வியாழன், 13 மே, 2021

கமலா பெரியம்மா - கதை மாந்தர்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பயணத் தொடர் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


THE RICHEST WEALTH IS WISDOM; THE STRONGEST WEAPON IS PATIENCE; THE BEST SECURITY IS FAITH; AND THE MOST EFFECTIVE TONIC IS LAUGHTER.  MAY GOD BESTOW YOU WITH ALL OF THEM. 


******





அம்பா பெரியம்மா, கமலா பெரியம்மா, ஜானகி பெரியம்மா என பெரியம்மாக்கள் பட்டியல் அதிகம் எனக்கு! இத்தனைக்கும் முதலில் சொன்னவர் தவிர மற்றவர்கள் உறவினர்கள் அல்ல!  என் பெரியம்மாவின் நட்பில் இருந்தவர்கள் - பெரியம்மா விஜயவாடாவில் இருந்த போது பல வருடங்கள் ஒன்றாக இருந்தவர்கள்.  நானும் சகோதரிகளும் ஒவ்வொரு வருட முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் விஜயவாடா சென்று விடுவோம்.  அப்படிச் செல்லும் சமயங்களில் எல்லா பெரியம்மாக்களும் எங்கள் மீது பாசத்தைப் பொழிவார்கள்.  அதில் ஒருவர் கமலா பெரியம்மா.  மராட்டி மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்ததால் தெலுங்கும், தமிழகத்தில் இருந்ததால் தமிழும், கூடவே ஆங்கிலமும் தெரியும்.  எல்லா மொழிகளிலும் அப்படி ஒரு ஈடுபாடு.  நாவல்கள் படிப்பதில் அப்படி ஒரு ஆர்வம் அவருக்கு உண்டு. பல நூல்களை வாங்கி படிப்பதோடு, மற்ற தோழிகளுக்கும் தருவார் - நூலகத்திலிருந்தும் வாங்கி வந்து படிப்பார்.  இத்தனைக்கும் அவருக்கு சாளேஸ்வரம் - பூதக்கண்ணாடி மாதிரி ஒரு கண்ணாடி போட்டிருப்பார்.  கண்களுக்கு அருகே புத்தகத்தினை வைத்து படிப்பார்.  


நூல்களைத் தவிர அவருக்கு இருந்த மற்றொரு ஆர்வம் சினிமா - பல சினிமாக்களுக்கு தோழிகளுடன் சென்று வருவார் - தெலுங்குப் படங்கள், தமிழ் படங்கள், ஹிந்தி படங்கள் என பல படங்களுக்குச் சென்று வருவதோடு அந்தக் கதைகள் குறித்து பேசுவார்.  ஒரு சில தமிழ் படங்களை அவர் எத்தனை முறை பார்த்திருப்பார் என்று அவருக்கே தெரியாது.  நேற்று என் பெரியம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த போது “மிஸ்ஸியம்மா” படம் மட்டுமே பத்து தடவைக்கு மேல் பார்த்திருப்பாள் கமலா என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  சினிமா, புத்தகம் என பல விஷயங்களில் ஈடுபாடு இருந்த மாதிரியே, புதிது புதிதாக உணவகங்களுக்குச் சென்று உணவுகளை தான் சுவைப்பதோடு மற்றவர்களுக்கும் வாங்கித் தருவார். விடுமுறையில் நாங்கள் செல்லும்போதெல்லாம் எங்கள் அனைவரையும் உணவகங்களுக்கு அழைத்துச் சென்று தின்பண்டங்களை வாங்கித் தந்திருக்கிறார்.  பல இனிப்புகளை அவர் மூலம் தான் நாங்கள் தெரிந்து கொண்டிருக்கிறோம் - பாசந்தி உட்பட! 


