சனி, 26 ஜூலை, 2025

குளுகுளு பயணம் போகலாமா - பகுதி எட்டு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.  முந்தைய பகுதிகளுக்கான சுட்டி கீழே.


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி இரண்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி மூன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி நான்கு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஐந்து


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஆறு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஏழு


மினி ரயில்:






சென்ற பகுதியில் படகு இல்லத்தில் படகு சவாரி செய்வதற்கு சென்றதைப் பற்றி சொல்லியிருந்தேன்! எங்களுக்கான படகு வந்ததும் pihu, அவள் அப்பா, மற்றும் நாங்கள் மூவரும் அமர்ந்து கொள்ள எங்கள் படகு சவாரியும் துவங்கியது! ஏரியின் அழகும் நீரின் சலசலப்பும், குளிர்ந்த உதகையின் அழகும் என ரசித்துக் கொண்டே சென்றேன்! நடுநடுவில் மஜா உண்டாக்குவதற்கு படகோட்டி ஏதோ செய்ய படகு இப்படியும் அப்படியுமாக சாய்ந்து சாய்ந்து சென்றது! எங்கள் எல்லோரையும் அவரே ஃபோட்டோவும் எடுத்துத் தந்தார்!


ஏரியின் மற்றொரு கரை வரைச் சென்று ஒரு அரைவட்டமாக சுற்றி வந்தார்! ஒரு பத்துநிமிடம் இப்படி சுற்றி வந்திருப்போம்! இதற்கு ஆன தொகை 800ரூ! அவரே இன்னொரு ரவுண்ட் வேண்டுமானாலும் அடிக்கிறேன் கூட 200ரூ குடுங்க என்றார்! என்னவரும், பிஹுவின் அப்பாவும் இருவருமே வேண்டாமென சொல்லி விட்டனர்! படகில் செல்லும் போது ஒருபுறம் Toy train ஒன்று புலியின் வாய் போன்ற குகைக்குள் செல்வதைப் போன்று இருந்தது! நானும் கூட இதை பிஹுவிடம் காண்பித்துக் கொண்டிருந்தேன்!


சரி! அதற்கு வேண்டுமானால் செல்லலாமே என்று அடுத்து அங்கு தான் சென்றோம்! அங்கும் பிஹு ஃபேமிலியைச் சந்தித்தோம்! இங்கு அவள் அம்மாவையும் குட்டித் தம்பியையும் பார்க்க முடிந்தது! அவன் இந்த ட்ரெயினிலும் ஏற பயப்படுகிறானாம்…:) நாங்கள் இந்த ட்ரெயினில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகளை எடுத்தோம்! நபர் ஒன்றுக்கு 60 ரூ! இந்த பரந்து விரிந்த ஏரியைச் சுற்றி ஒரு ரவுண்ட் வரலாம் என்று நினைத்தேன்!


நான்கு compartment கொண்ட இந்த குட்டி ரயிலில் ஏறி நாங்கள் அமர்ந்ததும் பிஹுவும் எங்களுடன் அமர்ந்து கொண்டாள்! பயணமும் துவங்கியது! இதுபோன்ற குட்டி ரயிலில் டெல்லி Rail museumல் பயணித்திருக்கிறேன்! அதில் ஒரு பெரிய ரவுண்டாக இருக்கும் அது! குகைகள் எல்லாம் கூட வரும்! அதில் பயணித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது! ஆனால் இது சும்மா முன்னாடியும் பின்னாடியுமாக நாலு அடிகள் தான்..🙂 இறங்கி நடந்து விடலாம் போலிருந்தது…:) டூரிஸ்ட் ப்ளேஸ் என்று இப்படியும் வசூல் செய்கிறார்கள்!


