புதன், 12 மே, 2021

மேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஆறு - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


EVERY NEW DAY IS A CHANCE TO CHANGE YOUR LIFE. 



******


நண்பரின் மேகாலயா பயணம் தொடர்பான கட்டுரையின் முதல் ஐந்து பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தது நினைவில் இருக்கலாம்.  நினைவு இல்லாதவர்கள் வசதிக்காக, இதுவரை வெளிவந்த இந்த பயணத் தொடரின் பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!


முதல் பகுதி 


இரண்டாம் பகுதி


மூன்றாம் பகுதி


நான்காம் பகுதி


ஐந்தாம் பகுதி


இதுவரை வெளிவந்த பகுதிகளை படித்து முடித்த பின்னர் இந்த ஆறாம் பகுதியைத்  தொடரலாம். இனி பயணத் தொடரை நண்பர் சுப்பு எனும் சுப்ரமணியன் அவர்களின் வார்த்தைகளில் படிக்கலாம் வாருங்கள்! - வெங்கட் நாகராஜ் 


******





சென்ற பகுதியினை முடிக்கும் போது, ”சற்று தொலைவு தாண்டி எல்லை வேலி (BORDER FENCE) எங்களுடன் பயணித்தது. அப்படி பயணித்து, நாங்கள்  அடைந்த இடம் என்ன… அங்கே என்ன பார்த்தோம் என்பது குறித்த தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்” என்று சொல்லி முடித்திருந்தேன்.  அப்படி நாங்கள் பயணித்து சென்று சேர்ந்த இடம் DAWKI என்ற இடம்.  இங்குதான் UMNGOT எனும் நதி இரு தேச எல்லையாய் பிரித்து பாய்கிறது. இங்கே சற்றே பெரிய பாறையில் இந்தியா என எழுதி வைத்துள்ளனர். பாறையின் மறு புறம் வங்கதேசம். குறுகிய இடைவெளியில் இரு நாட்டவரும் சர்வசாதாரணமாய் நதியில் இளைப்பாறுதல், குளியல், நீச்சல் என உள்ளனர். இந்தியப் பகுதியில் படகோட்டம் உள்ளது. ஆனால் அதற்கு சாலையில் இருந்து வெகுதூரம் இறங்க வேண்டும்.





ஆதலால் டாக்கி பகுதியைத்  தாண்டி நாங்கள் அன்று தங்கப் போகும் இடமான BETELNUT RESORT பகுதியைக் கடந்து ஒரு வாகன நிறுத்தத்தில் விட்டார் ஓட்டுநர் மனோஜ். அங்கு சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த மலையின் நடுவே பச்சை பசேலென (மரகதப் பச்சையில்) UMNGOT நதி. மேலிருந்து பார்த்தால் கலங்கிய பாசிபடர்ந்த நீர் போல் தோன்றும். ஆனால் கீழே இறங்கிய பின் தெள்ளத் தெளிந்த நீர். அங்கே படகுப் பயணம் மேற்கொண்டோம். மேலே இரும்பினால் ஆன தொங்குபாலம் உண்டு. அதில் ஒரு நேரத்தில் 15 பேர் மட்டுமே நடந்து செல்லலாம். சாகசம் தான். சற்று கிலி மிகுந்து இருந்தது. படகுப்பயணம் பற்றி என்ன சொல்ல? ஆஹாஹா அமைதியான நதியினிலே ஓடம் என்ற ஒற்றை வரியை பறைசாற்றி இருந்தது. சற்று தூரத்தில் ராட்சத பாறைகள் எங்களை தடுத்து நிறுத்த சிறிது சிறிதாய் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்.  





அங்கே படகை சற்று நேரம் நிறுத்துகின்றனர். என்ன ஒரு ரம்யமான காட்சி. இயற்கை எழிலுக்கு ஈடு இணை இல்லை. ஒரு படகிற்கு 500 ரூபாய் கட்டணம். மீண்டு வந்த பின் எங்களை BETELNUT RESORT- இல் விட, முன்பதிவு செய்திருந்தாலும், தகவல் பதிவுகளுக்குப் பின் எங்கள் அறைக்கு வந்தோம். உடைமைகளை வைத்தபின்னர், உப்பரிகையில் சென்று, தேநீர் பருகிய படியே நதியை ரசிக்க, இதோ நானும் வந்துவிட்டேன் என வருணபகவான் மழையை வாரி வழங்க அட்டகாசமாய் மழையை ரசித்தோம்.  இரவு உணவு வரவழைக்க, போர்வையை போர்த்தி வந்த பதார்த்தங்களை ருசித்து இனிதே உறங்கினோம்!




அடுத்த நாள், எங்கள் பயணத்தின் நான்காம் நாள் (13 ஏப்ரல் 2021) - மிகவும் ரம்மியமான ஒரு காலையாய், பல்வித பறவையினங்களின் கீச்கீச் மொழியும், சற்றே கீழாக, UMNGOT நதியின் சீரான சலசலப்பும் ஐந்தரைக்கெல்லாம் பகலவன் ”இதோ வந்துவிட்டேன்’ என வர, என்ன ஒரு பேரின்பம்! அலுவலகம் மற்றும் சமூக தொல்லைகள் இல்லையேல் அங்கேயே தங்கி விடலாம் போல இருந்தது. இங்கே தங்குவதற்கு கூடாரங்களும் அமைத்துத் தருகிறார்கள். வாய்ப்பு கிட்டும் பட்சத்தில் அப்படி ஒரு கூடாரத்தில் தங்க ஆசை உண்டு. தேநீர் அருந்திய பின் அனைவரும் நீராடி, உடைமைகளுடன் அறையை காலி செய்து மேலே ஏறி வந்தோம். நதியை பார்த்தவாறு இருந்த ஒரு இடத்தில் காலை உணவு சாப்பிட்டோம். பாக்கு, வாழை, பலா மரங்களும், செம்பருத்தி மலர் செடிகளும் சூழ, பிரமாதமான சிற்றுண்டி நேரம்.







சிற்றுண்டியை முடித்து, அங்கிருந்து புறப்பட்டு முதலில் சென்ற இடம் இந்திய வங்கதேச எல்லை.  பஞ்சாப் மாநிலத்திலுள்ள வாகா எல்லையை போலவே, இரு நாட்டு வாயிலின் அருகே புகைப்படம் எடுத்து திரும்பினோம், அங்கிருந்து ஏற்றப்பட்ட சரக்கு வாகனங்களில் நீண்ட அணிவகுப்பு நான் எண்ணி அவரை 834 வாகனங்கள் இவை அனைத்தும் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு மற்றும் சுங்க அனுமதிக்களுக்குப் பிறகு செல்ல அனுமதிக்கப்படும் இப்படி செல்லும் வாகனங்கள் மீண்டும் இந்தியாவுக்குள் வரும் போது காலியாகத்தான் வருமாம். ஏதாவது பண்டமாற்று வியாபாரம் செய்யலாமே! ஒருவழியாய் பயணித்து பல சரக்கு வாகனங்களை கடந்து எங்களது மேகாலயாவின் இறுதிகட்ட (தேர்தலின் தாக்கமோ?) பயணத்தைத் தொடர்ந்தோம். பயணித்து நாங்கள் அடுத்து சேர்ந்த இடம் KRUNG SHURI அருவி. ஒரு இடத்தில் சென்று வாகனத்தை நிறுத்தினார். வாகனம் நிறுத்த கட்டணம் செலுத்தியதும் கீழே சென்று வாருங்கள் என்றார் மனோஜ்.






துவக்கத்தில் சற்று இறங்கியதும் எங்கோ தூரத்தில் அருவி ஒன்று தெரிந்தது. முதலில் சற்றுத் தயங்கிய பின் துணிந்து சென்று ஆஹா என்ன ஒரு நேர்த்தியான அருவி. மேகாலயாவில் கண்டதிலேயே மிகவும் ரசித்தது இந்த இடம்தான். போகும் பாதை ஏதோ வரலாற்றுத் தொடரில் வருவது போலவும் அல்லது ஆங்கிலப் படங்களில் வருவது போலவும் மர்மதேசம் தான் இருந்தது. நீண்ட ஏற்ற இறக்கங்கள் கொண்ட நடைக்குப் பின், பாறைகளையே பாலமாக்கி வைத்த ஓரிடம். நீர் பாறைகளினூடே தவழ்ந்து திரிந்து பாய்ந்தது ஒரு முன்னோட்டமாக. நுழைவு கட்டணம் செலுத்தி உட்சென்றால் ஒரு மிகப்பெரும் முடிவில் தண்ணீர் திவலைகளாய் தெறிக்க,ஆர்ப்பரித்து கொட்டும் அருவி. எங்கள் மூவருக்கும் நீச்சல் தெரியாது. இந்தியாவின் மிகப்பெரும் குறைபாடு நீந்த தெரியாதிருப்பது. ஆனால் அவசியம் கற்க வேண்டிய ஒரு கலை. மற்றொன்று மறுக்கப்படும் மிக அவசியமான கலை வாகனம் ஓட்டுவது. இவை இரண்டையும் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும். ஒன்று முதல் 5 வகுப்புகளுக்கு நீச்சலும், 9 முதல் 12-ஆவது வகுப்பு மாணவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சியும் இன்றியமையாதது. 


மேலும் தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். தொடர்ந்து வாசித்து வரும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.


