திங்கள், 21 ஜூலை, 2025

குளுகுளு பயணம் போகலாமா - பகுதி நான்கு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இருபத்தி ஏழு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 





******


இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.  முந்தைய பகுதிகளுக்கான சுட்டி கீழே.


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி இரண்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி மூன்று


KODANAD VIEW POINT:










சென்ற பகுதியில் கோத்தகிரியில் உள்ள சில இடங்களைப் பார்க்கச் சென்ற கதையில் ‘இந்திரஜித் ராக்’ சென்றதைப் பற்றி எழுதியிருந்தேன்! அழகான பகுதி! அமைதியான இடமாகவும் இருந்தது சிறப்பு! அங்கேயிருந்து கிளம்ப மனமின்றி தான் நாங்கள் இறங்கினோம்! சற்றுத் தொலைவில் ஒரு சாலையின் இருபுறமும் லாவண்டர் நிறப் பூக்களாக அழகாக இருந்தது! கையில் தொட்டுப் பார்த்தால் வெல்வெட் போன்று அடர்வாக இருந்தது! அந்தப் பூவின் பெயர் தெரியவில்லை!


அந்த சாலையிலும் யாருமே இல்லாததால் கொஞ்சம் அலைபேசியின் கேமிராவுக்கு வேலை கொடுத்து நாங்கள் சில புகைப்படங்களை சுதந்திரமாக  தனியாகவும் சேர்ந்தும் என விதவிதமாக எடுத்துக் கொண்டோம்! அங்கிருந்து kodanad view pointக்கு சென்று சேர்ந்தோம்! இங்கு சில சுற்றுலாப் பயணிகளைப் பார்க்க முடிந்தது! பனிமூட்டமாக இருந்ததால் visibility சரியாக இல்லை!


நண்பர் மோகன் ‘அங்க தெரியறது பவானிசாகர்! இங்க மேட்டுப்பாளையம்! அங்க தெரியறது குன்னூர்! என்று எங்களிடம் வரிசையாக சொல்லிக் கொண்டிருந்தார்! பனிப்போர்வைக்குள் சிறைப்பட்ட இயற்கையின் அழகை ரசித்தோம்! தூரத்தில் தெரியும் மலைகள், பச்சைபசேலெனத் தெரியும் தோட்டங்கள், அதன் நடுவே வெண்மையாக தோற்றமளிக்கும் ஆறுகள் என எல்லாவற்றையும் புகைப்படங்கள் எடுத்தோம்! சற்று நேரம் இருந்து விட்டு கிளம்பிவிட்டோம்!


கோத்தகிரியில் சுற்றிப் பார்க்கவென சுற்றுலாத் தலங்கள் என்று ஓரிரு இடங்களைத் தவிர பெரிதாக ஏதும் இல்லை! நாங்களும் ஒரு மாறுதலுக்காக இரண்டு நாட்கள் அமைதியாக பொழுதைக் கழிக்கவே இங்கு சென்றோம் என்பதால் view pointஇலிருந்து கிளம்பி மீண்டும் வீட்டிற்கு சென்றுவிடலாம் எனப் புறப்பட்டு விட்டோம்! வழியில் மார்கெட் ஏரியாவில் ஒரு கடை  முழுவதும் சாக்லேட்ஸ், கேக், ஐஸ்க்ரீம் என காட்சிக்கு வைத்திருக்க இங்கு நன்றாக இருக்கும் என நண்பர் மோகன் சொல்லவே சிலவற்றை ருசி பார்த்தோம்!


வழியில் ‘பாண்டியன் பார்க்’ இருக்கு பாருங்க! இங்க flowers நல்லா இருக்கும்! சாயந்திரம் வீட்டிலிருந்து ஒரு வாக்கிங் மாதிரி கூட நீங்க நடந்து வரலாம்! என்றார்! சரியென்று நாங்களும் அந்த இடத்தைப் பார்த்துக் கொண்டு வீட்டிலிருந்து காலாற நடக்கலாமே எனக் கிளம்பினோம்! குளிர்காற்று சற்று இருப்பதால் மகளும் நானும் ஆளுக்கொரு shawl போர்த்திக் கொண்டு தயாரானோம்! மேடும் சரிவுமாக இருக்கும் மலைப்பகுதி சாலைகள் தான்! 


சாலையின் இருபுறமும் வீடுகள், தங்கும் விடுதிகள் என வரிசையாக இருந்தன! எல்லா இடத்திலும் விதவிதமான வண்ண வண்ண மலர்கள், தேயிலைத் தோட்டங்கள் என இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு பொறுமையாக நடக்கத் துவங்கினோம்! எனக்கு மூச்சு வாங்கத் துவங்கியது! அது சமதளம் இல்லை என்பதால் Arthritis  கால்களும் கெஞ்சத் துவங்கியது! அப்போது தான் திருச்சியிலேயே வைத்துவிட்டு வந்த என்னுடைய Knee supportம் நினைவுக்கு வந்தது! இதைச் சொன்னால் இவங்க ரெண்டு பேரும் என்னைத் திட்டுவாங்களே!!


பாண்டியன் பார்க்:











வழியெங்கும் விதவிதமான பூக்களாக பார்க்க முடிந்தது! ஒருபுறம் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் பொன்னொளியில் சூரிய அஸ்தமனம்! Bison என்று சொல்லப்படுகின்ற காட்டெருமை வேறு அசால்ட்டாக சாலையின் குறுக்கே சென்று கொண்டிருக்கிறது!


