சனி, 23 மே, 2020

காஃபி வித் கிட்டு – பணம் – கவிதை – Learning to Love – பீடி - அரக்கு பள்ளத்தாக்கு

காஃபி வித் கிட்டு – பகுதி 68

 

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

 

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

 

பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில் தான் இருக்கிறது – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்.

 

எவ்வளவு பணம் இருந்தாலும் அது பயன்படாத போது இருந்து என்ன பயன்? 

 

இந்த வாரத்தின் ரசித்த கவிதை ஒன்று:

 

யாவரும்.காம் தளத்தில் படித்த, நிலாந்தன் என்பவர் எழுதிய ஒரு கவிதை – இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக…

 

கடைசிப் பாடல் அல்லது கஞ்சிப் பாடல்

 

மாட்டு வண்டியைக் கொத்தி

விறகாக்கிய ஓர் ஊரிலே

அரிசியிருந்தது; நெல்லிருந்தது

அன்னமிருக்கவில்லை

 

மலத்துக்கும் பிணத்துக்கும்

விலகிநடந்தவொரு நெய்தல் நிலத்திலே

கடலிருந்தது படகிருந்தது

மீனிருக்கவில்லை

 

ஆலமிலை பாலையிலை பனையோலை தவிர

பச்சையாக இருந்த எல்லாவற்றையும்

சமைத்த ஒரூரிலே

கஞ்சி இருந்தது; வாய்ப்பன் இருந்தது

பசி இருக்கவில்சலை

 

நீரிலே தொடங்கி

ஒரு நீரேரியில் முடிந்த ஒரு போரிலே

கடைசி மூன்று நாட்களும்

நீர் இருக்கவில்லை

தாகமிருந்தது…

 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்:

 

விக்ஸ் பேபி ரப் விளம்பரம் ஒன்று – Touch of Care – Learning to love என்ற பெயரில் வந்த விளம்பரம் – நாம் நாட்டின் விளம்பரம் அல்ல என்பதையும் சொல்லி விடுகிறேன் – பிலிப்பைன்ஸ் நாட்டில் வெளியிடப்பட்ட விளம்பரம். மனதைத் தொட்டது – பாருங்களேன்.  


 

அடுத்த மின்னூல் வெளியீடு - அரக்கு பள்ளத்தாக்கு


என்னுடைய அடுத்த மின்னூல் வெளியீடு பற்றிய தகவல் அரக்கு பள்ளத்தாக்கு பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தின் அருகில் இருக்கும் ஒரு சிறப்பான இடம் அரக்கு பள்ளத்தாக்கு. அங்கே சென்று வந்த போது கிடைத்த சிறப்பான அனுபவங்களை என்னுடைய அடுத்த மின்னூல் “அரக்கு பள்ளத்தாக்கு” வழி சொல்லி இருக்கிறேன். ஐந்து நாட்கள் பயணமாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிஷா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் சென்ற போது கிடைத்த அனுபவங்கள் இந்த மின்னூல் வழி நீங்கள் அறிய முடியும். மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...

அரக்கு பள்ளத்தாக்கு 


இரண்டாம் தலைநகரம் - இலவசம்



 

ஹிமாச்சலப் பிரதேசத்தின் இரண்டாம் தலைநகரமான தரம்ஷாலா மற்றும் அதன் அருகே இருக்கும் மெக்லாட் கஞ்ச், கஜியார் போன்ற இடங்களுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து மின்னூலாக வெளியிட்டது நினைவில் இருக்கலாம். இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் வெளியான அந்த மின்னூல் வரும் செவ்வாய் கிழமை மதியம் வரை அமேசான் தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!

 

என்னுடைய அனைத்து மின்னூல்களின் பட்டியலுக்கான சுட்டி:

 

மின்புத்தகங்கள் பட்டியல்

 

இந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்தி:

 

இரயில்வே உருவாக்கிய வெண்டிலேட்டர்:



பஞ்சாப் மாநிலம், கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை பொறியாளர்கள், மலிவு விலையுள்ள, எளிதில் உற்பத்தி செய்யக்கூடிய, செயற்கை சுவாசக் கருவியின் மாதிரியை வடிவமைத்து உள்ளனர்.


பெரியவர், சிறியவர் என எந்த நோயாளிக்கும் ஏற்ற வகையில் செயல்படும் திறன் கொண்ட இந்த வென்டிலேட்டரை, ரூ.15 ஆயிரத்திற்குள் தயாரித்துவிட முடியும் என்பது ஆச்சரியமான செய்தி.இது நடைமுறைக்கு வந்தால், பல கொரோனா நோயாளிகளை காப்பாற்ற முடியும். இந்த வென்டிலேட்டருக்கான எந்த உதிரி பாகமும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை.


எல்லாமே ரயில் பெட்டி தொழிற்சாலையில் பயன்படும் உதிரி பாகங்கள் தான்.உதாரணத்திற்கு, ஆர்கன் வாயு மீட்டர் என்ற பாகம், லேசர் வெல்டிங் கருவியில் இருந்து எடுக்கப்பட்டது. அதேபோல, காற்றழுத்தக் கருவி, ரயில் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் ஏர் கூலரிலிருந்து பெறப்பட்டது. இரண்டே உதிரி பாகங்கள் மட்டும், டில்லியிலிருந்து தருவிக்கப்பட்டதாக ரயில் பெட்டி பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


துளியும் சத்தமில்லாமல் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சுவாசக் கருவிக்கு 'ஜீவன்' என பெயரிடப்பட்டுள்ளது.கபூர்தலா ரயில்வே மருத்துவமனை மருத்துவர்கள், ஜீவன் சுவாசக் கருவியை சோதித்து, அனுமதி வழங்கி உள்ளனர். அடுத்து, ரயில்வே பொறியாளர்கள், அதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (.சி.எம்.ஆர்.) அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளனர்.


தினமலர் நாளிதழிலிருந்து…


நல்ல விஷயம் தான். உபயோகமாக இருந்தால் நல்லது.

 

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:



2015-ஆம் வருடம் இதே நாளில் என் வலைப்பூவில் எழுதிய பதிவு – தேவ் பூமி என அழைக்கப்படும் ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் பயணம் செய்த போது கிடைத்த அனுபவங்கள் பயணத்தொடரின் ஒரு பகுதியாக…

 

முழுப்பதிவும் படிக்க ஏதுவாய் சுட்டி கீழே...

 

பீடி குடிக்கும் பாட்டியும் மூங்கில் ஹூக்காவும்


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி


32 கருத்துகள்:

  1. காபி வித் கிட்டு நன்றாக இருந்தது. ஆனால் எங்கள் எதிர்பார்ப்பு அதிகமாகிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      எதிர்பார்ப்பு அதிகமாகிறது - நல்லதே. பார்க்கலாம் இன்னும் எப்படி சிறப்பாக அளிப்பது என! :)

      நீக்கு


  2. பாசிடிவ் செய்தி அருமை மக்களுக்கு திற்மை இருக்கிறது அவர்களுக்கு வாய்ப்பும் வசதியும் கொடுத்தால் மேட் இன் இண்டியாவை சொல்லிக் கொண்டிருக்காமல் சாதித்து காட்டலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்தி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  3. வெண்டிலேட்டர் உருவாக்கிய ரெயில்வே துறையினரை வாழ்துவோம்.

    கவிதையும், வாசகமும் அருமை ஜி

    மின்நூலுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  4. //எவ்வளவு பணம் இருந்தாலும் அது பயன்படாத போது இருந்து என்ன பயன்? //

    உண்மை.  எனக்கு வாட்ஸாப்பில் வந்த இத்தாலி வீடியோ நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - ஆமாம் எத்தனை பணம் இருந்தாலும் தேவையான சமயத்தில் அதனால் பலன் ஏதுமில்லை என்றால் இருப்பதும் இல்லாததும் ஒன்றே.

      இத்தாலி வீடியோ - ஆமாம் ஸ்ரீராம்.

      நீக்கு
  5. கவிதை வெயில் போல வாட்டுகிறது.  ரசித்தாலும் ரசிக்க முடியவில்லை.  ஸாரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெயில் போல வாட்டிய கவிதை - :(

      கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. மின் நூலுக்கு வாழ்த்துகள்.  சகாய விலையில்  வெண்டிலேட்டர் கருவி நல்ல செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      வெண்டிலேட்டர் - நல்ல விஷயம் தான்.

      நீக்கு
  7. குறைந்த விலையில் வென்டிலேட்டரை கண்டுபிடித்தது சிறப்பு...

    கவிதை அருமை...

    மின்னூல் தரவிறக்கம் செய்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      மின்னூல - தரவிறக்கம் செய்து கொள்வதற்கு நன்றி.

