வியாழன், 16 ஜனவரி, 2014

குரங்குகளுடன் ஒரு காலை [அய்யர் மலை] – பகுதி 2



சென்ற வியாழன் அன்று வெளியிட்ட குரங்குகளுடன் ஒரு காலை [அய்யர் மலை] – பகுதி 1 படிக்காதவர்கள் படிக்க ஏதுவாய் அதன் சுட்டி இங்கே!

சென்ற பகுதியில் சொன்னது போல 800 படிகள் ஏறிச் சென்றபிறகு ஒரு பெரிய இரும்பு நுழைவாயிலில் நவ்தால் பூட்டு தொங்க, அங்கே இருந்த குரங்குகளுடன் நானும் அமர்ந்திருந்தேன்.  சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு இளைஞர் இரண்டு யுவதிகளோடு வந்து சேர்ந்தார். இரண்டு பேரிடமும் அவர் பேசிக்கொண்டிருந்ததை கவனித்தபடி இருந்ததில் கொஞ்சம் நேரம் போனது. பிறகு ஒரு குடும்பத்தினர் சில குழந்தைகளுடன் வந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் வந்து சேர்ந்தனர். 


படிக்கட்டுகளின் ஓரங்களில் இருக்கும் சுவர் – அவற்றில் விளக்கேற்ற வசதியாய் விளக்கு வடிவில் பள்ளங்கள்!

ஒரு மனிதர் கையில் தேங்காய், பழம் வைத்த நெகிழி பை வைத்திருக்க, அவரை நோக்கி தனது கோரப் பற்களைக் காட்டியபடி ஒரு குரங்கு சென்றது. அவரோ, பையை தனது வேஷ்டி சட்டைக்குள் மறைத்தபடி, இன்னும் கோரமாக தனது பற்களைக் காட்டி சத்தம் போட, குரங்குக்கும் மனிதருக்கும் இடையே பலத்த போட்டி! யார் வெற்றி பெறப்போகிறார் என சிலர் கவனிக்க, சிலரோ, மனிதரிடம் இருந்த பையை கொடுத்துவிடும்படிச் சொன்னார்கள். அதை எல்லாம் கேட்கும் நிலையில் அவர் இல்லை!



வழியெங்கும் பாறைகளில் பக்தர்களின் கைவண்ணம்! எழுதியவர்கள் விஜய் ரசிகர்கள் போல!

குரங்குக்கும், மனிதருக்கும் நடந்த சம்பாஷணைகளை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை! உர்ர்ர்ர்.... புர்ர்ர்ர்.... கொர்ர்ர்....  என விதவிதமாய் சப்தங்கள் இரண்டு பேரிடமுமிருந்து வர, சற்று நேரம் போராடிய குரங்கு, “அடச் சே.... இவன் நம்மை விட பயங்கர விலங்காக இருக்கிறானேஎன நினைத்து மேலே பாறையில் அமர்ந்து கொண்டது!


மண்டபங்களின் மேலே அமைக்கப்பட்டிருந்த சிலைகள்

ஒரு வழியாக கோவில் பூசை செய்யும் இரண்டு பேர்கள், கையில் கூடைகளுடனும், பைகளுடனும் மலையேறி வந்து இரும்பு வாயிலைத் திறந்தார்கள்.  அவர்களைப் பின் தொடர்ந்து காத்திருந்த அனைவரும் ஏறிச் சென்றோம்.  அவர்களைப் பார்த்த போது ஒன்று புரிந்தது – நேர்க்கோட்டில் ஏறாது, படிகளில் வளைந்து நெளிந்து தான் ஏறுகிறார்கள் – அப்போது தான் இத்தனை படிக்கட்டுகளில் ஏறுவது சுலபமாக இருக்கும் என்று சொன்னார்கள்.


காத்திருக்கும் பக்தர் ஒருவர்!

