வியாழன், 20 மே, 2021

நமக்கு நாம் - முதல் வேலை - கல்யாண மேக்கப் - தீநுண்மி நாட்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பயணத் தொடர் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.


******




நமக்கு நாம்: 


நமக்கு நாம் என்ற குழுமம் முகநூலில் இருக்கிறது. அங்கே சில கேள்விகள் கேட்டு அதற்கு பதிலும் எழுதுவார்கள். பலரும் எழுதுவார்கள் - அங்கே நானும் சில விஷயங்கள் எழுதி இருக்கிறேன் - அவற்றின் தொகுப்பு இங்கேயும் ஒரு சேமிப்பாக. 


******


முதல் வேலை:





கோவை அரசினர் பாலிடெக்னிக்கில் D.M.E. (Diploma in Mechanical Engineering) முடித்த கையோடு PSG காலேஜில் C.A.D (Computer Aided Designing & Drafting) கோர்ஸ் பயின்றேன். அதன் விளைவாக எனக்கு Submersible Pump தயாரிக்கும் கம்பெனியில் Drafting Engineer வேலை கிடைத்தது. அதுவே என் முதல் வேலை. பணி முடிந்து  மாலை வீட்டிற்கு வந்து சில குழந்தைகளுக்கு டியூஷனும் எடுத்தேன்.


அதன் பிறகு என் துறைக்கு சம்பந்தமே இல்லாத வேலைகளும் செய்தேன். இரண்டு வருடங்கள் இப்படி மாறி மாறி பணி செய்வதும், என் துறையில் சில வேலைகளுக்கு விண்ணப்பிப்பதுமாக சென்றது.


குடும்பச் சூழல் காரணமாக இருபது வயதில் என் திருமணம் நடந்தேறியது. டெல்லியில் பத்து வருடங்கள் வாசம். குடும்பம், குழந்தை என்ற காரணத்தை காட்டி பணிக்கு செல்லவோ, மேற்கொண்டு படிக்கவோ எனக்கு  அனுமதி கிடைக்கவில்லை...:)


******


கல்யாண மேக்கப்:



படம்: இணையத்திலிருந்து...

சிறுவயது முதலே எனக்கு மேக்கப் பழக்கமெல்லாம் இல்லை. முகம் கழுவி கொஞ்சமாக பவுடரும் மெரூன் நிற சாந்துப் பொட்டும் தான் வைத்துக் கொள்வேன். அப்புறம் கல்லூரி சமயத்தில் தான் ஸ்டிக்கருக்கு மாறினேன்.


இப்படி இருப்பவளுக்கு திருமணமும் முடிவானது. கல்யாணத்திற்கு முதல் நாள் ஜானவாசத்திற்கு(மாப்பிள்ளை அழைப்பு) என்னுடைய அத்தை  ஜடை அலங்காரம் செய்து விட்டார். அத்தையின் புடவையும், ஹாரமும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று அடம்பிடிக்கவே பிடிக்காமல் தான் செய்து கொண்டேன்...:)


திருமணத்தன்று நானே தலைவாரி பின்னிக் கொண்டேன். என் மாமி ஒருவர் பூவை பின்னல் முழுவதும் சுற்றி விட்டார்..:) அதுதான் என் அலங்காரம்..:) என் மாமா ஒருவர் கல்யாணப் பொண்ணுக்கு நெத்திச்சுட்டி கூட இல்லாமல் இருப்பியா!! என்று சொல்லி தன் மகளின் கழுத்திலிருந்த  செயினை எடுத்து என் தலையில் நெத்திச்சுட்டி போல் வைத்து பின் செய்து விட்டார்..:)


இன்றும் அப்படித்தான் இருக்கிறேன்..:)


******


தீநுண்மி நாட்கள்: 





கொரோனாவின் ஆரம்ப நிலையில் வெளியே போகக்கூடாது, எல்லாவற்றையும் சுத்தம் செய்யணும் என்பதைத் தவிர மனதில் ஒரு வெறுமை இருந்து கொண்டிருந்தது.


எப்போதுமே பணிக்கு ஆட்களை வைத்துக் கொண்டதில்லை என்பதால் மாற்றம் ஏதுமில்லை...அதே வேலைகள், அதே பொறுப்புகள். இதைத் தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்..


பிளாகராகவும், பின்பு முகப்புத்தகத்தில் எழுதுவதும் செய்து வந்த நான் ஜுன் மாதம் துவங்கி இதுவரை அமேஸானில் நான்கு சமையல் புத்தகங்களும், ஒரு பயண நூலும் வெளியிட்டிருக்கிறேன்.