நேரத்தை கடத்த வேண்டுமே என்று பொறுமையாக சுற்றிக் கொண்டிருந்தோம்! ஆங்காங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதும், Hot chocolate சாப்பிடுவதும் மழைக்காக ஏதோ ஒரு இடத்தில் ஒதுங்குவதும் என்று நேரத்தை செலவிட்டோம்! அங்கே குழந்தைகளுக்காக குட்டி கார் ரேசிங், ஹாரர் மூவீஸ் என்று அம்..மா..மா என்று அவ்வப்போது கத்துவதும் ஒருவரின் இரு கால்கள் மட்டும் தெரிவது போன்று எல்லாமே அங்கு இருந்தது! அதையெல்லாம் ரசிக்கக்கூடிய மனநிலையில் நாங்கள் இல்லை..🙂


படகு இல்லத்தை விட்டு வெளியே வந்ததும் நண்பர் மோகனுக்கு கால் செய்து சொன்னோம்! அவர் வருவதற்குள் படகு இல்லத்தைச் சுற்றி சற்று நடப்போம் என்று சென்று கொண்டிருந்தோம்! குதிரை சவாரி கூட வெளியே இருந்தது! எதிரே இருந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து சற்று நேரத்தை செலவழிப்போமே என்று உள்ளே சென்றோம்! ஹோம் மேட் சாக்லேட்டுகள், ஊட்டி வர்க்கி என்று எதை எடுத்துப் பார்த்தாலும் அந்தக் கடை ஊழியர்கள் டேஸ்ட் பார்க்க சிறிது தந்தனர்..🙂 கொஞ்சம் சாக்லேட்டுகளை வாங்கிக் கொண்டு ஆளுக்கொரு ஐஸ்க்ரீம் வாங்கி ருசித்தோம்..🙂


அடுத்து ரயில்வே ஸ்டேஷனுக்குச் செல்ல வேண்டும்!


மலை ரயிலில் பயணம்:










படகு சவாரி செய்ததைத் தொடர்ந்து வெளியே வந்து நண்பர் மோகன் வரும் நேரத்திற்குள் ஒரு சூப்பர் மார்க்கெட்டை சுற்றி வந்தோம்! நண்பர் மோகனும் அங்கே  வந்து விட அவருடன் காரில் ஏறி ஏரியை ஒரு வலம் வந்தோம்! அடுத்து நாங்கள் சென்று நின்றது உதகை ரயில் நிலையத்தில்!


இந்த இடத்தில் ஒரு பின்புலக் கதை! வெயிட் வெயிட்! ஃப்ளாஷ்பேக் எல்லாம் இல்லங்க! இது முதல்நாள் நிகழ்ந்த விஷயம் தான்! மறுநாள் உதகைக்கு போகலாம் என்று முடிவெடுத்தவுடனே நண்பர் மோகன் செய்த முதல் காரியம் என்னவென்றால் மாலை உதகையிலிருந்து குன்னூர் வரை செல்லக்கூடிய Toy train என்று சொல்லப்படும் மலை ரயிலில் நாங்கள் மூவரும் பயணிப்பதற்கான டிக்கெட்டை புக் செய்தது தான்!


அந்த டிக்கெட்டும் அவ்வளவு எளிதில் கிடைக்காதாம்! எங்களுக்கு கிடைத்தது! ‘சார்! ஒரு ஜன்னல் சீட் கிடைச்சாலும் போதும்! மாத்தி மாத்தி உட்கார்ந்து நீங்க எல்லாரும் ரசிக்கலாம்! ரொம்ப நல்லா இருக்கும் சார்! ‘ என்று அவர் அவ்வளவு மகிழ்ச்சியுடன் சொன்னார்! நாங்கள் மூவரும் அந்த ரயிலில் பயணிக்க வேண்டும்! இயற்கையின் அழகை ரசிக்க வேண்டும்! என்பது அவரது ஆசையாகவும் இருந்தது! அன்பு சூழ் உலகு!


எங்களை உதகையின் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு அவர் குன்னூருக்கு கிளம்பிவிட்டார்! நாங்கள் இந்த மலை ரயிலில் பயணித்து குன்னூரைச் சென்றடைந்ததும் அங்கேயிருந்து காரில் அவருடன் கோத்தகிரிக்கு செல்வதாக திட்டம்! ரயில் நிலையத்தின் உள்ளே சென்று ப்ளாட்ஃபார்மில் காத்திருக்கத் துவங்கினோம்! அதற்குள் அங்கே சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டோம்!


குறிப்பிட்ட அந்த குட்டி மலை ரயிலும் ஆடி அசைந்து குன்னூரிலிருந்து வந்து சேர்ந்தது! அதிலிருந்து இறங்க வேண்டியவர்கள் இறங்கியதும் எல்லோரும் ஏறத் துவங்கினோம்! இந்த ரயிலில் first class பெட்டியும் கூட இருக்கிறது! எங்கள் பெட்டியில் ஏறி அமர்ந்தோம்! பேருந்தின் இருக்கை போன்று தான் இருந்தது! அன்று நல்ல கும்பலும் கூட! சுமார் ஒரு மணிநேரப் பயணம் தான்! விசில் அடித்தவாறு எங்கள் ரயிலும் கிளம்பியது!