என்னதான் நாங்கள் அவருக்கு உறவினர் இல்லை என்றாலும், எங்களிடம் எவ்வளவுக்கு எவ்வளவு பாசத்துடன் இருக்கிறாரோ அதே அளவு கண்டிப்பாகவும் இருப்பதை கமலா பெரியம்மா, ஜானகி பெரியம்மா என அனைவருமே வழக்கமாக வைத்திருந்தார்கள்.  ஒரே குடும்பத்தினர் போல அவ்வளவு பாசமும், கண்டிப்பும், கவனிப்பும் இருந்த காலகட்டங்கள் அவை.  எங்கள் பெரியம்மா வீட்டிற்கு பின்புறம் இருந்த வீதியில் கடைசி வீடு தான் கமலா பெரியம்மா வீடு. Bபாவோஜி என நாங்கள் அழைத்த கமலா பெரியம்மாவின் கணவர் காலையில் அலுவலகத்துக்குச் சென்று விட அதன் பின் நாங்கள் அவரது வீட்டுக்குச் செல்வதும், அவர் எங்கள் இல்லத்திற்கு வருவதும் என சந்தோஷ நாட்கள் அவை. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் எதையாவது உண்ணவோ, குடிக்கவோ தருவது அவர் வழக்கம்.  வீட்டில் எப்போதும் Soft Drinks இருக்கும்.  வருகின்ற அனைவருக்கும் கொடுத்து உபசரிப்பார்.  கூடவே விதம் விதமான இனிப்புகளும்!  


கமலா பெரியம்மாவிற்கு இருந்த ஒரே குறை - அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்பது தான்.  ஊரில் உள்ள தெரிந்தவர்கள் குழந்தைகளைத் தன் குழந்தை போலவே பாவித்து எல்லாம் செய்வார்.  ஒரு சில வருடங்களுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் நட்பில் உள்ள ஒரு பெண்ணின் பெண் குழந்தையை சட்டப்படி தத்து எடுத்துக் கொண்டு வளர்த்தார்.  அந்தப் பெண்ணுக்கு எல்லா விதங்களிலும் அழகுபடுத்தி சிறப்பாக வளர்த்து வந்தார்.  தத்தெடுத்த பெண்ணால் சில பிரச்சனைகள் வந்த போதும், கடைசி வரை அவருக்கு உறுதுணையாக இருந்த நல்ல இடத்தில், சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து வைத்தார்கள்.  பதினைந்து வருடத்திற்கு முன்னர் Bபாவோஜி ஓய்வு பெற விஜயவாடாவிலிருந்து திருவரங்கம் வந்து விட்டார்கள்.  மகள் கணவனுடன் இருக்க, இவர்கள் இருவர் மட்டுமே. ஒன்றிரண்டு வருடங்களில் Bபாவோஜி இறந்து விட, திருவரங்கம் வீட்டில் கமலா பெரியம்மா மட்டுமே தனிமையில்.  முதுமையில் தனிமை கொஞ்சமல்ல நிறையவே கொடியது என்பதை அவரைப் பார்க்கும் போதெல்லாம் உணர்ந்திருக்கிறேன். 


Bபாவோஜி இறந்த பிறகு கமலா பெரியம்மா மட்டுமே தனிமையில் இருந்தார். உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது செவிலியர் ஒருவரும், பணிப்பெண் சிலரும் தான் அவரைப் பார்த்துக் கொண்டார்கள்.  என்னதான் ஓய்வூதியம் வந்தாலும், அவரது மருந்து, மாத்திரைகள், உணவு, பணியாட்கள்/செவிலியர் சம்பளம் என நிறைய செலவுகள். ஒவ்வொரு முறை தில்லியிலிருந்து வரும்போதும் அவரைச் சென்று பார்த்து விசாரித்து வருவது வழக்கமாக இருந்தது.  கூடவே நான் இல்லாதபோது, எனது சகோதரி மற்றும் மனைவி ஆகியோரும் அவ்வப்போது சென்று பார்த்து வருவார்கள்.  சில உதவிகளும் செய்து விட்டு வருவார்கள்.  தனிமையில் இருந்த அவருக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு தொலைபேசி மூலம் நட்புகளுடன் பேசிக் கொண்டிருப்பது தான்.  எனது பெரியம்மாவுடன் இரண்டு மூன்று முறை தினமும் பேசி விடுவார்.  கூடவே ஜானகி பெரியம்மா, மற்ற தோழிகள் உடனும் பேசுவது அவருக்கு நிம்மதி தந்து இருக்கிறது.  


