அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளுக்கு நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி. திருச்சியிலிருந்து சென்னை வழி சண்டிகர் நகரத்திற்கு வந்து சேர்ந்தது வரையான நிகழ்வுகளை இந்தத் தொடரின் முதல் மூன்று பகுதிகளில் எழுதியிருக்கிறேன். தங்குமிடம் அடைந்து சற்றே ஓய்வெடுத்த பின்னர் நண்பர்களுடன் காலாற நடந்து இரவு உணவு உண்ண வெளியே சென்றோம். தங்குமிடத்தின் அருகிலேயே ஒரு சிறு உணவகம் - பெயர் Aao Ji Khao Ji! (ஆவோ ஜி, காவோ ஜி! அதாவது வாங்க, சாப்பிடுங்க! என்ற பெயரில் உணவகம்!) தந்தூரி ரொட்டி, தவா ரொட்டி என இரண்டு விதங்களிலும் கிடைக்க, சற்றேறக்குறைய ஏழு மாதங்களுக்குப் பிறகு தந்தூரி ரொட்டி சாப்பிட்டேன். தால், பன்னீர் டிக்கா மசாலா ஆகியவை தொட்டுக்கையாக! இரவு உணவு உண்ட பிறகு மீண்டும் தங்குமிடம் திரும்பினோம். சிறிய உணவகமாக இருந்தாலும் உணவின் சுவை நன்றாகவே இருந்தது.
தொடரில் இது வரை மூன்று பகுதிகள் வெளியிட்டாயிற்றே, இன்னமும் சுற்றுலா குறித்த தகவல்களே வரவில்லையே என்று சிலர் நினைக்கலாம். வரும் - அதுவும் வரும்! சண்டிகர் நகரம் - ஒரு யூனியன் பிரதேசம் மட்டுமல்லாது ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கும் தலைநகரம்! எப்போதுமே மத்திய அரசு, பஞ்சாப் மற்றும் ஹரியான மாநில அரசுகளுக்குள் ஒரு போட்டியும், தகராறும் இருந்து கொண்டே இருக்கக் காரணமாக இருக்கும் ஒரு பிரதேசம் சண்டிகர். அதுவும் வேறு வேறு கட்சிகள் ஆட்சியிலிருந்தால் பிரச்சனைகள் அதிகம் தான். அதனாலேயே பஞ்சாப் மொஹாலி என்ற சண்டிகர் நகரில் இருக்கும் பகுதியையும், ஹரியானா மாநிலம், அருகே உள்ள பஞ்ச்குலா என்ற இடத்தினையும் ஒரு தலைநகரம் போலவே உருவாக்கினார்கள். ஆனாலும் சண்டிகருக்கான போட்டிகள் இது வரை முடிந்தபாடில்லை.
சண்டிகர் நகரம் குறித்துச் சொல்லும்போது அனைவருமே சொல்வது ஒரு விஷயம் - திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு நகரம் சண்டிகர் என்பது தான் அந்த விஷயம். நகரம் பல செக்டர்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு செக்டரிலும் ஒரு இடத்தில் மார்க்கெட், ஒரு இடத்தில் பள்ளிகள் என மிகவும் பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட ஒரு நகரம். தற்போது நிறைய மாற்றங்களைக் கண்டுவிட்டாலும், இப்போதும் சண்டிகர் குறித்துச் சொல்லும்போது திட்டமிட்டு கட்டுமானம் செய்த நகரம் என்றே சொல்வார்கள். முற்போக்கான நகரமும் கூட. இரவு நேரங்களில் கூட தைரியமாக உலா வரலாம் தற்போது - முன்பு பயங்கரவாதத் தொல்லைகள் அதிகம் இருந்த நாட்களிலும் இங்கே பயணித்து இருக்கிறேன் - அப்போது இரவு நேரங்களில் வெளியே வர தடை கூட இருந்தது. நிறைய Pub இருந்தது, இருக்கிறது. தொடர்ந்து ஒரு வாரம் கூட இந்த சண்டிகர் நகரிலும், பஞ்ச்குலா நகரிலும் அலுவலக வேலைகள் விஷயமாக தங்கியிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகக் கழிந்த நாட்கள் அவை. இருக்கும் அத்தனைச் சுற்றுலா தலங்களிலும் சுற்றி வந்திருக்கிறேன். பெரிதாக சுற்றுலா தலங்கள் இல்லை என்றாலும், மிகவும் அழகாக பராமரிக்கப்பட்ட இடங்களாக அவை இருந்தன.