அதற்கு அடுத்த கட்டமாக ஆகஸ்ட் முதல் யூட்டியூப் சேனலும் துவக்கி வாரம் ஒரு ரெசிபியை செய்து காண்பித்துக் கொண்டிருக்கிறேன். 


கொரோனாவால் நான் என்னை இன்னும் மேம்படுத்திக் கொண்டுள்ளேன் என்று தான் சொல்லணும்.


******


ஃபேஸ்புக்கில் கற்றதும் பெற்றதும்: 





பிளாகராக இருந்த போது எல்லாரும் அந்த அக்கவுண்ட்ட ஆரம்பிக்கிறாங்களே என்று ஆரம்பித்து வந்தது தான் முகப்புத்தகம். முதலில் என் பிளாகின் லிங்க் மட்டும் தான் இதில் பகிர்ந்து கொண்டிருந்தேன். பின்பு இரண்டு பக்கத்துக்கு பிளாகில் எழுதுவதற்குப் பதிலாக நினைத்த போதெல்லாம் என் எண்ணங்களை இரண்டு வரியில் எழுத முகப்புத்தகம் உதவியது.


பள்ளி, கல்லூரி, சில வருடங்களுக்குப் பின் தொடர்பு இல்லாமல் போன நட்புகள், தொடர்பு விட்டுப் போன உறவுகள் என்று எல்லாரையும் ஒன்றிணைக்கச் செய்தது முகப்புத்தகம்.


முகமே போடாமல் தான் முகப்புத்தகத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். சில வருடங்களுக்குப் பின் தான் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டேன். என்னுடைய எழுத்தை பகிர்ந்து கொள்ளத் தான் முகப்புத்தகத்தை பயன்படுத்துகிறேன். நட்புவட்டமும் மிகவும் சிறியது. ஒத்துப் போகவில்லை என்றால் நட்புவட்டத்தில் இருந்து விலக்கி வைக்கவும் முடியும் என்பதால் நன்மையோ தீமையோ அது நம் கையில் தான் இருக்கிறது என்பது சிறப்பு.


*****


நமக்கு நாம் குழுமத்தில் எழுதிய விஷயங்கள் குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்.


20 கருத்துகள்:

  1. பேஸ்புக்கில் ஏகப்பட்ட குழுமங்கள் இருக்கின்றன.  நமக்கு நாம் என்றும் ஒரு குழுமமா?  நீங்கள் எழுதி இருப்பது யாவற்றையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணக்கில்லாமல் ஏகப்பட்ட குழுமங்கள் - எனக்கும் நிறைய குழுமங்களிலிருந்து சேர்ந்து கொள்ள அழைப்பு வந்த வண்ணமே இருக்கிறது - பெரும்பாலான அழைப்புகளை ஏற்பதில்லை!

      பதிவினை ரசித்ததற்கு நன்றி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நல்லதொரு சுய அலசல்.
    ஆதிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    திருமணத்தின் போது அலங்காரம் இல்லாமல் இருந்தது
    சிறிய வருத்தம் என்றாலும்னிறைவான வாழ்க்கை தந்த இறைவனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஆதி வாழ்த்துக்கள்.
    பதிவில் சொன்ன அத்தனையும் அருமை.
    உங்கள் திறமைகள் வள்ர்ந்து கொண்டே போகிறது.

    அனைத்தையும் மிக அழகாய் அருமையாக செய்கிறீர்கள்.
    மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்

    நமக்கு நாம் குழுமத்தில் எழுதிய விஷயங்கள் எல்லாம் கிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. லாக்டௌனை சிறப்பாக உபயோகிக்கிறீர்கள் மேடம்.
    வாழ்த்துக்கள்.
    இன்றைய வாசகமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும், பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. நினைத்ததை நினைத்தபடி சரளமாகவும் சுருக்கமாகவும் சொல்லும் திறன் இப்படி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி பகிர்ந்த விஷயங்கள் குறித்த உங்கள் கருத்திற்கு நன்றி. வாழ்த்தியமைக்கு நன்றி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஆதி நீங்கள் நிஜமாகவே கலக்குகின்றீர்கள்.

    நானெல்லாம் ஒன்றுமே செய்வதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டு வேலை (நானும் இதுவரை ஹெல்பர் வைத்துக் கொள்ளவில்லை) என்று இருந்தவள் ப்ளாக் என்று வந்தாலும் இப்போது அதிகம் எழுதுவதில்லை. யதார்த்தப் பிரச்சனைகள். எனக்கும் மத்திய அரசு வேலை கிடைத்து அந்தச் சமயத்தில் திருமணம் என்பதால் போக வேண்டாம் என்றிட போகவில்லை. வடக்கே ஆப்ஷன்ஸ் கொடுக்க நான் தில்லி சூஸ் செய்தேன். ஆனால் சேரவில்லை. சேர்ந்திருந்தால் ஒரு வேளை அப்பவே வெங்கட்ஜி வேலையில் ஜாயின் செய்யும் போது பழக்கமாகியிருப்பார் என்று நான் நினைத்துக்கொள்வதுண்டு ஹிஹிஹிஹி!!!!! கற்பனையைப் பாருங்க!!!

