எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, March 4, 2014

நாவூற வைக்கும் அரிநெல்லிக்காய்....மனச் சுரங்கத்திலிருந்து....

 பட உதவி: கூகிள்.....

கடந்த மாதத்தின் கடைசி நாள் – எனது முகப்புத்தகத்தில் ஸ்ரீமதி ரவி என்பவர் கொத்தாக இருக்கும் அரிநெல்லிக்காய் படத்தினைப் பகர்ந்து உனக்கு நினைவிருக்கிறதா என்று எழுதி இருந்தார். முதலில் ஸ்ரீமதி ரவி பற்றி சொல்லி விடுகிறேன். எனது மனச்சுரங்கத்திலிருந்து தொடரின் முந்தைய பகுதிகளைப் படித்திருப்பவர்களுக்கு இவர் அறிமுகமானவர் தான். சில மாதங்களுக்கு முன்னர் “டவுசர் பாண்டி என்ற தலைப்பில் கீழே உள்ளபடி எழுதி இருந்தேன்.

எங்கள் வீட்டில் மூன்று பேர் நான், அக்கா, தங்கை.  இடது பக்க வீட்டில் [வலப்பக்க வீட்டில் இருந்தது டிரைவரூட்டம்மா] ஒரு மலையாளி.  அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிரசாத், ஒரு அக்கா மற்றும் முரளி. அவர்களுக்கு பக்கத்து வீட்டில் ஒரே ஒரு அக்கா. ஆக மொத்தம் ஏழு பேர்.  எங்களோட எல்லா விஷமமும் அரங்கேறுவது எங்கள் தோட்டங்களில் தான்.

மேலே குறிப்பிட்ட பத்தியில் உள்ள “அவர்களுக்கு பக்கத்து வீட்டில் ஒரே ஒரு அக்காதான் ஸ்ரீமதி ரவி.  பல வருடங்களுக்குப் பிறகு முகப் புத்தகம் மூலமாக, நெய்வேலியில் பக்கத்து பக்கத்து வீடுகளில் இருந்த ஏழு பேரும் திரும்பவும் நட்பு வட்டத்திற்குள் வந்திருக்கிறோம். அவ்வப்போது நெய்வேலி நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி. அதிலும் எனது மூத்த சகோதரியும் ஸ்ரீமதி ரவியும் அடிக்கடி பேசிக் கொள்கிறார்கள். சரி இப்போது அரிநெல்லிக்காய் விஷயத்திற்கு வருகிறேன்!

எங்கள் நெய்வேலி வீட்டில் பல மரங்கள் இருந்ததை முந்தைய மனச்சுரங்கத்திலிருந்து பதிவுகளில் எழுதி இருக்கிறேன். அந்த மரங்களில் அரிநெல்லிக்காய் மரமும் ஒன்று. சாதாரணமாக அரிநெல்லிக்காயில் கொஞ்சம் புளிப்பு அதிகம் இருக்கும். ஆனால் எங்கள் வீட்டிலிருந்த மரத்தில் காய்க்கும் அரிநெல்லிக்காய்கள் கொஞ்சம் இனிப்புச் சுவையும் கூடியதாக இருந்தது. பச்சையாகவே சாப்பிடலாம். ஆனாலும் அதில் உப்பு உரைப்பு சேர்த்து ஊறவைத்து சாப்பிட்டால்....  இப்போது நினைத்தாலும் நாவில் நீர் ஊறும்.....

எனக்கும் இந்த நெல்லி மரத்திற்கும் கொஞ்சம் அதிகமான ஒட்டுதல். வீட்டிலிருக்கும் அத்தனை மரத்திலும் ஏறி காய்கனிகளை பறிப்பது என்னுடைய வேலையாக இருந்தாலும் நெல்லி மரத்தின் மேல் தான் அதிகம் இருந்திருக்கிறேன். பொதுவாகவே நெல்லி மரம் மிகவும் மெல்லிய கிளைகளை உடையது. சாதாரணமாக காற்றடித்தாலே நெல்லிக்காய்கள் கீழே விழுவது மட்டுமல்ல, சில கிளைகளும் ஒடிந்து கீழே விழுந்து விடும். ஆனாலும் அந்த மரத்தின் போது அவ்வப்போது ஏறி கீழே விழாது மரத்திலேயே பழுத்த அரிநெல்லிக்கனிகளை உண்பது எனக்கு மிகவும் பிடித்தமானது.

