புதன், 6 நவம்பர், 2013

எப்பவாவது ஒரு ரவுண்டு……



தில்லி சென்று சில வருடங்கள் வரை தமிழ் வார இதழ்களும் மாத இதழ்களும் படித்துக் கொண்டிருந்தேன். கரோல் பாக் பகுதியில் இருந்தவரை தமிழ் இதழ்கள் கிடைத்துக் கொண்டிருக்க, அவற்றை படிப்பது சாத்தியமாக இருந்தது. வேறு ஒரு பகுதிக்குச் சென்றபிறகு, தமிழ் வார இதழ்களும் மாத இதழ்களும் ஒழுங்காக கிடைக்காமல் போகவே அவற்றை படிப்பது படிப்படியாக குறைந்தே போனது. எப்போதாவது தமிழகம் வரும்போது படிப்பதோடு சரி.

 நன்றி: கூகிள்.....

திருச்சி வந்திருக்கும் இச்சமயத்தில் மீண்டும் கல்கி வார இதழ் படிக்க ஒரு வாய்ப்பு. ஞாயிறன்று திருப்பராய்த்துறை போக வேண்டியிருந்தது. சத்திரம் பேருந்து நிலையத்தில் கல்கி இதழ் வாங்கி திருப்பராய்த்துறை போகுமுன் பெரும்பாலான பகுதிகளை படித்து முடிக்க முடிந்தது. ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் அருள் வாக்கு பகுதியில் ஆரம்பித்து சுகி சிவம் அவர்களின் கடைசிப்பக்கத்தில் முடிந்தது கல்கி.

சுகி சிவம் அவர்கள் எழுத்தாளர் கு. அழகிரிசாமி அவர்களின் துல்லியமான பார்வையைப் பற்றிச் சொன்னார் என்றால், ”தலைமுறைகளைத் தாண்டி” எனும் தொடரில் “பிரியாணிக்கும் தலப்பாவுக்கும் என்ன சம்பந்தம்?” என்று சொல்கிறார் ரமணன். பொன்மூர்த்தி என்பவர் “எங்கள் குரல் அரசின் செவிகளில் விழுவதேயில்லை!” என்ற தலைப்பில் “யாரோ கழித்த மலத்தைத் தம் கைகளால் அள்ளும் அவலம் இன்றளவும் தொடர்ந்து வரும் அவலத்தினைப்” பற்றி எழுதி மனதினைப் பிசைந்தெடுக்கிறார்.

எங்க ஊர்க்காரரான இயக்குனர் சாலமன் பிரபு [மைனா, கும்கி படங்களின் மூலம் பிரபலமான] “வானத்தில் போட்ட ஏணி” எனும் தலைப்பில் அவரது வெற்றிப் பாதையைத் தொடராக எழுதிக் கொண்டிருக்கிறார். “எங்க ஊர் கலைஞன்” என்ற தலைப்பில் கட்டைக்கால் மீது ஏறி நின்று கொண்டு தவில் வாசிக்கும் மாரிமுத்து பற்றிய ஒரு கட்டுரை அவரது விடா முயற்சியைப் பற்றி நமக்குத் தெரிவிக்கிறது.

ஞானியின் ஓ பக்கங்களில் இரவு நேர பாரீஸ் பற்றி எழுத, சினிமா பற்றிய செய்திகளும், புதுக்கவிதைகளும் சில பக்கங்களை நிரப்ப, போலி ரேஷன் கார்டுக்கு வேலி போடுவது எப்படி என்று ஒரு பேராசிரியர் சொல்வதைப் பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது.

மகாபாரத மாந்தர்கள் என்ற தொடரை பிரபஞ்சன் எழுதுகிறார். இந்த வாரத்தில் அர்ச்சுனனுக்கு மூன்று ஈடுபாடு என்று சொல்லி அவை என்னென்ன என்று சொல்கிறார். “மூன்று விஷயங்கள் அவன் ஈடுபாட்டு வரம்புக்குள் வருகின்றன – ஒன்று பெண்கள்! இந்த ஈர்ப்பை, தமிழ்நாட்டுப் புறக்கலைஞர்கள் கண்டுபிடித்துக் கறபனையாக பல காதலிகளை பாடல்கள் மூலம் தந்தார்கள்” என்று கட்டுரையில் சொல்கிறார். இதற்காகவே பிரபஞ்சன் அவர்களின் தொடரை தொடர்ந்து படிக்க வேண்டும் எனத் தோன்றியது!