வெலிங்டன், அரவங்காடு, லவ்டேல், கெத்தி என்று நான்கு ஸ்டேஷன்களை கடந்து செல்ல வேண்டும்! கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையின் அழகினுள் ஆழ்ந்து ரசித்தபடியே நாங்கள் பயணம் செய்து கொண்டிருந்தோம்! ஜன்னல் இருக்கையில் அமர்ந்தால் நன்கு ரசிக்கலாம் என்று தான் நண்பர் மோகன் சொல்லியிருந்தார்! ஆனால் அது எங்களுக்கு கிடைத்த சைடு அல்ல! அதற்கு எதிர்ப்புறம்! ஆனாலும் தெரிந்தவரையில் பார்த்து ரசித்துக் கொண்டே குன்னூரை வந்தடைந்தோம்!


மேலும் தகவல்கள் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.  பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

26 ஜூலை 2025


6 கருத்துகள்:

  1. இனிமையான பயணம்,.  ரயில் பயணம் ரசிக்கக் கூடியதாய் இருந்திருக்கும்.  படகு சவாரி நிறைய பேர்களுக்கு ஒத்துக்க கொள்ளாது.  தலைசுற்றல் வந்து விடும்!

    பதிலளிநீக்கு
  2. இன்றைய வாசகம் உண்மைதான் என்றாலும் விதிவிலக்குகளும் இருக்கின்றனர்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. மலை ரயில் பயணம் ஆஹா!!! ஊட்டி டாய் ரயிலில் பயணித்தது இல்லை. ஆனால் கால்கா சிம்லாவுக்கு பயணித்ததுண்டு. போவதும் வருவதும் என்று. நான் மறக்கமுடியாத ரசித்த ரயில் பயணம். இனியும் வாய்ப்பு கிடைத்தாலும் அந்த ரயிலில்தான் பயணிக்க ஆசை. சாலைவழி அல்ல.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இன்றைய வாசகமும் அதில் உள்ள படமும் 👍
    படங்களும் அருமை 🥰
    எனக்கும் இந்த Toy train ல் செல்ல வேண்டும் என்று மக ஆசை. ஆனால் டிக்கெட் கிடைப்பது சிரமம் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். உதகை செல்லும் போது இதை மனதில் வைத்து கொள்ள வேண்டும்.
    உங்கள் பயண அனுபவம் எங்களுக்கு நல்ல தகவல்கள்.
    வாழ்த்துக்கள் 💐

    பதிலளிநீக்கு
  5. ஆம், ஊட்டியில் படகு சவாரி குறைவான தூரம் தான்,

    டாய் ரயில் பயணம் இனிமையாக இருந்திருக்கும். எனக்கும் அப்படியான வாய்ப்பு ஏப்ரல் 2024ல் கிடைத்தது. கால்காவிலிருந்து சிம்லாவிற்குச் சென்றது மறக்கமுடியாத இனிய பயணம்.

    ஊட்டி நாங்கள் இருக்கும் ஊரிலிருந்து 3 மணி நேரம் பயணம்தான் குடலூர் வழி எனவே பெரும்பாலும் காரில் பயணித்துவிடுவதுண்டு. எனவே ஊட்டிக்கு டாய் ரயிலில் பயணிக்கும் அனுபவம் இதுவரை கிடைக்கவில்லை.

    லவ்டேல், கெத்தி என்பதைப் பார்த்ததும் எனக்கு மூன்றாம் பிறை கமலஹாசன் ஸ்ரீதேவி ரயில் நிலையக் காட்சி திடீரென்று மனதில் நினைவுக்கு வந்தது.

    படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன.

    துளசிதரன்



    பதிலளிநீக்கு
  6. வாசகம் அருமை.
    உதகமண்டலம் பேர் பலகை முன் நீங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட படம் அழகு. எல்லா படங்களும் அருமை. நாங்கள் ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்த நினைவுகள் வந்து போகிறது. குன்னூர் பூங்கா மிக அருமையாக இருக்கும்..

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....