பல சமயங்களில் என்னை அந்த மரம் காப்பாற்றியிருக்கிறது. யாரிடமிருந்து என்று கேட்டால், என்னை அடிப்பதற்காகத் துரத்தும் அப்பாவிடமிருந்து தான்! அப்பா அடிப்பாரா? ஏன்? என்று கேட்பவர்களுக்கு பதில் “காரணமும் நான் தான்! சும்மா இருந்தால் தானே...  சகோதரிகளிடம் ஏதாவது சண்டை, சின்னச் சின்னதாய் பொய் சொல்வது, வீட்டில் வைத்திருக்கும் வெல்லம், சர்க்கரை போன்றவற்றை திருடித் தின்பது, வீட்டில் இருக்கும் ஏதாவது பொருளை நோண்டி அதை அக்கு வேறு ஆணி வேறாக பிரிப்பது என பலதரப்பட்ட விஷமங்களைச் செய்திருப்பேன்.

பெரும்பாலான விஷமங்கள் அப்பா வீட்டில் இல்லாத போது தான் செய்வேன். அப்பா வீட்டிற்கு வந்தவுடனேயே அவரிடம் என் விஷமங்களைப் போட்டுக் கொடுப்பதற்கென்றே யாராவது இருப்பார்கள்! அவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அலுப்பில் இதைக் கேட்டவுடன் கோபம் வரும் என்னை அடிக்க வருவார். நான் தோட்டத்திற்கு ஓடிப் போய், தோட்டத்தில் மா, பலா என எத்தனையோ பலமான மரங்கள் இருக்க, இந்த அரிநெல்லிக்காய் மரத்தில் ஏறி உட்கார்ந்து கொள்வேன்.

மரத்திலிருந்து கீழே வாடா என என்னை மிரட்டுவார் அப்பா. நானோ கீழே வந்தா அடிப்பீங்க! அதனால நான் வரமாட்டேன் என அங்கேயே உட்கார்ந்திருப்பேன். எப்படியும் சாப்பிட கீழே வந்து தானே ஆகணும்....  கீழே வந்தா இவனுக்கு சாப்பாடு போடாதே....என அம்மாவிற்கும் ஒரு ஆணையைப் பிறப்பித்து உள்ளே செல்வார். நானும் அவர் உள்ளே சென்று சில நிமிடங்கள் வரை மரத்திலேயே அமர்ந்திருப்பேன். நான் இறங்கி வருவதற்குள் சகோதரிகள் இரண்டு பேரும் தோட்டத்திற்கு வந்து “டேய், நல்ல பழுத்த அரிநெல்லிக்காய் பறிச்சு எடுத்துட்டு வா! உப்பு காரம் போட்டு சாப்பிடலாம்!என்று சொல்ல டவுசரின் இரண்டு பாக்கெட்டுகளிலும் அரிநெல்லிக்காய்களுடன் இறங்கி சத்தம் போடாது சமையலறைக்குள் சென்று விடுவேன்!
தண்ணீரில் சுத்தம் செய்து அரிநெல்லிக்காய்களை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் போன்றவற்றை போட்டு சிறிது நேரம் ஊறவைத்து சாப்பிட்டால்....  ஆகா தேவாமிர்தம் கிடைத்த உணர்வு.... பல முறை சாப்பிட்டாலும் அலுத்துப் போகாத ஒரு விஷயம் இந்த அரிநெல்லிக்காய். நெய்வேலியிருந்து வந்த பிறகு, அதாவது கடந்து இருபத்தி மூன்று வருடங்களாக நான் சாப்பிடவில்லை – அதாவது கிடைக்கவில்லை.

இதே நெல்லி மரத்தின் அடியில் உட்கார்ந்து நான், அக்கா, தங்கை, ஸ்ரீமதி ரவி என அனைவரும் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைத்து விளையாடியிருக்கிறோம். 

