அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
எனக்குத் தெரிந்த ஒரு நபர். வழக்கறிஞராக இருக்கிறார். என்னிடம் அவர் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்த சமயம் இப்படிச் சொன்னார் - "ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வழக்கு சம்பந்தமாக சிலரிடம் பேசுகிறேன். அது வழக்கில் சிக்கி இருக்கும் நபராக இருக்கலாம் அல்லது சக வழக்கறிஞராக இருக்கலாம் அல்லது காவல்துறையைச் சேர்ந்த நபராக இருக்கலாம்....... ஒவ்வொரு மனிதருடன் பேசும்போதும் அவரிடம் ஒரு கதைக்கான களம் இருப்பதை உணர்கிறேன். ஆனால் எழுதத் தான் முடிவதில்லை". உண்மை தான்....... நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் அவர்களுக்குள்ளே பல கதைகளுக்கான களத்தினை உள்ளடக்கி வைத்துக் கொண்டு, கதைகள் உருவாகக் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது கதையை எழுதுவதற்குதான் சரியான ஆள் கிடைப்பதில்லை.
சமீபத்தில் முகநூலில் ஒரு நிழற்படத்தினைப் பார்த்தேன். அதனை வைத்து ஒரு கதையும் யாரோ ஒருவர் எழுதி இருந்தார். அது ஒரு பகிர்வு தான் - எழுதியவர் யார் என்பது தெரியவில்லை. ஆனாலும் அந்தப் படத்திற்குப் பொருத்தமாகவே இருந்தது அந்தக் கதை. படமும் கதையும் கீழே!
சாயங்காலம் 5 மணி. மெரினா கடற்கரை. ஒரு சிமெண்ட் பெஞ்ச். அதுல ஒரு தாத்தா. வயசு 82. கையில ஊன்றுகோல். பக்கத்துல காலியா ஒரு இடம். ஆனா தினமும் தன் கைக்குட்டைய எடுத்து அந்த இடத்தை துடைப்பாரு. யாரையோ எதிர்பார்த்த மாதிரி.
என் பேரு கவின். காலேஜ் படிக்கிறேன். பார்ட் டைம் ஃபோட்டோகிராபர். சன்செட் போட்டோ எடுக்க வந்தேன். தாத்தாவ பார்த்தேன். ஒவ்வொரு நாளும் இதே நேரம். இதே பெஞ்ச். தனியா.
ஒரு நாள் தைரியத்தை வரவழைச்சு கேட்டேன். "தாத்தா. யாருக்காக காத்திருக்கீங்க."
தாத்தா சிரிச்சாரு. பல்லு இல்லாத வாய். ஆனா கண்ணுல காதல். "தம்பி. என் பொண்டாட்டிக்கு. கமலா."
"எங்க பாட்டி."
"மேல இருக்கா தம்பி. 3 வருஷம் ஆச்சு."
எனக்கு புரியல. "அப்புறம் ஏன் தாத்தா தினமும் இங்க."
தாத்தா கடலை பார்த்தாரு. "60 வருஷம் முன்னாடி இதே பெஞ்ச். நான் மில்லுல வேலை. மாசம் 30 ரூபா. கமலா பக்கத்து வீடு. அவ அப்பா பெரிய பணக்காரர். எங்க காதல் பிடிக்கல. அடிச்சு அனுப்பிட்டாரு."
"அப்புறம்."
"நான் ராத்திரியோட ராத்திரியா ஊர விட்டு ஓடிட்டேன். பம்பாய். 3 வருஷம். ஒரு லெட்டர் இல்ல. போன் இல்ல. கமலாவுக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. கல்யாணத்துக்கு முதல் நாள். கமலா ஓடி வந்துட்டா. என்ன தேடி. பம்பாய். கையில 2 ஜோடி துணி. காதுல தோடு. அவ்வளவு தான்."
தாத்தா கண்ணு கலங்குச்சு. "அன்னைல இருந்து 57 வருஷம். ஒரு நாள் கூட சண்டை இல்ல. கஷ்டம் தான். ஆனா சேர்ந்தே அழுதோம். சேர்ந்தே சிரிச்சோம். 3 புள்ளைங்க. எல்லாம் வெளிநாடு. வருஷத்துக்கு ஒரு தடவ போன்."
"பாட்டி எப்படி..."