அரசியலும், கேள்வி-பதில் என்றும் சில பக்கங்கள் இருக்க, கார்டூன்கள், கோலப் போட்டி முடிவுகள் என சில பக்கங்கள் இருக்கின்றன. என்னடா இது, முன்னாடி எல்லாம் கல்கியில் நல்ல சிறுகதைகள் இருக்குமே என்று நினைத்தால், அட ஆமாங்க ஒரு சிறுகதை – அதுவும் நல்ல சிறுகதை ஒன்று இருந்தது! அந்த கதையோட தலைப்பு தான் இந்த பதிவின் தலைப்பு.


“உலகத்திலேயே ரொம்ப சுவாரசியமான இடம் எது தெரியுமா? பீச். அதாங்க கடற்கரை. பலதரப்பட்ட மனிதர்கள் வந்து போகிற இடம். எதிரே கடல் அலைகள் வந்து கரையைத் தொட்டுப் போகும். என் நண்பன் நாகராஜ் ஒரு கவிதை அனுப்பி இருந்தான்.



கடலே நீ எத்தனை முறை

அலையாக வந்து

என் காலில் விழுந்தாலும்

உன்னை மன்னிக்க மாட்டேன்”



தலைப்பு என்ன தெரியுமா இந்தக் கவிதைக்கு? “சுனாமியில் பெற்றோரை இழந்த மகன்.”



கடல் இல்லாத ஊர்களில் சுவாரசியத்துக்கு என் சாய்ஸ் என்ன தெரியுமா? பஸ் ஸ்டாண்ட். வெளியூர்ல இருந்து வர்றவங்க, வெளியூருக்குப் போகிறவங்கன்னு அந்த இடமே கலகலப்பா இருக்கும். எத்தனை விதமான சத்தங்கள், ஹார்ன் ஒலியில் இருந்து மனிதர்கள் பேசுகிற சத்தம் வரை.


 நன்றி: கூகிள்


இங்கிருந்துதான் கிளம்புது நான் ஏறிக்கொண்ட பஸ்ஸும். அப்பவே வந்து உட்கார்ந்தாச்சு. ஒரு ட்ரிப் அடிச்சுட்டு கொண்டுவந்து நிறுத்திட்டு ஓட்டுனரும் நடத்துனரும் இறங்கித் தேநீர் குடிக்கப் போயிட்டாங்க!”


பேருந்தில் பயணிக்கும் கதாபாத்திரம் பற்றி எழுதியதைப் படிக்கும் போது நமக்கும் அந்த பேருந்திலே பயணிப்பது போன்ற ஒரு உணர்வு.


“மார்க்கெட் பகுதியைத் தாண்டிப் போகும்போது மிளகாய் நெடி கமறியது. நயம் உருட்டுப் பருப்பு கிடைக்கும் என்று விளம்பரம். அது என்ன உருட்டுப் பருப்பு என்று மனசுக்குள் ஒரு பிறாண்டல். பஸ் மெல்ல ஊர்ந்து அந்த இடத்தைக் கடந்து முன்பு சினிமா தியேட்டர் நிறுத்தமாய் இருந்த இடத்துக்கு வந்தது.”


பேருந்தில் ஏறியவர் கடைசி நிறுத்தம் வரை சென்று அதே பேருந்தில் தான் கிளம்பிய இடத்திற்கே திரும்புகிறார்.  ஏன்? அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்குமே! அப்படின்னா இந்த சிறுகதையை கல்கியில் படிங்களேன்! 

”எல்லாம் சரி, எதுக்கு இந்த கதையை மட்டும் ஸ்பெஷலா சொல்றீங்க! யார் எழுதின கதை இது?” அப்படின்னு ஒரு கேள்வி உங்க மனசுக்குள்ள வந்திருக்குமே! நீங்க கேட்கறதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன். நம்ம ரிஷபன் சார் எழுதின கதை தான் இது. இந்த வார கல்கியில வந்திருக்குன்னு தெரிஞ்சதால தான் நான் கல்கி வாங்கினேன்! கதையைப் பற்றிச் சொல்லுமுன் பல வருடங்களுக்குப் பிறகு கல்கி வார இதழ் படித்த அனுபவத்தினையும் சொல்ல நினைத்தேன். விளைவு இப்பகிர்வு!

என்ன நண்பர்களே, எங்கே கிளம்பிட்டீங்க! இந்த வார கல்கி வாங்கவா? வாங்கி ரிஷபன் சார் கதையைப் படிக்கவா! நல்லது!

