சனி, 16 மே, 2026

காஃபி வித் கிட்டு - 239 - சரியான நேரத்தில் சரியான விளம்பரம் - முகத்தில் அறைந்தால் போல்! - கிர் வனத்திலிருந்து - மந்திரப் பெட்டி - கிரிதரன் - நாய்வால் - கால்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பயணத்தின் முடிவு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் விளம்பரம் :  போரும் ஒரு விளம்பரமும்


குஜராத்தினைச் சேர்ந்த அமுல் தனது விளம்பரங்களால் பலரையும் கவர்ந்து இழுக்கும்.  அப்போதைக்கு அப்போதே என்னென்ன விஷயங்கள் செய்தியாக இருக்கிறதோ அந்த விஷயத்தினை வைத்தே அவர்கள் ஒரு சிறப்பான விளம்பரத்தினை உருவாக்கி பல இடங்களில் Billboard வைப்பார்கள். அது மிகவும் பிரபலமாகி விடும். சில மறக்க முடியாத விளம்பரங்கள் அமுல் நிறுவனத்தினை வளர்ச்சி அடையச் செய்ததில் பெரும்பங்கு வகித்தன.  சமீபத்தில் Himalaya நிறுவனமும் இப்படி ஒரு விளம்பரத்தினை தங்கள் Billboard மூலம் வெளியிட்டார்கள்.  ஈராக் உடன் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்காவினை கிண்டல் செய்யும் விதமாக வெளியிடப்பட்ட அந்த Billboard கீழே! 



******

 

இந்த வாரத்தின் காணொளி : முகத்தில் அறைந்தால் போல்!


மேலே கொடுத்திருப்பது Billboard விளம்பரம் என்றால், இங்கே தந்திருப்பது ஒரு காணொளி விளம்பரம்.  தண்ணீர் சுமந்து வரும் மூன்று பெண்கள் கொடுக்கும் அறை வழி சொல்ல வரும் கருத்தும் அவர்கள் விளம்பரம் செய்யும் பொருளும் நன்று. கஷ்டப்பட்டு சுமந்து வரும் தண்ணீர் வீணானால்… தண்ணீரின் முக்கியத்துவம் சொல்வதோடு ஒரு பொருளையும் விளம்பரம் செய்திருக்கிறார்கள்.  இது வரை பார்த்ததில்லை என்றால் பாருங்களேன்!

******


பழைய நினைப்புடா பேராண்டி : கிர் வனத்திலிருந்து


2018-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - கிர் வனத்திலிருந்து - இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  குஜராத் மாநிலத்தில் ஒரு வாரம் நண்பர்களுடன் பயணித்தபோது கிடைத்த அனுபவங்கள் வெளியிட்ட ஒரு பயணத் தொடரின் பகுதியிலிருந்து சில வரிகள்!


வனப்பயணத்தினை முடித்து வனத்துறையின் அலுவலகத்திற்கு வந்து சில நினைவுப் பரிசுகளை வாங்கிக் கொண்டு வெளியே வந்த நாங்கள், எங்கள் வாகன ஓட்டுனர் முகேஷ்-ஐ அழைத்தோம். காலையில் எங்களை வன அலுவலகத்திற்கு அருகே விட்டுவிட்டு அவர் தங்குமிடம் சென்று விட்டார். வாகனத்தினை கொஞ்சம் நீராட்ட வேண்டும் – Water Wash – என்று சொல்லி இருந்தார். அவரை அழைத்து எங்கள் வேலை முடிந்ததைச் சொன்னோம். சில நிமிடங்களில் அவர் வந்து சேர வேண்டும் – அது வரை வெளியே நின்று கொண்டிருந்த எங்களை வனத்துறையைச் சேர்ந்த சிலர் சிங்கம் பார்க்க வேண்டுமானால் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறோம் என கேட்டுக் கொண்டிருந்தார்கள்.


