சனி, 7 ஆகஸ்ட், 2021

காஃபி வித் கிட்டு-122 - சுமை - நகைச்சுவை - சமைத்த உணவு - ரத்த தானம் - பூக்கள் - விவசாயி - கரேரி ஆறு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட Mesmerising Meghalaya பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


இறைவன் சுமைகளைத் தந்திருக்கிறார். அதே நேரத்தில் சுமைகளைத் தாங்குவதற்கான தோள்களையும் தந்திருக்கிறார். 


******


இந்த வாரத்தின் நிழற்படம் - சுமை





சுமை தாங்கி என்று ஒரு சிலரைச் சொல்வதுண்டு.  முன்பெல்லாம் கிராமங்களில், சுமைதாங்கி வரும் வழிபோக்கர்கள் தங்களது சுமைகளை இறக்கி வைத்து சற்றே இளைப்பாற் சுமைதாங்கிக் கற்கள் கூட நடுவார்கள்.  இப்போதைய கிராமங்களில் இருக்கிறதா என்பது கேள்விக்குறி.  மனிதர்களாக இருக்கட்டும், பொதிகளைச் சுமக்கும் விலங்குகளாக இருக்கட்டும், சுமப்பதற்கு ஒரு அளவு உண்டு! அளவுக்கு அதிகமானால், எதுவுமே நல்லதல்ல!  காலை நேர நடைப்பயிற்சி முடித்து வீடு திரும்பும் சமயத்தில் ஒரு சிறு கடையின் முன் பொருட்களை சில்லறை விற்பனைக்கு கொண்டு தரும் மொத்த வியாபாரியின் வாகனம் எத்தனை சுமையோடு இருக்கிறது பாருங்களேன்! சமீபத்தில் அலைபேசி மூலம் எடுத்த படம் இது!


******


இந்த வாரத்தின் பொக்கிஷம் - நகைச்சுவை




சென்ற வார காஃபி வித் கிட்டு பதிவில் பகிர்ந்து கொண்டது போலவே இந்த நகைச்சுவையும் 1964-65 சமயத்தில் ஆனந்த விகடன் வாராந்திர பத்திரிகையில் வெளிவந்த நகைச்சுவை தான். ஓவியம் வாணி என்று குறிப்பிட்டு இருக்கிறது.  வாணி என்ற ஓவியர் குறித்து தகவல் அறிந்தவர்கள் சொல்லலாம்! 


******


இந்த வாரத்தின் WhatsApp நிலைத்தகவல் - சமைத்த உணவு





பசியோடு இருக்கும் போது சமையலறைக்குச் சென்று சமைத்த உணவு கிடைத்தால் திருப்தியாக இருக்கும்.  ஆனால் அப்படி சமைத்த உணவு கிடைக்காமல், நீங்களாகவே சமைத்துச் சாப்பிட வேண்டும் என்ற நிலை இருந்தால் நிலைமை கடினம் தான்.  நாம் எல்லோருமே அப்படி ஒரு உணர்வினை நிச்சயம் பெற்றிருப்போம்!  அதைச் சொல்லும் நல்லதொரு நிலைத்தகவல் மேலே! எனக்குப் பிடித்திருந்தது - உங்களுக்கும் பிடிக்கலாம்!


******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்/காணொளி - ரத்த தானம்


ரத்த தானம் குறித்த தாய்லாந்து நாட்டு காணொளி இந்த வாரத்தின் ரசித்த காணொளியாக.  பாருங்களேன்!

******


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பதிவு  - ரசித்த பூக்களும் சில பொன்மொழிகளும்....


2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ரசித்த பூக்களும் சில பொன்மொழிகளும்....


பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்!


நான் எடுத்த பூக்களின் படங்களோடு எனக்குப் பிடித்த சில பொன்மொழிகளும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


ஹிமாச்சலப் பிரதேசத்தின் மலைவாசஸ்தலங்களில் ஒன்றான DHதரம்ஷாலா மற்றும் அதன் அருகே உள்ள சில இடங்களுக்குச் சென்றபோது எடுத்த படங்கள் இவை.  இதோ பூக்களின் படங்களும் ரசித்த பொன்மொழிகளும் உங்கள் பார்வைக்கும் ரசனைக்கும்.....