சமீபத்தில் தில்லியில் இருந்த போது அலைபேசியில் அழைப்பு.  கமலா பெரியம்மா இப்போது இல்லை என்ற அழைப்பு தான் அது - அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது அவரது மறைவு.  அதுவும் மறைந்த விதம் மிகவும் கொடுமை.  இரவில் தூக்கத்தில் கட்டிலிலிருந்து கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு, ரத்தம் வெளியேற அப்படியே கிடந்திருக்கிறார்.  காலையில் வீட்டிற்கு வந்த செவிலியர் தான் பார்த்திருக்கிறார்.  பார்த்து, சுத்தம் செய்ததோடு, மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்ல, Brought Dead என்று சொல்லி விட்டார்கள்.  மகளுக்குத் தகவல் சொல்ல, அவருக்கு ஜூரம் என்பதால் வரமுடியாது என்று சொல்லி, அவரது கணவரை அடுத்த நாள் காலையில் அனுப்பி வைத்தார் - விமானத்தின் மூலம்.  அதுவரை காத்திருந்தார் கமலா பெரியம்மா - உயிரில்லாமல்!  அடுத்த நாள் மருமகன் வந்து ஒரு வழியாக கமலா பெரியம்மாவை வழியனுப்பி வைத்தாராம்.  கமலா பெரியம்மாவின் இழப்பு அவர்களுக்கு எப்படியோ, எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய இழப்பு. எங்களை விட, எங்கள் பெரியம்மாவிற்கு அவரது இழப்பு மிகப் பெரிய அடி. 


எங்கள் பெரியம்மாவும் பிடிவாதமாக இதுவரை கிராமத்தில் தனியாகவே இருந்து கொண்டிருந்தார். எத்தனை அழைத்தும் வந்ததில்லை.  அவ்வப்போது வீட்டினர் சென்று பார்த்து வந்து கொண்டிருந்தார்கள். நான் தில்லியிலிருந்து வந்ததும், இந்த முறை, இனிமேல் தனியாக இருக்கக் கூடாது என கண்டிப்பாகச் சொல்லி எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டேன்.  ஆனாலும் பல வருடங்களாக இருந்த நட்பை இழந்தது அவருக்குள் இன்னும் ஆறாத வடுவாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.  பல சமயங்களில் கமலா பெரியம்மா குறித்து பேசிக் கொண்டிருக்கிறார் - எங்களுக்குத் தெரியாத பல விஷயங்களை, அவருடனான நட்பைக் குறித்து அவர் பேசுவதை நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம் - அவருக்கும் இப்படி பேசுவது மன நிறைவைத் தரும் என்கிற நோக்கத்தில்.  கமலா பெரியம்மா மறைந்தாலும் அவரது நினைவுகள் எங்களை விட்டு அலகாது. அவரது ஆன்மா நற்கதி அடைய எனது பிரார்த்தனைகள்.  


*****


நண்பர்களே, இந்தப்  பதிவின் வழி உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். நாளை வேறொரு  பதிவின் வழி உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...

26 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. இந்த நிகழ்வு ஆறாத வடு... இரங்கல்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறாத வடு - உண்மை தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

      நீக்கு
  4. எத்தனை நல்ல பெரியம்மாக்கள்!

    கமலா பெரியம்மாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். பிரார்த்தனைகளும்.

    உங்கள் பெரியம்மாவை அழைத்து வந்தது மிக நல்ல செயல் வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியம்மாக்கள் போன்றவர்களின் அன்பு சூழ் உலகு இருக்கத்தான் செய்கிறது கீதாஜி.

      பல வருடங்களாக அழைத்துக் கொண்டிருக்கிறோம் - இதுவரை மறுத்துக் கொண்டே இருந்தார் எங்கள் பெரியம்மா. இந்த முறை மறுத்தாலும் நாங்கள் விடவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. //ஒரே குடும்பத்தினர் போல அவ்வளவு பாசமும், கண்டிப்பும், கவனிப்பும் இருந்த காலகட்டங்கள் அவை.//உண்மைதான். அவையெல்லாம் திரும்ப கிடைக்காத பொற்காலங்கள். தனியாக இருந்த பெரியம்மாவை அழைத்து வந்திருப்பது நல்ல செயல். வாழ்க வளமுடன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரும்பக் கிடைக்காத பொற்காலங்கள் - உண்மை பானும்மா. நானும் பல முறை முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் - ஆனாலும் பல சமயங்களில் நாம் விரும்பினாலும் மற்றவர்கள் இது போல இருக்க விரும்பவதில்லை.