இப்படி அழைத்துச் செல்வதை Location என்று அழைக்கிறார்கள் – சிங்கங்கள் இருக்கும் இடங்களை அவர்களுக்குள் விசாரித்துக் கொண்டு வனத்திற்குள் அழைத்துச் செல்வதாக பேரம் பேசுவார்கள் – வனத்துறைக்கு காசு போகாமல் அவர்களின் பாக்கெட்டுகளுக்கு காசு போகும்! இப்படி நிறைய பேர் அங்கே சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் பேரம் பேசி வனத்திற்குள் செல்பவர்களும் இருக்கிறார்கள். நாங்கள் மென்மையாக மறுத்து விட்டோம். அது தான் எட்டு சிங்கங்களை அவ்வளவு கிட்டத்தில் பார்த்து இருக்கிறோமே. அங்கே சில புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பிறகு எங்கள் ஓட்டுனர் முகேஷ் வந்து சேர, அவர் வண்டியில் தங்குமிடம் சென்று சேர்ந்தோம். அங்கே தங்குமிட உரிமையாளர் மோஹித் எங்களுக்காக காத்திருந்தார்.


காலை உணவாக ஆலு பராட்டாவும் தொட்டுக்கொள்ள இனிப்பு ஊருகாயும், தயிரும். நன்றாகவே இருந்தது.  சுவைத்துச் சாப்பிட, கொஞ்சம் உறக்கம் வந்தது. காலை சீக்கிரமே எழுந்ததால் உறக்கம். மரத்தடியும் கயிற்றுக் கட்டிலும் இருக்க கேட்பானேன். கொஞ்சம் படுத்து அரை மணி நேரம் உறக்கம். மோஹித் வந்து அருகே உட்கார எழுந்து அவருடன் அவரது தொழில் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். தங்குமிடம் மட்டுமே இருந்தால் அத்தனை வருமானம் பார்க்க முடியாது – சில சமயங்களில் வனம் சுற்றுலாப் பயணிக்களுக்கு மூடிவிடுவதால் வருடம் முழுவதும் விருந்தினர் வருகை இருக்காது. அதுவும் இந்த தொழில் எனக்கு இரண்டாவது தொழில் தான் – முக்கிய தொழில் மாந்தோப்பு தான் என்றும், வருடத்திற்கு மாந்தோப்பில் இருந்து நல்ல வருமானம் என்றார். கிட்டத்தட்ட 10000 பெட்டி [ஒவ்வொரு பெட்டியிலும் 10 கிலோ மாம்பழம்] வரை விற்பனை செய்ய முடிகிறது என்றார்.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் எண்ணங்கள் : மந்திரப் பெட்டி


ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மனிதர்கள் - அத்தனை பேரிடமும் ஏதோ ஒரு கதை இருக்கிறது.  அதனை எழுத எத்தனை எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்.  பார்க்கும் மனிதர்கள், பார்த்த காட்சிகள், கேட்ட ஒரு சிந்தனை என ஏதோ ஒன்று உங்களை நிறைய சிந்திக்க வைக்கும். அப்படியான சிந்தனைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதோ அல்லவோ ஆனால் அந்தச் சிந்தனை சங்கிலி முடிவில்லாது தொடர்ந்து கொண்டே இருப்பதுண்டு.  சென்ற வாரத்தில் ஒரு நாள் குடும்பத்துடன் மொட்டை மாடியில் காற்று வாங்கியபடி அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தேன்.  வாழ்வில் சந்தித்த மனிதர்கள், அவர்களுடனான எனது சம்பாஷணைகள், அனுபவங்கள் என ஒன்று மாற்றி மற்றொன்றைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.  நம் வாழ்வில் எத்தனை விஷயங்களை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். பலவற்றை அப்போதைக்கு அப்போது மறந்து கடந்து சென்றுவிட்டாலும் அந்த நினைவுகள் மனதின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டிருக்கிறது.  