இந்தப் பயணத்தில் எனக்கு முன்னதாகவே நண்பர் பிரமோத் மற்றும் கிரிஷ் திருவனந்தபுரத்திலிருந்து சண்டிகர் வந்து விட்டதால், ஒரு வண்டியை அமர்த்திக்கொண்டு உள்ளூரில் சில இடங்களுக்குச் சென்று வந்தார்களாம். சண்டிகரில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த சில தகவல்கள் மட்டும் இங்கே!
ராக் கார்டன் (Rock Garden): சண்டிகர் நகரின் செக்டர் 1 பகுதியில் அமைந்திருக்கும் இந்த ராக் கார்டன் திரு நேக் சந்த் சைனி என்பவரால் உருவாக்கப்பட்டது. சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தோட்டம் முழுக்க முழுக்க வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து கிடைக்கும் வீணான பொருட்கள், Scrap மூலம் உருவாக்கப்பட்ட பொம்மைகள், சிறு நீர்வீழ்ச்சிகள், நீரூற்றுகள், எண்ணிலடங்கா சிலைகள் ஆகியவை இருக்கும் ஒரு இடம். சுற்றிப் பார்க்க வேண்டுமெனில் குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ஆகலாம். கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட சிலைகள் - அதுவும் உடைந்த வளையல்கள், பீங்கான் கோப்பைகள் என எதையும் வீணடிக்காமல் அவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அமைப்புகளை, பார்த்துப் பார்த்து உருவாக்கியவர் திரு நேக் சந்த் சைனி. உள்ளே சென்று பார்க்க நுழைவுக்கட்டணம் உண்டு - பெரியவர்களுக்கு முப்பது ரூபாயும், சிறியவர்களுக்கு பத்து ரூபாயும்! உள்ளே சென்று நாம் பார்க்கக்கூடிய கலைப்பொருட்களுக்கு இந்தக் கட்டணம் குறைவே.
Rose Garden: நகரின் செக்டர் 16 பகுதியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு அழகிய தோட்டம் - முன்னாள் ஜனாதிபதி ஜாக்கிர் ஹுசைன் அவர்களின் பெயரில் அழைக்கப்படும் ரோஸ் கார்டன். பலவித வண்ணங்களில், வகைகளில் ரோஜாப் பூக்கள் பூத்துக் குலுங்கும் ஒரு தோட்டம். ரோஜாக்கள் மட்டுமல்லாது விதம் விதமான, வகை வகையான பூக்களும் இங்கே உண்டு. தவிர நீருற்றுகள், பெரிய மரங்கள் என அந்த இடம் முழுவதுமே நன்றாக பராமரிக்கப்படுகிறது. குளிர் நாட்களில் இங்கே சென்று விதம் விதமான மலர்களை பார்த்து ரசித்ததுண்டு. கோடைக் காலம் எனில் பூக்கள் அத்தனை இருக்காது. கோடையின் தாக்கத்தினை குறைக்க இந்தப் பூங்காவின் மரங்கள் கொஞ்சம் உதவும்! ரோஜா என்றால் காதலும் காதலர்களும் இல்லாமலா? நிறைய காதல் ஜோடிகளை இங்கே பார்க்க முடியும்.
Sukhna Lake: ராக் கார்டன் போலவே இந்த சுக்னா லேக் - உம் செக்டர் ஒன்றில் தான் இருக்கிறது. இயற்கையாக உருவான ஏரி அல்ல! மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஏரி. ஆனால் அழகில் குறைவில்லை. இந்தப் பகுதிக்குச் செல்ல கட்டணம் ஏதுமில்லை. உணவகங்கள், விளையாட்டுக்கான வசதிகள், நிகழ்வுகள் நடத்த வசதிகள் என பல விஷயங்கள் இந்த ஏரிப்பகுதியில் உண்டு. இரண்டு விதமான படகு வசதிகளும் இந்த ஏரிப் பகுதியில் உண்டு. மாலை நேரத்தில் இங்கே சென்று வரலாம்.
Pinjore Garden: சண்டிகர் நகரிலிருந்து ஹிமாச்சலப் பிரதேசம் செல்லும் வழியில், நகரிலிருந்து சிறு தொலைவில் அமைந்திருப்பது இந்தப் பூங்கா. அழகான பூங்கா இது. இங்கே ஒட்டக சவாரி செய்யவும் வசதி உண்டு. கூடவே ஒரு சிறு Zoo கூட இருக்கிறது. பூங்காவில் சுற்றி வந்து மிருகங்களையும் பார்த்து ரசித்து வரலாம்.
