புதன், 20 ஜனவரி, 2021

வந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி ஒன்று - பத்மநாபன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உன்னைப் படைத்த இறைவனுக்கு மட்டும் பயந்து வாழ்த்து பார். எந்த மனிதன் முன்பும் தலைகுனிய வேண்டிய சூழ்நிலை வராது...


******




சற்றே இடைவெளிக்கும் பிறகு தில்லி நண்பர் பத்மநாபன் அவர்களின் ஆக்கத்தில் ஒரு பதிவினை பார்க்கப் போகிறோம் - சற்றே நீண்ட பதிவு என்பதால் மூன்று பகுதிகளாக வெளிவரும் - தீநுண்மி குறித்த அவரது அனுபவம் - சங்கடமான அனுபவமாக இருந்தாலும் சுவைபடக் கூறியிருக்கிறார் - வழமை போலவே! இன்றைக்கு முதல் பகுதியைப் பார்க்கலாம் வாருங்கள். 


*****

வந்துட்டான்யா வந்துட்டான்






அன்னைக்கு அப்படித்தான் காலையில எங்க வீட்டு பால்கனியில துணியை காயப்போட்டுக்கிட்டு சின்னதா அங்க இங்கன்னு ஒரு குட்டி  நடையைப் போட்டேன். பக்கத்தில பெரிய தொட்டியில நின்ன குட்டி கறிவேப்பிலை மரம், "என்ன மக்கா! நானும் தலையாட்டி தலையாட்டி கூப்பிட்டுக்கிட்டேயிருக்கேன்.  நீ பாட்டுக்கு அங்கயும் இங்கயுமா என்ன பாக்காம நடந்துக்கிட்டு இருக்கே"ன்னுது. நானும்  அது கிட்டே போய் வாஞ்சையா தடவி கொடுத்து அப்படியே ஒரு ஒத்தை இலைய வலிக்காம பிடுங்கி மணத்திப் பாத்தேன். இந்த ரோசாப்பூ, ஏலக்காய், கறியப்பலை இதெல்லாம் கையில கிடைச்சா மணத்தி பாக்கணும். அதுதான் மரியாதை. இல்லாட்டா அதுக வருத்தப்படுமில்லா. அப்படித்தான் கறியப்பலை கையில கிடைச்சதும் மணத்திப் பாத்தேன்.


என்ன கோபமோ கறியப்பலைக்கு. ஒரு மணத்தையும் காணல்ல. இவ்வளவு நாளும் மணத்துக்கிட்டுதானே இருந்தது. இன்னைக்கு என்ன வந்துட்டு இந்த கறியப்பலைக்கு. இன்னொரு கறியப்பலைய பிச்சு அதை மணத்திப் பாத்தேன். அதுவும் அப்படித்தான், ஒரு மணத்தையும் காணோம். நாசியடைப்பு கூட நமக்கு இல்லையே. பக்கத்தில நின்ன திருநீற்றுப் பச்சிலை என்னையும் மணத்திப் பாருன்னுது. அதுக்கென்ன கோவமோ. அதுவும் மணக்க மாட்டேன்னுட்டுது. அப்பதான் நம்ம மண்டையில உறைச்சுது, இந்தப் பய கொரானா வந்தா வாசனை தெரியாதாமே. இரண்டு நாளா லேசா தலைவலி இருந்தது. கல்யாணத்துக்கு அப்புறம் இந்த சின்ன தலைவலியை கண்டுக்கிடுகது இல்லை. ஆனா மனசிலாயிட்டு.. ஆஹா! வந்துட்டான்யா வந்துட்டான்! இந்த கொரானா பயதான் வந்துட்டான்னு பக்குன்னு இருந்தது.


சரி எதுக்கும் ஒரு டாக்டரைப் பார்ப்போம்னு பாத்தேன். அவரும் கொரானா டெஸ்டுக்கு எழுதிக் கொடுத்தாரு. அதை எடுத்துக்கிட்டு ஒரு ஆட்டோவை புடிச்சு 'மேக்ஸ்' ஆஸ்பத்திரியில இருந்த டெஸ்டிங் சென்டருக்கு போனா எனக்கு முன்னால இருவது பேரு வாயையும் மூக்கையும் தயாரா வச்சுக்கிட்டு அஸ்ட்ரானெட்டு எப்ப கூப்பிடுவாருன்னு மூடியிருந்த கதவையே பாத்துக்கிட்டு இருந்தா. அந்த ஜோதியில நாமும் கலந்துருவோம்னு கலந்தாச்சு. நம்ம முறை வந்ததும் உள்ளே போய் நீர்யானை மாதிரி ஆஆன்னு வாயையும் அலிபாபா குகை மாதிரி மூக்கையும் காட்டி மாதிரி கொடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்தேன்.


