செவ்வாய், 22 ஜூலை, 2025

குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஐந்து - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட குளுகுளு பயணம் போகலாமா - பகுதி நான்கு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.  முந்தைய பகுதிகளுக்கான சுட்டி கீழே.


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி இரண்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி மூன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி நான்கு


தொட்டபெட்டா






சென்ற பகுதியில் ‘பாண்டியன் பார்க்’ வரை சென்ற கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன்! இயற்கையை ரசித்தவாறே அங்கிருந்து மீண்டும் பேசிக் கொண்டே இரண்டு மேடுகளை மூச்சு வாங்க ஏறி வந்தேன்…:) இப்படி மலைப்பகுதியில் நடைப்பயிற்சி செய்வதும் ஒருவித வித்தியாசமான அனுபவம் தான்! அந்த ரம்மியமான சூழலில் நம் மனதும் லேசாக மாறிவிடுகிறது!


வீட்டுக்கு வந்ததும் சற்று நேரம் எல்லோருமாக அரட்டையடித்துக் கொண்டிருந்தோம்! இரவு உணவாக அமுதாக்காவின் கைப்பக்குவத்தில் சுடச்சுட பஞ்சு போன்ற இட்லியும், கறிவேப்பிலை சட்னியும், காரச் சட்னியுமாக ருசித்தோம்! நாமே சமைத்து நாமே சாப்பிடுவதைக் காட்டிலும் இன்னொருத்தர் சமைத்து சாப்பிடும் போது அன்று நன்றாகவே பசியும் எடுக்கும்! கூடுதலாக உணவும் உள்ளே செல்லும்! இப்படியான வாய்ப்புகள் எனக்கு அமைவது அபூர்வம்..🙂 அக்காவிடம் கறிவேப்பிலை சட்னியின் ரெசிபியும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்!


அமைதியான ஆழ்ந்த நித்திரைக்கு பின் விடிந்த காலைப்பொழுதில் சிறு சிறு வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின் சப்தத்துடன் தான் புலர்ந்தது! வெளிச்சம் கூட தாமதமாக தான் அங்கே வருகிறது! விடிந்ததும் அறையின் ஜன்னல் வழியேயும், வெளியில் சென்றும் இயற்கையை தான் ரசித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தோம்! பரபரப்போ பதட்டமோ இல்லாத அழகான காலைப்பொழுது! மனதில் ராஜா சாரின் இனிமையான பாடல்!


நம்ம ‘பிளான்’லயே இது இல்லையே! என்று சொல்வதைப் போல இருந்தது எங்களது அன்றைய நாள்! கோத்தகிரியில் பெரிதாக ஒன்றும் இல்லை! இன்றைய நாள் இங்கேயே இருக்க வேண்டாம் எனச் சொல்லி நண்பர் மோகன் எங்களை உதகைக்கு அழைத்துச் சென்றார்! காலையில் சீக்கிரமாகவே தயாராகி விட்டோம்! காலையில் சாப்பிடுவதற்கு சூடாக ஆப்பமும் சுவையான தேங்காய்ப்பாலும் செய்து தந்தார் அமுதாக்கா! அதை ருசித்து விட்டு கிளம்பி விட்டோம்!


கோத்தகிரியிலிருந்து கிளம்பி உதகைக்கு பயணிக்கத் துவங்கியதும் மேலே செல்லச் செல்ல குளிரும் கூடுதலாக ஆகிக் கொண்டே இருந்தது! குளிர்காற்றும், மழையுமாக ஏகாந்தமான அந்த சாலையில் வளைந்தும் நெளிந்தும் பயணித்து நாங்கள் முதலில் சென்றது தொட்டபெட்டா! நாங்கள் பயணித்த அந்த சாலையில் அப்போது எங்களைத் தவிர யாருமே இல்லை! பஞ்சடைத்தது போன்ற பனியும் இருள் விலகாத மரங்கள் அடர்ந்த சாலையில் பயணம் செய்தது மனதைக் கவர்ந்தது!


