புதன், 1 செப்டம்பர், 2021

பயணம் செய்ய ஆசை - Spiti Valley, Himachal Pradesh


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


MAN CANNOT DISCOVER NEW OCEANS, UNLESS HE HAS THE COURAGE TO LOSE SIGHT OF THE SHORE - ANDRE GIDE (FRENCH AUTHOR AND WINNER OF NOBEL PRIZE FOR LITERATURE - 1869-1951)


******





பயணம் செய்ய ஆசை என்ற தலைப்பில் இது வரை வெளியிட்ட பதிவுகளை நீங்கள் படித்திருக்கலாம்.  இதுவரை இந்த வரிசையில் மூன்று பதிவுகள் எழுதி இருக்கிறேன். முந்தைய பகுதிகளுக்கான சுட்டி கீழே. 


பயணம்  செய்ய ஆசை - 1 (CH) சோப்டா - உத்திராகண்ட்


பயணம் செய்ய ஆசை - 2: Umngot River - Dawki, Meghalaya

பயணம் செய்ய ஆசை - 3 - GURUDONGMAR LAKE, SIKKIM


இந்த வரிசையில் நான்காம் பதிவாக இதோ இன்று ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வந்துவிட்டேன்.  ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு இதுவரை நான்கு ஐந்து முறை பயணித்து விட்டேன் என்றாலும் மேலும் மேலும் அங்கே செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்த வண்ணமே இருக்கிறது. அங்கே பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உண்டு.  கூடவே ஒன்றிரண்டு மாதங்கள் அங்கேயே வாடகைக்கு ஒரு வீடு எடுத்துக் கொண்டு தங்கி இருக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு உண்டு!  ஆனாலும் நினைத்ததெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? ஆசைப்படுவதெல்லாம்  கிடைத்துவிட்டால், நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் நம்மைப் பிடிக்கமுடியுமா என்ன? இன்னும் அதிகமாக அல்லவா ஆட்டம் போடுவோம்! அதனால் தானோ என்னவோ நம் எல்லா ஆசைகளையும் நிறைவேற விடுவதில்லை ஆண்டவன் என்பவன். 




ஹிமாச்சலப் பிரதேசம் செய்ய திட்டமிடும் பலரும் முதலில் சொல்லும் இரண்டு இடங்கள் மணாலி மற்றும் இன்றைய பதிவில் நாம் பார்க்கப் போகும் Spiti Valley! அதிலும் குறிப்பாக Backpackers மற்றும் Bike Riders செல்ல ஆசைப்படும் இடங்கள் இவை.  தில்லியிலிருந்து புறப்பட்டு நீண்டதொரு பயணமாக இந்த Spiti Valley சென்று மணாலி வழியாக தில்லி திரும்புபவர்கள் உண்டு.  சிலர் இன்னும் பயணித்து, லடாக் வரை சென்று திரும்புவதும் உண்டு. அதற்கு ஆகும் நாட்கள் அதிகம் என்பதால் ஒரு பகுதியை மட்டும் - அதாவது தில்லி, Spiti Valley, மணாலி, தில்லி என பயணித்து திரும்புவர்களும் உண்டு.  இன்றைய பதிவில் இந்தப் பயணம் குறித்த சில தகவல்கள், பார்க்க வேண்டிய இடங்கள், தோராயமான செலவு ஆகியவை குறித்துப் பார்க்கலாம்.  சென்ற வருடம் இங்கே பயணிக்க நானும் நண்பர் பிரமோத் அவர்களும் திடடமிட்டு இருந்தோம் - ஆனால் தீநுண்மி எங்களது திட்டங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கியது என்பதைச் சொல்லவும் வேண்டுமா? சோகக் கதை இப்போது எதற்கு?  Spiti Valley குறித்துப் பார்க்கலாம் வாருங்கள். 



எங்கே இருக்கிறது இந்த Spiti Valley? தலைநகர் தில்லியில் இருந்து சாலை வழிப் பயணம் எனில் 750 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருக்கும்.  விமானப் பயணம் என்றால் சுமார் 450 கிலோமீட்டர் - ஆனால் இறங்குமிடத்திலிருந்து (Bபுந்தர்) மீண்டும் சாலை வழிப் பயணம்.  இரயில் வசதியும் உண்டு என்றாலும் சாலைப்பயணமும் வேண்டியிருக்கும். ஆகவே இந்த இடத்திற்கான பயணங்களில் சிறந்ததான சாலைப் பயணம் குறித்து பார்க்கலாம். தலைநகர் தில்லியிலிருந்து புறப்பட்டால் ஷிம்லா - காசா, மணாலி வழி காசா என்று இரண்டு வழிகள் உண்டு! அவை என்ன என்று  பார்க்கலாம். 


பாதை ஒன்று: தில்லி - ஷிம்லா - நார்க்கண்டா - ராம்பூர் - கல்பா - நாகோ - Gகியு - டாபோ கிராம் - dhதன்கர் - பின் சமவெளி - காசா


பாதை இரண்டு: தில்லி - மணாலி - சோலாங்க் சமவெளி - க்ரம்பு - பாடல் - சந்த்ரதால் - குன்சும் பாஸ் - லோசர் - காசா - dhதன்கர் - டாபோ.





இரண்டு வழிகளில் எது சிறந்தது? இரண்டு வழிகளுமே சிறந்தவையே. இரண்டிலும் கிடைக்கும் அனுபவங்களிலும் வித்தியாசங்கள் உண்டு. மணாலி வழி கடுமையான பனிக் காலங்களில் பயணிக்க ஏற்றதல்ல. ஷிம்லா வழி பெரும்பாலான நாட்களில் பயணிக்க ஏற்ற வழி.  மலைப்பிரதேசம், இயற்கை எழில், பனிப்பொழிவு, நதி, பனிபடர்ந்த சிகரங்கள் என பார்க்கப் பரவசம் ஏற்படும் இடங்கள் நிறையவே உண்டு.  வழி முழுவதும் உங்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களும் சிறப்பானவையே.  பயணம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் அனைவருமே இந்த இடங்களுக்குச் சென்று வர நிச்சயம் விரும்புவார்கள்.  தில்லியிலிருந்து அரசுப்  பேருந்திலோ அல்லது தனியார் வாகனங்களிலோ பயணிக்கலாம்.  அல்லது என்ஃபீல்ட் போன்ற இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களும் இருக்கிறார்கள்.  அனைத்து பயணங்களிலும் கிடைக்கும் அனுபவங்கள் வேறு வேறு.




பார்க்க வேண்டிய இடங்கள் என்ன? வழியில் இருக்கும் பல இடங்கள் பார்க்க வேண்டியவையே!  Spiti Valley பகுதியில் கடல் மட்டத்திலிருந்தான குறைந்த பட்ச உயரமே 4000 மீட்டர் (13124 அடி) என்பதால் பல இடங்கள் மிகவும் அழகானவை. அழகான இடங்கள் என்பதால் கூடவே ஆபத்தானவையும் கூட.   அங்கே தங்கி இருக்கும் ஒவ்வொரு நாட்களும் இயற்கை எழிலுடன் ஒன்றி இருக்க முடியும் என்பதே மிகப் பெரிய வரம் அல்லவா? நிறைய புத்த மத வழிபாட்டுத் தலங்களும் இங்கே உண்டு.  வருடத்தின் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் இங்கே குளிரும், ஐந்து மாதங்களுக்கு மேல் பனி படர்ந்தும், சில மாதங்களில் அதீத பனிப்பொழிவும் இருக்கும் இடம் இந்த ஸ்பிதி.  அழகான கிராமங்கள், குறைவான மக்கள் தொகை, இயற்கையின் பேரழகு என இங்கே அனைத்துமே சிறப்பானவை.  நகரங்கள் போல இங்கே பார்க்க வேண்டிய இடங்கள் என குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும், இங்கே சென்று சில நாட்கள் இருந்து வந்தால் நிச்சயம் ஒரு புத்துணர்வுடன் நீங்கள் திரும்பி வருவீர்கள் என்பது நிச்சயம். 




