புதன், 23 ஜூலை, 2025

குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஆறு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஐந்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.  முந்தைய பகுதிகளுக்கான சுட்டி கீழே.


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி இரண்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி மூன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி நான்கு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஐந்து


உதகை மலர்க் கண்காட்சி










சென்ற பகுதியில் தொட்டபெட்டாவில் நாங்கள் எங்கள் நேரத்தை எப்படி செலவிட்டோம் என்பதைப் பற்றி சொல்லியிருந்தேன்! பனிபடர்ந்த இயற்கையும், பூத்துக் குலுங்கும் மலர்களும், அங்கே வந்திருந்த சுற்றுலாவாசிகளும், அங்கே போடப்பட்டிருந்த கடைகளில் விதவிதமான குளிர்கால உடைகள், தொப்பிகள், உணவுக்கடைகள் என்று எல்லாவற்றையும் பார்த்த நிறைவில் எங்களின் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்கத் தயாரானோம்!


அங்கிருந்து கிளம்பி நாங்கள் பயணம் செய்து சென்ற இடம் உதகை பொட்டானிக்கல் கார்டன்! நண்பர் மோகன் எங்களை கார்டனின் நுழைவாயில் அருகே விட்டுவிட்டு சென்று விட்டார்! அவருக்கு work from home என்பதால் காரில் அமர்ந்தோ ஏதேனும் ரெஸ்டாரண்ட்டில் அமர்ந்தோ தன் பணியை செய்து கொள்வாராம்! “ பொறுமையா பார்த்துட்டு கால் பண்ணுங்க சார்! நேரா லஞ்சுக்கு போயிடலாம்! என்று சொல்லிச் சென்றார்!


நாங்கள் சென்றிருந்த போது உதகை மலர்க் கண்காட்சி முடிந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது! நுழைவாயிலில் நிறைய சுற்றுலாவாசிகள் காணப்பட்டனர்! இங்கே நுழைவாயில் கட்டணமாக நபருக்கு 100ரூ வசூலிக்கிறார்கள்! நுழைவாயில் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம்! எங்கு திரும்பினும் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் விதவிதமான மலர்களாக காணப்பட்டன! இதுபோன்ற இடங்களில் எனக்கு நின்று நிதானமாக பார்க்கப் பிடிக்கும்!


டெல்லியில் வசித்த போது மூன்று அல்லது நான்கு முறை ஜனாதிபதி மாளிகையின் உள்ளே அமையப்பெற்ற ‘முகல் கார்டன்’ தற்சமயம் ‘அம்ருத் உத்யான்’ என்ற  பெயர் கொண்ட தோட்டத்திற்கு சென்றிருக்கிறேன்! அதில் பார்வையிட வருடம் ஒருமுறை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும்! அங்கு பலவித அழகிய மலர்களை பார்த்து ரசித்திருக்கிறேன்! என்னுடைய வலைப்பூவிலும்(blog) ‘மாளிகை தோட்டத்தில்’ என்ற பதிவுகளில் அங்கு சென்ற அனுபவத்தை விரிவாகவும் எழுதியிருக்கிறேன்! அவை சஹானா இணைய இதழிலும் வெளியானது!


அதை நினைவுப்படுத்தியது இந்த பொட்டானிக்கல் கார்டன்! அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அழகிய மலர்களை பார்த்து ரசித்துக் கொண்டே சென்றோம்! டேலியா, ரோஜா, பேன்சி, டெய்சி, பால்சம், Robster claw என்று ஒவ்வொன்றும் அதன் நிறங்களிலும் ரகங்களிலும் மனதைக் கவர்ந்தது! சின்ன சின்ன தொட்டிகளில் வரிசையாக அடுக்கி வைத்திருந்தார்கள்! அதன் ரகத்தை பொறுத்தும் பிரித்து வைக்கப்பட்டிருந்தது! பரந்து விரிந்த தோட்டம் என்பதால் நிறைய நடக்க வேண்டியிருந்தது!


