திங்கள், 23 ஜூன், 2014

நைனிதால் – காடு வா வா என்றது!




ஏரிகள் நகரம் – பகுதி 17

ஏரிகள் நகரம் – பகுதி 01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

ஏரிகள் நகரம் தொடரின் பதினாறாம் பகுதியினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.


நீங்கள் எப்போது ஜிம் கார்பெட் செல்ல முடிவு செய்தாலும் ஒரு மாதம் முன்னரே முன் பதிவு செய்து விடுவது நல்லது. இல்லையெனில் அங்கே சென்ற பிறகு ஏமாற்றமே மிஞ்சும்.


உணவு இடைவேளையில் நீங்கள் அனைவரும் சாப்பிட்டு வந்திருப்பீர்கள் தானே?  அடடே இல்லையா? சரி தலைவாழை இலை போட்டு சாப்பாடு போட்டால் போச்சு!

யாரங்கே? உடனே அனைவருக்கும் சுவையான விருந்து தயாராகட்டும்.... 


படம்: இணையத்திலிருந்து.....

விருந்து தயார் ஆவதற்குள் நாம் காட்டுக்குள் சென்று கொஞ்சம் புலி வேட்டையாடி வந்து விடுவோம். சரியா!

சென்ற பதிவில் சொன்னது போல நாங்கள் உணவு எடுத்துக் கொள்ளச் சென்றோம். உங்களுக்கு ராம் நகரைப் பற்றி முந்தைய பதிவில் சொன்னதை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. கிராமமும் இல்லாது நகரமும் இல்லாத ஒரு ஊர் தான் அது. அங்கே நல்ல உணவகங்கள் இருக்குமென நினைத்தால் அது உங்கள் தவறு தான். டெல்லி தர்பார் என்று ஒரு ஹோட்டலும் வேறொரு ஹோட்டலும் மட்டும் தான் சிறிது சுமாராக இருக்கும் என்று நாங்கள் அமர்த்திய ஜீப் உரிமையாளர் சொல்ல தில்லி தர்பாரைச் சென்றடைந்தோம்.

நமது ஊரில் ஒரு சொலவடை உண்டு. விருந்தினர்கள் வருகிறேன் என்று சொன்னால், “ஓ தாராளமாக வாங்க, உங்க தலையைப் பார்த்ததும் கல்லைப் போடறேன்என்று சொல்வார்கள் – அதற்காக பயந்து விடக்கூடாது.  நாம் வந்து சேர்ந்ததும் தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி சுடச்சுட தோசை செய்துதருவதைத் தான் அப்படிச் சொல்வார்கள். அதே போலத் தான் அந்த ஹோட்டலில் எங்கள் தலையைக் கண்டதும் கோதுமை மாவு பிசைந்து வெங்காயம் நறுக்கி என சமையலைத் தொடங்கினார்கள்.  சரி சூடாகவும், புதியதாகவும் கிடைக்கிறதே என்ற நினைப்புடன் காத்திருந்தோம் – நாங்கள் கேட்டதும் சப்பாத்தி மற்றும் சிம்பிள் தால் மட்டுமே.


படம்: இணையத்திலிருந்து..... 

சிறிது நேரத்தில் சுடச்சுட சப்பாத்தியும் தொட்டுக்கொள்ள தாலும், ஊறுகாயும் வர,  மதிய உணவினை முடித்தோம். அடித்த குளிரில் உதடுகளில் தோல்கள் உரியத் தொடங்க, LIP GUARD வாங்க ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன். மருந்து கடைகளிலும் கிடைக்கவில்லை, மற்ற கடைகளிலும் கிடைக்கவில்லை. அப்படியே நடந்து நடந்து ஒரு கிலோமீட்டர் நடந்த பிறகு ஒரு கடையில் கிடைத்தது. இந்த குளிரில் இது ஒரு தொல்லை – ஆண்களும் வாய் மை போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது!