தொட்டபெட்டாவில் சுற்றுலாப் பயணிகள் நிறைய பேர் இருந்தனர்! இங்கு தமிழகத்தில் அப்போது பள்ளிகள் திறந்து விட்டபடியால் அங்கு வந்திருந்தவர்கள் பெரும்பாலும் வடக்கில் இருந்து தான் வந்திருந்தார்கள்! மழையும் காற்றும் உடலை நடுங்கச் செய்ய, காரை விட்டு இறங்கியதும் நானும் மகளும் முதலில் சென்ற இடம் ஸ்வெட்டர்கள், குல்லாக்கள் விற்கும் கடைக்கு…:)


பனிப்போர்வை:







கோத்தகிரியில் இரண்டு நாட்களை கழிக்கலாம் என்பது மட்டும் தான் எங்கள் திட்டமாக இருந்தது! ஊருக்கு கிளம்புவதற்கு முன் கூகுளில் பார்த்த போது அங்கு 15 டிகிரி என்று காண்பித்தது! பெட்டியில் ஸ்வெட்டர் எடுத்து வைக்கிறேன் என்று சொன்ன போது டெல்லிவாசியான என்னவர் உடனே 15 டிகிரியெல்லாம் ஒரு குளிரா! ஸ்வெட்டர்லாம் ஒண்ணும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்…:)


என்ன! இவர் இப்படி சொல்றாரே!!? சரி! எதற்கும் Shawlஆவது இருக்கட்டும் துப்பட்டா மாதிரியாவது போட்டுக்கலாம் என்று யோசித்து எனக்கொன்றும் மகளுக்கொன்றுமாக எடுத்து வைத்தேன்! ஆனால் எங்கள் ப்ளான் இப்படி மாறும் என்று கண்டேனா!! தொட்டபெட்டாவில் இறங்கினால் பல்லெல்லாம் டைப் அடிக்கிறது..🙂 குளிர்காற்று ஒருபுறம்! மழை ஒருபுறம்! அருமையான சூழல்! ஆனால் இவற்றையெல்லாம் ரசிக்கணும்னா முதலில் செய்ய வேண்டியது!!??


நேரே ஸ்வெட்டர்கள், குல்லாக்கள், சாக்ஸ்கள் போன்றவை விற்கும் ஒரு கடையில் தான் போய் நின்றேன்…:) எனக்கும், மகளுக்கும் ஆளுக்கொன்றாக பிங்க் நிறத்தில் அழகான ஸ்வெட்டர்களும், குல்லாக்கள், சாக்ஸ் என்று எல்லாவற்றையும் வாங்கிப் போட்டுக் கொண்ட பின் தான் அந்த இடத்தை சுற்றிப் பார்க்கவே நகர்ந்தேன்..🙂 இனி! நேரத்தை இனிமையாக செலவிடலாம் என்று கிளம்பினோம்!


நாங்கள் இருவர் மட்டும் தான் இப்படி எங்கள் கோலத்தை மாற்றிக் கொண்டோமே தவிர என்னவர் Half sleeve shirt உடன் தான் அன்று முழுவதும் சுற்றினார்! சரி! அவர் அப்படியே ‘காட்டானாக’ இருந்துட்டு போகட்டும்..🙂 நம்மளால எல்லாம் முடியாது..🙂 டெல்லியை விட்டு வந்து வருடங்கள் ஓடிவிட்டது! நண்பர் மோகன் அந்த இடத்தில் தன் காரை பார்க் செய்துவிட்டு வருவதற்குள் நாங்கள் எங்கள் காஸ்ட்யூமை மாற்றிக் கொண்டு விட்டோம் என்று தெரியாததால் எங்களைத் தேடி சென்று கொண்டிருந்தார். .🙂


தொட்டபெட்டாவில் அன்று நல்ல கும்பல் இருந்தது! மழையின் காரணத்தால் ரெயின்கோட் போட்டுக் கொண்டும் சிலர் காட்சி தந்தனர்! நாங்களும் அந்த கும்பலில் சேர்ந்து கொண்டு சுற்றிப் பார்க்கத் துவங்கினோம்! மஞ்சள் நிற ஸ்பீக்கர் அல்லது trumpet மலர்களால் அந்தச் சூழல் மிகவும் ரம்மியமானதாகவே இருந்தது! அங்கே ஒரு வாட்ச் டவரும் இருந்தது! அதன் மேலே ஏறி நின்றும் பார்த்தோம்! வ்யூ பாயிண்ட்டில் பனிப்போர்வைக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருந்தது இயற்கை! அதனால் visibility இல்லை! 