மேலும் பயணம் தொடரும்…


ஆர். சுப்ரமணியன் 


******


நண்பர்களே, தில்லி நண்பரின் மேகாலயா பயணத் தொடரின் ஆறாம் பகுதி உங்களுக்கும் பிடித்திருக்கலாம்!  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.  அவர் தொடர்ந்து எழுதுவது உங்கள் ஆதரவில் தான் இருக்கிறது! மீண்டும் நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


16 கருத்துகள்:

  1. ஓ...   முன்னோட்டத்தில் காணப்பட்ட நதி இதுதானா?   அழகான படங்கள்.  மிகவும் அழகு.  நடுவில் ஒரு படத்தில் ஒரு மூட்டை போல கட்டித் தொங்க விடப் பட்டிருப்பபது  என்ன என்று தெரியவில்லை!  என்ன மாதிரி உணவுகள் கிடைத்தன அங்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னோட்டத்தில் கண்ட நதி இதுவே. மூட்டை போல கட்டித் தொங்க விட்டு இருப்பது என்ன? நண்பரிடம் தான் கேட்க வேண்டும் ஸ்ரீராம்.

      பொதுவாக மேகாலயாவிலும், மற்ற வடகிழக்கு மாநிலங்களிலும் அசைவ உணவு தான் பிரதானம். சைவ உணவுகள் - குறிப்பாக வட இந்திய உணவுகள் கிடைக்கின்றன. நாங்கள் சென்றபோதும் வட இந்திய உணவுகள் தான் சாப்பிட்டோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நீச்சலின் அவசியத்தை சரியான கட்டத்தில் உணர்த்தி காட்டி விட்டீர்கள்.

    எல்லோரும் நகரம் நோக்கி படையெடுத்து விட்டதால் இந்நிலை.

    எனக்கு நீச்சல் தெரியும் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீச்சல் கற்றுக்கொள்வது அவசியம் என்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன் கில்லர்ஜி.

      உங்களுக்கு நீச்சல் தெரியும் என்பது நல்ல விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சிறு வயதிலேயே நீச்சல் கற்றுக் கொண்டு விட்டால் எளிது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுவயதிலேயே நீச்சல் - எளிது, நல்லதும் கூட தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அழகான படங்கள் இடமும் அப்படியே!!! ஆறு என்ன அழகு வாவ்! சாப்பாடு பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே படமும் இல்லையே..ஹிஹிஹி...நாங்கல்லாம் இதுக்கும் வெயிட்டிங்கல்லோ?!!

    ஓரு சுனையில் பாறையில் ஏதோ தொங்குகிறதே அது என்ன?

    நீச்சல், வண்டி ஒட்டல் இரண்டுமே கைவசம் உண்டு!!!

    நீச்சல் நல்ல உடற்பயிற்சியும் கூட..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      பாறையில் தொங்குவது - நண்பரிடம் கேட்க வேண்டும். சாப்பாடு படங்கள் - நண்பர் பகிர்ந்த வரை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன் கீதாஜி.

      நீச்சல் நல்ல உடற்பயிற்சி - உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நதியின் படங்கள் அழகு. தொங்குபாலமும் அருமை.

    நீச்சல், ஓட்டுநர் உரிமம், Basic maintenance skills for home (Vehicle maintenance, household items maintenance etc.) இதெல்லாம் ரொம்பவே முக்கியம். இதைப் படிக்காமல், அசோகர் மரம் நட்டார், அக்பர் மரத்தை வெட்டினார் என்று படித்து என்ன செய்யப்போகிறோ என்பது என் எண்ணம்.

    உணவெல்லாம் எப்படி இருந்தது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்வித் துறையில் நிறைய மாற்றங்கள் தேவை என்பதை எப்போது தான் உணர்ந்து கொள்ளப் போகிறோமோ? படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      உணவு - ஸ்ரீராமுக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பாலம் பயங்கர டெரர்ரா இருக்கு . டீ சாப்பிடணும் போல இருக்கு
    அந்த மலையிலே என்ன எழுதி இருக்காங்க விவரங்கள் சூப்பரா சொல்லியிருக்கீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் படம் - இந்தியா என எழுதி இருக்கிறது படத்தில். அப்பக்கத்தில் பங்க்ளாதேஷ் என எழுதி இருக்கும்.

      படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபயா அருணா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பயண விவரங்களும், படங்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தகவல்களும் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. இங்கேயும் ஓர் எல்லை. அழகான/அதே சமயம் பயங்கரங்கள் நிறைந்த இடம். உண்மைதான். நம் நாட்டில் நீச்சல் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. ஆனால் நாங்க காசிக்குப் போனப்போ எங்களுக்குத் தெரியாத அதிசயமாக என் மாமியார் பிரயாகையில் கங்கா/யமுனா/சரஸ்வதி சங்கமத்தில் படகிலிருந்து குதித்து நீச்சல் அடித்தார். நான் வாயைப் பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கங்கையில் குதித்து நீச்சல் - ஆஹா... தைர்யம் தான் உங்கள் மாமியாருக்கு! நீச்சல் தெரிந்து வைத்துக் கொள்வது மிக அவசியம் தான் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....