அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி நான்கு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
24ஆம் ஆண்டில் அடியெடுத்து… - 24 மே 2025:
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று ஆன்றோர்கள் சொல்வார்கள்! அப்படி இறைவனால் முடிவு செய்யப்பட்ட இருவர் இணைந்து இல்லற வாழ்க்கையையும் துவக்குகிறார்கள்! விருந்து என்றால் அதில் அறுசுவையும் கொண்ட உணவை தான் நாம் ரசித்து உண்கிறோம்! அதுபோலவே இல்லறம் என்றால் எல்லாமும் தான் இருக்கும் என்பது இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டிய பாடம்!
இனிப்பை மட்டுமே சுவைத்தால் ஒரு கட்டத்தில் அது நமக்கு திகட்டிப் போய்விடும் அல்லவா! அது போலவே உப்பு, உரைப்பும் கூட! காதலால் கசிந்துருகி வாழ்வதைப் போலவே ஆங்காங்கே ஊடலும் கலந்தால் தான் இல்லறத்தில் சுவை கூடும் என்பதும் இறைவனின் சித்தம்! இரு வேறு மனநிலையில் உள்ளோரை இணைத்து வைக்கும் பந்தம் தானே திருமணம்!
அதில் அன்பு, பாசம், நம்பிக்கை, அரவணைப்பு, புரிதல், பகிர்ந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் என்று இல்லறத்தில் இருக்க வேண்டிய எல்லா குணங்களையும் ஏற்ற இறக்கங்களுடன் கலந்து இல்லறம் என்னும் வாழ்க்கைப் படகை செலுத்தினால் அந்தப் பயணத்தில் தடைகள் ஏதுமின்றி இனிமை காணலாம் என்பது உறுதி!
திருமண பந்தம் என்னும் வாழ்க்கைப் படகில் கணவனும் மனைவியும் மட்டுமல்ல! அவர்களின் இருதரப்பு உறவுகளும் கூட உடன் வருவார்கள்! அவர்களுக்கு இதில் மாறுபட்ட புரிதல்களும், கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம்! எல்லாவற்றையும் கடந்து சவால்கள் நிறைந்த இந்தப் பயணத்தை தொடர்ந்து கொண்டு செல்வதே நமக்கான இலக்கு!!
இத்தனை வருடங்களில் இருவரும் எத்தனையோ சந்தர்ப்பங்களை கடந்து வந்திருக்கிறோம்! எதிர்பார்ப்பில்லா மனநிலையை நான் உருவாக்கிக் கொண்டு விட்டதால் எந்தவொரு சூழலையும் என்னால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது! என் எண்ணங்கள் எப்போதுமே வேறுபட்டதாகத் தான் உள்ளது! வசதிகளும், வாழ்க்கை முறையும் மாறினாலும் நான் என் இயல்பு நிலையிலிருந்து மாறவில்லை!
எங்களுக்கான கடமைகளை நிறைவேற்றிய பின் ஒருவருக்கொருவர் ஆதரவாக அனுபவக் கதைகளை பேசிக் கொண்டு கரம் கோர்த்து பயணிக்கும் நாட்களை எதிர்நோக்கியே எங்கள் நாட்கள் கடந்து செல்கின்றன! இல்லற வாழ்வில் இதை விட வேறு என்ன வேண்டும்!!
******
மைசூர் ஸ்ரீ - 24 மே 2025:
வழமை போல தான் எங்கள் கொண்டாட்டங்கள் இருந்தன! நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு ஊரில் இருப்பதே சிறப்பு அல்லவா! கெடுபிடியான வீட்டுச்சூழலால் இந்த வருடம் எங்களின் திருமணநாளே எனக்கு மறந்து போயிற்று என்பது தான் சிறப்பு...🙂
கடந்த ஒரு வாரமாகவே நம்ம 'தல' 24ந்தேதி என்ன பண்ணலாம்? எங்கேயாவது போகலாமா என்று கேட்டுக் கொண்டிருந்தார்..🙂 24ந்தேதி என்ன ஸ்பெஷல்?? எதுக்கு அப்பா அந்த தேதிய பத்தி சொல்லிண்டு இருக்கா கண்ணா?? என்று மகளிடம் கேட்ட பின்பு தான் விஷயமே தெரிய வந்தது...🙂 இனிமே இப்படித்தான் போல...🙂
'ஸ்வீட் எடு கொண்டாடு' என்ற நெறியைப் பின்பற்றி மதியம் கொஞ்சம் போல கடலைமாவு போட்டு மைசூர் ஸ்ரீ ! அடச்சே! மைசூர்பாகு செய்தேன்...🙂 வழமை போல அதே பக்குவம்! 'தல'யும் 'நல்லா வந்திருக்கு'! என்று சொன்னார்! இன்று இங்கு மழை வருமென நினைக்கிறேன்..🙂
******
Tourist family - 25 மே 2025:
நான்: கண்ணா! இப்போ ஒரு video song பார்த்தேன்! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! இந்தப் படம் எப்போ வந்தது கண்ணா? இன்னும் தியேட்டர்ல ஓடுதா??