ஒரு வழியாக கோவில் வாசலை அடைந்தபோது எங்கள் அனைவரையும் கோவில் உள்ளே அமர்ந்து கொள்ள சொன்னார்கள்.  அப்போதும் இறைவனைக் காண முடியாத நிலை – அலுவலகத்தில் உள்ளவர்கள் வந்த பிறகு தான் நடை திறக்க முடியும் என காரணம் சொன்னார்கள். காத்திருக்கும் நேரத்தில் இன்னும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு இருந்தேன்.  கோவில் வெளி வாசல் வரை குரங்குகள் வந்தாலும், கோவிலுக்குள் ஏனோ வருவதில்லை.  நாங்கள் வாசல் அருகிலேயே உட்கார்ந்திருந்தபோது வாசலில் உட்கார்ந்து கொண்டு ஏதாவது கிடைக்குமா என ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு குட்டிக் குரங்கு!

அலுவலகத்தில் உள்ளவர்களும் வந்து சேர, கோவிலுக்குள் அனைவரும் சென்று அமர்ந்தோம்.  இறைவன் இரத்தினகிரீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்க, அனைத்தையும் பொறுமையாக அமர்ந்து பக்தியோடு கண்டுகொண்டிருந்தார்கள் வந்தவர்கள் அனைவரும்.  இந்த கோவில் சிறப்பு பற்றி பலவிதமான கதைகள் உண்டு. அலுவலகத்தில் உள்ளவர்கள் வரும் வரை காத்திருந்தபோது பூஜை செய்பவரிடம் தலவரலாறு பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன்.

ஆரிய மன்னன் தான் முடிசூட்டிக்கொள்ள தனக்கு மாணிக்கம் பதித்த அழகிய முடி வேண்டி வந்த போது வேதியர் வடிவில் இருந்த இறைவன் மன்னனிடம் ஒரு தொட்டியைக் காண்பித்து காவிரி நீரால் நிறப்பச் சொல்ல, மன்னன் எத்தனை முயன்றாலும் அதை நிரப்ப முடியவில்லையாம். கோபம் கொண்ட மன்னன் வேதியரை தனது வாளினால் வெட்ட, வேதியர் வேடம் கொண்ட இறைவன் தனது சுய உருவத்துடன் வந்து மாணிக்கம் பதித்த முடியைத் தந்து மறைந்தாராம். தனது தவற்றினை உணர்ந்த அரசன், முடி துறந்து சிவப் பணி செய்து முக்தி அடைந்ததாகவும் சொல்கிறார்கள்.  தலையில் வெட்டுபட்ட வடு இன்றளவிலும் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.


கோவில் கோபுரம் ஒரு தோற்றம்

பொதுவாக காகங்கள் இம்மலையில் உலவுவது இல்லையென்றும் சொல்ல, அதற்கான காரணமாக ஒரு கதை சொல்கிறார்கள். இறைவனுக்கு கொண்டு சென்ற பாலை, ஒரு காகம் கவிழ்த்து விட, உடனே அந்த காகம் எரிந்து போனதாம்.  அதன் பிறகு இம்மலையில் காகங்கள் உலவுவது இல்லை என்று சொல்கிறார்கள்.  நான் சென்ற போதும் காகங்கள் எதுவும் பார்த்த நினைவில்லை!

இம்மலைக்கு பல பெயர்களும் உண்டு – ஐயர் மலை, வாட்போக்கி மலை, சிவாய மலை என்ற பெயர்களில் அழைக்கிறார்கள். பொதுவாக ஒரே நாளில் மூன்று சிவன் கோவில்களை தரிசிக்கும் வழக்கம் இங்கே இருக்கிறது – காலையில் கடம்பர் கோவில், மதியம் வாட்போக்கி [ஐயர் மலை] சிவன் கோவில் மற்றும் மாலையில் ஈங்கோய்மலை சிவன்கோவில் ஆகிய கோவில்களை ஒரே நாளில் தரிசித்தால் நல்லது என்று சொல்கிறார்கள்.


வெளிப்புற நந்தி!