"வயசாயிடுச்சுல்ல தம்பி. மறதி நோய். அல்சைமர். கடைசி 2 வருஷம் என்ன யாருனே தெரியாது. ஆனா தினமும் ஈவ்னிங் 5 மணிக்கு அழுவா. 'மெரினா போகணும். அவர் காத்திருப்பாரு'னு. நான் தினமும் ஆட்டோல கூட்டிட்டு வருவேன். இதே பெஞ்ச். உட்கார வச்சு கை பிடிச்சுப்பேன். 1 மணி நேரம். அப்புறம் கூட்டிட்டு போவேன். அவளுக்கு நான் யாருனு தெரியாது. ஆனா இந்த பெஞ்ச் ஞாபகம் இருந்துச்சு. என் கை ஸ்பரிசம் ஞாபகம் இருந்துச்சு."
தாத்தா கைக்குட்டைய எடுத்தாரு. பக்கத்து இடத்தை துடைச்சாரு. "3 வருஷம் முன்னாடி ஒரு ஈவ்னிங். இதே பெஞ்ச்ல உட்கார்ந்து இருந்தோம். திடீர்னு என் கைய பிடிச்சா. கண்ணுல தெளிவு. 'ஏங்க. நான் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா. 2 வருஷம் நான் நானா இல்ல. மன்னிச்சுடுங்க.' அதான் கடைசி வார்த்தை. என் மடிலயே தலை சாஞ்சுட்டா. போய்ட்டா."
என் கண்ணுல தண்ணி. "தாத்தா. அப்புறம் ஏன் இன்னும் வர்றீங்க. வலிக்காதா."
தாத்தா சிரிச்சாரு. "தம்பி. அவ செத்துட்டானு எனக்கு தெரியும். ஆனா அவ ஆத்மாவுக்கு தெரியாதுல்ல. ஈவ்னிங் 5 மணிக்கு அவ இங்க வருவா. நான் இல்லனா தேடுவா. அழுவா. அவள அழ விட முடியுமா. அதான் வர்றேன். உயிர் இருக்குற வரைக்கும் வருவேன்."
பாக்கெட்ல இருந்து ஒரு பழைய டைரி எடுத்தாரு. "இது கமலா டைரி. கல்யாணம் ஆன புதுசுல எழுதினது. கடைசி பக்கம் படி தம்பி."
நான் படிச்சேன். குண்டு குண்டு எழுத்து.
"இன்னைக்கு அவர் கூட மெரினா போனேன். கைய பிடிச்சுக்கிட்டாரு. சத்தியம் பண்ணினாரு. 'கமலா. நீ எங்க போனாலும், எப்படி மறந்தாலும், நான் இதே பெஞ்ச்ல காத்திருப்பேன். நீ வர்ற வரைக்கும்.' நான் சிரிச்சேன். 'நான் எங்க போக போறேன்.' இப்ப 50 வருஷம் ஆச்சு. அவர் சத்தியம் காப்பாத்துறாரு. தினமும். நான் கொடுத்து வச்சவ."
டைரிய மூடினேன். கை நடுங்குச்சு.
தாத்தா வானத்தை பார்த்தாரு. "தம்பி. இந்த காலத்து பசங்க லவ்னா என்னனு கேக்குறாங்க. 2 நாள் வாட்ஸ்அப். 3வது நாள் பிளாக். அது லவ் இல்ல தம்பி. லவ்னா சத்தியம். ஒருத்தர் மறந்தாலும் இன்னொருத்தர் ஞாபகம் வச்சுக்கிறது. ஒருத்தர் போனாலும் இன்னொருத்தர் காத்திருக்கிறது. உடம்பு இல்லனாலும் உயிர் காத்திருக்கிறது."
மணி 6 ஆச்சு. தாத்தா மெதுவா எழுந்தாரு. ஊன்றுகோல் பிடிச்சு. "சரி தம்பி. அவ வந்திருப்பா. பார்த்திருப்பா. நான் வந்துட்டேன்னு. இப்ப வீட்டுக்கு போகணும். நாளைக்கு மறுபடி 5 மணிக்கு."
நான் ஓடி போய் தாத்தா கால்ல விழுந்தேன். "தாத்தா. நான் உங்க போட்டோ எடுக்கட்டுமா."
"எதுக்கு தம்பி."
"இந்த காலத்து பசங்களுக்கு காட்டணும். உண்மையான காதல்னா என்னனு. சத்தியம்னா என்னனு."
தாத்தா சம்மதிச்சாரு. பெஞ்ச்ல உட்கார்ந்தாரு. காலி இடத்தை பார்த்து சிரிச்சாரு. கை நீட்டினாரு. யாரோ கை பிடிக்கிற மாதிரி.
நான் போட்டோ எடுத்தேன். கண்ணீரோட.