இது போல உள்ளுக்குள்ளே இருப்பது வெளிவர ஏதோ ஒரு Trigger Point தேவையாக இருக்கிறது! பேசி முடிந்த பிறகு வீட்டிற்கு திரும்பினாலும் மனதுக்குள் அந்த எண்ணங்கள் தொடர்ந்த படியே இருந்தது - எத்தனை எத்தனை மனிதர்களைச் சந்தித்து இருக்கிறோம், எத்தனை இடங்களுக்கு பயணித்திருக்கிறோம், எவ்வளவு பேசியிருக்கிறோம், பழகி இருக்கிறோம் என்றெல்லாம் யோசிக்கும்போது நம் மனம் எனும் Hard Disk எத்தனை விஷயங்களை அடக்கி வைத்திருக்கிறது என்ற வியப்பு உண்டானது! மனம் என்னும் மந்திரப்பெட்டி தனக்குள் எத்தனை விஷயங்கள் வைத்திருக்கிறது என்ற பிரமிப்பு! நடக்கும் ஒவ்வொரு விஷயமும் நம் மனம் சேமித்து வைத்துக் கொள்கிறதே! அதன் Capacity எவ்வளவு?  External Hard Disk என்னிடம் இருப்பது 1 TB அளவினைக் கொண்டது! ஆனால் இந்த மனம் எனும் மந்திரப் பெட்டியின் அளவு எல்லையில்லாததாக இருக்கிறதே!


******


இந்த வாரத்தின் கதை மாந்தர் - கிரிதரன் :


தலைநகர் தில்லியில் ஆரம்பகாலத்தில் நான் பணிபுரிந்த சமயத்தில் அதே கட்டிடத்தில் இருந்த வேறொரு அமைச்சகத்தில் கிரிதரன் எனும் தமிழர் பணிபுரிந்தார்.  சென்னையைச் சேர்ந்தவர்.  இளையராஜா மீதும் அவரது இசை மீதும் அதிதமான ஈடுபாடு கொண்டவர். அவரது இசை குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார். இசை, கலை, நாடகம் என அவரது ஆர்வம் இருந்தது.  ஏதோ தில்லிக்கு வந்து பணியில் சேர்ந்துவிட்டாரே தவிர அவருக்கு அந்த அரசுப் பணி மீது விருப்பம் இல்லை.  தொடரப் போவதில்லை என்று சொன்னவர், சில வருடங்களில் வேலையை விட்டு விட்டு மீண்டும் சென்னைக்கே திரும்பினார்.  சில மாதங்களில் அல்லது வருடங்களில் அவருடன் தொடர்பு இல்லாமலே போனது.  ஒரு சமயம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவரைப் பார்த்தேன்.  ஏதோ ஒரு டிவி தொடரில் நடித்தார்.  பிறகு பாலச்சந்தர் குழுவில் கூட நடித்தார்.  சென்ற வாரம் வீட்டினருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் பற்றியும் சொன்னேன்.  இந்தப் பதிவிற்காக அவரைப் பற்றித் தேடிய போது கிடைத்த தகவல்கள் பிரமிக்க வைத்தன! அவர் குறித்த ஒரு தகவல் கீழே!


Giridharan - Theatre Marina 


******


இந்த வாரத்தின் சிறுகதை :  நாய்வால்


சரியான தலைப்பு தான் வைத்திருக்கிறார் கதாசிரியர் எஸ்ஸார்சி….  சொல்வனம் இணைய இதழில் நான் வாசித்த சிறுகதை இது. என்னதான் மெத்தப் படித்தவராக இருந்தாலும், படிக்காதவராக இருந்தாலும் சில குணங்கள் மாறுவதில்லை - இந்த விஷயத்தினைச் சொல்லும் சிறுகதை தான் நாய்வால்.  கதை போலச் சொல்லிச் சென்றாலும், தினம் தினம் எங்கோ ஒரு மூலையில், ஏதோ ஒரு ஊரில் நடக்கும் நிகழ்வினைச் சொல்வது போல இருக்கிறது.  கதையிலிருந்து சில வரிகள் இங்கே.  


என்  வீட்டுப் பின்பக்கம் ஒரு காலி மனை இருந்தது.அதனை  விலைக்கு வாங்க முடியுமா என்ன,  அது எல்லாம் இப்போதைக்குச் சாத்தியமே இல்லை.  நான் மாதச்சம்பளம் வாங்கி நாட்களை ஓட்டும் நடுத்தரக் குடும்பத்துக்காரன். அதற்குத்தான் பிராப்தம் இல்லை  விடுங்கள் அந்த மனையை விலைக்கு  வாங்கி வீடு கட்டிக்கொண்டு வரும்   அந்த யாரோ ஒரு நபராவது  நல்ல மனிதராக வந்தால் அதுவே  நிம்மதி என்றிருந்தேன். ஆடை வாய்க்கறதும் ஆம்படையான் வாய்க்கறதும் நம்ம கையில இல்லேன்னு  என் தாயார் அடிக்கொருதரம் சொல்வது  ஏனோ  ஞாபகத்திற்கு  வந்துபோனது. 


