அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
வாசிப்பனுபவம் வரிசையில் நான் இந்த வாரம் பகிர்ந்து கொள்ளப் போவது வித்யா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய மீட்டாத வீணை என்கிற நூல் குறித்து தான். மொத்தம் 26 அத்தியாயங்கள் கொண்ட நூல். புஸ்தகா வெளியீடாகவும், அவர்களே அமேசான் தளத்தில் வெளியிட, அதன் வழி நான் படித்தேன். இரண்டு தளங்களிலும் கிடைக்கிறது. அமேசான் தளத்திற்கான சுட்டி…. அச்சுப் புத்தகமாகவும் அதே தளங்கள் வழி வாங்கலாம் - அமேசானில் அச்சுப்புத்தக விலை ரூபாய் 190/- மட்டும். புத்தகம் குறித்த அறிமுகமாக அமேசான் தளத்தில் இருப்பதை இங்கே தருகிறேன் -
சுவாதி தன் வாழ்க்கையில் எல்லாவிதமான கஷ்டங்களையும் அனுபவித்தாள். ஒரு கட்டத்தில் தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி ஹாஸ்டலில் தங்கி படிப்பை தொடரும் அவளுக்கு ஒரே ஆதரவாக இருப்பவன் நண்பன் ராஜாமணி. படிப்பை முடித்து வேலைக்கு சேர்ந்த சுவாதியின் திருமண வாழ்க்கையால் அவளுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? நண்பன் ராஜாமணி அவளுக்கு எவ்வகையில் உதவினான்? மீட்டாத வீணையை மீட்டுவோம் வாருங்கள்...
தினம் தினம் நாம் பல மனிதர்களை பார்த்து வருகிறோம். பார்க்கும் மனிதரை கதை மாந்தராகப் பார்ப்பது எல்லோருக்கும் அமைந்து விடாத ஒரு கலை. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எத்தனை விதமான கதைகள் மூழ்கியிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளவே நமக்கு பல காலம் ஆகிவிடுகிறது. அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை பார்த்தால் நமக்கு அவள் ஒரு சாதாரண பெண்ணாகவே தோன்றுகிறாள். ஆனால் அவளுக்குள் புதைந்து கிடைக்கும் விஷயங்கள் பல கதைகள் சொல்லும். அப்படி தனக்குள்ளே சோகமான கதையைக் கொண்ட ஒரு பெண்மணி சுவாதி! அவள் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் தான் மீட்டாத வீணை எனும் இந்த நாவல். பெயரைப் படிக்கும்போதே அவள் வாழ்க்கை குறித்த ஒரு புரிதல் நமக்கு ஏற்பட வாய்ப்புண்டு. ஆம் - அவள் ஒரு மீட்டப்படாத வீணை! என் நண்பர் ஒருவர் வீட்டில் வீணை ஒன்று பூஜை அறையில் ஒரு ஓரமாக நிறுத்தி வைத்திருப்பார்கள். எனக்குத் தெரிந்து அந்த வீணை மீட்டப்பட்டு நான் பார்த்ததே இல்லை. எந்த காலத்திலோ அந்த வீணை மீட்டப்பட்டு ஸ்வரங்களை கேட்பவர் காதுகுளிரத் தந்திருக்கும். ஆனால் நான் பார்த்து அந்த வீணை மீட்டப்பட்டதே இல்லை!
சினிமா மீது மோகம் கொண்ட அம்மா, தன் சுகம் மட்டுமே பெரிதென நினைக்கும் அப்பா, அப்பாவைப் போலவே இருக்கும் தம்பி - இத்தனைக்கும் அவனது முன்னேற்றத்திற்காக பாடுபட்ட சுவாதி…. சரி வீட்டில் தான் இத்தனை பிரச்சனைகள் என்றால் தானாக விருப்பப்பட்டு ஏற்றுக் கொண்ட கணவன் - அவன் கணக்கு வேறாக இருந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாத சுவாதி! அந்த மண வாழ்க்கையில் கிடைத்த கொடுமையான அனுபவங்கள், எங்கே சென்றாலும் சிக்கல்கள் மட்டுமே சந்த்தித்தால் அந்த கதை மாந்தரால் என்னதான் செய்து விட முடியும். அப்படியொரு வாழ்க்கையில் நம்பிக்கைக் கீற்றாக, நண்பன் ராஜாமணி எனும் ஒரு கதாபாத்திரம். என்னதான் அலுவலகத்தில் சிறப்பான முன்னேற்றம் கண்டு பெரிய பதவிகளை அடைந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்திக்கும் பெண்ணாக சுவாதி எனும் பாத்திரம்.