மகள்: அம்மா! அந்தப் படம் 1ந்தேதியே ரிலீஸ் ஆச்சு! படம் சூப்பர்ஹிட்! இன்னும் தியேட்டர்ல இருக்கு! நானும் பார்க்கணும்னு நினைச்சேன்!
நான்: அப்படியா! அப்ப சரி! நாங்க ரெண்டு பேரும் இந்தப் படத்துக்குப் போகலாம்னு இருக்கோம்! வேணும்னா நீங்களும் எங்களோட வரலாம்!
‘தல’: நான் வரல! டிக்கெட் வேணா புக் பண்றேன்! நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க!
இதுதான் நம்ம ஃபேமிலி..🙂 ஆனா இந்த டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கே வேற லெவலுங்க!
தாய் மண்ணையும் மக்களையும் விட்டுவிட்டு பிழைப்புக்காக உரிய அனுமதியும் இல்லாமல் இடம் பெயர்ந்து வாழ நினைப்பவர்களின் நிலையை படம் பிடித்து காண்பித்துள்ளது Tourist family! பிழைப்புத் தேடி வருபவர்கள் இங்கு சந்திக்கும் இக்கட்டான சூழ்நிலைகள்! அவர்களின் வாழ்வாதாரம்! தனக்கென ஒரு விலாசத்தை பெற்றிட செய்யும் முயற்சிகள் என்று நமக்கு பறைசாற்றும் கதை!
ஒரு இனிமையான கவிதை போன்ற குடும்பம்! குடும்பத்தலைவனாக சசிகுமார்! தலைவியாக சிம்ரன்! பருவ வயதில் ஒரு மகனும், பள்ளி செல்லும் வயதில் ஒரு மகனுமாக இரண்டு ஆண் பிள்ளைகள்! நெருக்கடியான சூழலில் சட்டென்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு பிழைப்பைத் தேடி இந்தியாவுக்கு வரும் அந்தக் குடும்பம் ஒரு குடியிருப்பில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள செய்யும் பிரயத்தனங்கள் தான் கதையாக சொல்லப்பட்டுள்ளது!
பணம் மற்றும் பதவியை விட வலிமையானது அன்பு என்று இந்தப் படத்தில் அழகாக காட்டப்பட்டுள்ளது! இன்றைய காலகட்டத்தில் அக்கம்பக்கம் இருப்பவர்களோடு கூட பழக மறுக்கிறோம் நாம் என்ற நிதர்சனமான உண்மையையும் உரக்க சொல்லியிருக்கார் இயக்குனர்!
கம்பீரமான, தன் குடும்பத்துக்காக எதையும் செய்யத் தகுந்த குடும்பத்தலைவனாக சசிகுமார் சிறப்பாக நடித்திருக்கிறார்! புன்னகை ததும்பும் முகத்துடன் குடும்பத்தலைவியாக சிம்ரன் தன் நடிப்பில் அசத்துகிறார்! இந்தப் படத்தின் கலக்கலான கதாப்பாத்திரம் என்றால் அந்த சிறுவன் தான்! கேலியும் கலாட்டாவுமாக சூட்டிகையான சிறுவன்!
படத்தில் நடித்துள்ள ஏனைய கதாப்பாத்திரங்களும் தங்களுக்கே உரிய இயல்பான நடையில் சிறப்பாக செய்திருக்கிறார்கள்! இயக்குனரின் முதல் படம் என்று மகள் சொல்லிக் கேள்விப்பட்டேன்! நல்லதொரு ஃபீல் குட் மூவியை படைத்திருக்கிறார்! அவருக்கு பாராட்டுகள்! நிச்சயமாக குடும்பத்தோடு கண்டுகளிக்கலாம்!
