சனி, 13 பிப்ரவரி, 2021

காஃபி வித் கிட்டு - 98 - (dh)தௌலத் கி சாட் - உப்புமா - முஹல் கார்டன் - விளம்பரம் - சூரஜ்குண்ட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவுலகம் - நேற்றைய சந்திப்பு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உள்ளங்கை பற்றி, மெதுவாய் அழுத்தி, ஒன்றுமில்லை… எதுவம் நடக்காது… நானிருக்கிறேன்… என்று சுவராய் நின்று காக்கும் நட்பு வாழ்க்கையில் கிடைப்பது வரம்!


******




இந்த வாரத்தின் உணவு - (dh)தௌலத் கி சாட்:






குளிர் நாட்களில் மட்டுமே - வருடத்தின் நான்கு மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய உணவு இந்த (dh)தௌலத் கி சாட்! பால், பாலாடை போன்றவற்றை சேர்த்து சிலுப்பிக் கொண்டே இருக்க வேண்டும் - இந்த உணவை தயாரிக்க ஆகும் நேரம் அதிகம்.  அதிகாலையிலேயே எழுந்து தயாரித்து பழைய தில்லியின் பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.  மிகவும் பிரபலமான உணவு இது - குளிர்நாட்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய உணவு என்பதால் இதற்கு வரவேற்பு அதிகம்!  இந்த உணவு குறித்து பார்க்கலாம் வாருங்கள்!


உப்புமா பிரியர் - சர்க்கரை உப்புமா


நண்பருக்கு உப்புமா என்றால் மிகவும் பிடித்த உணவு - அட ஆமாங்க, பலருக்கும் பிடிக்காத உப்புமாவை இவருக்கு மிகவும் பிடித்த உணவு என்று சொல்வார்.  தினம் தினம் விதம்விதமான உப்புமா செய்தாலும் சலுக்காமல் அலுக்காமல் சாப்பிடுவது இவர் வழக்கம்!  “அண்ணே என்ன சமைக்கலாம்?” என்று கேட்டால் “உப்புமா செய்துடலாம்!” என்று சட்டென்று சொல்லி விடுவார்.  அவர் உப்புமா செய்யும் அழகே அழகு!  அத்தனை எண்ணையும் நெய்யும் காய்கறிகளும் சேர்த்து அவர் செய்யும் உப்புமா அவருக்கு மிகவும் பிடித்த உணவு!  ஒரு நாள் அவரிடம் பேச்சு வாக்கில் கேட்டேன் - “அண்ணே, உங்களுக்கு உப்புமான்னா ரொம்ப இஷ்டமா?” என்று!  அதற்கு அவர் சொன்ன பதில் தான் தலைப்பில் - “உப்புமா எனக்கு ரொம்பவும் பிடிக்கும்! சர்க்கரையில் உப்புமா செய்தா கூட சாப்பிடுவேன்!” என்று சொன்னபோதே எனக்கு நாக்கு இனித்த மாதிரி இருந்தது! 


முஹல் கார்டன் திறப்பு - அனுமதி கட்டுப்பாடுகள்:  


எல்லா வருடம் போலவே இந்த வருடமும் ஜனாதிபாதி மாளிகையின் உள்ளே அமைந்திருக்கும் முஹல் கார்டன் இன்று முதல் சுமார் ஒரு மாதத்திற்கு திறந்திருக்கும். மாளிகை உள்ளே இருக்கும் அழகழகான மலர்கள், செடிகள் என கண்களை கொள்ளை கொள்ளும் காட்சிகளைப் பார்க்க இந்த சமயத்தில் மட்டுமே அனுமதி கிடைக்கும்.  முன்பெல்லாம் கண்களால் மட்டுமே பார்க்க அனுமதி கிடைத்தது.  தற்போது சில வருடங்களாக அலைபேசிகளுக்கு அனுமதி தருகிறார்கள் - அதனால் படங்களும் எடுக்கலாம் - ஆனால் நிழற்படக் கருவிகளுக்கு அனுமதி இல்லை என்பது ஒரு சோகம்.  இந்த வருடம் சில கட்டுப்பாடுகளும் இருக்கிறது -தீநுண்மி காரணமாக!  நாள் ஒன்றுக்கு ஏழு ஒரு மணி நேர Time Slots! ஒவ்வொரு Slot-இலும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி.  தவிர அனுமதி பெறுவதற்கு இணையம் வழி முன்பதிவு செய்ய வேண்டும்.  தில்லியில் இந்த சமயத்தில் இருந்தால், வரும் திட்டம் இருந்தால், கீழேயுள்ள இணைய தளத்தின் வழி முன்பதிவு செய்து கொள்ளலாம்!  நானும் முடிந்தால் சென்று படங்கள் எடுத்துக் கொண்டு வந்து பகிர்ந்து கொள்கிறேன்.  


