புதன், 6 அக்டோபர், 2021

சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு - ஜன் ஷதாப்தியில் - தமிழகப் பயணம் - பகுதி மூன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


DON’T GO WHERE YOU ARE TOLERATED; INSTEAD, GO WHERE YOU ARE CELEBRATED!


******


சமீபத்தில் தமிழகத்திற்கு வந்தது பற்றி இதுவரை இரண்டு பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த இரண்டு பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே. 


ஓசியில் வேர்க்கடலை தருகிறார்களோ


Gகுரு Bபாயின் தங்கச் சங்கிலி


சென்ற பகுதியில் பின்னூட்டம் எழுதிய ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா, “அந்தமான் பயணத்திற்குப் பிறகு வேறு எங்கும் பயணம் செல்லாததால் சொந்த ஊருக்கு பயணம் செய்வதையும் சுஜாதாவின் லாண்டரி கணக்கு போல ஒரு பதிவு நிறைவு செய்து விட்டீர்கள்” என்று எழுதி இருந்தார்!  இந்தத் தொடர் எழுதக் காரணம், எழுதியே தீர வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்பதை சொல்லி விடுகிறேன். பதிவுகள் எழுதுவது விஷயங்களை  பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே! பதிவுகள் வழி சொல்லும் விஷயங்கள் ஒரு சிலருக்காவது பயன்படும் என்றால் நல்லதே! சரி இது ஒரு புறம் இருக்கட்டும்! இந்தப் பதிவின் வழி சொல்ல வருவதை கவனிப்போம். 





தமிழகம் எப்போது வந்தாலும் எனக்காகவே சில வேலைகள் காத்திருக்கும்.  அப்படியான வேலைகளில் மூழ்கி இருப்பதே வழக்கமாக இருக்கிறது. இந்தப் பயணமும் அப்படியே! அதற்கிடையில், இந்தப் பயணத்தின் நாட்களிலேயே, தில்லி நண்பர் ரங்கராஜன் அவர்களில் ஷஷ்டியப்த பூர்த்தி திருக்கடையூரில் நடக்க இருந்ததால் அந்த நிகழ்விற்கு சென்று வர முடிவு செய்திருந்தேன்.  செப்டம்பர் நான்காம் தேதி திருச்சிக்கு வந்தவன், அடுத்த நாளே திருக்கடையூருக்கு பயணம் மேற்கொண்டேன் - அங்கே இரண்டு நாட்கள் நிகழ்வுகள்!  திருச்சியிலிருந்து திருக்கடையூர் செல்ல நேரடி பேருந்துகள் இல்லை.  தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய மூன்று நகரங்களைக் கடந்து திருக்கடையூர் செல்ல வேண்டும்.  இல்லை என்றால் மயிலாடுதுறை வரை இரயிலில் பயணித்து, அங்கிருந்து பேருந்து வழி திருக்கடையூர் செல்லலாம்.  நான் இரயில் பயணத்தினைத் தேர்ந்தெடுத்தேன்.  கோவையிலிருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறை செல்லும் ஜன் ஷதாப்தியில் பயணிக்க நான்காம் தேதி தான் முன்பதிவு செய்தேன். 


ரயில் பயணங்கள் என்றுமே இனிமையானவை. அப்படி பயணிக்கும் போது நாம் சந்திக்கும் மனிதர்கள், கேட்கும் சம்பாஷணைகள் என ஒவ்வொன்றையும் தள்ளி நின்று கவனிப்பதே எனக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு!  மற்றவர்களை இப்படி கவனிப்பதில் நிறைய விஷயங்கள் கிடைப்பதுண்டு! அதனை இங்கே பதிவுகளாகவும் எழுதலாம்! :) அப்படி ஜன் ஷதாப்தியில் பயணித்த போது, தொடர்ந்து முகநூல் வழியே பார்த்த காட்சிகளை, கேட்ட விஷயங்களை எழுதிக் கொண்டே சென்றேன்.  அப்படியான மூன்று விஷயங்கள் கீழே!  