அங்கிருந்து கிளம்பி கோசி நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணையினையும், அங்கே இருந்த பறவைகளையும் பார்த்து விட்டு வன இலாகா அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தோம். இதற்குள் எங்களை வனத்திற்குள் அழைத்துச் செல்லப்போகும் ஓட்டுனர் வந்து சேர்ந்தார். நீங்கள் தான் எங்களை காட்டுக்குள் அழைத்துச் செல்லப்போகும் வீரப்பனோ என்று கேட்க நினைத்தேன் – ஏனெனில் அவரும் பெரிய வீரப்பன் மீசை வைத்திருந்தார். காட்டுக்குள் போகும் போது எதுக்கு இந்த வம்பு என நாவை அடக்கினேன்.



ஜிம் கார்பெட் உள்ளே செல்ல மற்ற வழிகளைப் போல சீதாவனி பகுதிக்கு வன இலாகா அலுவலகத்தில் எந்த வித முன் அனுமதியும் வாங்கத் தேவையில்லை.  சீதாவனி பகுதிக்குச் செல்லுமுன் இருக்கும் நுழைவாயிலில் வாகனத்திற்கான கடவுச் சீட்டு மட்டும் வாங்கிக் கொண்டால் போதுமானது.  எங்கள் ஓட்டுனர் வீரப்பன் அதை வாங்கி வர வண்டியை நிறுத்த நாங்கள் ஜீப்பில் நின்றபடி சில பல படங்களை எடுத்துக் கொண்டோம்.



பொதுவாக நான் இதுவரை சென்ற வனப் பகுதிகளில் யார் உள்ளே சென்றாலும் அவர்களது வாகனத்திலேயே ஒரு வன இலாகா வழிகாட்டியும் வருவார். இந்த சீதாவனி பகுதிக்குள் செல்ல ஒருவரும் கூட வரவில்லை.  போலவே எந்தவிதமான சோதனைகளும் கிடையாது – பொதுவாக வனப் பகுதிக்குள் செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா, பீடி, சிகரெட், புகையிலை லாகிரி வஸ்துகள் இருக்கிறதா, உள்ளே போதை ஏற்ற சரக்கு எடுத்துப் போகிறார்களா – போன்ற சோதனைகள் இருக்கும். இங்கே ஒரு சோதனையும் இல்லை! 



வசதியாக ஒரு துப்பாக்கி கூட எடுத்துக் கொண்டு போய், பார்க்கும் மான்களைச் சுடலாம் போல இருக்கிறதே என நினைத்தேன். மான்களைச் சுடுவது இருக்கட்டும், உள்ளே இன்னும் நிறைய பார்க்கக் கிடைக்கும் என்று வீரப்பன் சொல்ல, காட்டை நோக்கி பயணத்தைத் தொடங்கினோம்.  எங்களை காடு வா வா என அழைத்தது!

சீதாவனி காட்டுக்குள் நாங்கள் கண்டது என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி…..


வெள்ளி, 20 ஜூன், 2014

ஃப்ரூட் சாலட் – 96 – மலைவழிப் பாதை – விமர்சனம் – உன் சமையலறையில்....




இந்த வார செய்தி:



இயற்கையினை எதிர்த்து சாதனை புரியும் நோக்கத்திற்காகவே சிலர் இருக்கிறார்கள் – ஒரு சிலர் அந்த இயற்கை தரும் இடைஞ்சல்களை மீற அத்தியாவசியம் இருப்பதால் இயற்கையை எதிர்த்து போராடுகிறார்கள். அப்படி ஒரு அத்தியாவசியம் மத்தியப் பிரதேசத்தினைச் சேர்ந்த குமட்யாகுர்த் கிராமத்தினைச் சேர்ந்த [G]கியான் சந்த் என்பவருக்கு ஏற்பட்டது.



