடுத்து வரச் சொல்லி விட்டார் – உழைப்பது ஒருவர் – அனுபவிப்பது வேறொருவர்! கொஞ்சம் கூட வெட்கம் இல்லையோ அந்தப் பெண்மணிக்கு! சரி மாங்காய்கள் விழும்போதே மகனை அனுப்பி கொஞ்சம் எடுத்து வரச் சொல்லி இருந்தால் தவறாகத் தோன்றியிருக்காது. வேறு ஒருவர் சேமித்து வைத்ததை இப்படி எடுத்து வருவது சரியல்ல என்று அவருக்குத் தோன்றவில்லையே! விந்தை மனிதர்கள் நிறைந்த உலகம் இது – ஒவ்வொரு நாளும் இப்படி நமக்கு புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்! 

நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி


42 கருத்துகள்:

  1. COVID-க்குப் பிறகு "மடோனா போல் பாட்டு இசைக்கிறாய், கொரோனா போல் நுரையீரலைப் பிசைகிறாய்...ம்ம்க்கும், ம்ம்க்கும்" என்று தமிழ்க்கவிஞர்கள் கிளம்பினால் அவர்களை POTA வில் கைது செய்ய வேணுமாய் அரசாங்கத்தைப் பிரார்தித்துக்கொள்கிறேன்.///////HAHAHAHAHAHHA.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடையாக் கண்ணாடி பிரமாதம்.

      நீக்கு
    2. ஆந்தி போது மனிதர்கள் செய்த அனியாயம் வருத்தம்.

      மின் நூல்களுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.

      நீக்கு
    3. யார்பையன் மாதத்துக்கு ஒரு முறை பார்த்துவிடுவேன்.
      என் உற்சாக மருந்து. பாடலுக்கு மிக நன்றி மா.

      நீக்கு
    4. நண்பர் முரளியின் முகநூல் இற்றை உங்களுக்கும் பிடித்தடில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      நீக்கு
    5. உடையாக் கண்ணாடி - எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் இல்லையா வல்லிம்மா...

      நீக்கு
    6. ஆந்தி சமயத்தில் அந்தப் பெண்மணி செய்தது சரியில்லை தான். ஆனால் அவர் தவறு அவருக்குப் புரியவில்லையே வல்லிம்மா..

      தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    7. யார் பையன் - படமும் பாடலும் கேள்விப்பட்டதில்லை மா... முதல் முறை கேட்பது போலவே இருந்தது. உங்களுக்கு பிடித்த பாடலை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      நீக்கு
  2. சார்லி சாப்ளின் வாசகம் இனிமை. இது போல நண்பர்களே நமக்கு வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் சொல்லும் நண்பர்கள் எல்லோருக்குமே தேவை தான் வல்லிம்மா...

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    காஃபி வித் கிட்டு அருமை. வாசகமும் அருமை. மற்றவர்களுக்காக சினேகப் புன்னகை, நல்லதாக நாலு வார்த்தைகளை சிந்தி/பேசும் போது நமக்குள்ளும் ஒரு உற்சாகம் பிறந்து அன்றைய நாள் அனைவருக்குமே நல்லதாக மணம் வீசும் என்பது உண்மைதான்.

    முகப்புத்தக இவற்றை வாசகங்கள் நல்ல நகைச்சுவையாக அழகான கருத்துடன் இருக்கிறது. எழுதிய தங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      காஃபி வித் கிட்டு - வாசகம், பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      இற்றையின் நகைச்சுவை - நண்பர் முரளியின் சார்பாக நன்றி.

      நீக்கு
  4. முகநூல் பதிவு அருமை ஜி

    கண்ணாடியை கோடரியால் அடிக்கலாமா ஜி ?

    அவர்கள் மாங்காய் திருடர்கள் அல்ல! மாங்கா மடையர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூல் பதிவு பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      கண்ணாடியை கோடரியால் அடிக்கலாமா? ஹாஹா - இந்த விளம்பரம் வந்தது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கில்லர்ஜி. அப்போது தெரிந்திருந்தால் செய்திருக்கலாம்.

      மாங்கா மடையர்கள் - சரியாகச் சொன்னீர்கள்.

      நீக்கு
  5. COVID 19 பற்றி பழைய பாடல்களை இப்போது வரிகளை மாற்றி பாடுகிறார்கள்... புதுப்பாடல்கள் கண்டிப்பாக வரும்...

    மின்னூல் தொடர வாழ்த்துகள் ஜி...

    யார் பையன் பாடல் கேட்டுள்ளேன்...