******


5 செப்டெம்பர் 2021: தற்போது திருச்சியிலிருந்து மயிலாடுதுரை நோக்கி ஜன் ஷதாப்தி இரயிலில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். மனிதர்கள் ஒவ்வொருக்குள்ளும் ஒரு கதை மாந்தர் ஒளிந்து இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் இரயிலில் சூழல் மறந்து பேசும் விஷயங்கள் - சில ரசிக்கவும், சில சங்கடப்பட வைக்கவும் செய்யும் விஷயங்கள்.... வேக வேகமாக இரயில் புறப்படும் நேரம் குழந்தையை சுமந்து கொண்டு வந்த ஒரு ஆண், தன் மனைவியிடம் சொன்ன வார்த்தைகள் - வேதனையைத் தந்தது. அப்படிச் சொன்னது - "புள்ளையை பெக்க சொன்னா பொதி மாட்டை பெத்து வைச்சுருக்க....."


******


5 செப்டெம்பர் 2021: குழந்தைகளுடன் இரயிலில் பயணிப்பது கடினமான விஷயம். குழந்தையை, அதுவும் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு பயணிப்பது மிகவும் கடினம்..... பக்கத்தில் ஒரு கைக்குழந்தையுடன் இளம் கணவன் மனைவி.... கொஞ்சம் ஏமாந்தாலும் குழந்தை எதிர் சீட்டில் வாய் வைத்துக் கடிக்கிறது - பார்க்காமல் விட்டுவிட்ட தகப்பன், அதன் உதட்டில் சுண்டிவிட வலியில் குழந்தை அழுது கொண்டிருக்கிறது. அது போதாதென்று, உணவு வைக்க இருக்கின்ற metal tray-வை திறந்து மூடி விளையாடுகிறது குழந்தை.....  இரயிலின் குலுக்கலில் ஒரே நொடியில் அந்த இரும்பு தட்டு குழந்தையின் மூக்கில் தட்டிற்று..... மீண்டும் வலி தாங்காமல் குழந்தை அழுது கொண்டிருக்கிறது.... குழந்தை வளர்ப்பு எத்தனை கடினம் என்பதை மீண்டும் கண்ணெதிரே பார்த்து உணர்ந்து கொண்டிருக்கிறேன்......


******





5 செப்டெம்பர் 2021: எதிர் எதிரே இரண்டு இளைஞர்கள்...... கீழ்ப்பக்கங்களில் சதுர வட்டை மாதிரி ஹேர் கட்டிங்..... மேலே கைக்கு அடங்காத முடி.... ஆனாலும் திருச்சியில் கைகளால் முடியைக் கோத ஆரம்பித்து பயணம் முழுவதும் கோதிக் கொண்டே இருக்கிறார்கள். இடையில் சில பல செல்ஃபிக்கள்.... சில நிமிட காணொளிகள்.... முகத்தை பலவித கோணங்களில் (அ)சிங்கமாக்கிக்கொண்டு...... ஃபேஸ்புக்-ல போட்டி லைக் அள்ளும்..... என்ற ஆசை வார்த்தைகளோடு...... அதுவும் Live-ஆக....  இதற்கு நடுவில் சீட் மாற்றி மாற்றி சில பல செல்ஃபிக்கள்...... நடத்துங்கடா ராசா என்று சொல்லி அவர்கள் முகத்தில் கொஞ்சம் சிரிப்பையும் வரவைத்தேன்.....


******






இப்படி சில காட்சிகளையும் அளவளாவல்களையும் பார்த்து/கேட்டு, மயிலாடுதுறை சென்றடைந்தேன்.  மயிலாடுதுறை நகரில் இறங்கியபோது, முன்பு ஒரு முறை அங்கே சென்று பதிவர் கோமதி அம்மாவையும் அவரது கணவரையும் சந்தித்து வந்தது நினைவுக்கு வந்தது.  மற்றொரு முறை அங்கே சென்று கொலு பொம்மைகள் (பார்க்க முந்தைய பதிவு - கொலு பொம்மைகள் செய்பவருடன் ஒரு சந்திப்பு) வாங்கி வந்ததும் நினைவுக்கு வந்தது.  மயிலாடுதுறை எனும் மாயவரம் இரயில் நிலையத்தில் இறங்கி திருக்கடையூர் நோக்கிய பயணம் எப்படி இருந்தது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேனே!  