மலைப்பாங்கான பிரதேசத்தில் இருக்கும் ஊர் தான் குமட்யாகுர்த்.  [B]பர்வானி மாவட்டத்தின் நிவாலி தாலுகாவினைச் சேர்ந்த இந்த கிராமத்தினர் எல்லா மருத்துவ தேவைகளுக்கும் சுமார் 65 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பர்வானிக்குத் தான் செல்ல வேண்டும். போதிய வாகன வசதிகளும் இல்லாத இவ்வூரில் நோயாளியை ஒரு கட்டிலில் கிடத்தி, கடைசி யாத்திரை போல நான்கு பேர் தூக்கிக் கொண்டு தான் போக வேண்டும்.



ஒரு முறை மாடு கியான் சந்தை முட்டிவிட, பர்வானிக்கு தூக்கிச் சென்றுள்ளார்கள். அப்போது தன்னைச் சுமப்பவர்கள் பட்ட கஷ்டங்களை உணர்ந்த அவருக்கு, உடல் நிலை சரியாகி கிராமத்திற்கு வந்ததும் இதற்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. மலைக்கு அப்புறம் இருக்கும் ஊருக்கு மலையைச் சுற்றிப் போகாமல் மலையின் வழியாகவே ஒரு பாதை அமைத்தால் தங்களது ஊருக்கும், மாவட்டத் தலைநகரான பர்வானிக்கும் இருக்கும் தொலைவு கணிசமாகக் குறையும் என்பதை நினைத்துப் பார்த்தார்.


 படம்: இணையத்திலிருந்து...


உடல் நிலை சரியான பிறகு கிராமத்திற்கு வந்த கியான் சந்த் உடனடியாக இந்தப் பணியில் தானாகவே இறங்கி விட்டார். ஒரு மண் சாலையை அமைக்க கடப்பாறை, மண்வெட்டி சகிதம் களத்தில் குதித்தார்.  அவரது முயற்சியை கிராமத்தினரும் குடும்பத்தினர்களும் முதலில் பரிகாசம் செய்தாலும், அவர் எடுத்துக் கொண்ட பணியில் முன்னேற்றம் தெரிய, ஆரம்பித்ததும் அவருடன் சேர்ந்து கொண்டார்கள். அவரது மனைவிகளும்.....  இங்கே மனைவிகள் என்று குறிப்பிட்டது தவறாக இல்லை – அவருக்கு இரண்டு மனைவிகள் – மற்றும் கிராமத்தினர் சிலரும் உறுதுணையாக இருக்க, பாதை அமைக்கும் பணி தொடர்ந்தது.

 

சமீபத்தில் முழு பாதையும் அவர்கள் அமைத்து முடிக்க, இப்போது அவரது கிராமத்திற்கும் மாவட்டத் தலைநகர் பர்வானிக்கும் இடையே உள்ள தூரம் கணிசமாக குறைந்து இருக்கிறது. கிராமத்தினர் அனைவரும் இவரது உற்சாகத்தில் பங்கு கொள்ள, மாவட்ட நிர்வாகம், நேரடியாக பார்வையிட்ட பிறகு தான் எதுவும் சொல்ல முடியும் என்று சொல்கிறது. 



தனது கிராமத்திலுள்ள அனைவரின் நல்லதற்காகவும் இப்பணியினைத் தொடங்கி நடத்தி முடித்த கியான் சந்த் அவர்களை பாராட்டுவோம்......



இந்த வார முகப்புத்தக இற்றை:



கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் “அன்னையாக முடியும்.....  ஆனால் கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்குக் கூட “அன்னையாக முடியும்! – அன்னை தெரசா.



இந்த வார குறுஞ்செய்தி:



HAPPINESS IS JUST LIKE A RADIO STATION, BROADCASTING ALL THE TIME.  YOU JUST HAVE TO LEARN HOW TO TUNE IN AND RECEIVE IT PROPERLY. STAY TUNED AND BE HAPPY!