******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை  - விவசாயி!



சமீபத்தில் பதிவர் நிலாமகள் அவர்கள் தான் ரசித்த, பிரபுசங்கர் எழுதிய கவிதை ஒன்றினை முகநூலில் பகிர்ந்து இருந்தார்.  விவசாயி குறித்த அந்த கவிதை மனதைத் தொட்டது.  கவிதையை பகிர்ந்து கொண்ட நிலாமகள் அவர்களுக்கு நன்றி.  சிறப்பான கவிதை எழுதி இருக்கும் கவிஞருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். 


அவசர ஊர்தி வாகனமாக

மாற்றம் செய்யப்பட்ட

பழைய மாருதி வேனின் பின்புறம்

நெருக்கியடித்து அமர்ந்தபடி

நான்கு நபர்கள் பயணம் செய்கிறார்கள்

ஐந்தாவதாக குளிர்சாதன சவப்பெட்டியில்

இறந்து போன அவர்களது

தந்தையோ?? அண்ணனோ??

கூடவே பயணம் செய்கிறார்

இடப்பற்றாக்குறை காரணமாக

வாகனத்தின் பின்பக்க கதவு

கொஞ்சம் திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது

கடும் வெயிலோடு தொடங்கிய அவர்களின் பயணம்

செல்லும் வழியில் மழைக்குள் நுழைய

இறுக்கத்தை மீறி சவப்பெட்டிக்குள் இருக்கும் நபர்

லேசாய் புன்னகை செய்வதை வைத்து

அவர் விவசாயியென

முடிவு செய்து கொள்கிறோம்

நானும் மழையும்.......


#பிரபுசங்கர்_க


******


இந்த வாரத்தின் சுற்றுலா தலம் - கரேரி ஆறு, தரம்ஷாலா:


ஹிமாச்சலப் பிரதேசத்தின் தரம்ஷாலா அருகே இருக்கும் ஒரு அழகான ஆறு கரேரி ஆறு.  மலையேற்றம் செய்து சென்று காண வேண்டிய இடம்.  குளிர்காலத்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கின்ற இடம். இந்த இடம் குறித்து, சமீபத்தில் யூட்யூபில் பார்த்து ரசித்த காணொளி இது! நீங்களும் பார்த்து ரசிக்கலாமே! ஐந்து நிமிடங்கள் மட்டுமே எடுக்கும் காணொளி இது!


******


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  நாளை வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


26 கருத்துகள்:

  1. அனைத்தும் சிறப்பு. உழைப்பின் பெருமையை எடுத்துக்கூறுகின்ற சுமையோடுள்ள வாகனம் மனதை நெகிழவைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வாணி ஜோக்ஸ் நானும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.  ஒருசு சமயம் அவர் வரைந்திருந்த அசோக் மேத்தா படமும் பகிர்ந்திருந்தேன்!  அடிக்கடி முன்னர் பத்திரிகையில் அவர் படைப்புகளை பார்த்திருக்கிறேனே தவிர, வேறு விவரம் ஏதும் நான் அறியேன்!

    பசிக்கும்போது சமையலறைக்குச் செல்லாமல் சற்று முன்னதாகவே சென்று தயார் செய்து வைத்து விடுதல் நலம்!!!

    காணொளி - ரசித்தேன்.

    மனதுக்குள் நுழைந்த கவிதை!

    இயற்கைக்கு காட்சிக்கு ஈடேது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சுமை வாகனம் சில நேரங்களில் விலங்குகளையும் இப்படி கஷ்டப்படுத்துகின்றார்கள் ஜி.