நாம ஒரு மாசம் இங்கேயே ஒரு வீடு எடுத்து தங்கிடலாம்னு தோணுது! என்ன ஒரு pleasant ஆன weather இல்ல! அமைதியா இருக்கு! இப்படி காலையும் சாயந்திரமும் வாக்கிங் போகலாம்! தினமும் வெளில சாப்பிட முடியாது! கொஞ்சமா சமைச்சு சாப்பிடத் தேவையானதை மட்டும் வெச்சுட்டு இருக்கலாம்! என்ன சொல்றீங்க? ம்ம்ம்! ஆமா நல்லா தான் இருக்கும்! இதோ பாரு இங்க ஒரு வீட்டு வாசல்ல கூட வீடு வாடகைக்குன்னு நம்பர் குடுத்திருக்காங்க! கேட்டுப் பார்ப்போமா?


இப்படி போய்க் கொண்டிருந்தது எங்கள் இருவரின் உரையாடல்…:) மனதுக்கு இதமான சூழல் அல்லவா! நாங்களும் சிறிது தூரம் எனக் கிளம்பி பேசிக் கொண்டே இரண்டு மேடுகள் இறங்கி நெடுந்தூரம் வந்திருந்தோம்! காரில் பயணித்த போது சிறிது தூரமாக தெரிந்தது..🙂 ‘பாண்டியன் பார்க்’ நாங்கள் வருவதற்குள் நேரமாகி விட்டது என்று மூடி விட்டார்கள்! வாசல் கேட்டின் வழியே உள்ளே சற்று பார்வையிட்டோம்! பல வண்ண மலர்களின் தோட்டம் மிகவும் அழகாகத் தெரிந்தது!


சரி! இவ்வளவு தூரம் வந்துட்டோம்! ஒரு டீ குடிச்சிட்டு போகலாமே என எதிரே இருந்த கடைக்குச் சென்று அமர்ந்தோம்! ஆம்! வெட்ட வெளியில் சில இருக்கைகளையும் மேஜைகளையும் போட்டு அழகாக அமைத்திருந்தார்கள்! தேயிலை எஸ்டேட்டை பார்த்துக் கொண்டே சூடாக தேநீரும் வடையுமாக ருசித்தோம்! உண்மையில் அந்தக் குளிருக்கு வடையும் டீயும் ஜோராக இருந்தது..🙂 


அந்த வடை வைத்து தந்திருந்த காகிதத்தை தூக்கிப் போட குப்பைக்கூடை ஒன்று அங்கே வைத்திருந்தும் நம் மக்கள் எல்லா இடத்திலும் செய்வதைப் போல் இங்கும் அந்தக் காகிதத்தை கசக்கி அங்கேயே அந்த அழகான பகுதியில் மலை போல் போட்டு வைத்திருந்தார்கள்! நம் வீடாக இருந்தால் இப்படி செய்வோமா?? 


அடுத்த நாள் எங்கு சென்றோம்?? மேலும் தகவல்கள் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.  பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

21 ஜூலை 2025


5 கருத்துகள்:

  1. படங்கள் மிகவும் சிறப்பு.  படங்களை பார்க்கும்போது கிளம்பி ஒருமுறை அங்கு சென்று வந்து விடலாமா என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  2. ​பனிமூட்டம் என்றாலும் படங்கள் எல்லாம் நன்றாக உள்ளன, அப்பாவுக்கு போஸ் கொடுக்கும் பெண், மலைமுகளில் கூடையுடன் நிற்கும் பெண், போட்டோ தானே சரி எடுத்துக்கோ என்று நிற்கும் காட்டெருமை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. நாம ஒரு மாசம் இங்கேயே ஒரு வீடு எடுத்து தங்கிடலாம்னு தோணுது! /

    ஹைஃபைவ்! நான் மேலே படங்களை ரசித்து பதிவையும் வாசித்துக் கொண்டே வந்தப்ப தோன்றிய வரி. பேசாம இங்க ஒரு வீடு எடுத்து தங்கிடலாமா எப்பவும் ஹிமாச்சல் ஹிமாச்சல் என்று எனக்குத் தோன்றும் சரி அங்க வரை போகமுடியாட்டாலும் இங்கானும்னு ....

    பனி சூழ் மலைகளின் படங்களும் எல்லாப்படங்களும் செமையா இருக்கு

    கோயம்புத்தூரில் இருந்தப்ப கூட போக முடியாம போன இடங்கள். கோவைக்குற்றாலம், ஆனைக்கட்டி, எல்லாம் போய் வந்திருக்கிறேன். ஆனால் நிறைய பகுதிகள் போகாமலேயே விடுபட்டுவிட்டன,

    கீதா

    பதிலளிநீக்கு
  4. தேயிலை எஸ்டேட்டை பார்த்துக் கொண்டே சூடாக தேநீரும் வடையுமாக ருசித்தோம்! உண்மையில் அந்தக் குளிருக்கு வடையும் டீயும் ஜோராக இருந்தது//

    ஆஹா! சூப்பரா இருந்திருக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. இயற்கை சூழலில் தாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோக்களும் அருமையாக உள்ளது.

    பாண்டியன் பார்க் செல்லம் வழி போட்டோக்களும், பனி படர்ந்த இடங்களைத்தும் அழகு நமக்குப் பிடித்த இடங்களென்றால் அங்கேயே ஒரு மாதம் தங்கி விடலாமெனத்தான் தோன்றும். அதன்படி உங்களின் உரையாடல்களை ரசித்தேன்.

    அந்த குளிருக்கு சிற்றுண்டியாக வடையும், தேநீரும் மனதுக்கும், உடலுக்கும் தெம்பாக இருந்திருக்கும். மேலும், பயணத்தில் உங்களுடன் தொடர்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....