கோவில் உள்ளே இரண்டு நந்திகள் இருக்கின்றன – ஒன்று இறைவன் சன்னதியில் முன்பக்கம் இருக்க, அதன் பிறகு ஒரு சுவர் அதற்குப் பின் இன்னுமொரு நந்திதேவர் சிலை இருக்கிறது.  இறைவனார் கோவிலில் இல்லாது சற்று கீழே தேவிக்கு தனி சன்னதி இருக்கின்றது. தேவியின் பெயர் சுரும்பார்குழலி – என்ன இனிமையான பெயர். இரண்டு இடங்களிலும் திவ்யமாக தரிசனம் செய்து முடித்து அங்கிருந்து கீழே இறங்க மனமில்லை! கொஞ்சம் நேரம் இருக்கலாம் என நினைத்தால் பசி வயிற்றைக் கிள்ள, சரி என கீழே இறங்க முடிவு செய்தேன்.


காத்தாடி மரம்


காத்தாடி காய்!

மலையின் மேல் ஒரு மரம் – காத்தாடி மரம் எனச் சொல்கிறார்கள் – அதிலிருந்து ஒரு காய் கீழே விழும்போது சுற்றிக்கொண்டே கீழே இறங்குவது அழகாய் இருந்தது. கீழே விழுந்த இரண்டொன்றை எடுத்து வந்தேன். அந்த காயை மேலே போட்டால் தானாக திரும்பி சுற்றியபடியே கீழே விழுவது ஏதோ வான்குடை [PARACHUTE] போல இருந்தது!


தேவி சுரும்பார்குழலி கோபுரம்!

இந்த தலம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்று. திருநாவுக்கரசர் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற இந்த ஸ்தலம் மிகவும் புராதனமான ஒரு கோவில் என்று போற்றப்படுகிறது. திருநாவுக்கரசர் இத்தலம் பற்றிய பாடல் ஒன்று உங்கள் பார்வைக்கு!

விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்த போது பயனிலை பாவிகாள்
அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை
எடுத்து மேத்தியும் இன்புறு மின்களே


மலையிலிருந்து கீழே இறங்கும்போது உடன் வந்த சிறுவர்கள்!

கீழே இறங்கும்போது நல்ல உச்சி வெயில் மண்டையை பிளக்க, பாறைகளில் கால் வைக்கும்போது பாறையின் சூடு காலை பொசுக்க, இரண்டிரண்டு படிகளாக தாவித்தாவி இறங்கினேன். என் கூடவே சில பொடிசுகளும் போட்டிபோட, ஆங்காங்கே மண்டபங்களில் நின்று, அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சில புகைப்படங்கள் எடுத்து கீழே வந்து சேர்ந்தேன்.


மலை அடிவாரத்தில் குழந்தைகளுடன் ஒரு இளைஞரும் சேர்ந்து கொள்ள அவர்களை எடுத்த புகைப்படம் – “அண்ணே எந்த பேப்பர்ல எங்க ஃபோட்டா வரும்ணே!என்று கேட்ட சிறுவர்களிடம் என்ன பதில் சொல்வது என என்னுள் குழப்பம்!

மலை அடிவாரத்தில் ஒரு பாறை அருகிலேயே நிறைய பேர் ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் அமர்ந்து ஜோசியம் கேட்பவர்களை சற்று நேரம் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.  கீழே இருக்கும் கடையில் தண்ணீர் வாங்கி அருந்திவிட்டு பேருந்து நிலையத்திற்கு வந்து திருச்சி செல்லும் பேருந்தில் நேரடியாக திருப்பராய்த்துறை வந்து சேர்ந்தேன். 

இக்கோவிலுக்குச் செல்ல விருப்பம் இருப்பவர்கள் 10 மணிக்கு மேல் மலை ஏற ஆரம்பிப்பது நல்லது.  திங்கள் கிழமைகளில் நிறைய பக்தர்கள் வருவார்கள் எனச் சொன்னார்கள். மலை ஏறும்போது எங்குமே குடிதண்ணீர் வசதிகளோ, கழிப்பறை வசதிகளோ கிடையாது. குரங்குகளிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் கையில் ஒரு சிறிய குச்சியை வைத்துக் கொண்டு ஏறுவது அவசியம் – அடிக்க முடியாது எனினும் பயமுறுத்தவாது செய்யலாமே!