    ஒரு தகவலுக்காக : அந்த காணொளியை வெளியிட்டவர் வேம்பார் மணிவண்ணன் (Vembar Manivannan) அவர்கள்... அவர் வெளியிட்ட பழைய பாடல் காணொளிகள் ஏகப்பட்டது உள்ளன... தேடி தேடி பல பொக்கிச பாடல்களை கொடுத்திருப்பார்... எங்குமே கிடைக்காத பல பாடல்களும் உண்டு... குறளுக்கேற்ப mp3 பாடல் கிடைக்காதபோது, இவரின் காணொளி பக்கம் சென்று தேடி எடுப்பேன்... பிறகு காணொளி to mp3...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. COVID-19 பற்றிய பாடல்கள் இப்போதே வருகின்றன என்பது உண்மை தான். பதிவுகளில் கூட வந்ததே.

      மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி தனபாலன்.

      யார் பையன் - பாடல் நான் கேட்டதில்லை.

      வேம்பார் மணிவண்ணன் - நானும் அவர் வெளியிட்ட பாடல்களை அவ்வப்போது பார்ப்பதுண்டு தனபாலன்.

      நீக்கு
  6. முகப்புத்தக இற்றை ரசிக்கும்படி இருந்தது.

    சூறைக்காற்றில் மாங்காய் விழுவது... சாதாரண காற்று மழைக்கே முன்பு எங்கள் வீட்டிலிருந்த மாமரங்களிலிருந்து காய்கள் விழுந்து வீணாகும். அடுத்தவர் உழைப்பைத் திருடிய அந்தப் பெண்மணி தன் மகனுக்கு தன்னை அறியாமல் மோசமான குணத்தைக் கற்றுக்கொடுத்துவிட்டாரே

    மின்னூல்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகப்புத்தக இற்றை ரசித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தன் மகனுக்கு அறியாமல் மோசமான குணத்தைக் கற்றுக் கொடுத்து விட்டார் - உண்மை தான். இப்படியும் சிலர் - ஒன்றும் செய்வதற்கில்லை.

      மின்னூல்கள் - வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  7. அப்படியென்றால் ராஞ்சியை ஜார்கண்டின் தென்காசி என்று சொல்லுங்கள். நிச்சயம் படித்து அங்கு பயனிக்கிறோம்.
    கொராணாவை வைத்து பன்ச் டயலாக்ஸ்ஸும் குத்துப்பாடல்களும் வரும்போது அதுவும் சிறந்த எண்டர்ட்டெயிண்மெண்ட் ஆகத்தான் இருக்கும். அப்படியென்றால் ராஞ்சியை ஜார்கண்டின் தென்காசி என்று சொல்லுங்கள். நிச்சயம் படித்து அங்கு பயனிக்கிறோம்.
    கொராணாவை வைத்து பன்ச் டயலாக்ஸ்ஸும் குத்துப்பாடல்களும் வரும்போது அதுவும் சிறந்த எண்டர்ட்டெயிண்மெண்ட் ஆகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஞ்சி - ஜார்க்கண்டின் தென்காசி - சொல்லலாம்! மலைப்பகுதிகளும் அருவிகளும் அங்கே ரொம்பவே அழகு தான்.

      குத்துப் பாடல்களும் பஞ்ச் டயலாக்ஸும் வரலாம் - ஆமாம் அதையும் கேட்டு வைப்போம் - வேற வழி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

      நீக்கு
  8. தங்களின் மின்னூல் தொடர வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. வாசகம் நன்று. இற்றையை ரசித்தேன். ஏ எம் ராஜா குரல் எப்போதுமே இனிமை. அருவியாய்ப் பொழியும் மின்நூல்களுக்கு வாழ்த்துகள். 23 கோடி... சொக்கா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், இற்றை, திரையிசை பாடல் - அனைத்தும் ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      அருவியாய் பொழியும் மின்னூல்கள் - :))) ஊரடங்கு காலத்தில் கிடைத்த நேரத்தில் இந்த வேலை செய்ய முடிந்தது. வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      23 கோடி - சொக்கா! ஹாஹா...

      நீக்கு
  10. உடையாத கண்ணாடி கொண்டு அரபு நாட்டில் தங்கக்கட்டிகளை வைத்து விளம்பரம் செய்தார்கள்..

    எரிகிற வீட்டில் புடுங்கியது வரை லாபம் கதைதான் மாங்காய்களை எடுத்த பெண்மணியின் கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடையாத கண்ணாடி - ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதம் ராஜி! பணம் வைத்தது 2005-ல்.

      எரிகிற வீட்டில் பிடுங்கிய பெண்மணி - ம்ம்ம்ம்.

      நீக்கு
  11. முகப் புத்தக இற்றை ரசனை. நுளம்புகள் அவையும் நவீனத்தை உணர்ந்துள்ளன இங்கு தரையிலேயே தவண்டுகொண்டு வந்து கடிக்கின்றன புத்திசாலிகள்.
    மின் நூல்கள் தொடர வாழ்த்துகள்.