அடுத்த நாள் பேப்பர்ல நியூஸ். "மெரினா பெஞ்ச் தாத்தா காலமானார். இரவு தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது. முகத்தில் புன்னகை. கையில் மனைவியின் டைரி."
நான் ஓடினேன். தாத்தா வீடு. பாடில பக்கத்துல அந்த டைரி. பக்கத்துல ஒரு லெட்டர். எனக்கு.
"தம்பி கவின். நேத்து நீ கேட்டல்ல. ஏன் காத்திருக்கேன்னு. இனிமே காத்திருக்க வேண்டாம். அவ கூப்பிட்டுட்டா. 'ஏங்க. போதும். வீட்டுக்கு வாங்க'னு. நான் போறேன். ஒரு வேண்டுகோள். அந்த பெஞ்ச். யாராவது உட்காருவாங்க. காதலோட. அவங்களுக்கு எங்க கதைய சொல்லு. சத்தியம் பண்ண சொல்லு. கடைசி வரைக்கும் காப்பாத்த சொல்லு. நன்றி தம்பி. போட்டோ நல்லா எடு.
இப்படிக்கு,
காத்திருந்து ஜெயிச்ச கிழவன்."
இன்னைக்கும் நான் ஈவ்னிங் 5 மணிக்கு மெரினா போவேன். அந்த பெஞ்ச். யாராவது ஜோடி உட்கார்ந்தா, தாத்தா கதைய சொல்வேன்.
கடைசில கேட்பேன். "சத்தியம் பண்ணுங்க. கடைசி வரைக்கும் விட்டுட்டு போக மாட்டேன்னு."
அவங்க சிரிச்சுட்டே சத்தியம் பண்ணுவாங்க.
தாத்தா மேல இருந்து பார்ப்பாரு. கமலா பாட்டி கூட. சேர்ந்து சிரிப்பாங்க.
ஏன்னா காதல் சாகாது. சத்தியம் சாகாது. காத்திருப்பு சாகாது.
நீங்க கடைசியா "ஐ லவ் யூ" சொன்னது யாருக்கு. இன்னைக்கு சொல்லுங்க. காலம் காத்திருக்காது.
*****
அது சரி, ஏதோ கதை எழுதுங்கள் என்று சொல்லி, வேறு யாரோ எழுதிய கதை ஒன்றை இங்கே போட்டு இருக்கிறாயே? என்று நீங்கள் கேட்பதற்குள் அதற்கு வந்து விடுகிறேன்.
பலருடைய வாழ்க்கை சீராகச் செல்வதில்லை. இடியாப்பச் சிக்கலைப் போல வாழ்க்கை முழுவதுமே சிக்கல்களால் பின்னப்பட்டு இருக்கிறது. சில சிக்கல்கள் தானாக ஏற்பட்டவை என்றால் சில தானாக இழுத்துவிட்டுக் கொண்டவை. சமீபத்தில் சாலை ஒன்றில் நடந்து கொண்டிருந்த போது, ஒரு இரு சக்கர வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டிருந்த விகாரமான முகம் கொண்ட பெண், அலைபேசி வழி யாரிடமோ இப்படிச் சொல்லிக் கொண்டு இருந்தார் - "உனக்கு ஆப்பு வைக்கிறேன் பார்....... என் வாழ்க்கையை தான் சீரழிச்சிட்ட..... ஆனா இனிமே நீ வேற ஒரு பெண்ணையும் இது மாதிரி செய்ய முடியாம செய்யறேனா இல்லையா பாரு!" என்றார். அவரை நான் கடந்து சென்றாலும் அவரின் இந்த சம்பாஷனையை என்னால் கடந்து செல்ல இயலவில்லை. அவருக்குள் ஒளிந்து இருக்கும் கதைக்களம் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தது மனது...... அந்தக் கதை என்னவாக இருக்கும்! உங்கள் கற்பனைகளைச் சிறகடிக்க வையுங்கள்! ஒரு கதையாக எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - venkatnagaraj@gmail.com. கதைகளுக்கான பக்கங்கள், வார்த்தைகள் என எதுவும் நான் குறிப்பிடப் போவதில்லை. உங்கள் முடிவு அது! வரும் கதைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து பரிசு குறித்த தகவல்கள் வெளியிடுகிறேன். பொருத்தமான கதைகளுக்கான காத்திருப்புடன் நான்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
19 மே 2026



படத்துக்கு கதை எழுதுவது பழகிப்போய் விட்டது. எழுதலாம். பார்ப்போம். அதுசரி, அனுப்புவதற்கு உங்கள் மெயில் ஐடி தர வேண்டாமா?
