ஞாயிறு, 16 மே, 2021

மேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஏழு - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


வெற்றிகரமான பொய்யனாக இருக்குமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான அளவு நினைவாற்றல் இல்லை..!


******





நண்பரின் மேகாலயா பயணம் தொடர்பான கட்டுரையின் முதல் ஆறு பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தது நினைவில் இருக்கலாம்.  நினைவு இல்லாதவர்கள் வசதிக்காக, இதுவரை வெளிவந்த இந்த பயணத் தொடரின் பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!


முதல் பகுதி 


இரண்டாம் பகுதி


மூன்றாம் பகுதி


நான்காம் பகுதி


ஐந்தாம் பகுதி


ஆறாம் பகுதி


இதுவரை வெளிவந்த பகுதிகளை படித்து முடித்த பின்னர் இந்த ஏழாம் பகுதியைத்  தொடரலாம். இனி பயணத் தொடரை நண்பர் சுப்பு எனும் சுப்ரமணியன் அவர்களின் வார்த்தைகளில் படிக்கலாம் வாருங்கள்! - வெங்கட் நாகராஜ் 


******





சென்ற பதிவின் கடைசியில் நீச்சல், வாகன ஓட்டும் பயிற்சி போன்றவற்றின் அத்தியாவசியத் தேவை குறித்து எழுதி முடித்திருந்தேன். மீண்டும் பயணத்திற்கு வருவோம். நாங்கள் பார்த்த அருவியை விட்டு விலகவே எங்களுக்கு மனம் வரவில்லை. சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து இயற்கையை ரசித்து, சற்று தூரம் சென்றால் கரடுமுரடான பாறைகள் அழகான அகலமான தடுப்பணை ஒன்று கட்டியுள்ளனர். ஆறு ஒன்று சர்வ வல்லமையுடன் இரு கரைகளையும் தொட்டபடி அமைதியாய் தவழ்ந்து ஓடிவருகிறது. இதுதான் அந்தப் பாறையில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  நாங்கள் சென்ற நேரம் தடுப்பணையில் இருந்து உயிர் காக்கும் கவசம் அணிந்து (LIFE JACKET) வடகிழக்கு இந்தியாவை சேர்ந்த ஒரு குழு கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட தங்க மங்கையர் கூத்தும் கும்மாளமுமாய், தங்களது மகிழ்ச்சியையும் அத்துணை ஆனந்தத்தையும் பறைசாற்றிக் கொண்டிருந்தனர்.





குழு மொத்தமும் இளவயதினர்.  அவர்களில் சிலர், எங்களைப் போன்றே நீச்சல் தெரியாத, குழுவிலுள்ள சில மங்கையரை, தண்ணீரில் தள்ளி விட, அவர்கள் போட்ட கூச்சலில் மழையே சற்று அதிர்ந்து மேகக் கூட்டங்களை அழைத்து பகலவனை மறைத்தது. ஒரே ரகளைதான். சற்று தொலைவில் பாறையில் அமர்ந்து அங்கங்கே பாறை இடுக்கில் உள்ள நீரில் கால்களை வைத்தபடி நாங்களும் பார்வையாளர்களாய் அவர்களை ரசித்துக் (????) கொண்டிருந்தோம். நீண்ட நேரம் அந்த சுற்றுச்சூழலை ரசித்தபடி இருக்க முடிந்தது. இருள், மலைத்தொடர்களின் நடுவே பச்சைபசேலென இரு கரை தொட்டு ஓடும் நதி நீர், அங்கங்கே சிறிதும் பெரிதுமாய் அருவிக் கூட்டம். மரங்களில் பட்சிகளின் ஒலிகள். இதமான காற்று. மிதமான வெயில் என வர்ணித்துக் கொண்டே இருக்கலாம். ஆசை தீர கண்களாலும், முடிந்தவரை அலைபேசி மற்றும் புகைப்படக் கருவிகளில் இவ்வழகை சிறைபிடித்தபடி, அங்கிருந்து நீங்க மனமின்றி, நேரப் பற்றாக்குறையால் அங்கிருந்து விலகி நடந்தோம்.