    மாங்காய் திருட்டு எதற்கு கேட்டே வாங்கி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகப் புத்தக இற்றை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நவீனத்தை உணர்ந்த நுளம்புகள் - :)

      மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி மாதேவி.

      மாங்காய் திருட்டு - கேட்டிருந்தால் கொடுத்திருப்பார் என்றே தோன்றியது எனக்கும்.

      நீக்கு
  12. வாசகம் நன்றாக இருக்கிறது.
    பழைய பாடல் மிகவும் அருமை.
    கேட்டு மகிழ்ந்தேன்.
    காற்றில் விழும் போது எடுத்து இருக்கலாம் அந்த அம்மா.(மகனை எடுத்து வரச்சொல்லி இருக்கலாம்)
    இப்படி காவலர் சேமித்து வைத்து இருக்கும் போது அனைத்தையும் எடுத்தது தப்பு. காவலரிடம் கேட்டுக்கூட வாங்கி இருக்கலாம்.

    அருவிகள் நகரம் மின் நூலுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், பழைய பாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      மாங்காய் - ஆமாம் - தவறான உதாரணத்தினை தன் மகனுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

      அருவிகள் நகரம் - வாழ்த்துகளுக்கு நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  13. வாசகம் அருமை, உங்கள் நண்பரின் வேண்டுகோள் தான் எனக்கும். மாங்காய்த் திருடர்களுக்குத் திருடித் தின்றால் தான் சுவைக்குமோ? கண்ணாடி நல்ல கண்ணாடி. உடையாத கண்ணாடி. ஆந்தியின்போது அப்படிப் பட்ட கண்ணாடிகளை ஜன்னலில் பொருத்தி இருந்திருக்கலாம்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா...

      நண்பரின் வேண்டுகோள் உங்களுக்கும் - :)

      திருடித் தின்றால் தான் சுவைக்குமோ? இருக்கலாம்.

      கண்ணாடி - ஆந்தியின் போது பயன்படுத்தி இருக்கலாம்! ஹாஹா...

      நீக்கு
  14. வாசகம், நண்பரின் முகநூல் இற்றை, கண்ணாடி விளம்பரம் எல்லாம் அருமை ரசித்தேன் வெங்கட்ஜி

    பாடல் முன்பு கேட்ட நினைவு இருக்கிறது. படம் பார்த்ததில்லை.

    ஆந்தி என்பதை இப்போதுதான் அறிகிறேன். பெருங்காற்று இல்லையா?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் புத்தகங்களுக்கு வாழ்த்துகள் வெங்கட்ஜி!

      துளசிதரன்

      நீக்கு
    2. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      ஆந்தி - பெருங்காற்று/சூறைக்காற்று.

      நீக்கு
    3. மின்னூல்கள் - வாழ்த்தியமைக்கு நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  15. வழக்கத்தை விட சற்று நீண்ட பதிவு. இந்தக் காலத்திற்கு மிகவும் தேவையான ஒன்றை வாசகம் சொல்லியிருக்கிறது. பதினைந்தாவது மின் நூலுக்கு வாழ்த்துகள். இந்த வருட ஆந்தியின் பொழுது தூசு இல்லை என்று எங்கள் சம்பந்தி சொன்னார். தானும் கெட்டு சந்திர புஷ்கரணியையும் கெடுத்தானாம் என்பது போல வளரும் மகனுக்கு எப்படி ஒரு தவறான விஷயத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார் அந்த பெண்மணி. இப்போதே 'கொரோனா கொரோனா...' என்று ஒரு பாடல் வாட்ஸாப்பில் வலம் வந்ததே, எதிர்காலத்தில் நிச்சயம் சினிமாவில் வராமல் போகுமா?கண்ணாடி விளம்பரம் சூப்பர்! Saint Gobain glass விளம்பரங்களும் நன்றாக இருக்கும்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கத்தை விட சற்றே நீண்ட பதிவு - :) சில சமயங்களில் இப்படித்தான்!

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா...

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      ஆந்தி - சில இடங்களில் தூசி நிறையவே, சில இடங்களில் ஆலங்கட்டி மழை என கலந்து இருந்தது.

      மகனுக்கு தவறான முன்னுதாரணமாகி விட்டார் அந்தப் பெண்மணி - இப்படியும் சிலர். வேறென்ன சொல்ல.

      ஆமாம் பழைய பாடல்களின் மெட்டில் மாற்றிப்பாடிய சில காணொளிகள் நானும் பார்த்தேன். இனிமேல் புதியதாகவும் வரும்!