இருவத்து நாலு மணி நேரத்துல ரிசல்ட். நமக்குத்தான் ரிசல்ட்டுண்ணாலே அலர்ஜியாச்சே. ஆனாலும் பாக்கணும்லா. அடுத்த நாளு மெயிலை செக் பண்ணா ரிசல்ட்ட காணோம். உடனே மேக்ஸ் ஆஸ்பத்திரி வெப்ஸைட்டுல ஒரு வரி என் ரிசல்ட் எங்கேன்னு கேட்டு எழுதிப் போட்டேன். ஒரு அரைமணிநேரம் கழிச்சு கத்தரினா கைப் போன் செய்து  ரிசல்ட் மெயிலில் அனுப்பியாச்சுன்னா. அப்படியே  ஹஸ்கி வாய்ஸ்ல பாசிட்டிவ் அப்படின்னா. நானும் பதிலுக்கு அவளிடம் நான் எப்பவுமே மென்டலி பாசிட்டிவ். இப்போ ஃபிசிக்கலியும் பாசிட்டிவ், ஹி ஹின்னேன்.  அடுத்தது என்னன்னு யோசிச்சேன்.


முதல்ல அலுவலகத்துக்கு ஒரு ஃபோனைப் போட்டு விஷயத்தைச் சொன்னேன். ஒரு பதினைஞ்சு இருவது நாளைக்கு ஆபீஸுக்கு போக வேண்டாம். அதை நினைச்சா சந்தோஷமாத்தான் இருந்தது. பின்னே அலுவலகத்தில அப்படி வேலைப்பளு. வீட்டுக் குவாரண்டைன்ல இருந்து தின்னுக்கிட்டு தின்னுக்கிட்டு தூங்க வேண்டியதுதான். ஆனா

நாம நினைக்கது எங்க நடக்குது.


அப்படியே சென்னைக்கு போனைப் போட்டு பொண்டாட்டிகிட்ட பாசிட்டிவ்னு சொன்னேன். ஆமா யாராவது நிம்மதியா இருந்தா நமக்கு பொறுக்காதுல்லா. அதுவும் அந்த நேரத்தில சென்னையிலயும்  கொரோனா நீயா நானான்னு விளையாடிகிட்டு இருந்தது. நல்ல மனுஷனுக்கெல்லாம் கொரானா வருதேன்னு எல்லோரும் கவலையோடு பேசிக்கிட்டு இருக்கிற டைம். அதனால நான் பாசிட்டிவ்னு சொன்னதை என் பொண்டாட்டி நம்பல்லை. ஆனா உண்மைதான்னு சொல்லி அவ உறக்கத்த கெடுத்து நான் நல்ல உறங்கினேன்.


அடுத்தால வெங்கட்டுக்கும் சேதுவுக்கும் போன போட்டு நானும் ரவுடிதான்னாச்சு.


கொரானா வந்தா வீட்ட விட்டு வெளியில போக கூடாதுல்லா. அய்ய்! அப்போ ஆபீஸுக்கும் போக வேணாம் அப்படின்னு பப்பரப்பான்னு படுத்துக் கிடந்தா இந்த போன் அடிச்சுது. இப்ப பேசினது டெல்லி சுகாதாரத்துறையில் இருந்து காஜல் அகர்வால். பதமபாவனா பேசறதுன்னு கேட்டு உங்களுக்கு கொரானா பாசிட்டிவ்.  எப்படி இருக்கீங்க. காய்ச்சல் இருக்கா, இருமல் இருக்கா அப்படி இப்படின்னு கேட்டார். அட! வீட்டுல சும்மா போரடிக்குமேன்னு நினைச்சா காஜல் அகர்வாலெல்லாம் பேசி போரடிக்காம பாத்துக்குவாங்க போலன்னு குஷியாப் போச்சு. அந்த குஷியிலேயே கொரானாவ மறந்து உறங்கிட்டேன்.


அடுத்தநாள் காலையில வழக்கம்போல அஞ்சரைக்கு அலாரம் 'வேக்கப்பு! வேக்கப்பு'ங்குது.  அதுக்கு தெரியாதுல்லா நான் பத்து பதினஞ்சு நாளு ஆபீஸுக்கு போக மாட்டேன்னுக்கிட்டு. அப்படியே அதுக்கு தலையில ஒரு தட்டு தட்டி 'வேக்கப்பு! இன்னைக்கு நோ மேக்கப்பு!' அப்படின்னு சொல்லிக்கிட்டு திரும்ப இழுத்து மூடி தூக்கம் போட்டேன்.