இப்படியாக, அய்யர் மலை உறையும் இரத்தினகிரீஸ்வரரையும் கரும்பார்குழலியையும் தரிசித்து வந்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.  உங்களுக்கும் மகிழ்ச்சி தானே!

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

48 கருத்துகள்:

  1. பாறைகளில் கால் வைக்கும்போது பாறையின் சூடு காலை பொசுக்க,//


    நாங்கள் கீழே இறங்கும் போது சாக்ஸ் அணிந்து இறங்கினோம். அனுபவ பட்டவர்கள் சொன்னதால் போகும் போதே கொண்டு சென்று விட்டோம்.

    இரத்தினகிரீஸ்வரரையும் கரும்பார்குழலியையும் மீண்டும் மனக் கண்ணல் தரிசித்து விட்டேன் உங்கள் பதிவால்.
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  2. கோயிலின் பல தகவல்கள் அறியாதவை... படங்கள் மூலம் விளக்கம் அருமை... கோயிலுக்கு செல்பவர்களுக்கு கூறும் யோசனைகளுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. நல்ல அனுபவம். திருப்பராய்த்துறை பற்றி ஏதேனும் பதிவு உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னரே இரண்டு பதிவுகள் திருப்பராய்த்துறை பற்றி எழுதி இருக்கிறேன்....

      பராய்த்துறைநாதர் - http://venkatnagaraj.blogspot.com/2012/06/blog-post_15.html

      சொர்க்கம் - http://venkatnagaraj.blogspot.com/2011/04/blog-post_18.html

      முடிந்த போது படிங்களேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  4. நேரில் பார்த்தது போல் உணர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி கந்தசாமி ஐயா.

      நீக்கு
  5. அய்யர் மலையைப்பற்றி பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சிங்க. வளைந்து நெளிந்து ஏறுவது எப்படின்னு தெரிஞ்சா நாளபின்ன மலை ஏறும்போது எங்களுக்கும் பயன்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      படிகளில் மேலே செல்லும்போது நேர்க்கோட்டில் செல்லாது, Criss-Cross ஆ செல்வது சுலபம்.

      நீக்கு
  6. தங்களின் இந்த பயண அனுபவம் அந்த மலைக்குச் செல்ல நினைக்கும் மற்றவர்களுக்கு ஒரு கைடாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மிகவும் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  7. "// குரங்குக்கும், மனிதருக்கும் நடந்த சம்பாஷணைகளை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை! உர்ர்ர்ர்.... புர்ர்ர்ர்.... கொர்ர்ர்.... என விதவிதமாய் சப்தங்கள் இரண்டு பேரிடமுமிருந்து வர//" - நல்ல நகைச்சுவை, ஒரு சந்தேகம், உங்களுக்கு அந்த சம்பாஷணைகள் புரிந்திருக்க வேண்டுமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      புரிந்திருந்தால் அங்கேயே இருந்திருப்பேன்! :)

      நீக்கு
  8. "//பொதுவாக ஒரே நாளில் மூன்று சிவன் கோவில்களை தரிசிக்கும் வழக்கம் இங்கே இருக்கிறது//" - நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று தெரியாது. சிவகங்கைக்குப் பக்கத்தில் "காளையார் கோவில்" என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்குள்ள சிவன் கோவிலில், மூன்று சிவன் சன்னதிகளும், மூன்று அம்பாள் சன்னதிகளும் இருக்கின்றன. அக்கோவிலும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு புராதன கோவில் தான்.

    நான் அந்த கோவிலைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காளையார் கோவில் கேள்விப்பட்டதோடு சரி. சென்றதில்லை. நீங்களும் எழுதுங்களேன்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  9. //நேர்க்கோட்டில் ஏறாது, படிகளில் வளைந்து நெளிந்து தான் ஏறுகிறார்கள் – அப்போது தான் இத்தனை படிக்கட்டுகளில் ஏறுவது சுலபமாக இருக்கும் என்று சொன்னார்கள்.//

    உண்மைதான். நானே இதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

    புகைப்படங்களும் விளக்கங்களும் அருமை. தங்களோடு பயணித்தது போன்ற பிரமை தங்களின் பதிவைப் படித்த பின் ஏற்பட்டது நிஜம். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  11. புகைப்படங்கள் அனைத்தும் அருமை.
    தங்களோடு மலையேறி தரிசனம் செய்தது போலிருந்தது. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ....