என்னை பல முறை காத்த அந்த அரிநெல்லி மரம் இப்போது இல்லை. நாங்கள் நெய்வேலியிலிருந்து வந்த பின்னர் அந்த மரமும் விழுந்து விட்டது. புளிய மரத்தினையும் ஒன்றிரண்டு மாமரங்களையும் தவிர தோட்டத்தில் அப்போது இருந்த பல மரங்கள் இப்போது இல்லை. இப்பவே எனக்கு அரிநெல்லிக்காய் சாப்பிட ஆசை....  ஆனால் இந்த தில்லியில் கிடைக்காது :(

சமீபத்தில் திருவரங்கத்தில் ராஜகோபுரம் அருகே நடைபாதைக் கடையொன்றில் சின்னபடியில் வைத்து விற்றுக் கொண்டிருந்ததை என் மனைவி காண்பித்தார். சரி வாங்கலாம்எனச் சொன்னபோது சத்திரத்திற்கு போய்ட்டு வரும்போது வாங்கலாம் என்று சொல்லிவிட, நானும் நாவில் ஊறிய சுவையோடும் அந்த நினைப்போடும் சென்றுவந்தேன். திரும்பி வரும்போது மனைவிக்கு நினைவில்லை....  எனக்கு நினைவிருந்தது – அந்த நடைபாதைக்கடையில் அரிநெல்லிக்காய் வியாபாரி இல்லை!..... :(

அடுத்த முறையாவது அரிநெல்லிக்காய் சுவைக்க வேண்டும்! சுவைத்து பழைய நினைவுகளில் திளைக்க வேண்டும்.......

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

54 comments:

 1. மரம் ஏற வைத்த அப்பாவிற்கு முதலில் நன்றி... சுவையான இனிய நினைவுகள்... 24 வது வருடத்திலாவது அரிநெல்லிக்காய் கிடைக்கட்டும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete


 2. அரி(ரு)நெல்லிக்காய் சுவையை சுவைத்தவர்களுக்குத்தான் தெரியும் அதனுடைய சுவை. அது போலவே நெல்லிக்காயும் முதலில் துவர்ப்பதுபோல் இருந்தாலும் பின்னால் இனிக்கும். நெல்லிக்காய் பற்றி எழுதி பழைய நினைவுகளை அசை போட வைத்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா...

   Delete
 3. ஆகா... சின்ன வயசுக்கு நம்பள இஸ்துக்கினு பூட்டியேபா... இஸ்கூலு போவ சொல்லோ... நெல்லிக்கா துன்னாத நாளே கெடியாதுபா... பதிவ படிக்க சொல்லோ உள்நாக்கு இனிக்கிதுபா...!

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முட்டா நைனா.....

   Delete
 4. மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்கனியும்
  முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் ..

  நினைவும் இனிக்கிறது..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. எங்க வீட்டுக்கு வாங்கண்ணா! தேவையான அளவு பறிச்சுத் தரேன். எனக்கு உப்பு மிளகாய்தூள் போட்டு சாப்பிட பிடிக்காது. அப்படியே பச்சையாகத்தான் சாப்பிடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு கூடை நிறைய அரிநெல்லி உடனே தில்லிக்குப் பார்சல் ப்ளீஸ்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 6. ரா.ஈ. பத்மநாபன்March 4, 2014 at 10:04 AM

  சிறு வயது நினைவுகள் என்றுமே சுவையானவைதான். எங்கள் வீட்டில் இதுபோல் நான் மரமேறியதும் எங்கள் வீட்டு மற்ற வானரங்கள் ‘குத்தாலத்துக் குரங்கே! கொப்பை விட்டு இறங்கே’ என்று ராகம் போடும்.

  ReplyDelete
  Replies
  1. குத்தாலத்துக் குரங்கே! அட இது நல்லா இருக்குண்ணே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 7. நானும் 23 வருடங்கள் நெய்வேலியில் தான்இருந்தேன்.கல்யாணம் ஆகும் வரை.என் நெய்வேலி வீட்டு தோட்டத்தை நினைக்க வைத்து விட்டிர்கள்.
  மாம்பழம்,2பலா,3சாத்துகுடி,2கொய்யா,அரநெல்லி,முழுநெல்லி,வேம்பு,இலவம்மரம், மறக்க முடியுமா? Thanks for sweet memories I miss Neyveli

  ReplyDelete
  Replies
  1. மறக்க முடியாத நெய்வேலி வாழ்க்கை தான் சுபா......

   நானும் நமது நெய்வேலியை பல விஷயங்களில் இழந்து தவிக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுபா.

   Delete
 8. உங்கள் மனச்சுரங்கத்தில் இருந்து எனக்கு பிடித்தவைகளை படங்களாக போட்டு வெறுப்பு ஏற்றினால் பதிலுக்கு என் மனச்சுரங்கத்தில் இருக்கும் அழகான அமெரிக்க பிகர்களை படங்களாக போட்டு உங்களை வெறுப்பு ஏற்ற வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. ஏன் இந்த கொலவெறி மதுரைத் தமிழன்......

