புதன், 4 ஆகஸ்ட், 2021

கடந்து வந்த பாதை - பகுதி 16 - சுப்ரமணியன்

 


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம் உண்டு. காரணம் இன்றி விளைவு இல்லை. இங்கு நிரந்தரமானது என்று எதையும் ஏற்க முடியாது - கௌதம புத்தர்.


******


தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முந்தைய பகுதிகளை நீங்கள் படித்திருக்கலாம்!  படிக்காதவர்கள் வசதிக்காக முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!  


கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று


பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு 


பகுதி ஒன்பது  பகுதி பத்து  பகுதி பதினொன்று  


பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு 


பகுதி பதினைந்து


வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.


******


கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்


அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம்.  வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம்.  MASK FIRST SHOE NEXT!  





சென்ற பகுதியில் ஸ்டென்சில் குறித்து பார்த்துக் கொண்டிருந்தோம். ஸ்டென்சில் என்பது மேலே சட்டை காலரை போல் பருமனான ஒரு அட்டையில் அங்கும் இங்கும் தாறுமாறாய் சிறிதும் பெரிதும் ஓட்டைகள் இருக்கும். அட்டையின் கீழ் மிக இலகுவான கண்ணாடி இழை போன்று, அட நம்ம நவ நாகரீக மங்கையர் அணியும் உள்நோக்கு புடவை (See Through Saree) போல ஒரு காகிதமும், கீழே தடிமனான ஒரு அட்டையும் இருக்கும். தெளிவான, முடிவான விடை தயாரானதும், இலகு காகிதம் மற்றும் அட்டை இடையே பிரதி நகல் கரிக் காகிதம் (Carbon Paper!) வைத்து தட்டச்சின் பிரதி இழையை (Ribbon) நீக்கி, கேள்வி பதிலுக்கான படிவத்தில் தட்டச்சு செய்ய வேண்டும். பிறகு கீழே உள்ள தடிமனான அட்டையில் உள்ள பிரதிநகலில் சரிபார்க்க வேண்டும். 


அப்படி சரிபார்க்கும்போது எழுத்துப் பிழை அல்லது மொழித்தவறு அல்லது இலக்கங்களில் பிழை ஏற்பட்டு இருந்தால், மீண்டும் அந்த ஸ்டென்சில் காகிதத்தை தட்டச்சு இயந்திரத்தில் வைத்து, எந்த இடத்தில் பிழை உள்ளதோ, அங்கே சிவப்பு வண்ண Stencil Correcting Fluid தடவி/அப்பி அதன் மேல் மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டும்.  மீண்டும் அங்கே சரியான படி தட்டச்சு ஆகியிருக்கும். இந்த சாகசங்களும், சாகித்யங்களூம் நடந்து முடிய கிட்டத்தட்ட இரவு பதினொன்று மணி ஆகிவிடும். 


அதன் பின்னர் இந்த ஸ்டென்சில் காகிதத்தை GESTETNER எனும் இயந்திரத்தில் உள்ள உருளையில் பொருத்த வேண்டும். அப்படி பொருத்துவதற்கு மேலே உள்ள ஓட்டைகள் பயன்படும். பொருத்திய பிறகு நமது பற்பசை குப்பி போன்ற, ஆனால் மிகப் பெரிய அமுக்கு உருளை (Pressing Tube) வழியாக கரிய நிற பசையை உருளையில் இட்டு கரும்புச் சாறு எடுக்க சுற்றுவது போல உருளையைச் சுற்று சுற்றென சுற்ற வேண்டும்.  தோள்வலி கடுமையாக இருக்கும். பின்நாளில் இந்த GESTETNER உருளைகள் தானாக உருளும்படி வந்தது.  இப்படியாக கிட்டத்தட்ட பின்னிரவு ஒரு மணி வரை நடக்கும்.  அதன் பிறகு அமைச்சகத்தில் இருக்கும் பாராளுமன்ற பிரிவில் (Parliament Section) அவற்றைப் பெற்றுக் கொண்டு பாராளுமன்ற வளாகத்தில் கொண்டு சேர்ப்பார்கள். 


பாராளுமன்ற நாட்களில் அந்த வருடங்களில் (1980-களில்) நாளொன்றுக்கு அதிகபட்சமாக 12 மணி நேர அதிகநேரப் படி (Overtime Allowance - OTA) கிடைக்கும் - ஆஹா என்று வியப்படைய வேண்டாம். தொகையைக் கேட்டால் நிச்சயம் வியப்படையலாம்!


  1. ஒரு மாதத்திற்கு மொத்தம் 100 மணி நேரம் மட்டுமே OTA கிடைக்கும். 

  2. காலை 9 மணி முதல் மாலை 05.30 வரை அலுவலகம்.  ஆனால் மாலை 06.30 மணி முதல் தான் இந்த OTA-க்கான துவங்கும்.  இடைப்பட்ட ஒரு மணி நேரம் வெளியே/வீட்டிற்குச் சென்று இரவு உணவு முடிப்பதற்கான நேரம்!) 

  3. ஒரு மணி நேரத்திற்கு கிடைத்த OTA எவ்வளவு தெரியுமா? சற்றே மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள் - ஒரு மணிக்கு மூன்று ரூபாய் நாற்பத்தி ஐந்து பைசா மட்டுமே! எனவே மாதம் முழுவதும் இரவு பகலின்றி உழைத்தாலும், மாத இறுதியில் உயர்ந்த பட்சமாக மொத்தமாக OTA என்ற பெயரில் ரூபாய் 345/- மட்டுமே கிடைக்கும். 

