சனி, 19 ஜூலை, 2025

குளுகுளு பயணம் போகலாமா - பகுதி மூன்று - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட குளுகுளு பயணம் போகலாமா - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.  முந்தைய பகுதிகளுக்கான சுட்டி கீழே.


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி இரண்டு


பிளாஸ்டிக் இல்லா மலைப்பகுதி!








சென்ற பகுதியில் மேட்டுப்பாளையத்திலிருந்து காரில் கோத்தகிரிக்குச் சென்று கொண்டிருக்கும் விவரங்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன்! இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே நாங்கள் சென்று கொண்டிருந்தோம்! நண்பர் மோகன் ஒரு பயணப்பிரியர்! நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல இடங்களுக்கு பயணம் செல்பவர்! என்னவரும் ஒரு பயணப்பிரியர் என்பதால் இருவரும் பயணங்கள்  குறித்து நிறைய பேசிக் கொண்டு வந்தனர்!


நான் அவரிடம் எங்கள் வீட்டில் பயணம் என்றாலே அது எங்க ‘தல’ தான் என்று சொன்னேன்! எனக்கும் மகளுக்கும் பயணம் செய்வது என்றால் சற்று யோசிக்க வேண்டிய விஷயம்..:) எங்களின் travel sickness குறித்து அவரிடம் சொன்ன போது ஒரு முத்திரையை எனக்கு சொல்லித் தந்தார்! ‘இதை travel பண்றதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி பண்ணினா ஒண்ணும் பண்ணாது’ என்றார்! நானும் அதை உடனே செய்து கொண்டு வந்தேன்…:)


ஒரு குறிப்பிட்ட இடத்தில் forest officers சிலர் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்! என்னவென்று விசாரித்ததில் use and throw பிளாஸ்டிக் பாட்டில்கள், carry bags, என்று பிளாஸ்டிக்கை இதற்கு மேலே எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்பது தெரிய வந்தது! குடிநீருக்காக பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து வந்த வாகனங்களிலிருந்து அவை பறிமுதலும் செய்யப்பட்டது! 


இது மிகவும் வரவேற்க வேண்டிய விஷயம்! பிளாஸ்டிக் அரக்கனை அழிக்க அரசும் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு தான் வருகிறது! விழிப்புணர்வுடன் நாமும் அதற்கு ஒத்துழைப்பு தருவது முக்கியம்! இது குறித்து நண்பரிடமும் நான் சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டு வந்தேன்! பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்கிறார்கள் என்றால் இதற்கு மேலே பிளாஸ்டிக்கே எந்த விதத்திலும் இல்லையா??’ என்று!!


சிலுசிலுவென்ற காற்றில் பயணித்து கோத்தகிரியை நாங்கள் மெல்ல மெல்ல எட்டிக் கொண்டிருந்தோம்! இரண்டு மணிநேரத்தில் கோத்தகிரியின் அமைதியான சூழலை அனுபவிக்க வந்துவிட்டோம்! வழிநெடுக அந்த ஊர் மக்களையும், அங்குள்ள வீடுகளையும், கடைத்தெருவையும், கோவிலையும் பார்த்துக் கொண்டே தான் வந்தோம்! அந்த பகுதியில் உள்ள இடங்களின் பெயர்கள் வித்தியாசமாக இருந்தன!


சற்று நேரத்திலேயே நாங்கள் இரண்டு நாட்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் தங்கப் போகும் பதிவர் Amutha Krishna  அமுதாக்காவின் வீட்டிற்கு சென்றடைந்தோம்! 2014ல் சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர்(blogger) மாநாட்டில் பார்த்தது! இப்போது தான் மீண்டும் அமுதா அக்காவை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது! அக்காவும் ஒரு பயணக்காதலி! இந்தியாவின் பல இடங்களுக்கும் தைரியமாக solo trip செய்பவர்!









காரில் கோத்தகிரியை நெருங்க நெருங்கவே குளிர் தெரியத் துவங்கியது! வீட்டில் காலை வைத்ததும் அது நன்றாகவே தெரிந்தது! டெல்லியில் பத்து வருடங்கள் வசித்திருக்கிறேன் என்றாலும் அங்கு குளிர்காலம் தான் எனக்கு பிடித்தது என்று சொன்னாலும் கோத்தகிரியில் இருந்த இரண்டு நாட்களுமே நான் குளிர்கிறது என்று தான் சொல்லிக் கொண்டிருந்தேன்…:)


அமுதாக்காவிடம் நலம் விசாரித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்! அவரின் குடும்பத்தில் உள்ள அனைவருமே பயணத்தில் பெரும் ஆர்வம் கொண்டவர்கள் என்று அக்கா எங்களிடம் பகிர்ந்து கொண்ட போது அது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது! பயணங்கள் வாழ்க்கை குறித்த கற்றல்களையும், புரிதல்களையும் தரும் என்பது உண்மையே!


அந்த வீட்டின் வெளியே சற்றுநேரம் நின்று கொண்டிருந்தாலே மனதில் அமைதி கிடைக்கும் என்று சொல்லலாம்! இயற்கையின் அழகை அப்படியே ரசித்துக் கொண்டிருக்கலாம்! எதிரே கதிரவனின் ஜொலிக்கும் தோற்றமும், பச்சைபசேலென தேயிலைத் தோட்டங்களும், வண்ண வண்ண மலர்களும் என கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது!