சுவாதி படும் அவதிகளைப் படித்துக் கொண்டு வரும் நமக்கே இரத்த அழுத்தம் கூடுகிறது என்றால், அவளுக்குக் கூடாதா? ஆனாலும் எத்தனை சிக்கல்கள் வந்தாலும் தைரியமாக எதிர்கொண்டு வாழ்க்கையை நடத்தி வரும் பாங்கும் இங்கே சொல்லப்பட வேண்டிய விஷயமாக நான் நினைக்கிறேன். சிலருக்கு மட்டும் சந்திக்கும் அனைவருமே விரோதியாக அமைந்து விடுவார்கள் - நண்பர் என்று சொல்லிக் கொள்ள ஒருவர் கூட இல்லாமல் போய்விடும். சுவாதி சந்திக்கும் அனைவருமே விரோதியாக மட்டுமே இருக்கிறார்கள் - ஒரே ஒருவரைத் தவிர - அது ராஜாமணி! ஆனால் ராஜாமணியும் இவளுக்கு உதவ முடியாத நிலையில் இருக்க கடைசியில் என்ன ஆனது. வீணை மீட்டப்பட்டதா? சுவாதியின் வாழ்க்கையில் ஏதோ ஒரு விதத்திலேனும் வசந்தம் வந்ததா என்பதை எல்லாம் கதையைப் படித்து தெரிந்து கொள்ளலாம். கதையிலிருந்து சில வரிகள் மட்டும் உங்களுக்காக இங்கே தருகிறேன்!
“இரவுப் பொழுது இப்படி என்றால், அம்மாவின் பகல் பொழுதுகள் முக்கால்வாசி அருகிலிருக்கும் சினிமா தியேட்டர்களில்தான் கழியும். அம்மாவால் சினிமா பார்க்காமல் இருக்க முடியாது. அதே நேரம் யாரையும் உடன் அழைத்துச் செல்லவும் மாட்டாள். இதுகளை அழச்சுட்டு போனா படமா பார்க்கவிடும்? கழுத்தறுக்கும்! என்பாள்.”
“பனைமரத்தடியிலிருந்து பால் குடித்திருக்கிறார்கள். பால்தான் என்று சத்தியம் செய்தாலும் எள்ளி நகையாடுகிறது சுற்றியுள்ள கும்பல். ஒரு பெண்ணோடு அதுவும் ஒரு கன்னிப் பெண்ணோடு ஒரே அறையில் இரவு முழுக்கத் தங்கிவிட்டு ஒன்றும் நடக்கவில்லை என்று சொன்னால் நம்புவதற்கு நாங்கள் என்ன காதில் பூ சுற்றிய மடையர்களா? என்று எகத்தாளமாக கேட்கிறவர்களை சமாதானப்படுத்துவது என்பது கடல் நீரை கெட்டிலுக்குள் அடைப்பது போலத்தான். இன்றல்ல இன்னும் உலகம் எவ்வளவு முன்னேறினாலும் இந்த விஷயத்தில் மட்டும் அது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்றுதான் கணக்குப் போடும்.”
“படிக்கற வயசுல அவங்க உன்னை அடக்கியாள நினைச்சிருக்கலாம். ஆனா இப்போ நீ கை நிறைய சம்பாதிக்கிற பொண்ணு. உன் சம்பளம் காரணமாகவே அவங்க உன்னை மரியாதையா நடத்தக்கூடும். அதே நேரம் நல்லவங்களோ பொல்லாதவங்களோ அவங்க உன்னைப் பெத்தவங்க சுவாதி. இந்த பொல்லாத உலகத்துல இந்த வயசுல ஒரு பெண் தனிச்சு வாழறது அவ்ளோ நல்லதில்லம்மா.”
“தொடுவானம் என்பது கிட்டே செல்லச் செல்ல விலகுவதுபோல்தான் சுவாதியைப் பொறுத்தவரை வஸந்தமும் அவள் வாழ்க்கையில் எட்டாத ஒன்றாகவே ஆகிவிட்டதோ என்னவோ?”
“ஒரு வஸந்தத்தை எட்டிப் பிடித்துவிட்டதாகத்தான் நினைத்திருந்தாள் சுவாதி. சீனிவாசன் இத்தனை நாள் அணிந்திருந்தது முகமூடிதான். அதற்குப் பின்னால் மற்றொரு முகமும் அவனுக்கு உண்டு என்பது புரிந்ததும் துடித்துப் போனாள். அதைவிடக் கொடுமை அவனது இயலாமை!”
இப்படித் தொடர்ந்து பல வரிகளை எடுத்துக் காட்டலாம் - ஆனால் அது சரியல்லவே! அதனால், அமேசான் அல்லது புஸ்தகா தளத்தின் வழி, முடிந்தால் மீட்டாத வீணையை வாசித்துப் பாருங்களேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
18 மே 2026


எடுத்துக் காட்டியுள்ள வரிகள் கதையின் போக்கை சொல்கின்றன. சுவாதிக்கு கதை முடிவில் சந்தோஷ வாழ்க்கை கிடைத்திருந்தால் சந்தோஷம்தான்.
பதிலளிநீக்குஇன்று திருமதி வித்யா சுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள். அவருக்கு வாழ்த்துகளை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்கு