ஒரு ஒம்பது மணிபோல காலிங் பெல் அடிச்சுது.  கதவைத் தொறந்தா கையில டிபன் பார்ஸலோட நண்பர் சேதுராமன். 'நல்ல ரெஸ்ட் எடு. சமைக்காதே. உன் தங்கச்சி டிபன் தந்து விட்டுருக்கா. மத்தியானமும் சாப்பாடு எடுத்து வரேன். சமைச்சிராதே. நல்ல ரெஸ்ட் எடு'. ஆஹா! இப்படி நல்ல நண்பர்கள் இருந்தா கொரானாவுக்கெல்லாம் ஏன் பயப்படப் போறோம். சமைக்கற வேலையும் இல்லையா. நல்லதாப் போச்சு. ஆனால் அதுக்கும் கொடுப்பினை வேணுமில்லா. மதியம் ஒரு பன்னிரண்டு மணியிருக்கும், காலிங் பெல் சத்தம். அடடா! இந்த சேதுவுக்குத்தான் எவ்வளவு பாசம் நம்ம மேல. பன்னிரண்டு மணிக்கே மதிய உணவா! அப்படி நினைச்சுக்கிட்டே கதவைத் திறந்தால்… 


ரெண்டு சுகாதாரப் பணி பெண்மணிகள்.


"இங்க யாரு பதாமநாபான்." (நம்ம பேரு என்னா பாடுபடுது இவங்ககிட்ட மாட்டிட்டு!)


"நாந்தேன்"


"உங்களுக்கு கோவிட் பாசிட்டிவ்"


"ஆமா"


"ஊட்டுல வேற யாரெல்லாம் இருக்காங்க"


"வேற யாரும் இல்லை"


"அப்போ பாத்துக்கிறதுக்கு யாருமில்லை  இல்லையா. "


"நானே என்ன பாத்துப்பேன்"


"செல்லாது! செல்லாது! இன்னும் இரண்டு மணிக்கூர்ல ஆம்புலன்ஸ் வரும். ஏறி சத்தர்பூர் குவாரண்டைன் சென்டர் போயிடுங்க."


'வேணாங்க. பக்கத்திலேயே ஃப்ரெண்ட் வீடு இருக்குது. ஏதாவது தேவைன்னா அவங்கள கூப்பிட்டுக்கிறேன்'


'செல்லாது! செல்லாது! ராத்திரி ஏதாவது ஆச்சுன்னா என்னாவது. ஆக்சிஜன் அளவு வேகமா குறைஞ்சாலும் பெரிய பிரச்சனை ஆயிடும்.' அவங்களுக்கு என்ன பிரஷரோ! என்னை கொத்தா தூக்கிக்கிட்டு சத்தர்பூர் குவாரண்டைன் சென்டருக்கு கொண்டு போறதிலேயே குறியா இருந்தார்கள். அதுக்கப்புறம் என்ன ஆச்சு…  அடுத்த பகுதியில் சொல்கிறேன். 


ரா.இ. பத்மநாபன்

புது தில்லி.

*****


என்ன நண்பர்களே, இன்றைய பதிவின் வழி பகிர்ந்த விஷயங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்கள் வாயிலாகச் சொல்லுங்களேன்.


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

26 கருத்துகள்:

  1. கொடுமையான அனுபவத்தையும் நகைச்சுவையோடு சொல்கிறார் திரு பத்மநாபன்.  தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுமையான அனுபவத்தையும் நகைச்சுவையோடு - உண்மை தான் - வரும் பகுதிகளும் அப்படியே இருக்கும் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. எதிர்கொண்ட சிரமங்களை மிகவும் சாதாரணமாகவும் கூறுகிறார். தொடர்ந்து வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரமங்களை மிகவும் சாதாரணமாகச் சொல்வது சிறப்பு தான். தொடர்ந்து மேலும் இரண்டு பகுதிகள் வரும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கல்யாணத்துக்கு அப்புறம் இந்த சின்ன தலைவலியை கண்டுக்கிடுகது இல்லை.

    நீர்யானை மாதிரி ஆஆன்னு வாயையும் அலிபாபா குகை மாதிரி மூக்கையும் காட்டி மாதிரி கொடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்தேன்.

    நமக்குத்தான் ரிசல்ட்டுண்ணாலே அலர்ஜியாச்சே.

    நான் எப்பவுமே மென்டலி பாசிட்டிவ். இப்போ ஃபிசிக்கலியும் பாசிட்டிவ், ஹி ஹின்னேன். 

    அடுத்தால வெங்கட்டுக்கும் சேதுவுக்கும் போன போட்டு நானும் ரவுடிதான்னாச்சு.