   ஏற்கனவே ஒரு படம் போட்டாச்சு போல! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 9. ////அப்பா வீட்டிற்கு வந்தவுடனேயே அவரிடம் என் விஷமங்களைப் போட்டுக் கொடுப்பதற்கென்றே யாராவது இருப்பார்கள்! அவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அலுப்பில் இதைக் கேட்டவுடன் கோபம் வரும் என்னை அடிக்க வருவார்.///

  மரத்துமேலே ஏறிய குரங்கை அவரால் அடிக்க முடியவில்லை.தினம் தினம் இப்படி நீங்கள் விஷமம் பண்ணுவதை பார்த்து பொறுக்க முடியாத அவர் இறுதியில் கல்யாணத்தை பண்ணி வைத்தார். அதன் பின் அந்த குரங்கு தன் வாலை சுருட்டி அப்பாவியாக மாறிவிட்டது . இப்படியெல்லவா பதிவை கொண்டு போயிருக்கனும்..

  ReplyDelete
  Replies
  1. அது எல்லா குரங்குகளுக்கும் பொருத்தமானது தானே! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 10. நாம் சிறுவயதில் மரம் ஏறி மாங்காய் கொய்யாக்காய் நெல்லிக்காய்,புளியம்பழம் என்று சாப்பிட்ட மாதிரி இந்த கால குழந்தைகளுக்கு வாய்ப்புகள் இல்லை என நினைக்கும் போது பரிதாபமாகவே இருக்கிறது நமக்கு பழங்களும் காய்களும் மரத்தில் இருந்து வந்தன. ஆனால் இந்த கால குழந்தைகளுக்கோ அது சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும் பொருட்களாகவே இருக்கிறதுtha.ma 5

  ReplyDelete
  Replies
  1. இக்கால குழந்தைகள் இவற்றை எல்லாம் இழந்து விட்டதாகத் தான் எனக்கும் தோன்றும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 11. நெல்லிக்காயை - அதுவும் அரநெல்லிக்காயை விரும்பாதவரும் உண்டோ!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 12. படிக்கும்போதே பல் கூசுகிறது! எங்களுக்கு அரை நெல்லிக்காய் என்று சொல்லித்தான் பழக்கம். எங்கள் வீட்டிலும் நெல்லி மரம் இருந்தது. ஆனால் பெரிய நெல்லி.

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு ஊரிலும் ஒரு பெயரில் அழைக்கிறார்கள்.. - அரை நெல்லி, அறிநெல்லி, அரிநெல்லி, அருநெல்லி!.. எது சரி என ஆராய்ச்சி செய்யத்தான் வேண்டும் போல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. அரி நெல்லிக்காய்! எனக்கும் பிடிக்கும்! இப்போது வீட்டில் செடி வைத்து வளர்ந்து வருகிறது! காய்த்ததும் அனுப்புகிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்......

   Delete
 14. "//தண்ணீரில் சுத்தம் செய்து அரிநெல்லிக்காய்களை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் போன்றவற்றை போட்டு சிறிது நேரம் ஊறவைத்து சாப்பிட்டால்.... //"

  ஏங்க இப்படியெல்லாம் எழுதி எங்க ஆசையை கிளப்பி விடுறீங்க???

  ReplyDelete
  Replies
  1. அடடா உங்களுக்கும் சாப்பிடும் ஆசை வந்துடுச்சா..... எனக்கு பார்சல் அனுப்பும்போது உங்களுக்கும் அனுப்பி வைக்க ராஜிட்ட சொல்லிடலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 15. உங்களுக்கு மரம் எல்லாம் ஏறத் தெரியுமா!!!
  உங்கள் வீட்டம்மா அடிக்க வந்தால், தப்பித்துக்கொள்ள அப்பவே மரம் ஏற கத்துக்கொண்ட உங்களின் அறிவுத்திறனை என்னவென்று சொல்லுவது.

  ReplyDelete
  Replies
  1. அடடா.... இப்படி கூட யோசனை செய்யறீங்களே... எல்லாம் மதுரைத் தமிழன் சகவாசம் தான் காரணம்! :))))

   தற்காப்புத் திறன் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 16. நம் மதுரைத் தமிழர் சொன்னது போல நான் சூப்பர் மார்க்கெட்டிலும்
  இணையத்திலும் தான் பல மரங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்கிறேன்.