    அப்போது வேலைக்குச் செல்ல முடியாவிட்டாலும் இப்ப பாருங்க உங்கள் திறமைகள் எல்லாம் உங்களை அடையாளப்படுத்துகின்றன. ரொம்ப அழகாகத் திறம்படச் செய்கிறீர்கள். நல்ல ப்ளானிங்க்! மேன்மேலும் உயர வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லியில் நீங்களும் பணியில் சேர்ந்திருந்தால் - ஹாஹா... நல்ல கற்பனை உங்களுக்கு கீதாஜி. வலையுலகம் வழியாக சந்திக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறதே நமக்கு!

      பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. முகநூலில் இல்லை. எனவே அது பற்றி அவ்வளவு தெரிவதில்லை. இங்கு பதிவில் நீங்கள் எல்லோரும் சொல்வதுதான்.

    ஹைஃபைவ் தட்டிக்கிறேன். திருமண அலங்காரம் மற்றும் இப்போது வரை இருப்பதற்குச் சொல்கிறேன். மீ டூ. மேக்கப்பிலும் விருப்பம் இல்லை.
    நீங்கள் வீட்டை மிக மிகச் சுத்தமாக வைத்திருப்பதிலும் திறமை படைத்தவர்!!! ஸோ உங்கள் திறமைகள் வளர வாழ்த்துகள் பாராட்டுகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூல் - நானும் அப்படித்தான்! காலையில் பதிவின் சுட்டி கொடுப்பதோடு சரி. அவ்வப்போது எட்டிப் பார்க்கிறேன். அவ்வளவு தான் கீதாஜி.

      பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த உங்கள் கருத்துரைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. எல்லாமே அருமையான விஷயங்கள். கல்யாணங்களில் பெண்ணுக்கு அலங்காரம் செய்வது புதிது இல்லை என்றாலும் இப்போதைய வழக்கங்கள் அப்போதெல்லாம் இல்லை. எனக்கெல்லாம் எங்க வீட்டுச் சுப்பம்மா செய்த அலங்காரம் தான். வீட்டு வேலைகளில் உதவும் சுப்பம்மா கிட்டத்தட்டக் குடும்ப உறுப்பினர். என் அப்பாவையே பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு உரிமை உள்ளவர். அவர் தான் நான் குழந்தையாய் இருக்கையில் இருந்தே வருஷா வருஷம் மல்லிகைப்பூக்காலங்களில் பூத்தைத்து விடுவார். கிருஷ்ணன் கொண்டை போட்டுவிடுவார். நவராத்திரிக்கு விதம், விதமாக அலங்காரம் செய்வார். அவர் தான் என் கல்யாணத்திலும்! அவர் பூத்தைத்து வாழைப் பட்டையில் அவற்றைத் தைத்துப் பின்னலிலும் வைத்துத் தைத்தாரென்றால் மூன்று நாட்கள் அப்படியே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுப்பம்மாவின் அலங்காரம் - பூப்பின்னல்! ஆஹா... எங்கள் பெரியம்மா அக்கா, தங்கை, ஊரில் உள்ள பல பெண் குழந்தைகளுக்கு இப்படி வாழைப்பட்டையில் பூக்கள் தைத்து அலங்காரம் செய்து விடுவார். சில படங்களும் எடுத்திருக்கிறார்கள் அந்தக் காலத்தில். உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் யூ ட்யூபில் நீங்கள் வெளியிட்டு வருபவை அனைத்துமே பயனுள்ள குறிப்புகள். அதோடு ரோஷ்ணி வேறே தனியாக வெளியிட்டு வருகிறாளே! முகநூல் எனக்குக் கொஞ்சம் பொழுது போக்கு. காலை/மதியம் ஓர் அரை மணி நேரம். சில நேரங்களில் இரவு ஓர் அரை மணி எனப் பார்ப்பதோடும் நண்பர்களைக் கேலி செய்யவும் தான்! மற்றபடி அதற்கு அதிக முக்கியத்துவம் என் வரையில் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யூட்யூப் குறிப்புகள் - நன்றி கீதாம்மா.

      முகநூல் - நானும் அங்கே அதிகம் உலவுவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....