      பெரியம்மா - பல வருடங்களாக மறுத்து வந்தார். ஒரு வழியாக இந்த முறை வந்து விட்டார். சில நாட்கள் இருக்கிறேன் என்று அவர் சொன்னாலும் நாங்கள் விடுவதாக இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. நம் மீது, அன்பு செலுத்தி வளர்த்தவர்களை மறப்பது மிகவும் கடினம்.

    மூப்பு என்பது பெரிய கொடுமைதான். அதுவும் தனியாக இருக்கவேணும் என்றால்.

    கிராமத்து வாழ்க்கை என்றால், எல்லோரும் அனேகமாக பக்கத்துப் பக்கத்தில் இருக்க வாய்ப்பு. மனது என்ன என்னவோ நினைவுகளுக்கு இட்டுச் செல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு செலுத்தியவர்களை மறப்பது கடினம் - உண்மை நெல்லைத் தமிழன்.

      மூப்பு - கொடுமை! மூப்பில் தனிமை - இன்னும் கொடுமை.

      இப்போதைய கிராமங்கள் முன்பு போல இல்லை என்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன். பதிவு உங்கள் நினைவுகளை மீட்க உதவியிருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கொடுமையான மரணம்.  ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனையான நிகழ்வே ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. கமலா பெரியம்மாவின் இழப்பு மனதை வருந்த செய்கிறது.
    எங்கள் (ம்துரையில்) வீட்டுக்கு அடுத்த வீட்டு அம்மா நன்றாக இருந்தவர்கள் கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு இறந்து இருக்கிறார்கள். துபாயில் இருக்கும் மகள் போன் செய்து கொண்டே இருந்து இருக்கிறார். பதில் இல்லை என்பதால் எதிஎவீட்டுக்கு போன் செய்தால் அவர்கள் இல்லை, அப்புறம் ஆபீஸ் ரூமுக்கு போன் செய்து அவர்கள் மகளின் அனுமதி பெற்று வீட்டு பூட்டை உடைத்து உள்ளே போய் பார்த்தால் இறந்து கிடக்கிறார்கள்.தனிமை கொடுமை இது போன்று யாருக்கும் நடக்க கூடாது என்று கேள்வி பட்டதும் வேண்டினேன். இப்போது மீண்டும் கமலா அம்மா அப்படி இறந்து போய் இருக்கிறார்கள்.படிக்கவே கஷ்டமாய் இருக்கிறது.
    "பேபி அக்காவும் புரட்டாசி மாதமும்" என்று ஒரு பதிவில் அக்காவைப்பற்றி எழுதினேன் முன்பு .அதே போன்றே இருக்கிறது கமலா அம்மாவின் வாழ்க்கை கதை.
    முன்பு இவர்களை பற்றி எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களுடைய மரணம் மனதை வருத்தமடையச் செய்தது கோமதிம்மா. உங்கள் அடுத்த வீட்டு அம்மாவின் நினைவினை இப்பதிவு மீட்டு இருக்கிறது...

      முன்பு இவர்களைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் - சில விஷயங்கள் எழுதி இருக்கலாம் - நினைவில்லை கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. நல்ல தொரு வாசகம். நன்றி வெங்கட். இந்த நாளுக்குத் தேவையான
    வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. கமலாப் பெரியம்மாவின் மறைவு என்னை வேறு சிலரின் நினைவுகளைக் கொடுக்கிறது.
    அச்சோ பாவம் தனிமையில் எவ்வளவு சிரமப் பட்டார்களோ :(
    நல்ல வேளை தோழிகளோடு
    ஃபோனில் பேச முடிந்தது. இந்தப் பிரிவிலும் நன்மை செய்து விட்டுப் போயிருக்கிறார்.
    உங்கள் பெரியம்மாவை அழைத்து வந்ததை மிகவும் பாராட்டுகிறேன். ஆதி நன்றாகக்
    கவனித்துக் கொள்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரவில் என்ன செய்தார்கள் என்று நினைக்கும் போதே வருத்தம் தான் வல்லிம்மா. கமலா பெரியம்மா குறித்த நினைவுகளை இப்போது, தினம் தினம் பெரியம்மா சொல்லிக் கொண்டிருக்கிறார் - அவரை வேறு விஷயங்களில் நாங்கள் திசை திருப்பிக் கொண்டிருக்கிறோம்.

