செவ்வாய், 12 ஜனவரி, 2021

கதம்பம் - வாசிப்புப் போட்டி - பசு மிளகு - அரிசிம்பருப்பு சாதம் - காணொளி - டீ கோஸ்டர்ஸ் - வேட்டி தினம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட தளிர் மனம் யாரைத் தேடுதோ படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு. வேடிக்கை பார்த்தவனுக்கும், விமர்சனம் செய்தவருக்கும் ஒரு வரி கூடக் கிடையாது - வாழ்க்கைப் புத்தகத்தில். 


******




சஹானா இணைய இதழ் புத்தக வாசிப்புப் போட்டி - 4 ஜனவரி 2021


சஹானா இணைய இதழ் புத்தக வாசிப்புப் போட்டிக்கு  தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து நூல்கள் போட்டியிடுகின்றன.. அவற்றில் என்னுடையதும், என் கணவரின் புத்தகமும் இடம்பெற்றுள்ளன. ஆம்! சமையலும், பயணமும் போட்டியிடுகிறது.🙂


போட்டியிடும் பத்து நூல்களைப் பற்றியும் அந்த பத்து எழுத்தாளர்களும்  சக எழுத்தாளர்களுடைய நூல்களைப் பற்றி விமர்சனம் எழுத வேண்டும் என நினைத்திருக்கிறேன். அதிகமான விமர்சனங்களும், சிறப்பான விமர்சனமும் பரிசுக்கு ஏற்றவையாக தேர்ந்தெடுக்கப்படும்.


இதற்கென இணைய தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம் என்ற முகநூல் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே நீங்கள் பலதரப்பட்ட விமர்சனங்களை வாசிக்கலாம். உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.


இந்த போட்டியில் இடம்பெறும் என்னுடைய புத்தகம் - லாக்டவுன் ரெசிபீஸ்


என் கணவரின் புத்தகம் - அந்தமானின் அழகு


சர்வதேச வேட்டி தினம் - 6 ஜனவரி 2021 - மீள் சில மாற்றங்களுடன்:





இன்று சர்வதேச வேட்டி தினமாம். சில வருடங்களாகத் தான் இந்த மாதிரி கொண்டாடுகிறோம்...நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், இளைஞர்களிடம் நம் பாரம்பரியத்தை கட்டிக் காப்பாற்றவும் என நல்ல எண்ணத்தோடு கொண்டாடுவதால் யாருக்கும் இது இடையூறாகத்  தோன்றவில்லை என்பது நல்ல விஷயம்.


வேட்டி என்றதும் என் முதல் ஹீரோவான என் அப்பாவின் நினைவு வந்தது. அப்பா பாங்காக வேட்டிக் கட்டிக் கொள்வார். அதை அவரே துவைத்து, அளவாக சொட்டு நீலம் போட்டு அதை உதறி நிழலில் உலர்த்தி எடுத்து வைப்பார். எதையும் சீராக செய்யும் இந்தக் குணம் அப்பாவிடமிருந்து எனக்கும் ஒட்டிக் கொண்டது.


அப்பாவைப் போலவே என் இன்னொரு ஹீரோவான என்னவரும் அழகாக பாந்தமாக வேட்டி உடுத்திக் கொள்வார். அவரின் உயரத்திற்கு அது கம்பீரமான தோற்றத்தைத் தரும். இங்கு  நான் அவரின் வேட்டிகளை சுத்தமாக துவைத்து அளவாக நீலம் போட்டு உதறி உலர்த்தி எடுத்து வைப்பேன்.


பல மணிநேரங்கள் வேட்டியில் இருந்தாலும் அப்பாவுக்கும் சரி, என்னவருக்கும் சரி அது இடையூறாக இருந்ததில்லை. அவிழுமோ என்ற எண்ணமும் தோன்றியதில்லை. அந்தளவுக்கு இருவருமே நேர்த்தியாக உடுத்திக் கொள்வர்.


ஒருசிலர் பழுப்பாகவும், சுருக்கங்களுடன், கறைகளுடன் முக்கால் காலுக்கு வேட்டி உடுத்தியிருப்பார்கள். ஒருசிலருக்கோ இறுக்கி கட்ட இயலாமல் அவர்களுக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் சங்கடத்தை தருமளவு உடுத்தியிருப்பார்கள். அதற்கும் தான் இப்போது "வெல்க்ரோ" வேட்டிகள் வந்துள்ளனவே.