பழைய மகாபலிபுரம் சாலையில் தகவல் தொழில் நுட்பத்தில் பணி  செய்யும் ஒரு தம்பதியர் அந்த காலி இடத்தை வாங்கினார்கள். அம்மாதிரி ஆட்கள் மட்டுமே இப்படி கொட்டிக்கொடுத்து  மனை வாங்கவும் முடியும்.’ வா ராஜா வா’ என்று வங்கிகளும் அவர்களைத்தானே வரவேற்கும். வீட்டுக் கடன் கொடுத்து விட்டு ஒன்றுக்கு ரெண்டாய் திரும்பவும் வசூலித்துக்கொள்ளவும் சாத்தியப்படும்.  அப்படி மனை வாங்கியவர்கள் வீடு கட்டும்  வேலையைக் காண்ட்ராக்ட்டுக்கு விட்டார்கள். பூமி பூஜை முடிந்தது.அய்ந்து செங்கற்கள் மஞ்சள் பூசி குங்குமம் வைத்துக்கொண்டு குழிக்குள்ளே சயனித்தன.கடைக்கால் தோண்டுவதற்கு ஜே சிபி இயந்திரங்கள் உறுமிக்கொண்டு வீதிக்கு வந்தன. தெருச்சாக்கடை சிமெண்ட்  கால்வாயை உடைத்துக் கொண்டு அந்த இயந்திரங்கள் காலி மனைக்குள்  நுழந்தன. மண் வெட்டும் பணியில் மும்முரமாயின. நான் நேராக ஜேசிபி ஓட்டுனரிடம் போனேன்.


‘தெருச்சாக்கடை போகும்  சிமெண்ட் கால்வாயை  இடிச்சிட்டியே இது சரியா.இப்ப என்ன செய்றது. இந்த  சாக்கடை காவா கட்ட  இதே தாம்பரம் முனிசிபாலிட்டிக்கு எத்தினி நட  நாங்க நடந்திருப்பம் உனக்கு தெரியுமா’ என்றேன்.


முழுக்கதையும் மேலே கொடுத்திருக்கும் சுட்டி வழி படிக்கலாமே!


******


இந்த வாரத்தின் நிழற்படம் - கால்கள் :




சமீபத்தில் முகநூலில் பார்த்த ஒரு படம் - மனதை என்னவோ செய்தது.  எழுத்தாளர்கள் மற்றும் பதிவுலக பிரபலங்கள் ஆன ரிஷபன் ஜி, கே.பி. ஜனார்த்தனன் ஜி என சிலர் இந்தப் படத்திற்கான கவிதைகளை எழுதி இருந்தார்கள். உழைத்து உழைத்து ஓடாகிப் போன ஒரு தகப்பனுடைய கால்களாக எனது கண்களுக்குப் பட்டது! மேலும் பல எண்ணங்களும் தொடர்ந்து கொண்டிருந்தன.  முடிந்தால் அந்த எண்ணங்களை விரைவில் ஒரு பதிவாக எழுதுகிறேன். அதற்கு முன்னர், இந்தப் படம் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றிய எண்ணம் என்ன?  முடிந்தால் பின்னூட்டத்தில் சில வரிகள் எழுதுங்கள். அல்லது கவிதை அல்லது கதையாக எழுதுவதாக இருந்தாலும் சரி.  எழுதி எனக்கு அனுப்பி வைத்தால், எனது வலைப்பூவில் பகிர்ந்து கொள்ள நான் தயார்!  நீங்கள் எழுதி அனுப்பப் போகும் கதை(விதை)க்காக நானும் காத்திருக்கிறேன்.  


