அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இருபத்தி ஆறு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே…
மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி ஒன்று
மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி இரண்டு
மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி மூன்று
மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி நான்கு
‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற வாக்குக்கு உதாரணமாக பள்ளிநாட்களில் ‘வேடன் விரித்த வலையில் புறாக்கள் மாட்டிக் கொண்டதும் எறும்பு அதைச் சாதுர்யமாக காப்பாற்றிய கதையையும் வாசித்திருப்போம்! நினைவிருக்கிறதா! எந்தவொரு செயலுக்கு பின்னேயும் ஒற்றுமை என்பது பெரிய பலத்தினைக் கொடுக்கும்! நாம் ஒன்றுபட்டால் எதையும் சாதிக்கலாம்!
நண்பர்கள் ஒவ்வொருவராக தங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த போது எங்களுடன் படித்த நண்பர் ஒருவருக்கு ‘Inspector of police’ crime branchஆக சமீபத்தில் பதவி உயர்வு கிடைத்ததை எண்ணி எல்லோருமே மகிழ்ந்தோம்! ஒருவர் திறமை வாய்ந்த வழக்கறிஞராகவும் கூட சாதித்துக் கொண்டிருக்கிறார்! எங்கள் துறை சம்பந்தமாகவும் கல்லூரியில் துறைத் தலைவராகவும்(HOD), சொந்தமாக பிசினஸ் செய்பவர்கள், வெளி மாநிலங்களில், வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் இப்படி அன்று பல சாதனையாளர்களைக் காண முடிந்ததில் எங்கள் எல்லோருக்குமே மட்டற்ற மகிழ்ச்சி!
தோழிகளும் இதில் சற்றும் சளைத்தவர்கள் அல்ல! குடும்பத்தலைவியாக தங்கள் குடும்ப பாரத்தை சுமப்பதோடு மட்டுமல்லாமல் பணிபுரிந்தும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்! இரண்டு தோழிகள் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் Assistant engineer ஆகவும் பணிபுரிகிறார்கள்! என்பதைக் கேட்டதும் மனதில் பெருமை கூடியது! பெண்களால் எல்லாவற்றையும் சமாளிக்கவும் முடியும்! செயல்படுத்தவும் முடியும்!
நட்புகள் எல்லோருமே வாழ்வில் பல போராட்டங்களுக்குப் பின் தங்கள் தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் இன்று சாதித்துக் கொண்டிருப்பவர்கள்! வாழ்க்கைப் பாதையில் நம் படகு எப்படி பயணிக்கிறதோ அதன் போக்கிலேயே சென்று அவற்றில் பற்றிக் கொள்ள வாய்ப்பு கிடைப்பவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்வதே ஆகச் சிறந்த வாழ்வியல் முறை! இதிலிருந்து முரண்பட்டால் நம் பயணம் தான் தடைபடும்!
ஒவ்வொருவராக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து எனக்குள்ளும் உத்வேகம் கூடியது! பொதுவாக சபைகளில் பேசுவதற்கு மிகுந்த தயக்கம் கொள்பவள் நான்! அன்று ஏனோ அதையெல்லாம் விட்டுவிட்டு நம் நண்பர்களும் தோழிகளும் தானே இங்கு இருக்கிறார்கள் என்று மகிழ்வோடு கையை உயர்த்தி நான் பேசுகிறேன் என்று இருக்கையை விட்டு எழுந்து முன்வந்தேன்! பெண்களில் முதலாவதாக பேசியதும் நான் தான்!
எங்கள் கல்லூரியில் உள்ள எல்லாத் துறைகளிலும் இருக்கும் மொத்த பெண்களைச் சேர்த்தாலும் ஏறக்குறைய ஐம்பது பேர் தான் இருப்பார்கள்! அதிலும் எங்கள் துறையாம் இயந்திரவியலை எடுத்துக் கொண்டால் 60 ஆண்கள்! நாங்கள் மூன்றே பெண்கள் தான்! எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் 60 ஆண்களிடையே மூன்று பெண்கள் வலம் வந்தாலும் அவர்கள் எல்லாம் எப்போதும் எங்களுக்கு நல்ல தோழனாகவும் பாதுகாப்பு அரணாகத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்ல வேண்டாமா! பதிவு செய்ய வேண்டாமா!
அதற்காக தான் பேச முன்வந்தேன்!