      நீக்கு
  12. அருமையான பயணப் பதிவு. புகைப்படங்களும் அருமை.

    (விஜய் ரசிகர்கள் பாறைக்கு யாரப்பா 'zip' போட்டு விட்டது.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபான் அண்ணாச்சி.

      zip போட்டது யார்? சி.பி.ஐ. ய கூப்பிடுங்கப்பா சீக்கிரம் கண்டுபிடிக்கணும்!

      நீக்கு
  13. சுதா த்வாரகாநாதன் புது தில்லி16 ஜனவரி, 2014 அன்று AM 10:30

    சுவையான பயணக் கட்டுரை. விளக்கங்களும் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

      நீக்கு
  14. ;) படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  15. குரங்குக்கும், மனிதருக்கும் நடந்த சம்பாஷணைகளை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை! உர்ர்ர்ர்.... புர்ர்ர்ர்.... கொர்ர்ர்.... //உண்மைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  16. தல வரலாற்றுடன் அழகான படங்களும் பகிர்ந்து பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டமை சிறப்பு! காத்தாடி மரம்? அநேகமாக அது குருத்த மர விதையாக இருக்கும் என்று நினைக்கிறேன்! எங்கள் ஊர் கோயிலில் குருத்த மர விதைகளை அதே போல் பார்த்துள்ளேன்! ஆனால் குருத்தமரம் கொடியாக படரும். பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  17. வித்தியாசமான பயணம் + தரிசனம் தான் சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.....

      நீக்கு
  18. கடந்தமாதம் ஐதராபாத்திலிருந்து என் மாமனாரின் நண்பர் ஒருவர் இக்கோயிலைப் பற்றி விசாரிக்க இணையத்தில் தேடி கிடைத்த தகவல்களைத் திரட்டிக் கொடுத்தேன். தாங்கள் நேரடியாகவே அங்கு சென்று அருமையான ஒரு பயணக் கட்டுரையைப் படைத்து பகிர்ந்துள்ளீர்கள். பகிர்விற்கு நன்றீ நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  19. அருமைழான விளக்கங்கள் படங்களோடு பதிவு அருமை. .காகம் வராத மலைழா அதிசழமாக இருக்கிறது..நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  20. இந்த காத்தாடிக்காய்களை நிறைய பொறுக்கி வந்து விளையாடியதும் ,
    நூலில் மாலை போல் கட்டி நீண்ட நாட்கள் இல்லத்தில் வைத்திருந்ததும்
    நினைவில் நிழலாடுகின்றன..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.....

      நீக்கு
  21. “அண்ணே எந்த பேப்பர்ல எங்க ஃபோட்டா வரும்ணே!” என்று கேட்ட சிறுவர்களிடம் என்ன பதில் சொல்வது என என்னுள் குழப்பம்!//

    ஹா ஹா ஹா ஹா வசமா மாட்டிகிட்டீங்களா, காத்தாடி மரம் பார்த்து வருஷம் பல ஆச்சு....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  22. வணக்கம்
    ஐயா.

    பயணத்தின் போது இரசித்தவை பற்றிய பதிவு சிறப்பாக உள்ளது.. வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  23. அருமையாண பதிவு இந்த சிவ தலத்திற்கு மாணிக்க்மலையாண்என்ற பெயரும் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விநாயக மூர்த்தி ஜி!

      நீக்கு
  24. இந்தப் பதிவை இப்போத் தான் பார்க்கிறேன். காத்தாடிக்காய் என கூகிளில் தேடினால் இதான் முன்னாடி வருது. விபரங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய பதிவினை படித்து ரசித்ததோடு தங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதாம்மா.

      கூகிளில் தேடினால் - மகிழ்ச்சி தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....