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


22 கருத்துகள்:

  1. பயணம் செய்தே நாட்களாச்சு!  இதோ சில பயணங்கள் எனக்காகவும் காத்திருக்கின்றன!

    ஸ்டைல் என்ற பெயரில் 'அப்படி' முடிவெடுக்க கொள்வோரைப் பார்த்தால் எரிச்சல்தான் வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பயணங்கள் சிறப்பாக அமையட்டும் ஸ்ரீராம்.

      ஸ்டைல் - ஒன்றும் சொல்வதற்கில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பின்னூட்டங்களும் நினைவில் நிற்கும் என்பது புரிகிறது. இனிமேல் கவனமாக இருக்க வேண்டும். இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டங்களும் நினைவில் நிற்கும் - :) தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை! நீங்கள் சொன்னதை எழுதி இருக்கிறேன் அவ்வளவு தான் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. உள்ளூர் பயணப் பதிவுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன. ஒவ்வொருவரின் பார்வைக் கோணங்கள், எழுதும் விதம்தான் படிக்க ரசனையைத் தூண்டும் அல்லது போரடிக்க வைக்கும்.

    அதுசரி... போர் (bபோர்) அடிக்குது என்பது எந்த மொழி?

    உள்ளூர் பயணத்தில் உணவைக் கொண்டு போயிடறீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளூர் பயணங்கள் - ஸ்வாரஸ்யங்கள் எங்கேயும் இருக்கிறது. பார்த்தால் கிடைக்கத்தான் செய்கிறது நெல்லைத் தமிழன். பிடிப்பதும் பிடிக்காமல் போவதும் அவரவர் பார்வையில்!

      போர் அடிக்குது - ஹாஹா எந்த மொழியோ?

      உள்ளூர் பயணங்களில் உணவு எடுத்துச் செல்வதுண்டு - எப்போதாவது! பெரும்பாலும் வெளியே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. நுண்ணிய கவனிப்பு - பதிவு பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ரயில் பயணங்கள் என்றுமே இனிமையானவை. அப்படி பயணிக்கும் போது நாம் சந்திக்கும் மனிதர்கள், கேட்கும் சம்பாஷணைகள் என ஒவ்வொன்றையும் தள்ளி நின்று கவனிப்பதே எனக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு! மற்றவர்களை இப்படி கவனிப்பதில் நிறைய விஷயங்கள் கிடைப்பதுண்டு! அதனை இங்கே பதிவுகளாகவும் எழுதலாம்! :) //

    ஹைஃபைவ் வெங்கட்ஜி!!! அதே எனக்கு மிக மிகப் பிடிக்கும். இதில் கிடைப்பது என் கதைகளில் பயன்படுத்துவதுண்டு. ஆமாம் பதிவுகளும் எழுதலாம். எழுதியதும் உண்டு. முன்பு...எல்லாப் பயணங்களுமே ஏதோ ஒன்று சொல்லும் நாம் கூர்ந்து கவனித்தால். ஒரு ஸ்டாப்பிலிருந்து அடுத்த ஸ்டாப் போவதில் கூடக் கிடைக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூர்ந்து கவனித்தால் பதிவுகளோ, கதைகளோ எழுத முடியும். உண்மை தான் கீதாஜி. ஒத்த ரசனை.... மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. மனிதர்கள் ஒவ்வொருக்குள்ளும் ஒரு கதை மாந்தர் ஒளிந்து இருக்கிறார்கள். //

    அதே அதே ஜி.