      எங்கள் பெரியம்மாவினை சில வருடங்களாகவே அழைத்துக் கொண்டிருக்கிறோம் எங்களுடன் வந்து தங்கச் சொல்லி அழைத்துக் கொண்டிருக்கிறோம் - இதுவரை அவர் சம்மதிக்கவில்லை. இந்த முறை கொஞ்சம் அவரும் பயந்து விட்டார். அதனால் சில நாட்கள் மட்டும் இங்கே இருக்கிறேன் என வந்திருக்கிறார். அவரை இங்கேயே தங்க வைக்கப் போகிறோம் என்று சொல்லி விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. சிங்கத்தோட மாமா,மாமிக்குப் புத்திரச் செல்வங்கள் இல்லை. மாமி நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
    மாமா நினைத்தால் நம் வீட்டுக்கு வருவார். இருந்து பேசிச் செல்வார்.
    பக்கத்தில் அவரது மாம்னார் இருந்தார்.
    தனியாக வெளியே செல்லும் வழக்கம் கொண்டவர்.
    புரசவாக்கம் ஹைரோடில் திடீர் மாரடைப்பில்
    ஒரு மாலை இறந்தது அடுத்த நாள்
    காலையில் தான் தெரிந்தது.
    நல்லவர்களுக்கு ஏன் இது போல நடக்கிறது என்பதே
    வருத்தம் தான்.
    தனிமை கொடுமை. வயதானால் இன்னும்
    வருத்தம். எல்லோரும் நலமுடன் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமையில் மரணம் மிகவும் வருத்தம் தரக் கூடியது தான். எனக்குத் தெரிந்த சிலரும் இப்படி ஆகியிருக்கிறது. இப்போதும் அந்த நிகழ்வுகள் வருத்தம் தருபவை. முதுமையில் தனிமை அதிக கொடுமை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. கமலா பெரியம்மாவின் ஆன்மா ஷாந்தி அடைய வேண்டுகின்றேன். தனியாக வாழும் முதியவர்களின் கஷ்டங்களை அறிந்திருக்கிறேன். எத்தனையோ முதியவர்களின் நிலை இப்படித்தான் இருக்கின்றது, அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், இரண்டு நாட்களாக அடுத்த வீட்டில் ஒரு அரவம் கூட இல்லையே என நினைத்து காவல் துறைக்கு தகவல் சொல்லி பின்னர் வந்து பார்க்கும்போது அவர்களது நிலைமை .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமையில் இருக்கும் முதியவர்கள் நிலை கடினம் தான். குழந்தைகள் இருந்தும் தனிமையில் வாடும் பல பெற்றோர்கள் இப்போது தமிழகத்தில் இருக்கிறார்கள் - சொந்தத்தில் கூட! வேதனையான நிலை தான் கோயில்பிள்ளை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. கமலா பெரியம்மாவின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறேன். உங்கள் பெரியம்மாவைப் பற்றி அடிக்கடி சொல்லி இருக்கிறீர்கள். இங்கே அழைத்து வந்ததும் நன்மைக்கே! பெரியம்மா இருப்பதால் ஆதிக்கும் கொஞ்சம் பேச்சுத்துணை. பெரியம்மாவும் தனிமையை உணர மாட்டார். தனிமை கொடுமையானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதுமையில் தனிமை - கடினமான ஒரு விஷயம் தான் கீதாம்மா. சில நாட்களாக இங்கே இருப்பதால் கொஞ்சம் பரவாயில்லை. என்ன இங்கே வெளி மனிதர்கள் வருவது குறைவு. கிராமத்தில் இருந்தால் பலரும் வந்து வாசலில் நின்று பேசி விட்டுப் போவார்கள். அதற்கு இங்கே வாய்ப்பில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....