Cactus Park: ஹரியானா மாநிலம் உருவாக்கிய பஞ்ச்குலா நகரில் அமைந்திருக்கும் ஒரு பூங்கா இது. விதம் விதமான Cactus இங்கே நாம் பார்க்க முடியும். கள்ளிச் செடி என்று சாதாரணமாகச் சொல்லிவிடக்கூடிய இந்த Cactus செடிகள் இத்தனை வகைகளில் உண்டா என்று பார்க்க வியக்கக்கூடிய அளவிற்கு செடிகள் இங்கே இருக்கின்றன. ஒரு அலுவலக வேலைக்காக இந்தப் பகுதியில் ஐந்து நாட்கள் தங்கியிருந்தபோது, அந்தச் சமயத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட இந்தப் பூங்காவிற்கு சென்று வந்திருக்கிறேன். எத்தனை வகைகளில் இந்தக் கள்ளிச் செடிகள் இருக்கின்றன என்று பார்த்து வியந்திருக்கிறேன்.
Timber Trail: பிஞ்சோர் கார்டன் பார்க்கச் சென்றால், ஹிமாச்சலப் பிரதேசத்தில் நுழையும்போது அமைந்திருக்கும் இருக்கும் இந்தச் சுற்றுலாத் தலத்திற்கும் சென்று வரலாம். உடன் கட்டோலா என்று அழைக்கப்படும் விஞ்ச் வழியாக மலை உச்சிக்குச் சென்று அங்கே சிறிது நேரம் செலவிடுவதோடு அங்கிருந்து இயற்கைக் காட்சிகளையும் ரசிக்கலாம்.
சண்டிகர் நகரில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து இந்தப் பகுதியில் எழுதியிருக்கிறேன். அடுத்த நாள் காலை நாங்கள் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்த அனுபவங்களை வரும் பகுதிகளில் எழுதுகிறேன். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே. பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
8 ஜூன் 2026





சண்டிகரின் பல்வேறு இடங்கள் குறித்த தகவல்கள் நன்று.
பதிலளிநீக்குஇதைப் பார்த்துத்தான் பாலக்காட்டில் சிறிய ராக் கார்டன் அமைத்திருக்கிறார்கள்.
ஒரு ஊருக்குச் சென்றால் நேரம் கிடைக்கும்போது புதிய இடங்களையும் கண்டு வந்திருக்கிறார்களே... நிஜமான பயணக் காதலர்கள்தாம்.
பதிலளிநீக்குடெல்லியில் பணியில் இருந்த காலத்திலேயே இங்கு பணி நிமித்தம் வந்திருக்கிறீர்களா? ஆடிட்டில் இருந்தீர்களோ? அல்லது விசிட்?
பதிலளிநீக்குசண்டிகர் பற்றி அறிந்தேன். ஏரி பூங்காக்கள் பற்றியும் படித்தேன். தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஜி, தந்தூரி ரொட்டி - கவர்கிறது. சாப்பிட்டு வருடங்களாகிவிட்டன. அதாவது வெளியில் உணவகத்தில்.
பதிலளிநீக்குகீதா
வாங்க சாப்பிடுங்க - பெயர் நல்லாருக்குல்ல!?
பதிலளிநீக்குதுளசி குடும்பத்தினர் 2024ல் எங்கள் வீட்டுத் திருமணத்திற்கு வந்துவிட்டு அப்படியே சிம்லா சென்றதால், அப்ப சண்டிகரில் பார்பப்தற்கு இடங்கள் குறித்துக் கொடுத்திருந்தேன். அப்ப அவங்க tour agent மூலம் போகவில்லை. சிம்லாவிலும் சண்டிகரிலும் இடங்கள் குறித்துக் கொடுத்தேன். சண்டிகரில் இதே இடங்கள்தான். அவர்களால் எல்லா இடங்களும் போய் வர முடியவில்லை சிம்லா செல்லும் இடையில் அடுத்தநாள் ரயிலுக்கான இடைவெளியில் என்பதால்....பதிவாகவும் வந்தது எங்கள் தளத்தில். ராக் கார்டன், பொம்மை காட்சியகம், sukhna lake போய் வந்தாங்க. வெயிலுக்காக மால் சென்றார்கள் அதனால் சில இடங்கள் போகவில்லை என்று சொன்னார்.
கீதா
சண்டிகரில் பார்க்க வேண்டிய இடங்கள் படங்கள் விளக்கங்களுடன் நன்கு கண்டோம்.
பதிலளிநீக்குதிருமதி துளசி கோபால் அவர்களும் சண்டிகரில் இருந்தது பற்றி தனது பதிவுகளில் தந்திருந்தார் .நாங்கள் படித்திருந்தது இப்போது நினைவுக்கு வந்தது.