முஹல் கார்டன் முன்பதிவுக்காக


இந்த வாரத்தின் விளம்பரம்:


HP நிறுவனத்தின் ஒரு விளம்பரம் - 2016-ஆம் ஆண்டு தீபாவளி சமயத்தில் வெளிவந்த விளம்பரம் - ஹிந்தி விளம்பரமாக இருந்தாலும் ஆங்கிலத்தில் சப்டைட்டில் உண்டு - அதனால் தைரியமாகப் பார்க்கலாம்! நிச்சயம் உங்கள் மனதையும் தொடும் விதத்தில் இருக்கும்.  பாருங்களேன்!

பின்னோக்கிப் பார்க்கலாம் - இந்த நாளில்...


2013-ஆம் ஆண்டில் இதே நாளில் எழுதிய பதிவு என்ன தெரியுமா?  தில்லியை அடுத்த சூரஜ்குண்ட் மேளாவிற்குச் சென்று எடுத்த நிழற்படங்களின் தொகுப்பு தான் - இந்த வருடமும் மேளா நடக்க இருக்கிறது. சென்று வர முடியுமா என்று தெரியவில்லை.  தீநுண்மி காரணமாக நிறைய கட்டுப்பாடுகள் இருக்கலாம் என்பதால் இன்னும் விசாரிக்கவில்லை. முடிந்தால் ஒரு வாரக் கடைசியில் சென்று வர வேண்டும். இப்போதைக்கு இதே நாளில் 2013-ஆம் ஆண்டு வெளியிட்ட நிழற்படத் தொகுப்பினை பார்த்து ரசிக்கலாமே!  பார்க்க ஏதுவாக அப்பதிவின் சுட்டி கீழே!


எல்லாம் வாங்க ரிசர்வ் வங்கியின் உதவி தேவை


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவின் வழி பகிர்ந்த விஷயங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததா?  உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே?  நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


14 கருத்துகள்:

  1. தௌலத் கி சாட்  படம் பார்க்க ஆவல் பெருகுகிறது.


    கீதா அக்கா சர்க்கரையில் ஊறுகாய் செய்வது மாதிரி சர்க்கரையில் உப்புமா!  ஹா..  ஹா..  ஹா...

    நெகிழ்த்திய விளம்பரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம், சர்க்கரை,வெல்லத்தில் ஊறுகாய் எனக்கு முன்பே பலர் போட்டிருக்காங்க! :)))))

      நீக்கு
    2. சுவையும் நன்றாகவே இருக்கும் ஸ்ரீராம்.

      விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. க்ர்ர்ர்ர்.... ஹாஹா... கட்டா மீட்டா ஊறுகாய் இங்கே உண்டு தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  2. அன்பின் இனிய வணக்கம் வெங்கட்.
    முதியோரும் குழந்தைகளும் சேர்ந்த காணொளி மிக
    இனிமை. மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா.

      காணொளி உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. உப்புமா பிரியரை வாழ்த்தியதற்கு அவர் சார்பில் நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. தௌலத் கி சாட் பார்க்கவே அருமை. இன்று வரை கேட்டதும் இல்லை. ஆனால் இனிமேல் எங்கே தில்லி வரப்போறோம்! அதுவும் குளிர்நாட்களில்! கண்ணால் பார்த்துத் திருப்திப் பட்டுக்க வேண்டியது தான். :)))) உப்புமாவுக்கும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். வேறே வழியில்லைனா நானும் உப்புமாத்தான் பண்ணுவேன். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தௌலத் கி சாட் - நீங்களும் கேள்விப்பட்டதில்லையா? பொதுவாக லக்னோ, பழைய தில்லி பகுதிகளில் இது பிரபலம் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. தௌலத் கி சாட். பார்க்கவே அமிர்தம்.
    உப்புமா பிரியர் இந்த வீட்டிலும் உண்டு. ரவா உப்புமா
    மட்டும் பிடிக்கும்:)
    365 நாட்களும் சாப்பிட ரெடி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தௌலத் கி சாட் சுவையும் நன்றாகவே இருக்கும் வல்லிம்மா.

      உங்கள் வீட்டிலும் உப்புமா பிரியர் - :) ஆஹா...

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  6. தௌலத் கி சாட்..பல புதிய உணவு வகைகளைத் தொடர்ந்து அறியத் தந்து வருகிறீர்கள். நன்றி. விளம்பரம் மனதைத் தொட்டது. நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....