மேலே வந்ததும் களைப்பு தீர அமர்ந்து ஒரு தேநீர் குடித்தோம். மகள் கூடுதலாக நூல்கண்டு சிற்றுணவு அட அதாங்க... நம்ம நூடுல்ஸ் உண்டாள். மீண்டும் ஒரு அமைதியான பயணம் அன்றைய நாளில் கண்ட காட்சிகளை அசைபோட்டபடியே.... வழக்கம்போல தொப்பை அரசர் சற்றே அழைப்பு விடுக்க, ஒரு உணவகத்தில் பசியாறினோம். மீண்டும் ஷில்லாங் நோக்கி ஒரு பயணம். நடுவில் ஒரு இடத்தில் நிறுத்தி, இந்தப் பாதையில் சற்று தூரம் நடந்து செல்லுங்கள் என்றார் மனோஜ். அப்படி நடந்த இடம் தான் LAITLUM GRAND CANYONS எனும் சமவெளி பள்ளத்தாக்கு. விரிந்து பரந்த சமவெளிப் பகுதி முடிவடையும் இடத்தில் மிகவும் உறுதியான மரக்கட்டை வேலி. அதனைத் தாண்டி அதலபாதாளம், பிரம்மாண்டமான பள்ளத்தாக்கு. இடையில் மேகக் கூட்டங்களின் ஊர்வலம். தூரத்தே பகலவன் தனது தினப் பகுதியை முடித்து மறையும் நேரம் கிரணங்களை மேகத்தின் ஊடாக, பள்ளத்தாக்கில் பாய்ச்ச, என்ன ஒரு வர்ண ஜாலம் - அதனைக் காண கண் கோடி வேண்டும்.





அனைத்து வயதினரும் பிரமித்து ரசிக்கும் பிரம்மாண்ட இயற்கை படைப்பு. அதுதான் அன்றைய மற்றும் மேகாலய சுற்றுலாவின் கடைசி பகுதி. அதுவே முத்தாய்ப்பாய் அமைந்தது ஆசை தீர கண்களுக்கும் விருந்து கொடுத்து விடைபெற்று, பயணத்தின் பல்வேறு பகுதிகளை கடந்து (அடேயப்பா எவ்வளவு பெரிய நகரம்) மீண்டும் ஷில்லாங்க் தங்கும் இடம் வந்தோம். கணக்கு வழக்குகளை முடித்து, நானும் மகளும் சற்று காலாற நடந்தோம். இரவு உணவு, அறைக்கே வந்து விட அமைதியாய் உண்டு, மன நிறைவுடன் உறங்கிப் போனோம். அடுத்த நாள் எங்கள் பயணத்தில் கடைசி நாள் - கடைசி நாள் கௌஹாத்தி நகரில்! அங்கே என்ன பார்த்தோம், என்ன வித அனுபவங்கள் கிடைத்தன போன்ற விஷயங்களை வரும் பகுதியில் சொல்கிறேன். தொடர்ந்து வாசித்து வரும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.


மேலும் பயணம் தொடரும்…


ஆர். சுப்ரமணியன் 


******


நண்பர்களே, தில்லி நண்பரின் மேகாலயா பயணத் தொடரின் ஏழாம் பகுதி உங்களுக்கும் பிடித்திருக்கலாம்!  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.  அவர் தொடர்ந்து எழுதுவது உங்கள் ஆதரவில் தான் இருக்கிறது! மீண்டும் நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…


20 கருத்துகள்:

  1. சிறு காணொளிகளும் படங்களும் அருமை.  அதலபாதாளம் படங்கள் இன்னும் இருந்திருக்கலாம்.  மிஸ்ஸிங் வெங்கட் போட்டோகிராபி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தகவல்களும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      மிஸ்ஸிங் வெங்கட் போட்டோகிராபி! - :) நண்பரின் மகளும் சிறப்பாக படம் எடுப்பார். அவர் எடுத்த படங்கள் என்னிடம் இல்லை. இருந்திருந்தால் சேர்த்திருப்பேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அருவி மிக அழகு.

    //அங்கங்கே சிறிதும் பெரிதுமாய் அருவிக் கூட்டம். மரங்களில் பட்சிகளின் ஒலிகள். இதமான காற்று. மிதமான வெயில் என வர்ணித்துக் கொண்டே இருக்கலாம். //

    கண்முன் காட்சி விரிகிறது.
    படங்களும் கட்டுரையும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்முன் காட்சி விரிகிறது - படங்களும் கட்டுரையும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அருவி... மிக அழகுதான்.

    அருவி நீரில் கால்களை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்து, கையில் ஏதேனும் கொறிக்க இருந்தால் நன்றாகத்தானிருக்கும்.

    பயண விவரங்கள் நன்று. தங்குமிடத்தில் எத்தகைய உணவு கிடைத்தது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கையில் ஏதேனும் கொறிக்க இருந்தால் - :) இயற்கையுடன் இருக்கும்போது இப்படியான விஷயங்களும் இருந்தால் மகிழ்ச்சி தான் நெல்லைத் தமிழன்.

      தங்குமிடத்தில் சைவம் - வட இந்திய உணவுகள் தான். நூடுல்ஸ் இருக்கவே இருக்கிறது.

      பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. காணொளிகளும் விவரங்களும் அருமை. உங்கள் மற்றும் உங்கள் நண்பர்களின் பதிவுகளின் மூலம் பல ஊர்களைப் பார்க்க முடிகிறது. இவை எல்லாம் நேரில் செல்ல வாய்ப்பு குறைவுதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விவரங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. நேரில் செல்லும் வாய்ப்பு உங்களுக்கும் அமைய வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அருவி வாவ்! என்ன அழகு! தடுப்பணை அங்கு தங்க மங்கையர் குளியல் எல்லாம் நேரில் செல்ல வேண்டும் என்ற ஆவலை எழுப்புகிற்து. படங்களும் காணொளியும் மிக அருமை.