சுஜாதாட்ஸ்:



ஒரு எழுத்தாளன் தன்னால் எழுதப்படாத ஒரு கதையை விமர்சிக்கும் போது பல அம்சங்கள் விமர்சனத்தின் நேர்மையைக் கலைக்க முற்படுகின்றன. சிறுகதை படிக்கும்போது கதையின் ஆதாரமான செய்தியையும் அமைப்பையும், ஒரு வாசகனைப் போல கவனிக்காமல், ‘இந்த வாக்கியத்தை இப்படி எழுதி இருக்கலாமே, இந்தப் பாராவை அங்கு அமைத்திருக்கலாமே, கதையை இந்த இடத்தில் முடித்திருக்கலாமேஎன்று அடிக்கடி அவன் பாண்டித்யம் குறுக்கிடும். நான் சந்தித்த பல எழுத்தாளர்கள் மற்றவர்கள் கதையை யோக்கியமாகப் படிக்கிற ஜாதி இல்லை என்பதை அவர்களுடன் பேச்சில் தெரிந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் பொழுது போக்குக்கு தத்தம் சொந்தக் கதைகளையே படித்துக் கொண்டிருப்பார்கள் என்றும் தோன்றியது!



ரசித்த பாடல்:



சமீபத்தில் அதிகம் ரசித்த பாடல் என்று சொன்னால், “உன் சமையல் அறையில்படத்தில் வரும் “இந்த பொறப்புதான்எனும் பாடலைச் சொல்லலாம்.  அதில் அடுக்கிக் கொண்டு வரும் உணவு வகைகளையும், காட்சியில் காண்பிக்கும் பதார்த்தங்களையும் பார்க்கும் போது உடனே சாப்பிடத் தோன்றுவது உறுதி. சாப்பிட்டு, அதாங்க கேட்டுப் பாருங்களேன்!






இந்த வார புகைப்படம்:




ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..... 



படித்ததில் பிடித்தது:



மைக், போஸ்டர், கூட்டம்

மந்திரியின் ஆரவாரப் பேச்சு

பத்திரிகையில் அமர்க்களமாய்ப் படம்

வாழ்த்துக் கவிகள் – ஒன்றுமே இல்லை

மாதத்தில் ஒரு நாள்

சலூன்காரன் எனக்குப்

பொன்னாடை

போர்த்துகிறான்.



-   வேய்ங்குழல் வேந்தன்.



என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..



நட்புடன்



வெங்கட்.

புது தில்லி.



புதன், 18 ஜூன், 2014

ஏண்டி என்ன பெத்த?

அனு….  60 வயது பெண்மணி. தனது அம்மா மற்றும் அக்கா, அக்கா மகள் ஆகியோருடன் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கிறார். அவருக்கு அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் அத்தனை பேரும்பேசத் தெரிந்த குழந்தைகளிலிருந்து கொள்ளிடக்கரைக்குப் போகக் காத்திருக்கும் பெரியவர்கள் வரை அனைவரையும் தெரியும்.

பெரும்பாலான பகல் பொழுதுகள் தனது வீடு இருக்கும் மாடியில் படிக்கட்டுகள் சந்திக்கும் இடத்தில் தான் இருப்பார். அந்த வழியே வரும் போகும், ஒருவரும் அவரது பார்வையிலிருந்தோ, கேள்விக் கணைகளிலிருந்தோ தப்பவே முடியாது. அவரை நீங்கள் பார்க்காத மாதிரி போனாலும், அவர் பார்வையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது. “என்ன பார்க்காத மாதிரி போற?” என்று கேட்பார்.

பலரிடம் அவர் கேட்கும் கேள்வி – “எங்கே போற! வரும்போது எனக்கு என்ன வாங்கிட்டு வருவே?” பெண்களாக இருந்தால், “எனக்கு வளையல் வாங்கித் தருவியா?” தப்பித்தவறி யாராவதுவாங்கிட்டு வரேன்என்று சொல்லிவிட்டால், அவர் வளையல் வாங்கித் தரும் வரை விடமாட்டார். ”வளையல் வாங்கித் தரேன்னு சொன்னியே, இன்னும் வாங்கித் தரலையேஎன்று ஒவ்வொரு முறையும் கேட்பார். அடுத்த முறை வெளியே செல்லும் போது பார்த்தால், அவருடைய கேள்விஎங்கே போற?” என்பதிலிருந்துவளையல் வாங்க போறியா?” என்பதாக மாறி விடும்.