பதிலளிநீக்குஸ்ரீராம் அதிலேயே இருக்கிறதே....venkatnagaraj@gmail.com
நீக்குகீதா
கதையில் தாத்தாவின் நினைவுகள், இறந்துபோன மனைவிக்காக காத்திருந்தது பற்றி படிக்கும் போது கனவன் மனைவி வாழ்க்கையை தாத்தா போன்றவர்களைப் போல் அன்பும் பாசமும்மாக வாழ வேண்டும் என்பது புரிந்தது.
பதிலளிநீக்குகதையில் தாத்தாவின் நினைவுகள், இறந்துபோன மனைவிக்காக காத்திருந்தது பற்றி படிக்கும் போது கனவன் மனைவி வாழ்க்கையை தாத்தா போன்றவர்களைப் போல் அன்பும் பாசமும்மாக வாழ வேண்டும் என்பது புரிந்தது.
பதிலளிநீக்குதாத்தா படமும், அக்கதையும் நல்லாருக்கு, ஜி
பதிலளிநீக்குஇக்கதையை வாசித்ததும், நம்ம ஸ்ரீராமின் அப்பா பாஹே அவர்தான் நினைவுக்கு வருகிறார்.
கீதா
ஓ பரிசுப் போட்டியா...அட!!!! பார்க்கலாம் ஜி. முடிகிறதா என்று. படத்துக்கான கதை என்பது எனக்கும் ஸ்ரீராமின் வழி - விருட்சம் அழகியசிங்கர் அவர்கள் அப்படி நடத்துகிறார் - ஸ்ரீராம் எனக்கும் படங்கள் அனுப்பி எழுத முயற்சி செய்ததுண்டு 20 வரிக்குள் என்ற விதிமுறையும் உண்டு. அதில்.
பதிலளிநீக்குபார்க்கலாம் இப்படத்திற்கு எழுத முடிகிறதா என்று.
கீதா
தாத்தாவின் படமும் கதையும் தினமும் காத்திருப்பும் இப்படி ஒரு உறவா என ஏங்க வைத்து நெஞ்சைத் தொட்டது.
பதிலளிநீக்குஅழியாக் காதல் என்றும் வாழ்க.
தாத்தாவின் படமும் கதையும் தினமும் காத்திருப்பும் இப்படி ஒரு உறவா என ஏங்க வைத்து நெஞ்சைத் தொட்டது.
பதிலளிநீக்குஅழியாக் காதல் என்றும் வாழ்க.
கதை மனதைத் தொட்டது. இத்தகைய காதல் உணர்வு இப்போது இருக்கிறதா பலரிடம்? விடை தெரியாத கேள்வி.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. புரிந்தவர்களும் சில சமயம் புரியாத புதிராகத்தான் செயல்படுகிறார்கள்.
பதிவில், படத்திற்கேற்ற கதை நன்றாக உள்ளது. என்றுமே மாறாத அன்புள்ள கணவன் மனைவிக்கு கதை ஒரு உதாரணமாக இருக்கிறது. ஒருவருக்காக ஒருவர் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கதை மனதை நெகிழ செய்து விட்டது.
நேற்று இரவு இந்தக்கதையை படிக்கையில் சற்று தாமதமாகி விட்டது. அதனால் இன்று வந்து கருத்துத் தருகிறேன். மன்னிக்கவும்.
அடுத்தப்படத்திற்கும் கதை எழுதி பரிசை வாங்கப்போகும் நட்புள்ளங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இன்றைய எபியில் நம் சகோதரர் ஸ்ரீராம் அவர்களை அந்த கதைக்கான போட்டி முடிவில் பெறப்போகும் வெற்றிக்கு அட்வான்ஸாக வாழ்த்தி விட்டேன். கதைப்பகிர்வுகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வெங்கட் , தாத்தா வின் கதை மிக நெகிழ்ச்சி. இந்த ஜெட் யுகத்தில் இத்ஹு போல உண்மைக் காதல் அதிசயம் தான். வாழ்த்துகள் மா.
பதிலளிநீக்குசாபம் போடும் பெண்ணின் உள்ளக் காயம் முகத்தில் கோரமாகத் தெரிகிறது. ஏமாற்றப் பட்ட எந்தப் பெண்ணும் இப்படித்தான் பேசுவாள். நல்ல கதைகள் பரிமளிக்க மனம் பண்பட வாய் சொற்கள் இனிமையாக வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு