வெள்ளி, 29 ஜனவரி, 2021

எண்ட ஃப்ளைட் கிங்ஃபிஷர்…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட அடுத்த மின்னூல் - Adhi’s Kitchen Recipes பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஒவ்வொரு விநாடியும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்… வருவது வரட்டும், நிகழ்வது நிகழட்டும், வாழ்ந்து பார்க்கலாம் என்ற மனதிடத்துடன் நாம் இருந்தால்!


******







விவேக் ஒரு படத்தில் மும்தாஜ்-ஐ கவர்வதற்காக, “எண்ட ஸ்டேட் கேரளா, எண்ட மேளம் செண்டை” என்று சொல்லிக்கொண்டு நம்பூதிரி மாதிரி வேஷம் போட்டுக் கொள்வார் - அந்தக் காட்சியை தமிழ் தொலைகாட்சிகளில் பலமுறை நீங்களும் பார்த்திருக்கக் கூடும்.  அப்படி ஒன்றும் காமெடி என்று சொல்லி விட முடியாத காட்சி. யாரையும் கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டு அவர்களது ஊரையோ, மொழியையோ, உடையையோ பயன்படுத்துவதில் எனக்கு அதிக உடன்பாடில்லை.  இருந்தாலும், அந்தக் காட்சியைப் பற்றி இங்கே கூற வேண்டிய ஒரு கட்டாயம் வந்து இருக்கிறது எனக்கு!  அந்தப் படத்தில் வரும் விவேக் போலவே நண்பர் ஒருவர் சில மாதங்களாக “எண்ட ஃப்ளைட் கிங்ஃபிஷர்”  என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.  [குறிப்பு - கிங்ஃபிஷர் இப்போது இல்லை என்பது தெரிந்திருந்தாலும், தற்போது இருக்கும் அந்த விமான கம்பெனியைப் பற்றிச் சொல்ல வேண்டாமே என முந்தைய, இழுத்து மூடிய கம்பெனியின் பெயரையே இங்கே பயன்படுத்துகிறேன்!]


சமீபத்தில் ஒரு நாள் நண்பர் தில்லியிலிருந்து விமானப் பயணமாக சென்னை செல்லும்போது நடந்த ஒரு விஷயத்தினைத் தான் நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். தில்லியிலிருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பணிப்பெண் நண்பரின் இருக்கைக்கு அருகே வந்து “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் - வேலையெல்லாம் முடிச்சுட்டு வரேன்” என்று சொல்லிச் சென்றிருக்கிறார்.  நண்பருடைய ராசி அப்படி!  எல்லோருக்கும் பிடித்தமானவர் - குறிப்பாக பெண்களுக்கு அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து விடும்!  நாங்கள் அவரை கோகுலத்துக் கிருஷ்ணர் என்று கூட அழைப்பதுண்டு!  என்ன நண்பருடன் விமானப் பணிப்பெண்ணுக்கு பேச இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!  வேலைகளை முடித்துக் கொண்ட வந்த அந்தப் பணிப்பெண், நண்பரின் இருக்கைக்கு அருகே வந்து முட்டி போட்ட படி அமர்ந்து “நீங்க சென்னைவாசி தானே?  எனக்கு சென்னையில் ஒரு சிறு உதவி வேண்டும்” என்று கேட்ட உடனேயே நண்பர் “உதவி தானே - நீ கேட்டு நான் மாட்டேன் என்றா சொல்வேன், என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேள்” என்று சொல்லி விட்டார் - அவரது சுபாவம் அப்படி - யார் எந்த உதவி கேட்டாலும் செய்து விடுவது அவரது சுபாவம்!


“இந்த ஏர்லைன்ஸில் பணிக்குச் சேர்ந்து நான் முதன் முறையாக சென்னைக்கு பயணிக்கிறேன்.  சென்னை/தமிழகத்தில் பட்டுப்புடவைகள் மிகவும் பிரபலம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஆனால் எனக்கு அவற்றை வாங்குவதற்குத் தெரியாது.  எனது அம்மாவிற்கு பட்டுப்புடவை பரிசளிக்க வேண்டும் என்று தோன்றியது.  நீங்கள் தான் எனக்கு இந்த விஷயத்தில் உதவி செய்ய வேண்டும் - எனக்காக என் அம்மாவுக்கு பட்டுப்புடவை எடுப்பதில் உதவி செய்ய வேண்டும்” என்று கேட்டவுடன் - “ஓ! யாரு நம்ம அம்மாவுக்கு பட்டுப்புடவை எடுக்கணுமா?  எடுத்துட்டலாமே!”  “உங்க அம்மா எனக்கும் அம்மா மாதிரி தானே!” என்று சிரித்தபடியே சொல்லி இருக்கிறார் - நண்பரின் வயது அப்படி ஒன்றும் இளவயது இல்லை - அவர் வயது என்ன என்பதை நீங்களே அடுத்த சில பத்திகளுக்குள் தெரிந்து கொள்வீர்கள்! 


விமானத்தில் பல பெண்கள் இருந்தாலும் அவர்களில் ஒருவரிடம் கேட்காமல் நண்பரிடம் வந்து ஏன் இந்தப் பெண் இப்படி ஒரு உதவியைக் கேட்க வேண்டும் - இத்தனைக்கும் நண்பரின் அடுத்த இருக்கைகளில் இருந்ததும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணிகளே!  ஆனால் விமானப் பணிப்பெண் நண்பரிடம் கேட்கிறார் என்றால்…  அது நண்பரின் முகராசி - ஏனோ அவரைப் பார்த்த உடன் அவரிடம் கேட்டால் இந்த உதவியைச் செய்து விடுவார் என்று தோன்றியிருக்க வேண்டும் - அது தான் அவரது முகராசி - தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் அவரிடம் உதவி கேட்கத் தயங்குவதில்லை!  அவருக்கு அப்படி ஒரு முகராசி!  


இந்த நேரத்தில் என்னுடைய முகராசியையும் கொஞ்சம் நினைத்துக் கொள்கிறேன் - என் முகராசி படி - எனக்கு வாய்ப்பது என்ன தெரியுமா? என்னிடம் ஒருவர் வந்து பேசுகிறார் என்றால் அவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம் - அவரது மனக் குமுறல்களை என்னிடம் கொட்டிச் செல்வார்கள் - அப்படி நிறைய முறை கேட்டதுண்டு - முடிந்த அளவு சமாதானமும் சொல்லி அனுப்பவது வழக்கமாகவே இருந்திருக்கிறது!  என்ன ஒரு பிரச்சனை என்றால் அவர்கள் சொல்லிச் சென்ற விஷயங்களை நான் யாரிடம் சொல்ல - சிலவற்றை இங்கே எழுதி விட்டாலும், பல விஷயங்கள் எழுத முடியாமல், எனக்குள்ளேயே அழுத்திக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதே! 


சரி நண்பரின் விஷயத்திற்கு வருவோம்! “கவலையே வேண்டாம் - நமக்குத் தெரிஞ்ச நல்ல கடை இருக்கு! அங்கே போய் அம்மாவுக்கு பட்டுப் புடவை வாங்கிக்கலாம்! கவலையே வேண்டாம் - சென்னையிலிருந்து அடுத்த விமானம் எப்போது உனக்கு? என்று கேட்க, அடுத்த நாளை மாலை என்று அந்தப் பணிப்பெண் சொல்லி இருக்கிறார்.  சரி நாளைக்கு எனக்கு கால் பண்ணு என அவரது தொடர்பு எண்ணைத் தந்திருக்கிறார்.  வாங்கிக் கொண்ட அந்தப் பெண், நாளைக் காலை பத்து மணிக்கு மேல் உங்களை அழைக்கிறேன் என்று சொன்ன போது, அந்தப் பெண்ணிடம் நண்பர் சொன்ன பதில்….


“பன்னிரெண்டு மணிக்கு மேலே ஃபோன் பண்ணு! ஏன்னா எனக்கு நாளைக்கு கல்யாணம்!”  


அதிர்ச்சியான பணிப்பெண் - “என்னது நாளைக்கு உங்களுக்குக் கல்யாணமா?” என்று சந்தேகத்துடன் கேட்க, “முதல் கல்யாணம் இல்ல, இரண்டாவது கல்யாணம்” என்று மேலும் சொல்லி ஒரு இடைவெளி விட்டிருக்கிறார்.  அதிர்ச்சியுடன் பார்த்த அந்த விமானப் பணிப்பெண்ணுக்கு அவர் அளித்த பதில் - அதே மணப்பெண் தான் - எனக்கு அறுபதாம் கல்யாணம் என்று சொல்லி அதற்கான விளக்கத்தினையும் தந்திருக்கிறார்!  விளக்கம் கேட்ட அந்தப் பெண், எப்போதும் போல பொய் புன்னகை புரியாமல் வாய் விட்டுச் சிரித்தபடி கைகளால் “I will call you” என்று சொல்லி விட்டு நகர்ந்திருக்கிறார்.  இந்த சம்பாஷணைகளைக் கேட்டபடி அமர்ந்திருந்த தமிழ்ப் பெண்மணிகளுக்கு - “புடவை வாங்கணும்னா எங்க கிட்ட கேட்க வேண்டியது தானே - நாங்க இங்க குத்துக்கல்லாட்டாம் உட்கார்ந்து இருக்கோமே - அது அந்தப் பொண்ணுக்குத் தெரியவே இல்லையா?”  என்று யோசித்தார்களாம் - என்ன மனசுக்குள் யோசிப்பதாக நினைத்து சப்தமாகவே கேட்டு விட்டார்கள் என்பது தான் செய்தி! ஹாஹா…


இந்த அறுபதாம் கல்யாணத்திற்கு தான் நானும் சென்னை வந்திருந்தேன் - எனது பக்கத்தில் எழுதியும் இருந்தேன் - அடுத்த நாள் காலை திருமணச் சடங்குகள் முடிந்து எங்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது விமானப் பணிப்பெண் அழைக்க, உடனே புறப்பட்டு விட்டார்.  அவருக்குத் தெரிந்த கடைக்கு அழைத்துச் சென்று விமானப் பணிப்பெண்ணின் அம்மாவுக்கும், வேறொரு பணிப்பெண்ணின் அம்மாவுக்கும் பட்டுப் புடவைகளை,  தள்ளுபடி உடன் வாங்கித் தந்தார்.  தில்லியிலோ அல்லது கொல்கத்தாவிலோ (மற்ற பணிப்பெண் கொல்கத்தாவினைச் சேர்ந்தவர்) எப்போது இந்தக் கடைக்குச் சென்றாலும், எனது பெயரைச் சொல்லுங்கள் - உங்களுக்கு நல்ல புடவைகளை, தள்ளுபடி விலையில் தருவார்கள் என்றெல்லாம் சொல்லி அவர் மண்டபத்திற்குத் திரும்பியபோது மாலை நான்கு மணி!  நான்கு மணி நேரம் மணமகனைக் காணவில்லை என்று மணப்பெண்ணுக்கு வேதனை! ஹாஹா.  அவருக்குத் தன்னவரைப் பற்றி நன்றாகவே தெரியும் என்றாலும் இங்கே பதிவுக்காக இப்படி எழுதி இருக்கிறேன்! 


சென்னையிலிருந்து திரும்பியதும் அதே நிறுவனத்தின் விமானம் தான் - எல்லோருக்கும் ஒரே ஒரு உணவுப் பாக்கெட் கொடுத்த பணிப்பெண் (இந்தப் பெண் அந்தப் பெண் அல்ல!) இவருக்கு மட்டும் ஸ்பெஷலாக இரண்டு உணவுப் பாக்கெட்டுகளைக் கொடுத்து உபசரித்து இருக்கிறார் - எப்போதுமே இவரைப் பார்த்தாலே இப்படி நடப்பதுண்டு - அவரது முகராசி அப்படி!  ரசித்து, ருசித்து சாப்பிடுபவராயிற்றே! எந்த உணவகத்திற்குச் சென்றாலும் இவருக்கு தனி மரியாதை கிடைத்து விடும்!  விமானத்திலும் அப்படியே!  


நிற்க! தலைப்பிற்கு வருகிறேன் - இந்த மாதிரி சில விஷயங்களால், நண்பர் இப்போதெல்லாம் தில்லியிலிருந்து எங்கே பயணிப்பதென்றாலும் முதலில் தேடுவது அந்த நிறுவனத்தின் விமானங்களைத் தான் - அது இருந்தால் அதில் தான் பயணம்! வேறெந்த நிறுவனத்தின் விமானங்களையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை!  “எண்ட ஃப்ளைட் கிங்க்ஃபிஷர்!” என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்!  சைடு குடுமி மட்டும் தான் மிஸ்ஸிங்!  - கொஞ்சம் குண்டான விவேக்!  ஹாஹா…  நண்பரைப் பற்றி இப்படி எழுதுகிறேன் என்றால் - அவர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்ற தைரியம் தான்! 


*****


என்ன நண்பர்களே, இந்த நாளின் பதிவு வழி சொன்ன விஷயங்களை ரசித்தீர்களா? பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வழி சொல்லுங்களேன்!  நாளை மீண்டும் வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

30 கருத்துகள்:

  1. வியப்பான ராசி.  வாழ்த்துகள் அவருக்கு!  நீங்கள் ஒரு சுமைதாங்கி வெங்கட்.  நீங்கள் பலபேரின் மனக்குமுறல்களை தீர்த்து வைக்கிறீர்கள்.  அதனால் உங்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுமைதாங்கி - ஹாஹா... இருக்கலாம்! சிலரின் மனக் குமுறல்கள் என்னால் குறைந்தால் நல்லது தானே ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஹிஹிஹி, நல்லா இருக்கு. அவர் பயணித்தது இன்டிகோவாய் இருக்கும். அங்கே பணிப்பெண்கள் இப்படி எல்லாம் நடந்திருக்காங்கன்னா ஆச்சரியமா இருக்கு! நண்பரின் முகராசியை நானும் நம்பறேன். விவிசி.விவிசி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் பயணித்த விமானம் குறித்து பொதுவில் கூற விருப்பமில்லை கீதாம்மா. பதிவினை ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. நல்ல ரசித்த நிகழ்ச்சி... என் நண்பனுக்கும் இத்தகைய ராசி உண்டு. எல்லாப் பெண்களும் அவனிடம் மயங்குவார்கள், நல்லா பேசுவாங்க, வீட்டிற்கு அழைப்பாங்க....... என்ன காரணம் என்று மட்டும் எனக்குப் புரியாது. என்னிடம் அட்வைஸ், சில சமயம், ஏன் அந்த நண்பனுடன் சகவாசம் வச்சிருக்கீங்க என்று சொல்வார்கள். அவன் எனக்கு மிக மிக நெருங்கிய ஒரே நண்பன்.

    முகராசி என்பது எப்படி அமைகிறது என்று நிறைய தடவை யோசிப்பேன். அதெல்லாம் பூர்வ ஜென்மத்திலிருந்து நாம் கொண்டு வருவதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகராசி - பூர்வ ஜென்மத்திலிருந்து நாம் கொண்டு வருவதோ? - எங்கள் பிளாக் புதனுக்கான கேள்வி மாதிரி இருக்கிறது - ஸ்ரீராம்/கேஜிஜி - இடம் கேட்டிருந்தால் என்ன பதில் சொல்லி இருப்பார்கள் என்று யோசிக்கிறேன்.

      பதிவினை ரசித்ததற்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. Ha ha ha, சிலருக்கு முகராசி அப்படி இருக்கும் போல. நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் - சிலருக்கு இப்படித்தான் அமைகிறது அப்பாவி தங்கமணி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. கலகலப்பான பதிவு.
    அவருக்கு எத்தன மச்சம் உள்ளது என்ற ரகசியத்தையும் தாங்கள் இங்க வெளியிட்டிருக்கலாம் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஹா.. ஹா.. சுவாரஸ்யமான சம்பவம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்களை ரசித்தமைக்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  7. // என்னிடம் ஒருவர் வந்து பேசுகிறார் என்றால் அவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்... //

    தெய்வமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தெய்வமே// - நீங்க எங்கேயோ போயிட்டீங்க! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. அவரது ப்ளைட் கிங்ஃபிஷர் என்றதுமே தெரிந்துவிட்டது, இது ஒரு ரசிக்கும்படியான சம்பவமாகத்தான் இருக்கும் என்பது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்பவம் ரசிக்கும்படியானது என்பதில் மகிழ்ச்சி வி. இராமசாமி ஜி.

      நீக்கு
  9. மற்றவர்கள் குறைகேட்பதில் நீங்களும் பாதிரியார் போலத்தான்![[[ முகராசியும் எல்லோருக்கும் அமைவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகராசி எல்லோருக்கும் அமைவதில்லை - உண்மை தான் நேசன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. கிங்பிஷர் மீண்டும் வாராது போல![[

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பில்லை ராஜா! என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது நேசன்.

      நீக்கு

  11. வெகு சுவாரஸ்யமான மனிதர்.
    அறுபதாம் கல்யாண நாளில் உதவி செய்ய இவர் கிளம்பலாம்.
    மனைவி புரிந்து கொண்டாரே:)
    அதுவும் லக் தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்வாரஸ்யமான மனிதர் தான் வல்லிம்மா... அவரைப் பற்றி இன்னும் கூட எழுதலாம்! :) எழுதுவேன் - பிறிதொரு சமயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. ஒருவேளை அவர் உங்களுக்கு நண்பராக இருப்பதினால் அவருக்கு அப்படிப்பட்ட ராசிகிடைத்து இருக்குமோ எத்ற்கும் உங்க கூட ஒரு நாள் விமான பயணம் மேற்கொள்ளனும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எதற்கும் உங்க கூட ஒரு நாள் விமான பயணம் மேற்கொள்ளணும்// - ஆஹா... போகலாமே! நீங்க இங்கே வந்துடுங்க! என்னை அமெரிக்கா கூப்பிட்டுச் சென்று மீண்டும் இங்கே கொண்டு விட்டு விட்டால் - என்னோடு இரண்டு முறை பயணம் செய்து விடலாம் மதுரைத் தமிழன். ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. பிரச்சனை மற்றும் உதவி என்றால் எங்கிட்ட பேசி மனம் திறக்கும் நண்பர்கள் அதற்கு என்னால் முடிந்த அளவு உதவியபின் அவர்களும் அந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்த பின் என்பக்கம் திரும்பி பார்ப்பது கூட இல்லை அதுதான் என் முகராசி இதில் நமக்கு எல்லாம் தெரிந்த ஔருவர் அவருக்கு உதவிகள் செய்து இருக்கின்றேன் அவர் வாழ்நாளில் என்னை மறக்க இயலாது என்று சொல்லி எழுதியவர் என் சில காலங்களுக்கு முன் அன்பிரெண்ட் செய்து இருக்கிறார் அவர் மோடியின் ஆதரவாளர் ஹீஹீஹீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உதவி பெற்றுக் கொண்ட பிறகு கண்டு கொள்ளாமல் இருப்பது தான் எப்போதும் நடப்பது! எனக்கும் அப்படியான சில அனுபவங்கள் உண்டு - உதவி செய்வதோடு நம் வேலை முடிந்து விட்டது. அது குறித்து பேசவோ, அவர் பதிலுக்கு என்ன செய்யப் போகிறார் என்றோ எதிர்பார்ப்பதில்லை! தேவையும் இல்லை மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. உதவும் மனம் இருக்கிறது . எல்லோருக்கும் பிடித்த மனிதராக இருப்பது நல்ல விஷயம்தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் பிடித்த மனிதராக இருப்பது நல்ல விஷயம் தானே - ஆமாம் கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....