அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட மின்னூல் வெளியீடு - தகவல் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
நல்லதே நடக்கட்டும் - 17 ஏப்ரல் 2025:
தகிக்கும் கோடை வெயிலும், அதில் பெருகும் வியர்வை மழையும், அன்றாட வேலைகளும், சமஸ்கிருத தேர்வு நெருக்கடிகளும், பெரிதாக மாற்றங்கள் இல்லாத குடும்பச் சூழலும் என சென்று கொண்டிருக்கிறது நாட்கள்! எழுத பெரிதாக விஷயங்கள் இல்லாதது ஒருபுறம் என்றால் நேரமின்மை ஒருபுறம் என எழுத்திலிருந்து என்னை சற்றே தள்ளி வைத்திருக்கிறது!
வார இறுதியில் தேர்வு எனும் நிலையில் நேற்று கூட என் ஆசிரியர் எங்கள் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்! இத்தனை குடும்பப் பொறுப்புகளுக்கு நடுவில் இத்தனை வருடங்களுக்குப் பின் படிப்பதே பெரிய விஷயம்!! அதனால் தேர்வைப் பற்றியோ, மதிப்பெண்களைப் பற்றியோ பெரிதாக யோசிக்க வேண்டாம்! என்று! உண்மை தான்! ஆனாலும் கிடைத்திருக்கும் வாய்ப்பில் சிறப்பாக செய்ய வேண்டாமா…:)
சங்கரி (1984) - 17 ஏப்ரல் 2025:
சென்ற வாரத்தில் ஒருநாள் கிடைத்த மதியநேரத்தில் யூட்டியூபில் இந்தத் திரைப்படத்தை பார்த்தேன்! இதுவரை நான் அறியாத திரைப்படம்! தியாகராஜன், சரிதா, சாருஹாசன், கமலா காமேஷ் போன்ற நட்சத்திரங்களின் சிறப்பான நடிப்பில் வெளியாகி இருக்கிறது! சங்கரி எனும் பெண்ணின் வாழ்வைச் சொல்லும் கதை! அன்றைய வாழ்க்கை முறையும், மனிதர்களின் மனப்பாங்கும் என என்னை பாதித்த கதை என்று சொல்வேன்!
இதைப் பற்றி என்னவரிடம் பகிர்ந்து கொண்ட போது அவரும் சில விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்! மகள் வழக்கம் போல் ஆர்வத்துடன் என்னிடம் கதையைக் கேட்டுக் கொண்டாள்! இந்தத் திரைப்படத்தில் குறிப்பிட்ட காட்சி ஒன்றில் காளிதாசர் இயற்றிய ‘குமார சம்பவம்’ என்ற நூலில் வரும் பாடலைக் கேட்டதும் சட்டென என் நினைவுக்கு வந்தது!
இமவான் மகளான பார்வதியை இமயமலையோடு ஒப்பிட்டுச் சொல்லும் பாடல் இது! என்னுடைய சமஸ்கிருத பாடத்தில் இந்தப் பாடலைப் பற்றி வாசித்த நினைவு வந்ததும் அந்தக் காட்சியை உடனே screen recording செய்து உடன் பயிலும் நட்புவட்டத்திடம் பகிர்ந்து கொண்டேன்! நிச்சயம் இது ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது!
கற்ற கல்வி எங்கு சென்றாலும் கை கொடுக்கும் என்பது எத்தனை உண்மையானது! கற்றது கையளவு கல்லாதது உலகளவு! இன்னும் தெரிந்து கொள்ள விஷயங்கள் ஏராளம் இருக்கின்றது! நேரத்தை வீணடிக்காமல் எதையாவது கற்றுக் கொள்வோம்! நிச்சயம் என்றாவது ஒருநாள் நம் வாழ்வில் பயன் தரும்!
நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்!
******
கோடை - 22 ஏப்ரல் 2025:
மலைக்கோட்டை நகரில் வெயிலுக்கா பஞ்சம்?? வெளுத்து வாங்கும் வெப்பமும், வியர்வை மழையும் நம்மை கட்டி போட்டு வீட்டுக்குள்ளேயே திணறடிக்கிறது! நல்லதொரு மழை பெய்தால் நன்றாக இருக்கும்!