******
ரோஷ்ணி கார்னர் - ஓவியம் - 30 மே 2025:
மகளின் கைவண்ணத்தில் ஒரு ஓவியம் - உங்கள் பார்வைக்கு!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
12 ஜூலை 2025
முகநூலில் அப்போதே சொல்லியிருந்திருப்பேன். எனினும் இங்கும் உங்கள் மணநாளுக்கு வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குமைசூர்பாகு செய்து நீண்ட நாட்களாச்சு. நன்றாகச் செய்பவன் நான் என்ற பெயர் பெற்றிருந்தேன். கொரோனா காலத்தில் ஒருநாள் செய்யப்போக எல்லாமே உதிர்ந்து விட்டது. வெறுத்துப்போய் அப்புறம் முஅயற்சிக்கவில்லை.
டூரிஸ்ட் ஃபேமிலி படம் நானும் அது OTT யில் வெளியானபோதே சுடச்சுட பார்த்து ரசித்தேன்.
ரோஷ்ணி அசத்துகிறார். அருமையான ஓவியம்.பாராட்டுகள்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.
உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துகள். அனைத்து கணவன் மனைவி இடையே உள்ள உறவைப்பற்றி, நன்றாக சொல்லியுள்ளீர்கள்.
தங்கள் திருமண நாளுக்காக செய்த இனிப்பு மைசூர் ஸ்ரீ நன்றாக வந்துள்ளது. பெயரும் வித்தியாசமாக இருக்கிறது. தங்கள் கணவரின் பாராட்டைப் பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி. அன்று ஆனந்த மழை தங்கள் மனதிலும் வந்திருக்கும். :))
இந்த திரைப்படம் நன்றாக உள்ளதென குழந்தைகள் சொன்னார்கள். நான் இனிதான் பார்க்க வேண்டும். உங்கள் விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது.
ரோஷிணியின் ஓவியம் மிக நன்றாக உள்ளது. மேகப்பஞ்சுப் பொதியில் கண் மூடி ஆனந்தமடையும் குட்டி கிருஷ்ணர் மிக அழகாக உள்ளார். அருமையாக வரைந்த ரோஷிணிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைக் கூறுங்கள். இன்றைய கதம்பம் நன்று. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் இருவருக்கும் எங்கள் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள். Tourist family அருமையான படம். ரோஷனியின் படம் சூப்பர்.
பதிலளிநீக்குதிருமண நாள் வாழ்த்துக்கள்.sweet பார்க்கவே அருமை. tourist family எங்கள் complex இல் போட்டார்கள்.ரொம்ப நாள்.கழித்து அடி தடி குத்துப் பாட்டு இல்லாத படம்.நகைச் சுவை கலந்த நல்ல படம். கிருஷ்ணர் படம் அழகு.
பதிலளிநீக்குவிஜி.
ஆதி அண்ட் வெங்கட்ஜி இருவருக்கும் மண நாள் வாழ்த்துகள்! தாமதமாகத்தான் என்றாலும்.
பதிலளிநீக்குஎனக்கு எங்கள் வீட்டு நிகழ்வுகளின் தேதிகள் வரும் நாள் நினைவிருப்பதில்லை. அதாவது தேதி நினைவிருக்கும் ஆனால் அந்த நாள் வரும் சமயம் சுத்தமாக நினைவிருக்காது! ஒரு வேளை கொண்டாடிப் பழக்கம் இல்லாததால் இருக்கலாம்.
ரோஷ்னி அசத்துகிறார். ரொம்ப நன்றாக வரைந்திருக்கிறார். நல்ல திறமை! அதான் டிசைனிங்க் படிக்கிறார். அவருக்கு ஏற்ற துறையை எடுத்துக் கொண்டதும் அதற்கு நீங்க ரெண்டு பேரும் உறுதுணையாக இருப்பதும் மிகவும் சிறப்பு. ரோஷ்னி மிக நன்றாக வருவார்.
கீதா
மைசூர்பாகு - மைசூர் பா வாக நன்றாக வந்திருக்கிறது.
பதிலளிநீக்குடூரிஸ்ட் ஃபேமிலி படம் நன்றாக இருக்கிறது என்றும் வெற்றிப்படம் என்றும் நானும் வாசித்தேன். இப்படியான சின்ன படங்கள் கண்டிப்பாக நன்றாக ஓட வேண்டும். இப்ப இன்னொரு படமும் நன்றாகப் போகிறது என்று செய்திகளில் பார்த்தேன். மாமன் அப்புறம் இன்னொன்று 3BHK வும் நன்றாக இருக்கிறது என்று ரிவ்யூ பார்த்தேன்.
இப்படிச் செய்திகள், விமர்சனம் பார்த்துக் கொள்வதோடு சரி
கீதா