மீண்டும் வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து….

32 கருத்துகள்:

  1. கல்கி நான் தொடர்ந்து வாங்குகிறேன். பிரபஞ்சன் பக்கங்கள் புத்தகமாக வந்ததும் வாங்கும் ஆசையை நானும் வெட்டி அரட்டையில் சொல்லியிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

      பிரபஞ்சன் பக்கங்கள் புத்தகமாக வந்ததும் வாங்கணும்.....

      நீக்கு
  2. பதில்கள்
    1. நான் இல்ல நன்றி சொல்லணும்! நல்ல கதை படிக்கத் தந்தமைக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  3. வார இதழை அருமையாக விமர்சனம்
    செய்வதுபோல அனைத்து விஷயங்களையும்
    சுருக்கமாக விளக்கி அறியவைத்தது அருமை
    நம் பதிவர் கதை வந்தது என்றால் அவசியம்
    வாங்கிப்படிக்கத்தானே வேண்டும்
    சுவாரஸ்யமான அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  5. திரு. ரிஷபன் அவர்கள் எழுதியுள்ள அந்தக்கதை தான் எவ்ளோ அழகோ அழகாக உள்ளது. மூன்று முறை படித்து மகிழ்ந்தேன். ஜாலியாகவே கொண்டுவந்த அந்தக்கதையை இறுதியில் எப்படி முடித்துள்ளார் பாருங்கோ. கண்கலங்கச்செய்து விட்டாரே ! அவருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள் மெயில் மூலம் சென்றுள்ளது. அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  6. நாங்களும் திருச்சி வலம் வரப் போகிறோமே. வெல்லமண்டி வழியாக எல்லாம் உங்க பஸ் போகலியா:)
    ரிஷபன் சார் எழுதிய கதையைப் படிக்கிறேன். மிக நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

      நீக்கு
  7. நல்லதொரு விமர்சனம் கவிதை மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.....

      நீக்கு
  8. இங்கு தமிழ் பத்திரிக்கைகள் வாங்க வேண்டுமானால் வெகு தூரம் போக வேண்டும்.எப்போதாவது எங்காவது படித்தால் உண்டு. ரிஷபன் கதையை வலைப்பூவில் எழுதுவார் என்று நம்புகிறேன். படிக்க வாய்ப்பு இருக்கிறதா பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  9. ரிஷபன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  10. வார இதழ் அறிமுகம் அருமை! கல்கி எங்க பக்கம் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  12. கல்கி பத்திரிக்கையை முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை மிக அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  13. ஆஹா.... உங்க பதிவைப் பார்த்தால்.....வாரப்பத்திரிகை குப்பைகளுக்கிடையில் கல்கி தேவலை போல இருக்கே! ஆனாலும் இந்தியா அதுவும் சென்னை வரும்போது பார்க்கிறேன்..

    இணையத்துலே வருதா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையத்திலும் கிடைக்கிறது. www.kalkionline.com பக்கத்தில் பாருங்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர். கை வலி பரவாயில்லையா?

      நீக்கு
  14. தலைப்பைப் பார்த்ததும் ,நீங்களுமா வெங்கட் ?என்ற கேள்வி தோன்றியது .படித்துப் பார்த்ததில் புரிந்தது உங்களின் கல்கி ரசனை !காலத்திற்கேற்ற மாற்றத்துடன்வரும் கல்கி அருமை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      ரவுண்ட் - அதெல்லாம் நமக்கு பழக்கமில்ல! :)

      நீக்கு
  15. கல்கி முகத்தை மாற்றியதும் வாங்கறதை நிறுத்தியாச்சு. மஹாபாரதத்து மாந்தர்கள் குறித்து பிரபஞ்சன் எழுதுகிறாரா? ம்ம்ம்ம்ம்ம்ம்?? அவர் பார்வையில் அல்லவோ பார்ப்பார்! அவருக்கு இதிலெல்லாம் எப்படி ஈடுபாடு வந்தது? ஆச்சரியமே!

    ரிஷபன் கதையா? பதிவில் போட்டால் படிக்கலாம். :( இல்லைனா முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் போட்டாச்சு.... இங்கே இருக்கு பாருங்க!

      http://rishaban57.blogspot.com/2013/11/blog-post_9.html

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

      நீக்கு
  16. கடலை மன்னிக்காத சுனாமியால் தாயை இழந்த மகனின் கவிதை அற்புதம்.மனதை நெகிழ்ச் செய்தது.விமர்சனம் அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....