    பள்ளத்தாக்கு படம் ஒன்றோடு நிறுத்திவிட்டீர்களே! விவரங்கள் அறிய முடிந்தது.

    நூல்கண்டு ஓகே அப்புறம் என்ன சாப்பாடு சாப்பிட்டீர்கள் என்ன மாதிரியான உணவு?

    பயணக் குறிப்புகள் ஆசையைத் தூண்டுகிறது. எப்போது வாய்ப்பு கிட்டுமோ? பல வருடங்களுக்கு முன் மகனும் நானும் இந்த 7 சகோதரி மாநிலங்கள் சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டு விடுபட்டது அதன்பின் எந்தப் பயணமும் செய்ய முடியாமல் போனது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருவி படங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி. நேரில் செல்ல வேண்டும் என்ற ஆவல் - எனக்கும் உண்டு! பயணம் சென்று ஒன்றரை வருடத்திற்கு மேலாகி விட்டது என்பது வேதனையான உண்மை. தீநுண்மி தீரட்டும் என காத்திருக்கிறேன்.

      நூல்கண்டு - :) நண்பரின் மகள் அதைச் சாப்பிட, நண்பரும் அவரது மனைவியும் வட இந்திய உணவு.

      உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் விரைவில் பயணம் செய்ய வாய்ப்பு அமையட்டும் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. மகிழ்ச்சியான அனுபவமும் கூட தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வாசகமும் படங்களும் தகவல்களும் அருமை சார்.
    கடந்த இரு ஆண்டுகளாக நாடு முழுவதும் நல்ல மழை.
    இப்போது கூட குற்றாலத்திலும் நல்ல தன்னீர்.
    நோய்த்தொற்று காரணமாக எதையும் அணுபவிக்கமுடியாத கவலையை ஓரளவு தீர்க்கிறது இவ்வணுபவப்படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      அழகான இடங்களுக்கு பயணம் செய்ய முடியாமல் இப்போது கடினமாகத் தான் இருக்கிறது. தீநுண்மியால் நாடு முழுவதும் இழப்பு வருத்தத்தையே தருகிறது. எல்லாம் நல்லபடியாக முடியட்டும். பிறகு பயணிப்போம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. இந்தியாவில் எவ்வளவோ இடங்கள் பார்க்க ரசிக்க இருக்கும் போது சிலர் மேலைநாடுகளில் மட்டும் இயற்கையான அழகான பிரதேசங்களாக இருக்கிறது என்று நினைக்கும் போது எரிச்சலாக இருக்கிறது இதை சொல்ல காரணம் என் பேஸ்புக் நண்பர் அவர் நேற்று காரி வெளியே சென்ற வந்த போது எடுத்த புகைப்படங்களை வெளிடிட்டு இருந்த போது இந்தியாவில் இருக்கும் ஒருவர் அதை பாராட்டி பொறாமையாக இருக்கிறிது நீங்கள் கொடுத்து வைத்தவர் என்று சொல்லி இருப்பதை பார்த்ததும் எனக்கு எரிச்சல் வந்தது ஒரு வேளை அவர் இந்தியாவில் இருக்கும் இயற்கை வள பிரதேசங்களை பார்த்தே இருக்காமல் இருப்பரோ என்றுதான் தொண்றுகிறது இந்தியாவில் உள்லதை பார்த்து இருந்திருந்தால் அவர் அப்படி நினைத்து இருக்க மாட்டார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவிலேயே ஏகப்பட்ட அட்டகாசமான இடங்கள் உண்டு என்பது உண்மையே மதுரைத் தமிழன். நம் நாட்டில் உள்ள இடங்களைப் பார்ப்பதற்கே நமக்கு ஒரு ஆயுள் போதாது! ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் இடங்கள் எத்தனை எத்தனை. ஆனாலும் நம் மக்கள் வெளி நாட்டில் தான் எல்லாம் அழகு என்ற நினைவுடன் இருக்கிறார்கள். இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்ற வந்த அனுபவத்தில் சொல்கிறேன் - எத்தனையோ அற்புதமான இடங்கள் இந்தியாவில் உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. படங்களை மிக ரசித்தேன் வெங்கட். உங்கள் நண்பரின் இந்தத் தொடருக்கு மிக நன்றி.

    இது போல இடங்களை எப்பொழுது பார்ப்பொமொ
    என்னவோ சந்தேகம் தான். உங்கள் இருவருக்கும்
    மனம் நிறை வாழ்த்துகள் மா.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா. மீண்டும் பயணப்பட அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசையும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. இதுபோன்ற இடங்களை நேரில் காண இயலவில்லையே என்னும் ஏக்கம் வருகிறது ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இது போன்ற பயணங்கள் அமையட்டும் விரைவில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....