வாசலில் நிற்கும் ஆட்டோ ஓட்டுனரிடம்,  நீ மட்டும் ஆட்டோல எங்கியோ போயிட்டே இருக்கே, என்னை எங்காவது அழைச்சிட்டு போயேன்!”

அவர் வளர்ந்து விட்டாலும், அவரது மனதளவில் அவர் குழந்தை தான். இப்போதும் மனதில் சிறு குழந்தை எனும் எண்ணம். அதனால் தன்னை விட உயரமானவர்களாக இருந்தால், அவர் 18 வயது பெண்ணாக இருந்தாலும் அவரைஅக்கா என்று தான் அழைப்பார்…..

தீபாவளி சமயத்தில், தனது புதுப் புடவையைக் கட்டிக்கொண்டு அடுக்கு மாடி குடியிருப்பின் அனைத்து வீடுகளிலும் சென்று காண்பித்துஎன்னோட புதுப்புடவை நல்லா இருக்கா?” என்று கேட்பார். ”உங்க வீட்டுல என்ன பலகாரம்? எனக்குத் தரமாட்டியாஎன்று கேட்டு தரும் வரை அந்த வீட்டிலிருந்து நகரமாட்டார். வாங்கி அதை புதுப் புடவையின் தலைப்பில் முடிந்து கொண்டு அடுத்த வீட்டுக்கு நகருவார். அடுத்த வீட்டிலும் இந்த பலகாரம் சேகரிப்பு தொடரும்அவர் வீட்டுக்குத் திரும்புவதற்குள் புதுப்புடவையின் தலைப்பு முழுவதும் பல வீடுகளின் பலகாரங்கள் நிறைந்திருக்கும்.

தீபாவளி சமயத்தில் என் காமிராவில் புத்தாடைகளில் குடும்பத்தினரை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்தார் அவர். “எல்லோரையும் ஃபோட்டோ எடுக்கறியே, என்னை எடுக்கக் கூடாதா?” என்று கேட்க, அவரையும் ஒரு புகைப்படம் எடுத்தேன்.  இரு இரு, நான் கொஞ்சம் புடவையெல்லாம் சரி செய்து கொண்டு அழகாயிடறேன், அதுக்கப்பறம் ஃபோட்டோ எடுஎன்றார்.

இப்படி எல்லோரிடமும் பழகும் அவருக்கும் அவரது அம்மாவிற்கும் எப்போதும் சண்டை தான். “ஏன் இந்த மாதிரி வீடு வீடா போய் எதையாவது வாங்கிட்டு வரே?, எனக்கப்புறம் உன்னை யார் பார்த்துக்கப் போறாங்களோ தெரியலைஎன்று வருத்தப் படுவார் வயதான அவரது அம்மா. கொஞ்சம் மனநிலை சரியில்லாத/ரெண்டுங்கெட்டான் பெண்ணை இத்தனை வருடம் காப்பாற்றி விட்டாலும் தனக்குப் பிறகு என்ன செய்வது என்ற கவலை அவருக்கு….. 

ரொம்பவே முடியாத சமயங்களில் அவரது அம்மா திட்டிவிட, அப்போது கேட்கும் கேள்வி தான் இப்பதிவின் தலைப்பு – “ஏண்டி என்ன பெத்த?” அந்த கேள்விக்கு பதில் அவரிடம் கிடைக்காது. ஒவ்வொரு முறை அவரை பார்க்கும் போது அவரது கேள்வி தான் எனது மனதிலும் – இப்போது போல அக்காலத்தில் கருவிலேயே குழந்தையின் குறைபாடுகளை தெரிந்து கொள்ளும் வசதி இல்லாத போது, அம்மா என்ன செய்ய முடியும்.....

படைத்த ஆண்டவனின் குற்றமா இல்லை பெற்றுக் கொண்டவர்களின் குற்றமா?

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.