      செயிண்ட் கோபைன் கண்ணாடி விளம்பரங்கள் எனக்கும் பிடிக்கும்.

      நீக்கு
  16. 15 வது மின்னூலுக்கு வாழ்த்துகள். டவுன்லோட் செய்துவிட்டேன் ஜி. வலையில் வாசித்திருந்தாலும்..

    வாககம் மிக மிகப் பொருத்தம்

    ஆந்தி என்றால் மண் வாரி இறைக்குமே அது இல்லையோ? ஒரு முறை தில்லியில் இருந்தப்ப ஆந்தி முதன் முறை வித்தியாசமான அனுபவம்.

    இப்படித்தான் சில தாய்மார்கள் குழந்தைகளை வளர்க்கிறார்கள் அது வளரும் பருவத்தில் தவறான பாதைக்கு வழி வகுக்கிறது.

    கண்ணாடி விளம்பரத்தை மிகவும் ரசித்தேன் ஜி. இன்னொரு கண்ணாடி விளம்பரம் வருமே கோபெயின் விளம்பரம் செமையா இருக்கும்.

    பாட்டு இப்போதுதான் முதன்முறையாகக் கேட்கிறேன். படமும் இப்போதுதான் அறிகிறேன். பாட்டு நன்றாக இருக்கு.

    பரத்பூர் கடற்கரையை இனிதான் சுற்றிப் பார்க்க வேண்டும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் - வாழ்த்தியமைக்கும் தரவிறக்கம் செய்து கொண்டமைக்கும் நன்றி கீதாஜி.

      வாசகம், பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      முதன் முதலாக தில்லியில் ஆந்தி பார்த்தபோது இது என்னடா புதுசா இருக்கே எனப் பார்த்தேன்!

      குழந்தைகளை இப்படி வளர்ப்பது சரியல்ல தான் - என்ன சொல்லி புரிய வைக்க.

      கோபெயின் விளம்பரம் எனக்கும் பிடிக்கும்.

      யார் பையன் பாடல் நானும் முதல் முறையாக கேட்பதாகவே தோன்றியது.

      பரத்பூர் கடற்கரை - முடிந்த போது படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    காலையில் அவசரத்தில் ஒரு வாய் காஃபி குடித்து விட்டு ஓடி விட்டேன். இப்போது வந்து மிகுதியையும்....

    ரசித்த பாடல் பகிர்வு நன்றாக உள்ளது. யார் பையன் பார்த்த நினைவு உள்ளது. கதை சரியாக நினைவிலில்லை. பழைய படங்கள் எப்போதுமே எனக்கு மிகவும் பிடிக்கும். பாடலும் வானொலியில் கேட்டிருக்கிறேன். ஏ.எம்.ராஜா ஜிக்கி இருவரும் இணைந்து பாடிய இனிமையான பழைய பாடல்கள் நன்றாக இருக்கும். இந்த பாடலையும் ரசித்தேன்.

    மின்னூல்களுக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு பயணத்தையும் மின்னூல்களாக தருவது சிறப்பு. அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

    /பி.கு.: 23 கோடியில் சில ஆயிரங்கள் மட்டும் சட்டப்படி செல்லும்( விளம்பரயுக்தி தான் முக்கியமே தவிர நியாயம் பார்த்தல் ஆகாது)./

    ஹா. ஹா. விளம்பர யுக்தி அருமை. ஒருவேளை ஏதோவொரு யுக்தியில் கண்ணாடி உடைந்திருந்தால், உடைத்தவருக்கு அந்த சில ஆயிரங்கள் இமாலய சாதனையாக இருந்திருக்கும். ஆனால் கடைசியில் விளம்பரமே வெற்றி பெற்றது போலும்.!

    கண்ணாடி மாதிரி ஒரு நட்பு கிடைத்து விட்டால், நன்றாகத்தான் இருக்கும்.

    மாங்காய் திருடி என அந்த பெண்மணிக்கு பெயர் வைத்து விடலாம். திருடி தின்பது ஜீரணமாகுமோ ? பாவம்..! அந்த காவலாளி. தான் சேகரித்ததை அனுபவிக்க இயலாமல் மனசஞ்சலம் அடைந்திருப்பார்.
    இப்படியும் சிலர்..என்னசெய்வது.. அனைத்தையும் ரசித்தேன். தங்கள் பகிர்வினுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      மீள் வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      ரசித்த பாடல் - நான் முதல் முறையாகக் கேட்டேன் - பிடித்ததால் பகிர்ந்தேன்.

      மின்னூல்கள் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      விளம்பர யுக்தி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தவறான முன்னுதாரணமாக இருந்த பெண்மணி - என்ன சொல்ல. இப்படியும் சிலர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....