    ஒவ்வொருவரும் இரயிலில் சூழல் மறந்து பேசும் விஷயங்கள் - சில ரசிக்கவும், சில சங்கடப்பட வைக்கவும் செய்யும் விஷயங்கள்....//

    இவையும் கதையில் நுழைக்கப் பயன்படும்!!!!!! ஆனால் என் காதில் விழ வேண்டும். கேட்கும் திறன் குறைவு என்பதால் சில சமயம் ரயில் சத்தத்தில் எனக்குக் கேட்காது.

    "புள்ளையை பெக்க சொன்னா பொதி மாட்டை பெத்து வைச்சுருக்க....."//

    இந்த மாதிரி பல ஆண்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன் ஜி. இன்னும் கெட்ட வார்த்தைகள் போட்டுப் பேசுவதையும் கேட்டிருக்கிறேன் என்னவோ அக்குழந்தை பிறக்க ஆண் காரணமில்லாதது போல...இது என்ன பேச்சோ? ச்சே என்றாகிவிடுகிறது.

    குழந்தை வளர்ப்பு எளிதே அல்ல. மகனுடன் பயணித்த நினைவுகள்...

    இப்போதைய இளைஞர்கள்...ம்ம்ம்

    கொலுபொம்மை தயாரிப்பவரோடு உங்கள் உரையாடல் பதிவு நினைவு இருக்கிறது ஜி. இந்தப் படம் கூட அங்கு போட்டிருந்தீர்கள் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தை வளர்ப்பு எளிதே அல்ல! உண்மை. மகளுடன் பயணித்த போது நடந்த விஷயங்களை அவ்வப்போது அவளிடம் சொல்வதுண்டு கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. உங்கள் ரயில் பயண அனுபவங்களை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரயில் பயண அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      நீக்கு
  9. மயிலாடுதுறை சந்திப்பு பலகையை பார்த்தவுடன் நினைவுகள் மயிலாடுதுறை நோக்கி போகிறது.
    திருக்கடையூர் உறவுகளின் ஷஷ்டியப்த பூர்த்தி எங்கள், சஷ்டியபத பூர்த்தி, பெரிய மாமனார், சின்ன மாமனார் சதாபிஷேகம் எல்லாம் நடந்த போது மயிலாடுதுறை வீடு கோலகலமாக இருக்கும்.

    உங்கள் வரவு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. எங்கள் சந்திப்பை கூறியதற்கு நன்றி.
    கொலுபொம்மை விற்கும் கடையில் நானும் பொம்மைகள் வாங்கி இருக்கிறேன்.

    இரயில் பயண அனுபவங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்கள் பழைய நினைவுகளை தூண்டியதில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பயணம் செய்து நாளான நிலையில், மகன்கள் மகள் எல்லாரும் வீட்டில் ஆன்லைன் வகுப்பு என்று இருந்து சமீபத்தில் மீண்டும் கல்லூரிக்குச் செல்வதற்கு முன் அவுட்டிங்க் வேண்டும் என்று கேட்டதால் திருவனந்தபுரம் வரை சென்று வந்தோம்.

    உங்கள் பயணம் அது சுற்றுலாப் பயணமாக இருந்தாலும் சரி ஊருக்கு வரும் பயணமாக இருந்தாலும் சரி அழகான குறிப்புகளுடன் அனுபவங்களையும் நன்றாக எழுதுகின்றீர்கள்.

    இப்போதைய இளைஞர்களின் சில நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வது சிரமமாகத்தான் இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவனந்தபுரம் வரை ஒரு பயணம் - மகிழ்ச்சி துளசிதரன் ஜி. பயணத்திற்கான ஏக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. மனிதர்களுக்குள் இருக்கும் கதை மாந்தர் " ரசனை.
    இளம் பையன்கள் நீங்கள் சொல்லியதுபோல சில சமயங்களில் ரசனையாக இருக்கும் .சில ஏனடா என்று போய்விடும். காலத்தின் கோலங்கள்தான்.இதையும் தாண்டுவார்கள் என நினைப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில ஏனடா என்று போய்விடும் - உண்மை. காலத்தின் கோலம் தான் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....