    விவசாயி கவிதை இறுதி வரிகளில் மனதை கனக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வாசகம், படங்கள், நகைச்சுவை, கவிதை அணைத்து பகுதிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

      நீக்கு
  5. அனைத்தையும் ரசித்தேன். ஓவியர் வாணி ஆண் என்பது மட்டும்தான் தெரியும். அவர் மறைந்துவிட்டார் என சில வருடங்களுக்கு முன்பு படித்த நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      ஓவியர் வாணி குறித்த தகவல் இணையத்தில் தேடினேன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. கரேரி ஆறு - ஆஹாவே தான் தனபாலன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. சுமை தாங்கி படம் பார்த்தபோது அவர் அத்தனை சுமையையும் வைத்து எப்படி ஸ்டாண்ட் போட்டார் என்று வியக்க வைக்கிறது. காரணம் சுமையில்லாலேயே வண்டியின் சுமை 100kg ஸ்டாண்ட் போடுவது கடினம். 
    மழை படம் அருமை. ஆனால் கவிதையில் பொருட்குற்றம் உள்ளது. கடைசியில் "நானும் மழையும்" என்று முடிக்கிறார். அந்த நான் எங்கே  நின்று ஓடும் வண்டியில் இருக்கும் மூடப்பட்ட சவப்பெட்டியில் சவம் முறுவலிப்பதைப் பார்த்தார். வார்த்தைகளை அடுக்கி எழுதிய கருத்து என்று வேண்டுமானால் சொல்லலாம். கவிதை இல்லை. இப்படிவேண்டுமானால் சொல்லலாம்.


    பச்சைப்பந்தலில்
    பாடையில் கிடக்கிறது சவம்.
    கண்ணீர் துளிகளாய் புது மழை.
    ஒரு சொட்டு முகத்தில் வீழ
     சவத்தின் முகத்தில் ஒரு புன்னகைக்கீற்று
     செத்தும் கொடுத்தான் என்பது போல் மழை
    அவன் வயலிலும் பெய்தது.
     இறந்தது ஒரு விவசாயி. 

    பசிக்கும் போது உடனடி சமைத்த உணவு வேண்டுமானால் பிரிட்ஜ்க்கு தான் செல்வோம்.நிசசயம் பிரெட், பிஸ்கட், மிக்ஸர் போன்ற ஏதாவது கிடைக்கும்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பொன்மொழியும், கவிதையும் மிகச்சிறப்பு. இப்படி ஏகப்பட்ட சுமைகளை சுமக்கும் இரு சக்கர வாகனங்களை பார்க்கும் பொழுதெல்லாம் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல இடங்களில் புகைப்படம் எடுக்கத் தோன்றினாலும் எடுக்க முடிவதில்லை பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. ரத்த தானம் குறித்த தாய்லாந்து நாட்டு காணொளி மன நெகிழ்வு.

    கரேரி ஆறு, தரம்ஷாலா மிக அருமை. சுத்தமாக வைக்கச்சொல்லி பாறைகளில் எழுதி வைத்து இருக்கிறார். அப்படி போகும் பாதைகளை சுத்தமாக வைத்து இருந்தால் நல்லது.

    கைலை போகும் போது இந்த காணொளியில் வருவது போன்ற அழகான நாய்கள் நிறைய வரும் இரவு நேரம். தனியாக போகக் கூடாது என்பார்கள் இரவு நேரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. அருமையான பதிவு. திரு ஜெயக்குமார் சந்திரசேகரின் கவிதை
    இயற்கையாக இருக்கிறது நன்றி.
    வாணி ஜோக்ஸ் எங்கள் ப்ளாகில் பார்த்திருக்கிறேன்.

    ஆறும் மரமும் ,காணொளியும் மிக அருமை.
    பாரட்டுகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி, பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. ஏ அப்பா கணொளியின் தான் எத்தனை நாய்கள் புசு புசு என்று:)
    அருவிகளும் மலை ஏறுபவர்களின் பொறுமையும்
    ரசிக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைப்பகுதி காட்சிகள் மிகவும் பிடித்தவை வல்லிம்மா. இப்படியான புசுபுசு நாய்களை நேரிலேயே இந்த மலைப்பகுதிகளில் பார்த்திருக்கிறேன். மிகவும் Friendly-யானவை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. வண்டியில் எவ்வளவு சுமை! அவர்களது பயணம் முடிவற்று அப்படியே தொடருகிறது. வாணி அவர்களின் நகைச்சுவை ஓவியம் அருமை.விவசாயி கவிதை உருக்கம். நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொகுப்பு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....