எவ்வளவு நாட்கள் தேவை? தில்லியிலிருந்து ஸ்பிதி சென்று சேர்வதற்கே சுமார் 20 மணி நேரம் ஆகலாம்.  அதனால் வழியில் ஏதாவது ஒரு இடத்தில் (ஷிம்லா அல்லது ராம்பூர் Bபுஷர்) பகுதியில் தங்கி செல்வது உங்கள் விருப்பம்.  சின்னச் சின்ன கிராமங்கள், நதிகள், மலை என சூழலை அனுபவித்தபடி சென்று வர நினைத்தால் குறைந்தது ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்கள் உங்களுக்குத் தேவையாக இருக்கலாம். அதை விட அதிகமான நாட்கள் உங்களிடம் உண்டென்றால் இன்னும் சில கிராமங்களுக்குச் சென்று தங்கி அந்த ஊர் மக்களைக் குறித்து தெரிந்து கொண்டும், அவர்கள் பழக்க வழக்கங்களைக் கவனித்தும் வரலாம்.  குறைந்த பட்சம் ஒரு வாரம் தேவை என்ற எண்ணத்துடன் சென்றால் அங்கே இருக்கும் சூழலைப் பொறுத்து ஒன்றிரண்டு நாட்கள் அதிகமாக அங்கே இருந்து வரலாம்.  உங்களால் இருபது நாட்கள் வரை பயணிக்க முடியும் என்ற பட்சத்தில் தில்லியிலிருந்து ஷிம்லா வழி ஸ்பிதி சென்று வரும் போது மணாலி வழியே தில்லி வந்து சேரலாம்.  உங்கள் நேரத்தினைப் பொறுத்து நீங்கள் திட்டமிட்டுக் கொள்ளலாம். 




தங்குமிடங்கள் மற்றும் வசதிகள்: ஸ்பிதி மற்றும் அருகே இருக்கும் சின்னச் சின்ன கிராமங்களில் நிறைய இடங்களில் ஹோம்ஸ்டே வசதிகள் உண்டு.  காலை மற்றும் இரவு உணவுடன் கூடிய தங்குமிடங்கள் அங்கே உண்டு.  தங்குமிடத்திற்கான செலவு ஐநூறு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை நாளொன்றுக்கு ஆகலாம்.  அதைத் தவிர போக்குவரத்து செலவுகள்.  பெரும்பாலும் அரசுப் பேருந்துகள் குறிப்பிட்ட நேரங்களில் உண்டு.  மற்ற வசதிகளும் உண்டு என்றாலும் குறைவான வசதிகள் தான்.  அந்தப் பகுதியில் செல்லும் வாகனங்களில் லிஃப்ட் கேட்டும் நீங்கள் பயணிக்கலாம் - அவர்கள் அனுமதிக்கும் பட்சத்தில்!  ஆங்கிலத்தில் Lethargic Life என்று சொல்வதுண்டு - எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் நினைத்த இடத்தில் தங்கி, நினைத்த நேரத்தில் உண்டு (பெரும்பாலும் dhதால், ரொட்டி, ராஜ்மா-chசாவல், மோமோஸ், துப்கா போன்ற நேபாளி உணவுகள் கிடைக்கும்), சில நாட்களை எந்த வித கவலையும் இல்லாமல் இருக்கலாம்!  இன்னுமொரு கூடுதல் வசதி என்னவென்றால் இங்கே அலைபேசி அழைப்புகள் வருவது அரிது - ஏனெனில் மொபைல் நெட்வொர்க் எப்போதாவது தான் வரும்!  




செலவு எவ்வளவு ஆகலாம்?:  தில்லியிலிருந்து ராம்பூர் Bபுஷர் வரை 1200/- ரூபாய் வரை ஆகலாம் - ஹிமாச்சலப் பிரதேச அரசுப் போக்குவரத்து வோல்வோ பேருந்துகளை இயக்குகிறது.  அதன் பிறகு இருக்கும் பயணத்திற்கும் அவர்களது HIMBUS வசதிகள் உண்டு - அனைத்துமே சாதாரண பேருந்துகள் மட்டுமே! தூரத்திற்கு ஏற்றவாறு கட்டணம் - அதுவும் அதிகம் என்று சொல்ல இயலாது!  தங்கும் வசதிகளுக்கும் போக்குவரத்திற்கும் குறைந்த பட்சமாக ஒரு ஆளுக்கு, பத்தாயிரம் வரை (ஒரு வாரம் என்ற கணக்கில்) செலவு ஆகலாம்.  பெரிதாக வாங்குவதற்கு ஒன்றும் இருக்கப் போவதில்லை என்பதால் மற்ற செலவுகள் இருக்காது.  குடும்பத்துடன் செல்வதை விட, நண்பர்களாகச் செல்வது நல்லது என்றே நான் சொல்வேன்.  பாதைகள் கடினமானவை என்பதுடன் வழிகளில் ஒதுங்குமிட வசதிகள் மிகவும் குறைவு. சில இணைய தளங்கள் வழி முன்பதிவு செய்து பயணிக்கவும் முடியும்.  இவர்களது Package கட்டணங்கள் (மொத்த பயண நாட்கள்: 7 பகல் 6 இரவு) 20000 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.  