இந்த பொட்டானிக்கல் கார்டனுக்கு நான் வருவது இது இரண்டாம் முறை! மனதுக்கு நெருக்கமான இடமும் கூட! இருபது வருடங்களுக்கு முன் பதிவு செய்ய தவறிய விஷயத்தை எதிர்பாராமல் எதேச்சையாக இங்கு வந்திருக்கும் இந்த வேளையில் செய்து விட வேண்டும் என்று நினைத்தேன்! இத்தனை வருடங்களில் என் உடலிலும் மனதிலும் எவ்வளவோ மாற்றங்கள்!! ஆனால் அன்றைய நாளுக்கு செல்ல முடியுமா??


சிறப்புமிக்க நிழற்படம்:



குளிர்ந்த சூழலில் பூத்துக் குலுங்கும் மலர்களைப் பார்க்கும் போது மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியும் உற்சாகமும் நம்மைப் பற்றிக் கொண்டுவிடுகிறது! இன்னும் அந்தப் பக்கம் பார்க்கல! இன்னும் இந்த சைடெல்லாம் பார்க்கல! என்று சொல்லிக் கொண்டு எதையும் தவற விடக்கூடாது என்ற எண்ணத்துடன் பார்த்துக் கொண்டு வந்தேன்!


தொடக்கத்தில் சொன்னது போல் இந்த பொட்டானிக்கல் கார்டன் என் மனதுக்கு நெருக்கமான இடமும் கூட! எங்கள் திருமணம் முடிந்த மூன்றாம் நாள் அப்போது உதகையில் வசித்த என் நாத்தனாரை திரும்ப கொண்டு விடுவதற்காக வந்திருந்தோம்! அவர் உதகையின் charing cross பகுதியில் தான் வசித்தார்! அங்கிருந்து நடக்கும் தொலைவில் இந்த பொட்டானிக்கல் கார்டன் என்பதால் கார்டனை பார்த்து விட்டு வரலாம் என நானும் என்னவரும் கிளம்பிக் கொண்டிருந்தோம்!


அதைப் பார்த்த என் நாத்தனாரின் பிள்ளைகள் இருவரும் நாங்களும் வருவோம் என எங்களுடன் வந்தனர்! நாத்தனாரின் பிள்ளை வழியெங்கும் தன் மாமாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தான்! கார்டனிலும் அதே அதே..🙂 எங்கள் இருவரையும் பேசவே அவன் விடவில்லை…:) பொறுமையிழந்த என்னவர் அவனிடம், “டேய்! மாமாவுக்கும் மாமிக்கும் கல்யாணமாகி மூணு நாள் தாண்டா ஆகறது! கொஞ்சம் எங்கள பேச விடேண்டா! அங்க போய் விளையாடு! போகும் போது அழைச்சிண்டு போறேன்!” என்று சொன்ன இடம் இது..🙂 


எங்கள் மகள் இதை ‘சரித்திரத்தில் இடம் பெற்ற இடம்’ என்பாள்..🙂 அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இடத்தில் அப்போது புகைப்படம் எதுவும் எடுத்துக் கொள்ள கேமிராவோ அலைபேசியோ இல்லாத காலகட்டம்! அந்த தருணத்தை பதிவு செய்து கொள்ளவே இல்லை..🙂 ஆனால் எதிர்பாராமல் எதேச்சையாக அமைந்த இந்த தருணத்தில் எடுத்துக் கொள்ளணும் என நினைத்தேன்! 