    நல்ல மனுஷனுக்கெல்லாம் கொரானா வருதேன்னு எல்லோரும் கவலையோடு பேசிக்கிட்டு இருக்கிற டைம்.

    மனுஷன் வடிவேலுவையும் ஹர்பாஜன் சிங்க்கையும் மிஞ்சிவிடுவார் போல இருக்குதே. அப்பப்பா என்ன சிலேடை, என்ன டபுள் மீனிங்.
    இதைத்தான் அய்யன் இடுக்கண் வருங்கால நகுக என்றாரோ? 
    அடுத்து வந்தது அதற்கு ஒப்ப இல்லாதது திருப்தி. இதுதான் பொசிட்டிவ் செய்தி. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் பத்மநாபனின் எழுத்து உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பிளாக் நாட்களில் நட்புகளின் பதிவுகளை படித்த உணர்வு. அவர் பிளாக் link இருந்தா குடுங்க அண்ணா. அவர் இப்போது நலம் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் தனியாக பிளாக் வைத்தில்லை அப்பாவி தங்கமணி. எனது பக்கத்தில் தான் அவ்வப்போது எழுதுகிறார். தற்போது அவர் நலம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஐயோ.... நல்லா எழுதியிருக்கார். கொரோனா செய்தி வந்ததும் இப்படி எழுதியிருப்பாரா இல்லை கதக் கதக் என இருந்திருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது கொஞ்சம் பதட்டமாகவே இருந்தார் - எங்களுக்கும் அப்படியே! ஆனாலும் அப்போதும் கொஞ்சம் கொஞ்சம் அவரது நகைச்சுவை உணர்வு கூடவே இருந்தது அவருக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. இவ்வாறு எளிதாக எடுத்துக் கொண்டு எழுதியது வியப்பாக உள்ளது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடுக்கண் வருங்கால் நகுக! இதை உண்மையாகவே கடைபிடித்து இருக்கிறார் போலும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. //ஊட்டுல வேற யாரெல்லாம் இருக்காங்க"


    "வேற யாரும் இல்லை"//

    சுகாதாரத் துறை ஆட்களுக்கு, யாருக்கேனும் கோவிட் பாஸிடிவ் என்று வந்தால், அவர்களைச் சுற்றியுள்ள ஐந்து நபர்களின் பெயரையாவது எழுதிக்கணுமாம். எங்களுக்கு போன் பண்ணி டார்ச்சர்..... என் மனைவியோ, அவங்கள்லாம் யாருன்னே தெரியாது..சும்மா உதவி பண்ணறதுக்காகப் போனேன் அவ்ளொதான் என்று சொன்னாள். நான் சொன்னேன், பேசாம, 4-5 flat numbersலாம் சொல்லி, ராமசாமி, குப்புசாமி, கோவிந்தசாமின்னு பேரைக் கொடுத்துடவேண்டியதுதானே என்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... அப்படித்தான் செய்ய வேண்டும் போல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. கொரோனா கொழுந்தியாவோடு ஜாலியாக வாழ்ந்தது போல இருந்தியலோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரோனா கொழுந்தியாவோடு ஜாலியாக.... ஹாஹா... அப்படித்தான் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வேதனையிலும் நகைச்சுவை..
    இப்படியானவர்கள் வெகு சிலரே..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனையிலும் நகைச்சுவை - அனைவருக்கும் வந்து விடுவதில்லை தான் துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. சுவாரசியமா எழுதியிருக்கார் என்றாலும் சூழ்நிலையின் வீரியமும் புரிகிறது.
    சுகாதாரத்துறையிலிருந்து காஜல் அகர்வால் எல்லாம் விசாரிப்பாங்க என்றால் வேணும்னே கொராணாவை வறவச்சுக்கலாம் போல!
    எங்கள் ஃபிளாட்டில் இருவருக்கு தொற்று வந்தபோது சுகாதாரத்துறை இரு இளம் பெண்கள் காலையிலேயே வந்து கவனமா பார்த்துக்கிட்டாங்க.
    அவர்களின் வேலைப்பழுவும் கொடுமையானது.
    இப்ப தடுப்புமறுந்தையும் அவங்கதான் போட்டு சோதனை எலிகளாகவும் பயன்படுத்தப்படுகிறார்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

      நீக்கு
  11. அண்ணாச்சி தான் ரவுடி என்று தன் பதிவினலே நிரூபிசிட்டர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீபதி அண்ணாச்சி.

      நீக்கு
  12. இப்படி கூட சொல்லலாமா😀😀😀

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அகிலா வைகுந்தம் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....