ஆகவே 'கந்தையானாலும் கசக்கி கட்டு' என்ற வாக்குக்கு ஏற்ப கந்தலே ஆனாலும்  சுத்தமாக துவைத்து நேர்த்தியாக உடுத்தி நம் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் போற்றுவோம்!!!


வேட்டி தின வாழ்த்துகள்!!


பச்சை மிளகும், மாங்காய் இஞ்சியும் - 7 ஜனவரி 2021:





இன்னிக்கு மகளின் பள்ளியில் பெற்றோரிடம் கருத்து கேட்கும் கூட்டம் இருந்தது. பள்ளி முதல்வர் தாங்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்போம் என்று உறுதியளித்தார். எங்களின்  விருப்பத்தை தெரிவிக்கும் படியும் சொன்னார். என்னைப் போல் நிறைய பேர் சம்மதம் என்று தான் தெரிவித்தார்கள்.


பத்தாம் வகுப்பு - அதுவும் இதுவரை பள்ளிக்குச் செல்லாமலேயே ஆன்லைன் வகுப்பு மூலம் தான் படித்து வருகிறாள். இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்வு இருக்கும் என்றால் பள்ளிக்குச் சென்றால் தான் சரியாக இருக்கும்! பார்க்கலாம்.  கடவுளே துணை.


வரும் வழியில் ஒரு பெரியவரிடம் பச்சை மிளகும், மாங்காய் இஞ்சியும் வாங்கி வந்தேன். பச்சை மிளகு ஊறுகாய் செய்வார்கள். நான் இதுவரை முயற்சித்ததில்லை. செய்தவுடன் பகிர்கிறேன்.


அரிசிம்பருப்பு சாதம் - 8 ஜனவரி 2021:





கொங்கு நாட்டு ஸ்பெஷல் இந்த அரிசிம்பருப்பு சாதம். சிறுவயதில் எதிர் வீட்டு மல்லிகாம்மாவும், என் மாமி ஒருவரும் செய்து கொடுத்து சாப்பிட்டிருக்கிறேன். சுடச்சுட சாப்பிடும் போது அருமையாக இருக்கும். அதன் பின் அரிசிம்பருப்பு சாதம் சாப்பிடும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது!


நானாக இந்த சாதத்தை செய்வது இதுவே முதல் முறை. 'என்ர' ஊர் பெருமையாக நான் சொல்லிக் கொண்டாலும், செய்தால் இங்கு போணியாகுமா?? என்பது சந்தேகம் தான்.🙂 இப்படியே இவ்வளவு காலமாகி விட்டது.🙂


சென்ற வருடம் இங்கு (முகநூல்) இதே நாளில் எங்கு பார்த்தாலும் அரிசிம்பருப்பு சாதமாக தென்பட்டது. அப்போது செய்து பார்க்கும் எண்ணம் இருந்தது. அதன் பிறகு மறந்து விட்டேன்.🙂 இன்று தோழி புவனா கோவிந்தின் பதிவைப் பார்த்ததும் முடிவெடுத்து செய்து விட்டேன். செய்வது மிகவும் எளிது!  One pot meal!  வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே செய்து விடலாம்! விரைவில் செய்து விடலாம்! என்று பல சிறப்புகள் இதற்கு உண்டு. பொதுவாக புழுங்கலரிசியில் தான் செய்வார்கள். நம்ம வீட்டில் பச்சரிசி தான் உபயோகம் என்பதால் அதில் தான் செய்துள்ளேன். நீங்களும் செய்து பாருங்களேன். செய்முறை இங்கே.


எங்க வீட்டு சாம்பார் பொடி - காணொளியாக - 10 ஜனவரி 2021:





இந்த வாரம் Adhi's kitchen சேனலில் எங்கள் வீட்டு சாம்பார் பொடி செய்முறை. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். அதற்கான சுட்டி கீழே.


எங்கள் வீட்டு சாம்பார் பொடி


ரோஷ்ணி கார்னர் - 10 ஜனவரி 2021:





மகளின் Roshni's creative corner சேனலில் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து DIY Tea coasters செய்து காண்பித்திருக்கிறாள். பாருங்களேன். காணொளிக்கான சுட்டி கீழே…


DIY Tea Coasters


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவின் வழி பகிர்ந்த விஷயங்கள் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்கள் வாயிலாகச் சொல்லுங்களேன்.


நட்புடன்



ஆதி வெங்கட்


22 கருத்துகள்:

  1. சமையலுக்கு என்றுமே  ரசிப்பிருக்கும்.  வெங்கட்டின் அந்தமான் பயணம் மிக சுவாரஸ்யமான ஒன்று.  எனவே இந்த இரண்டும் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம்.  விமர்சனத்திலும் கலக்குங்க...