அன்றைய நாளுக்கும் இன்றைய நாளுக்கும் இடையேயான இடைவெளி 23 வருடங்கள்!! இத்தனை வருடங்களில் எங்கள் இருவரிடமும் உடலளவிலும் மனதளவிலும் எவ்வளவோ மாற்றங்கள் வந்திருக்கின்றன! அன்று புகைப்படம் எடுத்திருந்தால் அன்றைய மனநிலை எனக்கு இவரைப் பற்றி எதுவும் தெரிந்திருக்காது! அப்பாவும் அம்மாவும் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை! எந்த எதிர்பார்ப்பும் என்னிடத்தில் இருந்ததில்லை! ஆனால் இன்று எடுத்துக் கொள்ளப் போகும் புகைப்படத்தில் இந்த 23 வருடத்து அன்பும், புரிதலும் நிறைந்திருக்கிறது!


இந்த இடம் தான்! வெட்டவெளியான புல்வெளிப் பகுதி! நல்லா ஞாபகம் இருக்கு! இங்க நின்னுண்டு தான் பேசிண்டு இருந்தோம்! இல்ல இல்ல! நீங்க மட்டும் தான் பேசிண்டு இருந்தீங்க! அப்போ நா எங்க பேசினேன்..🙂 சரி! சரி! இப்போ நான் தான் பேசறேன் போறுமா..🙂 வாழ்க்கை ஒரு சக்கரம் இல்லையா..🙂 கண்ணா! எங்க ரெண்டு பேரையும் ஃபோட்டோ எடுக்கறியா?? ஸ்மைல் ப்ளீஸ்!


மேலும் தகவல்கள் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.  பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

23 ஜூலை 2025


8 கருத்துகள்:

  1. பொய்களுக்குதான் காலம் என்பதால் உண்மைகள் ஊமைகளாகி விடுகின்றன!


    மலர்கள் மனதுக்கு இதம் தரக்கூடியவை.  மனமும் அந்த மலர் போலவே மலர்ந்து விடும்.

    நினைவுப்படுத்தியது  =  நினைவுபடுத்தியது 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். மலர்களைப் பார்க்கும் போது மனமும் லேசாகி விடுகிறது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. இன்றைய வாசகம் யதார்த்தம். உண்மைக்கு ஆதாரங்கள் பல தேவைப்படுகின்றன என்பதே அதன் தோல்வி இல்லையா? எவ்வளவு வருத்தமான ஒன்று இல்லையா? இதை நான் ஒன்றில் பயன்படுத்தியிருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொய்களுக்கு தான் காலம்! உண்மைக்கு நிறைய ஆதாரங்கள் தேவைப்படுகிறது! ஆனால் பொய்களுக்கு அப்படியல்ல! நொடியில் நம்பி விடுவார்கள்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  3. மலர்கள் கொத்தாக அழகு என்றல அடுத்து இயற்கையான மலர்களால் அமைக்கப்பட்ட கோவில் போன்ற ஒன்றோ? இங்கும் மலர் கண்காட்சியில் இப்படிப் பல செய்யப்படுமே.

    உதகை மலர்க்கண்காட்சி ஒரு முறை பார்த்திருக்கிறேன். கேரளத்துப் பக்கத்திலிருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்குள் நுழைந்த போது. படங்களும் எடுத்திருந்தேன் பகிர்ந்த நினைவு.

    இங்கு வந்த பிறகு பெரும்பாலும் ஒவ்வொரு வருடமும் செல்வதுண்டு.

    பொட்டானிக்கல் கார்டனில் உங்கள் பழைய நினைவுகள் புன்னகைக்க வைத்தன!!!!

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலர் கண்காட்சி உண்மையில் கொள்ளை அழகு! அங்கு அமைக்கப்பட்டிருந்த அமைப்புகளும் அழகு தான்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  4. புகைப்படங்கள் எல்லாம் மிகவும் அருமை.

    23 வருடங்கள் கழிந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க பூங்காவில் அதே இடத்தில் அப்போதையதை நினைவுகூர்ந்து படமும் எடுத்துக் கொண்டது, அதை உங்கள் மகள் படம் பிடித்தது, உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். உண்மையில் அன்று இப்படியொரு நிகழ்வு நிகழும் என்று நினைத்தும் பார்க்கவில்லை! மிகவும் மகிழ்வாக உணர்ந்தேன்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....