கடந்த ஒரு மாதமாகவே தேர்வு தேர்வு என்று அதற்காக சிரத்தையுடன் படிப்பதும், வகுப்புகளை அட்டெண்ட் செய்வதும் பின்பு எல்லாவற்றையும் மறந்து விடுவதுமாகத் தான் சென்றது! ஞாயிறன்று தான் எழுத்துத் தேர்வும், நேற்று oral test என எல்லாவற்றையும் முடித்ததும் சற்றே நிம்மதி கிடைத்தது எனலாம்!
மலாய் குல்ஃபி!
உடனே நேற்றே பரிசோதனை ஒன்றை துவக்கி விட்டேன்! தற்சமயம் trendingல் உள்ள விஷயமாக பழங்களுக்கு உள்ளேயே குல்ஃபி ஸ்டஃப் செய்து செட் செய்வது! வீட்டில் இருந்த மாம்பழம் ஒன்றில் கொட்டையை எடுத்து விட்டு குல்ஃபி கலவையை அதில் விட்டு முயற்சி செய்து பார்த்தேன்! நன்றாகவே செட் ஆகியிருந்தது! கூடுதலாக மண் பானைகளிலும் விட்டு வைத்தேன்!
கருட சேவை!
திருவரங்கத்தில் இப்போது சித்திரை திருநாள் எனப்படும் விருப்பன் திருநாள் நடைபெற்று வருகிறது! ரங்கன் தினம் ஒரு வாகனத்தில் பவனி வருகிறார்! அதில் ஒரு பகுதியாக நேற்று மாலை கருட சேவை இருந்தது! வருடத்தில் ஒருமுறை எங்கள் வீட்டு வாசலில் நின்றே ரங்கனை கருட வாகனத்தில் காணும் பாக்யம் நேற்று கிடைத்தது!
ரங்கா! ரங்கா!
******
அவந்திகா - 24 ஏப்ரல் 2025:
நேற்றைய பொழுதில் ஆர்த்தோவிடம் செல்ல வேண்டிய வேலை இருந்தது! Arthritis வந்ததிலிருந்து அவ்வப்போது செல்வது தான் என்றாலும் நேற்று ஒரு சின்ன திட்டு ஒன்றில் கால் வைத்த போது வலது கால் முட்டியிலிருந்து "டக்" என்றொரு சத்தமும் அதைத் தொடர்ந்து வலியும் இருக்கவே சென்றிருந்தேன்!
மருத்துவர் என்னைப் பார்த்ததும் ரொம்ப நாளா நீங்க வரலையே! என்று சொல்லிக் கொண்டே முட்டியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அழுத்தியதும் வலிக்கிறது என்று சொன்னேன்! ஜவ்வு பிடிச்சிருக்கு! Strain ஆகியிருக்கு! என்று வலி நிவாரணத்திற்காக மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார்! இப்போது பரவாயில்லை!
அந்த மருத்துவரைக் காண வந்திருந்தவர்களில் ஒரு பெண்மணி வெளியே செல்லும் போது அவர் தன் கையில் வைத்திருந்த சிறிய வயர்க்கூடையில் இருந்து துணிப்பை ஒன்றை வெளியே எடுத்தார்! பின்பு அதை உதறினார்! அதிலிருந்து காலணிகள் வந்து கீழே விழுந்தன!!? வெளியே வைத்து விட்டுச் செல்ல பயம் போலும் என்று நினைத்துக் கொண்டேன்..:))
உண்மை தானே! மருத்துவமனைகளிலும், கோவில் வாசலிலும் விட்டுச் செல்லும் காலணிகளுக்கு என்றுமே உத்தரவாதம் இருந்ததில்லை! என்னுடையதும் கூட இப்படி போயிருக்கிறது!
யூட்யூபில் கூட அன்றொரு நாள் ஒரு ஷாட்ஸ் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு பெண்மணி வெளியே செல்லும் போது comfortable ஆக தான் அணிவதற்கு 5000 ரூ காலணி வைத்திருப்பதாகவும் மருத்துவமனைக்கு செல்ல 1000 ரூ காலணி ஒன்று வைத்திருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்...🙂
மனிதர்கள் பலவிதம்!!