அங்கேயே ஒரு கடையில் குளிருக்கு இதமாக தேநீரை வாங்கி பருகி விட்டு, கடைகளில் இருக்கும் பொருட்களை விண்டோ ஷாப்பிங் செய்து விட்டு ஊட்டியை நினைவுபடுத்தும் விதமாக அழகான இரண்டு ஃப்ரிட்ஜ் மேக்னெட்கள் வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டோம்! விதவிதமாக ஃப்ரிட்ஜ் மேக்னெட்கள் சேகரிப்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளோம்..🙂 சமீபத்தில் மகள் கேரளாவுக்கு Industrial visitக்காக சென்ற போது கூட வாங்கி வந்தாள்!


அடுத்து எங்கே சென்றோம்?? மேலும் தகவல்கள் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.  பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

22 ஜூலை 2025


6 கருத்துகள்:

  1. நாமே சமைத்து சாப்பிடுவதை விட...  ஆமாம்.  உண்மை.  நாமே சமைத்ததை நாமே சாப்பிடுவதில் கொஞ்சம் இன்ட்ரஸ்ட் குறைவாகத்தான் இருக்கும்.  பசி உணர்வும் இருக்காது.

    மலைப்பாதையில் நடப்பது வித்தியாசமான அனுபவம்.  மேடுகளில் ஏறுவது ஒருவகை என்றால், தாழ்வான சாலைகளில் இறங்கும்போது நடப்பது போல ஓடுவது தனிரகம்!

    கோத்தகிரி ஒரே ஒருமுறை பார்த்திருக்கிறேன்.  வழக்கம்போல படங்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. இப்படி மலைப்பகுதியில் நடைப்பயிற்சி செய்வதும் ஒருவித வித்தியாசமான அனுபவம் தான்! அந்த ரம்மியமான சூழலில் நம் மனதும் லேசாக மாறிவிடுகிறது!//

    இது நல்லதொரு பயிற்சி அதாவது வேறு ஆரோக்கியக் குறைபாடுகள் இல்லாதவங்களுக்கு. அது போல கடற்கரையில் மணலில் நடப்பதும். கடைசி வரியை டிட்டோ செய்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஆதி, குளிர்பழக்கமாகிவிட்டதால் வெங்கட்ஜி க்கு இதெல்லாம் ஜூஜுபி.

    கோத்தகிரி, குன்னூர், தொட்டபெட்டா எல்லாம் என் லிஸ்டில்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. குன்னூரில் பிறந்து வளர்ந்த , படுகா இனத்தைச் சேர்ந்த என் நட்பு (என் மகனைவிடவும் சிறியவர்) அங்கு அழைத்துக் கொண்டே இருந்தார். இப்பவும். இப்ப வர் கோயம்புத்தூரில் வேலை செய்கிறார்.

    என்னை அம்மா என்றுதான் அழைப்பார். இப்பவும் சொல்வார் வாங்க நாம குன்னூர் போய் எல்லா இடமும் சுத்திப் பார்க்கலாம்னு. இப்ப எங்க போவது?

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அருமையான காட்சிகள் படங்கள்,

    நல்ல விவரணம். தொட்டபெட்டா, 15 டிகிரி என்பதெல்லாம் வட இந்தியர்களுக்கு அங்கு வாழ்ந்து பழகியவர்களுக்குப் பொருட்டே இல்லாமல் இருக்கலாம். எங்களைப் போன்றவர்களுக்கு 25ற்குக் குறைந்தாலே தாங்க முடியாமல் போகும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பயணப் படங்கள் அனைத்தும் அழகாக உள்ளன. உங்கள் பயண கட்டுரை நீங்கள் சென்ற விபரங்கள் அனைத்தும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. தினமும் வீட்டில் நாமே செய்து சாப்பிடுவது சற்று போரடிக்கும் சமயத்தில் சென்றவிடத்தில் பிறர் செய்து தந்தால், நல்ல பசியும், ருசியுமாக உணவு இருக்குமென்பது உண்மைதான். நானும் இதில் அனுபவபட்டுள்ளேன்.

    நாங்கள் மதுரையில் பத்து வருடங்களுக்கும் மேலாக இருந்தும் ஊட்டி சென்றதில்லை.என் இளைய மகன் குடும்பம் இப்போது மூன்று நாட்களாக ஊட்டி சென்று விட்டு பின் இன்றுதான் திரும்பி வந்தார்கள். நல்ல குளிர்தான் எனச் சொன்னார்கள்.

    இங்கும் இப்போது விடாமல் மழை பெய்வதால் குளிர் வரத் துவங்கியுள்ளது. தொடருடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....