      நீக்கு
  8. பயனுள்ள செய்திகளுக்கும் இதயத்தை உருக்கும் கவிதைகளுக்கும் நன்றி ஐய்யா. ஒவ்வொரு சனிக்கிளமையும் ஒரு புது நூல் வெளியிடுவீர்கள். இந்த வாரம் பிஸி ஆயிட்டிங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      புது மின்னூல் - இந்த வாரமும் வெளியிட்டேன் அரவிந்த். இங்கே சேர்க்க முடியவில்லை. இப்பொழுது சேர்த்து விட்டேன் - அரக்கு பள்ளத்தாக்கு என்ற புதிய மின்னூல்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. காலத்தின் தேவை அறிந்து வென்டிலேட்டர் கண்டு பிடித்த ரெயில்வே பொறியாளர்களை பாராட்டுவோம்.

    மின் நூலுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  10. கவிதையும், வாசகமும் அருமை

    வென்டிலேட்டர் கண்டு பிடித்த ரெயில்வே பொறியாளர்களை பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    கொரோனா நோயாளிகளை காப்பாற்ற கிடைத்த வரபிரசாதம்.

    மின்னூலுக்கு வாழ்த்துக்கள்.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா....

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றிம்மா...

      நீக்கு
  11. காணொளி மிக அருமை.குழந்தை அந்த பையனின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்து விட்டது.
    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. வாசகம் அருமை. உண்மைதான் பணம் இருந்தும் பயனற்றுப் போனால்?

    விக்ஸ் விளம்பரம் நன்றாக இருக்கிறது. கவிதை நன்றாக இருக்கிறது ஆனால் கூடவே வருத்தமும்.

    குறைந்த விலையில் வெண்டிலேட்டர் வெற்றியடையவேண்டும்.

    மின்னூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள் வெங்கட்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      கவிதையில் இழையோடும் சோகம் - உண்மை.

      வெண்டிலேட்டர் வெற்றி அடைந்தால் நாட்டுக்கு நல்லது.

      மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  14. காஃபி படத்தோடு கூடிய வாசகம் மிக மிக ரசித்தேன். ஆம் இன்றைய செயல்கள் தானே நாளை பிரதிபலிக்கிறது.

    பணம் ஆம் அதன் பயன்பாடு நல்ல விதத்தில் இருந்தால் நல்லது. பணமும் கத்தி போலத்தான் இல்லையா.

    விக்ஸ் விளம்பரம் மனதைத் தொட்டது. ஒரு விளம்பரப் படத்தை குறும்படம் போல் கதையாக மனதில் பதிவது போல் எடுத்திருப்பது ஆஹா போட வைக்கிறது.

    கவிதை வரிகள் அழகினூடே வேதனை இழையோடுகிறது.

    வாசகம் நன்றாக இருக்கிறது.

    மின்னூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள் ஜி!

    பாசிட்டிவ் செய்தி நடைமுறையில் பாசிட்டிவாக ஆகி வெற்றி அடைந்து மக்களை அடைய வேண்டும். மிக மிக நல்ல செய்தி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம்/காஃபி படம் - பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      விளம்பரம் குறும்படம் போல எடுத்து நம்மை அசத்துகிறார்கள் இல்லையா....

      கவிதை வரிகள் - இழையோடும் வேதனை - உண்மை.

      மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி கீதாஜி.

      பாசிட்டிவ் செய்தி - நல்லதே நடக்கும் என நம்புவோம்.

      நீக்கு
  15. அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம்.
    காபியும் வாசகமும் மிக நன்று. இந்த நாட்களுக்கு
    மிகவும் பயன் படும்.

    கவிதையில் சோகம். ஏற்கனவே இந்த மே மாத நினைவுகள் எனக்கு
    வருத்தம் அளிப்பவை.

    ஆனால் இதுதானே வாழ்க்கை.

    விளம்பரக் குறும்படம் மிக இனிமை. எப்படி எல்லாம் படம் எடுக்கிறார்கள்.
    மந்தைத் தொடுகிறது.
    வெண்டிலேட்டர் பற்றிய பாசிடிவ் செய்திக்கு மிக நன்றி மா. வளர்ந்த நாடுகளிலேயே தடுமாறிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் இது.
    நல்ல செய்தி காதில் விழுவதே இனிமை.

    உங்கள் மின்னூல்களுக்கு மிகவும் நன்றி. வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.

      குறும்படம்/விளம்பரம் - எவ்வளவு சிறப்பாக எடுக்கிறார்கள் மா... அதனால் தான் தேடித் தேடி பார்க்கிறேன். பிடித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

      மின்னூல்கள் - வாழ்த்துகளுக்கு நன்றிம்மா...

      நீக்கு
  16. சீவனை மீட்டுதரும் வென்டிலேட்டருக்கு ஜீவன் என்ற பெயர் பொருத்தமானதே !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சிவா. பொருத்தமான பெயர் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....