மருத்துவரைப் பார்த்து விட்டு வீடு திரும்பும் வழியில் நுங்கு விற்றுக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் கேட்டேன்! மூன்று நுங்கு 20 ரூ என்றார் அந்தப் பெண்மணி! நூறு ரூபாய்க்கு சீவிக் கொடுங்க என்றேன்! இந்த இடத்தில் நுங்கு இருக்கும் என்று அனுபவத்தில் தான் தெரிந்து கொள்ள முடியும் என்று தெரிந்தது! ஒரு காயில் மூன்று நுங்குகள் வேறு வேறு இடத்தில் இருக்க அசால்ட்டாக அதை சீவி முழுதாக வெளியே எடுக்கிறார்!
அவர் அருகில் சிறுமி ஒருவள் அமர்ந்திருந்தாள்! அவரிடம் எத்தனாங் கிளாஸ் படிக்கிற? என்று என்னவர் கேட்டதும், வெட்கத்துடன் 4th std என்றாள்! உன் பேர் என்ன?? அவந்திகா என்றாள்! அழகா இருக்கு! என்றதும் சிரித்துக் கொண்டாள்! பை சொல்லி விட்டு கிளம்பினோம்!
நிச்சயமாக 'அவந்திகா' என்ற பெயருக்கான அர்த்தம் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள்! 'அவந்திகா' உஜ்ஜயின் நாட்டின் ராணியின் பெயர் என்று கூகுள் சொல்கிறது! இந்தித் தேர்வுகளில் அவந்திகா என்ற கதாப்பாத்திரத்தினைப் பற்றி எழுதியதாக எனக்கும் தோன்றுகிறது!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
3 ஜூலை 2025
இப்போதெல்லாம் துயரங்களிலும் உண்மையான மனிதர்களை அறிய முடிவதில்லை!
பதிலளிநீக்குசங்கரி படம் பற்றி சொல்லி இருக்கிறீர்கள். நான் இது மாதிரி சமயங்களில் முதலில் பார்ப்பது இசையமைப்பாளர் யார், என்னென்ன பாடல்கள் என்றுதான்! எனக்கு இந்தப் படத்தில் ஒரு பாடலும் நினைவுக்கு வரவில்லை. சென்று பார்க்க வேண்டும்.
அவ்வப்போது மழை வந்தாலும், கோடைகாலம் இன்னமும் முடியவில்லை என்பது போல இருக்கிறது காலநிலை. புழுக்கம், வியர்வை, சளி, இருமல்...
பதிலளிநீக்குநுங்கு சென்னையில் மூன்று 25 ரூபாய் என்று விற்றார்கள்.
எங்கள் ஊரில் நுங்கு சர்பத் பிரசித்தம். நுங்குடன் நன்னாரி சர்பத் கலந்து இளநீர் விட்டு கடகட கடகடன்னு ஸ்பூன் விட்டு நன்கு அடித்து தருவார்கள். ஆனந்தமாக இருக்கும்.
பதிலளிநீக்குகோவிலுக்கு செல்ல நானும் தனியாக செருப்பு வைத்துள்ளேன். பார்க்க கொஞ்சம் கீழடியில் இருந்து எடுத்து வந்தது போல் இருக்கும்.
இப்பலாம் யாருங்க துன்பத்துலயும் வராங்க, ரொம்ப அரிது.
பதிலளிநீக்குசங்கரி படம் கேள்விப்பட்டதே இல்லையே. நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்க்கறப்ப பார்க்கலாமோ என்று தோன்றுகிறது. படம் பார்ப்பது ரொம்பக் குறைவு
குல்ஃபி , பழ குல்ஃபி சூப்பர்
இங்கு நுங்கு 3 சுளைகள் 30 ரூ நம் வீட்டருகில்
அவந்திகா - என்ற பெயர் பார்த்ததும், பெரிய புகழ்பெற்ற!!!!! அவ்வப்போது பரப்பரப்பாகப் பேசப்படும் எழுத்தாளரின் மனைவியின் பெயர் என்று வாசித்த நினைவும் வருகிறது.
கீதா
பழ குல்ஃபி அருமை நானும் செய்துபார்க்கவேண்டும் என்று நினைப்பேன் ஆனால் சில்லென்று ஏதுவும் சாப்பிடுவதில்லை இங்கு ஒரு நுங்கு பத்து ருபாய்
பதிலளிநீக்கு