******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

16 மே 2026


13 கருத்துகள்:

  1. ஹிமாலயா விளம்பரம் உண்மையிலேயே அருமை. புன்னகைக்க வைத்ததுடன் அவர்கள் கற்பனையையும் பாராட்ட வைத்தது.

    பதிலளிநீக்கு
  2. இரண்டாவது விளம்பரக் காணொளி புன்னகைக்க வைத்தது.  அவர்கள் என்ன, நீங்கள், நான் யாராக இருந்தாலும் அப்படிதான் அறைவோம்!

    பதிலளிநீக்கு
  3. பழைய பதிவைப் பார்த்தேன்.  அங்கு நம் உரையாடலையும் படித்தேன்!    என்  மகன் உருவில் மோஹித் என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா..   அந்த மகனுக்குதான் அடுத்த மாதம் திருமணம்!

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பயணங்களாலும், அதனால் கிடைத்த நண்பர்கள், அனுபவங்களால் உங்கள் மனம் எனும் hard disc ஹை கெபாசிட்டியாக இருக்கும்.   எனக்கெல்லாம் ஜஸ்ட் 1 ஜி பி போதும்!!!

    பதிலளிநீக்கு
  5. கிரிதரனின் தகவல்கள் வியக்க வைக்கின்றன.  அவர் அங்கேயே சகித்துக் கொண்டு தொடர்ந்திந்தாரேயானால் பத்தோடு பதினொன்றாகி இருப்பார்!

    பதிலளிநீக்கு
  6. நாய்வால் என்கிற தலைப்பில் என் அப்பா எழுதி இருந்த கதை ஒன்றை சமீபத்தில் எங்கள் தளத்தில் கொடுத்திருந்தேன். அது நினைவுக்கு வருகிறது. இதை பின்னர் வாசிக்க வேண்டும். இன்று வாசிப்பதற்கு குவிகத்தில் நிறைய இருக்கின்றன!

    பதிலளிநீக்கு
  7. கால்களின் படம் :

    பிஞ்சுப் பாதம் என்றும் 
    பஞ்சு போல பாதம் என்றும் 
    என்னையும் தூக்கிக்
    கொண்டாடி இருப்பார்கள் 
    நான் பிறந்த சமயம்.. 
    யார் அவர்களோ 
    எங்கு போனார்களோ - ஒரு 
    நாளை ஓட்டுவதற்கு - இந்தக் 
    காலைதான் நம்பி இருக்கிறேன் 
    நாளும் நானும்.

    கருத்த பாதங்கள் 
    கருத்து சொல்ல 
    என்ன இருக்கிறது?
    இரண்டு மணிநேரம் மட்டுமே 
    ஓய்வும் சாய்வும் 
    மண்ணில் பாதம் பட்டு 
    வெயில் பார்க்காமல் ஓடினால்தான் 
    கையில் சாதம் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா16 மே, 2026 அன்று 7:42 PM

      சந்தேகமில்லாமல் நீங்கள் ஆசுகவிதான் ஸ்ரீராம். அருமையான கவிதையை தந்து விட்டேர்களே!

      நீக்கு
    2. பெயரில்லா16 மே, 2026 அன்று 7:45 PM

      ஹிமாலயா விளம்பரம் வாட்சாப்பில் வந்தது. தண்ணீரை வீணாக்கக் கூடாது என்னும் ஈகோ பிளாஸ்டரிங்க் விளம்பரமும் சிறப்பு!

      நீக்கு
  8. ஒவ்வொரு மனிதரிடமும் ஏகப்பட்ட அனுபவங்கள் கதைகள்

    பதிலளிநீக்கு
  9. கிரிதரன்.. க்வாலிஃபைட் என்பதால் ரிஸ்க் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்க்கையில் திருப்தி இருக்கும்

    பதிலளிநீக்கு
  10. பாதங்கள்.. பலவித எண்ணங்களை ஏற்படுத்துகிறது

    வாழ்க்கையின் கடமை முடிந்து நிம்மதியாக ஓய்வா? கடமையை மறந்து நிதர்சனத்தைச் சந்திக்க விருப்பமில்லாத தூக்கமா?

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....