    வேஷ்டி கட்டிய வேந்தருக்கு வாழ்த்துகள்.  அரிசிம்பருப்பு சாதம்...  இப்போதுதான் கேள்விப்பப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா, என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க. எங்க கோவை ஸ்பெஷல் ரெசிபி "அரிசிம் பருப்பு சாதம்",ஒரு முறை செஞ்சு பாருங்க, அடிக்கடி கேட்கும் நம் நா. செய்ய பெரிய முன்னேற்பாடுகள் வேண்டாம், 10 நிமிட one pot meal என்பதால், இல்லத்தரசிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்ற recipe இது 🙂

      நீக்கு
    2. ஆஹா.. ஒருமுறை செய்துடுவோம், சுவைத்திடுவோம்!

      நீக்கு
    3. //வேஷ்டி கட்டிய வேந்தர்// ஹாஹா... இப்படியெல்லாம் பெயர் வைத்தால் நான் என்னாவது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    4. அரிசிம் பருப்பு சாதம் - நானும் இது வரை சுவைத்ததில்லை - செய்ததும் இல்லை அப்பாவி தங்கமணி! குளிர் காலம் முடியட்டும் - செய்து பார்க்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. நீங்களும் செய்து பாருங்கள்! சுவைத்துப் பாருங்கள் ஸ்ரீராம்.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    6. அரிசீம்பருப்பு சாதம்னு ஏடிஎம் பேர் வைச்சிருக்காங்க. ஆனால் கிட்டத்தட்ட இது நம் வடமாநிலக் கிச்சடி போலத்தான்! இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    7. இது ஏடிஎம் வைத்த பெயர் இல்லை கீதாம்மா. பல வருடங்களாகவே கோவை பகுதிகளில் இந்தப் பெயர் தான் இந்த உணவிற்கு. கிச்சடி போலதான் தெரிகிறது - இந்த முறையில் சுவைத்ததில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம். அன்பு ஆதி .
    ரோஷ்ணிக்கும் வாழ்த்துகள். வேட்டி தினம் அருமை.
    எல்லோருக்கும் அவரவர் அப்பா, தம்பிகள் ,கணவர் தான் நினைவுக்கு வருவார்கள்.

    சாம்பார் பொடி தயாரிப்பு மணமாக இருக்கிறது.
    உங்கள் மூவருக்கும் இன்னும் வருபவர்களுக்கும்
    இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா. பொங்கல் வாழ்த்துகள் - நன்றிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஒக்கோரை செய்து எபிக்காக எடுத்து வைத்திருந்தேன். நேற்றுதான் குழம்புப் பொடி அரைத்துக்கொண்டுவந்தேன். இரண்டும் இங்கு வெளிவந்தது ஆச்சர்யம்தான்.

    சாம்பார் பொடி என்பதுலேயே குடும்ப பாரம்பர்யம் வந்துவிடுகிறது இல்லையா?

    வேஷ்டி தினம்.... அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்களுக்கான தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. சமையலா...?, பயணமா...? சரியான போட்டி... இரண்டுமே வெற்றி பெற வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான போட்டி - ஹாஹா... யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சியே தனபாலன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அருமையான கதம்பம் தான். ரோஷினியின் கைவண்ணம் அசத்தலா இருக்கு, என் கசின்ஸ் பிள்ளைகளுக்கு கூட link அனுப்பி வெச்சேன்.Very creative and improvising day by day. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். என் அரிசிம்பருப்பு வீடியோவை பகிர்ந்தமைக்கு ஸ்பெஷல் நன்றிகள் 💐

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பத்தின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அப்பாவி தங்கமணி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் மேடம்.
    புத்தக வாசிப்பு போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.
    காணொளிகள் சிறப்பு.
    சாம்பார் பொடி சனிக்கிளமையே பார்த்துட்டேன்.
    சஹானா யூட்டியூப் சேனல் வீடியோ இப்ப பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அரவிந்த். பதிவு பற்றிய உங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ரோஷ்ணியின் திறமை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. உபயோகமான வேலைகள். மூளைக்கும் வேலை கொடுக்கிறது. வாழ்த்துகள்/ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. நான் கிச்சடி செய்திருக்கேன். ஆனால் அதை அரிசீம்பருப்பு சாதம்னு சொல்லலை! சொல்லி இருக்கணுமோ? :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிச்சடி நானும் இங்கே செய்வதுண்டு. அரிசிம்பருப்பு சாதம் கோவை ஸ்பெஷல்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....