  4. இது பின்னாளில் ரூபாய் பன்னிரெண்டு ஐம்பது பைசா ஒரு மணி நேரத்திற்கு என்றும் உயர்ந்த பட்சம் ஐம்பது மணி நேரம் மட்டுமே என்றாகி, தற்போது இந்த OTA முற்றிலும் விலக்கப்பட்டு விட்டது. எத்தனை உழைத்தாலும் அதிக மணி நேரம் உழைத்தாலும் சம்பளம் மட்டுமே! 


இந்நாளில் மின்கணினி (Computer) மற்றும் அதிவேக பிரதிநகல் இயந்திரங்கள் வந்து விட்டன.  மேலும் வினா விடைகள் மின்னஞ்சல் அனுப்பப்பட்டு சில நூறு பிரதிகள் மட்டுமே சமர்ப்பிக்கப்படுகின்றன. கேள்வி நாளின் முதல் நாள் இரவு 11 மணிக்குள் சமர்ப்பித்து விடுகிறார்கள்.  இது தான் ஸ்டென்சில் குறித்த கதை! 


அடுத்து நான் சுருக்கெழுத்தன் அல்லவா? அந்தக் கதைக்கு வருகிறேன். அது அடுத்த பகுதியில்…  தொடர்ந்து கடந்து வந்த பாதையில் பயணிப்போம். 



நட்புடன்


சுப்ரமணியன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


22 கருத்துகள்:

  1. மிகவும் சுவாரஸ்யம். ஸ்டென்சில் கட் செய்வதற்குள் பொறுமையே போய்விடும்! இப்போது எவ்வளவோ முன்னேறி வந்து விட்டோம். ஒரு கிளிக்கில் எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் எடுக்க முடிகிறது! சுருக்கெழுத்து அனுபவங்களை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் தமிழ், ஆங்கிலம் தட்டச்சில் இரண்டுமே ஹையர் தேறி இருந்தாலும், சுருக்கெழுத்து வகுப்பு பொறுமையை சோதித்தது. எனவே விட்டு விட்டிருந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்டென்சில் அந்த நாட்களில் பலரின் பொறுமையைச் சோதித்திருக்கிறது. உங்கள் நினைவுகளையும் குறிப்பிட்டதில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. தகவல்கள் எல்லாமே வியப்பாக இருக்கிறது நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    நான் வேலை பார்த்த கம்பெனியில் ஓவர் டைம் என்ற கான்சப்டையே எடுத்த போது நிறைய அதிர்வலைகள் வந்தது. அதனை நினைத்துக்கொள்கிறேன்.

    நீங்க சொல்ற 345 ரூபாய், 400 ரூபாய் சம்பளம் இருந்தபோதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். 80-களின் கடைசி வரை இதே 345 ரூபாய் தான். 90களில் ஆரம்பித்து தற்போது வரை மணிக்கு 12 ரூபாய் 50 பைசா மட்டும்! தற்போது ஓட்டுனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இயல்பான பதிவு. ரசித்தேன். ஓர் அவசரமான அலுவலகக் கூட்டத்தின்போது ஸ்டென்சிலைச் செருகி படியெடுக்கும்போது மை கொட்டி வீணாகிவிட, புதிதாக ஒரு ஸ்டென்சிலில் அப்பக்கத்தை மறுபடி தட்டச்சு செய்து ஏற்பாடு செய்வதற்குள் நாங்கள் பட்ட சிரமம் சொல்லி மாளாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மை கொட்டி வீணாகிவிட்ட ஸ்டென்ஸில் - அடடா... மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டியிருந்தால் கடினம் தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அந்தக்காலத்தில் OT செய்யும்போது ஒரு அர்ப்பணிப்பு போதம் இருந்தது. 1970 1980 களில் சம்பளம் குறைவு,ஆனால் அரசு உத்யோகம் என்ற கவுரமும் சலுகைகளும் ஒரு அந்தஸ்து ஆக இருந்தது.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அர்ப்பணிப்பு இப்போது இல்லை என்றே சொல்லும் அளவு குறைவு ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. உழைப்பிற்கு தகுந்த பணம் கிடைக்கவில்லை...

    இன்றைக்கு பல துறைகளில் சிலருக்கு மட்டும் உழைப்பே இல்லாமல் பணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உழைப்பிற்குத் தகுந்த பணம் கிடைப்பதில்லை! உண்மை தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. தங்கள் நண்பர் எழுதி வரும் தொடர் பதிவு வழக்கம் போல் சுவாரஸ்யமான தகவல்களுடன் தொடர்கிறது. நானும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் தொடரும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து வாசிக்க இருப்பதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பல உன்னதமான தகவல்கள்.
    கடின உழைப்பு. Repetitive too.
    பாவம் சிரமப்பட்டிருக்கிறார். எல்லாம் அரசு வேலை
    என்ற ஒரே ஒரு சலுகைக்காக.

    மிக நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசு வேலை - சலுகை என்றாலும் பல தொல்லைகள். அப்போது இருந்ததை விட இப்போது இன்னும் விதம் விதமான தொல்லைகள். நேரம் காலம் இல்லாமல் உழைக்க வேண்டியிருக்கிறது வல்லிம்மா. நேற்று அலுவலகத்தினை விட்டு புறப்படும் போது இரவு 11 மணி! காலை 09.00 மணிக்கு அலுவலகத்தில் உள்ளே நுழைந்தது! மொத்தம் ஒரு நாளில் 14 மணி நேரம்! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. கடந்து வந்த பாதை அனுபவங்களை படிக்கும் போது அந்தக்கால உழைப்பு மற்றும் ஊதியம் எல்லாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. மறக்கமுடியாத நினைவுகள். அடுத்த பதிவு சுருக்கெழுத்து பற்றி வர இருப்பதால் படிக்க ஆவலாக இருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பதிவு வரும் ஞாயிறன்று இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. அனுபவம் பல விதம் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....