நண்பர் மோகனுடன் வெளியே மதிய உணவை முடித்துக் கொண்டு ‘கொடநாடு வ்யூ பாயிண்ட்’ பார்க்க கிளம்பி விட்டோம்! வழியெங்கும் அழகை ரசித்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கையில் ஓரிடத்தில் காரை நிறுத்தி எங்களை இறங்கச் சொன்னார்! அங்கிருந்து சற்று தொலைவு பாதையில் ஏறிச் சென்றால் ஒரு தனியார் எஸ்டேட்டின் வ்யூ பாயிண்ட் இருந்தது! அந்த இடத்தில் நாங்கள் மட்டுமே நின்று கொண்டிருந்தோம் என்பது சிறப்பு! அப்படி ஒரு அமைதி!


Indrajit Rock என்று அங்கு எழுதியிருந்த பதாகையைப் பார்த்தவுடன் என்னவருக்கு தன்னுடன் பணிபுரியும் சர்தார்ஜி நண்பர் இந்திரஜித்தின் நினைவு வரவே அந்தப் பதாகையை அலைபேசியில் புகைப்படமெடுத்து அவருக்கு அனுப்பினார்! அவரும் உடனே மகிழ்ச்சியுடன் அதற்கு பதில் தந்தார்! 'bahut badiyaa photo hai bhai! Banao program baaki aage dekhenge!’ என்று..!! அந்த இடத்தை விரைவில் பார்க்க விரும்புவதாகச் சொன்னார்!


அழகான இடம்! இப்படியொரு இடத்தில் ஒரு புத்தகத்தை கையில் எடுத்து வந்திருந்தால் ஆழ்ந்து போயிருக்கலாம் என்று பேசிக் கொண்டோம்! என்னவரும் உன் சமஸ்கிருத பரீட்சைக்கு இங்கு அமர்ந்து படித்தாய் என்றால் முழு மதிப்பெண்கள் எடுப்பாய் என்று சொல்லிக் கொண்டிருந்தார்! இப்படியொரு இடம் பொது மக்களின் பார்வையில் படாத ஒரு இடமாக இருந்தது ஆச்சரியம்! இயற்கையை அலைபேசி கேமிராவில் சிறைபிடித்துக் கொண்ட பின் எல்லோரும் அங்கிருந்து நகர மனமில்லாமல் இறங்கி வந்தோம்!


அடுத்து நாங்கள் சென்ற இடம்?? மேலும் தகவல்கள் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.  பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

19 ஜூலை 2025


5 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    குளுகுளு கோத்தகிரி பயணம் வெகு சுவாரஸ்யமாக செல்கிறது. இயற்கையின் வனப்புகள் கண்களை கவர்கிறது. படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது.

    நம்மோடொத்த எண்ணங்கள் உள்ளவர்களோடு பயணம் செய்தால் அந்த பயணமே சிறப்பாக மறக்கவியலாததாக இருக்கும். அவ்விதமே உங்கள் பயணம் அமைந்துள்ளது. உடன் நாங்களும் வருகிறோம். நானும் அங்கிருப்பதைப் போன்றே உணர்ந்தேன். உங்களது பேச்சுக்கள், ரசிப்புக்களை நானும் ரசித்தேன்.

    இயற்கையின் அழகு, அமைதி, ரசிக்க வைக்கிறது . மேலும் தொடர்ந்து வருகிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. இயற்கையின் படங்கள் வெகு அழகு.  செல்லும் வழியில் பிளாஸ்டிக் இருந்தால் பறிமுதல் செய்யும் சோதனை பற்றி படித்ததும் மகிழ்ச்சி ஏற்பட்டது. 

    அப்பாடா...  இப்போதாவது செய்ய ஆரம்பித்திருக்கிறார்களே....

    பதிலளிநீக்கு
  3. படங்கள் வாவ் போட வைத்தன.! அதுவும் அந்த இரு மரங்களுக்கு இடையில் பூங்கொத்து வைத்தது போன்று அந்தச் செடி செம அழகு!!!

    ப்ளாஸ்டிக் பொருட்கள் பரிசோதனை நன்று, உங்களுக்குத் தோன்றிய அதே கேள்வி எனக்கும் எழுகிறது. கோத்தகிரி மேலே ஊட்டியில் கடைகள் இல்லையா? தண்ணீர் பாட்டில்கள் விற்காமலா இருப்பாங்க? ப்ரெட் பன் பிஸ்கட் எல்லாம் ப்ளாஸ்டிக் கவர்லதானே விக்கிறாங்க!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. படங்கள் எல்லாம் அட்டகாசம். பார்க்கப் பார்க்க, எனக்கு எப்படா அடுத்த வாய்ப்பு கிடைக்கும் என்று ஏக்கம் எழுகிறது!!!! ஹாஹாஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ப்ளாஸ்டிக் பொருட்கள் இப்ப சோதனை செய்யத் தொடங்கியிருக்காங்க...அதனால் இனி இன்னும் மெதுவாக கடைகள் எல்லாவற்றிலும் சட்டங்கள் வருமாக இருக்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....