‘காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது’ என்ற திருவள்ளுவரின் குறள் உணர்த்தும் பொருளைப் போல உதவி என்பதை பணமாகவோ அல்லது பொருளாகவோ மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதல்ல! ஒருவர் நம்மிடம் எதுவும் கேளாமல் நாமே அவரின் தேவையறிந்து செய்து கொடுப்பதே உண்மையான உதவியாகும்! நண்பர்கள் செய்யும் உதவிகள் அப்படிப்பட்டவை !
கல்லூரி நிகழ்வில் நட்புகளிடம் என்னைப் பற்றிய சிறு அறிமுகத்தை செய்து கொண்டு பேச ஆரம்பித்தேன்! 25 வருடங்களாகி விட்டதல்லவா! அன்று கல்லூரிக்குப் பின் மேலும் படிக்க ஆசைப்பட்டேன்! எனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள ஆசைப்பட்டேன்! குடும்பச் சூழலால் வாழ்க்கை வெவ்வேறு கோணத்தில் பயணப்பட்டு தற்சமயம் அரங்கனின் காலடியில் முற்றிலும் மாறுபட்ட ஒரு அடையாளத்தில் பரிமளிக்கிறேன்! என்று பகிர்ந்து கொண்டேன்!
மூன்றாண்டுகளும் கல்லூரியில் நாங்கள் மூன்று பெண்களும் கேலியும் கலாட்டாவுமாக மகிழ்வோடு வலம் வந்தோம்! கற்றுத் தேர்ந்தோம் என்றால் அதற்கு எங்கள் வகுப்பு நண்பர்கள் எங்களை comfort ஆக உணர வைத்தார்கள் என்று தான் சொல்லணும்! அது தான் உண்மையும் கூட! அதைத் தான் அன்று அவர்கள் எல்லோரிடமும் பெருமையுடன் பகிர்ந்து கொண்டேன்!
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலர் தவறான புரிதலுடன் சட்டென்று விபரீதமான முடிவுகளை எடுத்து விடுவதாக அன்றாடம் செய்திகளில் கேட்கிறோம்! பார்த்துக் கொண்டிருக்கிறோம்! எவ்வளவு வருந்தத்தக்க செய்தி இது! பொறுமையும், சகிப்புத்தன்மையும் எதையும் ஏற்றுக் கொள்ளும் நிதானமும் இல்லாத வாழ்க்கை முறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்லணும்…:(
நட்புகளை மனதார பாராட்டி விட்டு நிகழ்வை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து அமைத்த நண்பர்களையும் பாராட்டினேன்! சுமார் ஏழு வருடங்களுக்கு முன் எங்கள் பள்ளி reunion நிகழ்வில் கலந்து கொண்ட போது என் வகுப்புத் தோழிகள் இருவரை மட்டும் தான் அன்று பார்க்க முடிந்தது! ஆனால் இன்று எங்கள் பேட்ச் நண்பர்கள் இத்தனை பேரை ஒருசேர பார்க்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் பகிர்ந்து கொண்டேன்!
நிகழ்ச்சி நிரலில் இன்னும் சில சிறப்பான விஷயங்களும் இருக்கிறது என்று சொல்லப்பட்டதால் எல்லோரும் மதிய உணவுக்காக அமைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றோம்! உணவு பஃபே முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது! அவரவருக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்து உண்டோம்! லஞ்சுக்கு அப்புறம் கிளாஸ் வேறு இருக்கிறதாம்!
மீதிக்கதைகளை அடுத்த பகுதியில் சொல்லட்டுமா!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
14 ஜூலை 2025
எங்களுடன் படித்த நண்பர் ஒருவருக்கு ‘Inspector of police’ crime branchஆக சமீபத்தில் பதவி உயர்வு கிடைத்ததை எண்ணி எல்லோருமே மகிழ்ந்தோம்!//
பதிலளிநீக்குஆஹா!!! அருமையான துறை!!!! ஆனால் சவால்களும் நிறைந்த ஒன்று.
அட! லஞ்சுக்குப் பிறகு வகுப்பா!! சுவாரசியம்.
மிகழ்ச்சியாக இருந்திருக்கும் அது உங்கள் வரிகளிலும் தெரிகிறது, ஆதி.
உங்களுக்கான அடையாளத்தை அப்போது முடியலைனாலும் இப்ப நீங்கள் பல பொறுப்புகளின் நடுவில் எழுத்தில் உங்கள் அடையாளத்தைப் பதித்து வருகிறீர்களே. அது மிகப் பெரிய அடையாளம்தான். வாழ்த்துகள்!
கீதா
இனிய நினைவுகள்.
பதிலளிநீக்கு