  நாகராஜ் ஜி..... உங்களின் பதிவைப் படிக்கும் பொழுதே
  நாவில் நீர் ஊறுகிறது.... செமுத்தியா புளிக்கும் இல்ல....

  ReplyDelete
  Replies
  1. சில நெல்லி மரத்தின் காய்கள் ரொம்பவே புளிக்கும். மரத்தினைப் பொறுத்து சுவையும் மாறும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 17. பழைய நினைவுகள் மிக அருமையாக இருந்தது.

  அரிநெல்லிக்காயா?
  அரைநெல்லிக்காய் தானே சரியான பிரயோகம். ஒருவேளை பேச்சு வழக்கில் கூறுகிறீர்களோ?

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு ஊரில் ஒரு மாதிரி பெயர் சொல்கிறார்கள் ஜோன்ஸ்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.

   Delete
 18. இளமைப்பருவத்து நினைவுகளை விட இனிமையானது வேறெதுவும் இல்லை! அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 19. ஆரண்யநிவாஸ்க்கு போங்க.. கூடை கூடையா அள்ளலாம்

  ReplyDelete
  Replies
  1. இதற்காகவே அடுத்த முறை ஆரண்யநிவாஸ்கு போகணும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

   Delete
 20. அரி நெல்லிக்காய் – நாங்கள் அர நெல்லிக்காய் என்று சொல்லுவோம். பதிவைப் படித்ததும், பள்ளி பருவத்தில் ஸ்கூல் வாசலில், வாய் புளிக்க புளிக்க அர நெல்லிக்காய் சாப்பிட்ட ஞாபகம் வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 21. அரிநெல்லிக்காயின் இனிப்பைப் போன்றே இளம் வயதின் இனிய நினைவுகள். வாங்கி மூட்டை கட்டி 'ஸ்பீட் போஸ்ட்'ல அனுப்பிட சொல்லுங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 22. சாப்பிட்ட பின்னும் நாவில் சுவை நீண்டிருக்கும் நெல்லியை உங்கள் நினைவு அலைகள் இன்னும் அச்சுவையை மறவாமல் இருப்பது சுவையானது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 23. ஆஹா! இனிமையான சிறுவயது நினைவுகள்! குரும்புகள் பல செய்து அப்போது பெரியவர்களிடம் அடி உதை வாங்கினாலும், அதை பின்நாளில் நினைவு கூறும் போது திகட்டாத இனிய நினைவுகள்தான். பள்ளிப் பருவத்தில் பள்ளி வாசலில் வாங்கி, வீட்டுக்குத் தெரியாமல் தின்றது உண்டு!.

  மதுரைத் தமிழன் சொல்லியிருப்பது போல இப்பொதைய தலைமுறைக்கு இது போன்ற அனுபவங்கள் கிடைக்காதது வருத்தம் தான். ஆனால் அது இனி கணினியில் மட்டுமே கூகிளில் தேடிப் பார்க்கும் நாள் வந்து விடுமோ என்ற பயமும் வருகின்றது! நிலங்கள் எல்லாம் சிமென்ட் காடுகளாய் மாறுவதைப் பார்க்கும் போது!

  ரசித்தோம் பகிர்வை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 24. Indha kalaththukku adhai saapittal thondai kattikkum. Naanum school padikkarache niraya saappittu irukkiren. Ippavum saappida asai. But voththukkadhu.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 25. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.வாழ்த்துக்கள்
  சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/03/blog-post_7.html?showComment=1394170736456&m=1#c2285551787432289175
  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் த்கவலுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 26. இனியநினைவுகள்.

  எங்களுக்கும் பிடித்தமானது. கிராமத்துக்குபோனால் எடுத்துவரும் பொருட்களில் இதுவும் ஒன்று. சட்னியுடன் அரைத்துசாப்பிடலாம். தேங்காய்பால்சொதி செய்யலாம்.

  வலைச்சர.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி....

   சொதி..... நெல்லை நண்பர் ஒருவர் வீட்டில் பல வருடங்களுக்கு முன்னர் சாப்பிட்டது.....

   Delete
 27. அரி நெல்லிக்காய் போன்றே உங்கள் நினைவுகளும் இனித்தது !
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....