மேலதிகத் தகவல்கள்: ஸ்பிதி சென்று வந்தது குறித்து எழுதிய வலைப்பதிவுகள் நிறையவே இருக்கிறது - குறிப்பாக ஆங்கிலத்தில்! அங்கே பயணித்து வந்தவர்களின் அனுபவங்களை படிப்பது உங்களுக்கு நிறைய தகவல்களைத் தரக்கூடும்.  அப்படியான சில தளங்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி.  ப்ரியங்கா குப்தா என்ற பெண்மணியின் தளம், The Bum Who Travels தளம், The Travelling Slacker தளம், போன்றவற்றை படித்தால் இன்னும் நிறைய தகவல்கள் கிடைக்கும்.  படிப்பதை விட காட்சிகளாக பார்ப்பதில் விருப்பம் இருப்பின் யூட்யூபில் நிறைய காணொளிகள் கொட்டிக் கிடக்கின்றன.  அப்படியான ஒரு யூட்யூப் தளம் இங்கே!



வாழ்க்கையில் ஒரு முறையேனும் இங்கே பயணிக்க வேண்டும் என்பது எனது ஆசை. இந்த ஆசை நிறைவேறுமா இல்லையா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.  உங்களில் சிலருக்கேனும் இந்தத் தகவல்கள் பயன்படும் என்றால் மகிழ்ச்சியே.  விரைவில் உங்களுக்கும் இந்த இடத்திற்கு ஒரு பயணம் அமைய வாழ்த்துகள். பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


பின் குறிப்பு: படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து...

22 கருத்துகள்:

  1. புகைப்படங்களில் அந்த இடங்களை பார்க்கும்போது மிக அழகாக இருக்கிறது.  சென்று பார்த்து வர ஆவலாகவும் இருக்கிறது.  விவரங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான இடங்கள் தான் ஸ்ரீராம் - பார்க்க வேண்டிய இடங்களும் கூட! இரண்டு வருடங்களுக்கு முன் திட்டமிட்ட பயணம் - 2020-இல் பயணிக்க திட்டமிட்டோம். ஆனால் தீநுண்மி காரணமாக எல்லா திட்டங்களும் தவிடு பொடியாகிவிட்டன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஆர்வத்தைத் தூண்டும் இடமாக இருக்கிறது.
    தாங்கள் விரைவில் சென்று வர வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்று வர வேண்டும் அரவிந்த். பார்க்கலாம் - எப்போது செல்ல முடிகிறது என.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. மிகவும் அழகாக இருக்கின்றது spiti valley. பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்க வேண்டிய இடம் தான் இராமசாமி ஜி. முடிந்தால் சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. // மொபைல் நெட்வொர்க் எப்போதாவது தான் வரும்! //

    இதுவும் சிறப்பு... பயணம் சிறக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி நெட்வொர்க் இல்லாத இடத்தில் இருப்பது மகிழ்ச்சியான விஷயம் - சில மணி நேரங்களுக்காவது/நாட்களாவது நிம்மதியாக இருக்கலாம் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. உங்களுக்கு முடிந்த போது, திட்டமிட்டு ஒரு பயணம் செய்யலாம் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. MAN CANNOT DISCOVER NEW OCEANS, UNLESS HE HAS THE COURAGE TO LOSE SIGHT OF THE SHORE - ANDRE GIDE (FRENCH AUTHOR AND WINNER OF NOBEL PRIZE FOR LITERATURE - 1869-1951)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. மிகவும் அழகான இடம் . இங்கு எல்லாம் பயணிக்க நமக்கு கிடைக்குமா? படங்களில் பார்த்து மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இப்படி ஒரு பயணம் அமைய வாழ்த்துகள் மாதேவி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்தியாவிற்குள் என்பதால் உணவுப் பிரச்சனை (வெஜிடேரியன்) இல்லை. காசும் அதிகமில்லை.

    இதைப் பற்றி வாசித்துத் தெரிந்துகொள்ளவேண்டும். Trekking போகாவிட்டாலும் இருவரும் சேர்ந்து ஒரு வாரம் தங்கிவிட்டு வருவதற்கு ஏற்ற இடமாக இருக்குமா என்று பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவு பிரச்சனை இருக்காது என்றாலும் கொஞ்சமாவது அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருக்கும் - நமக்குப் பிடித்த விதத்தில் உணவு கிடைக்காது! வட இந்திய உணவுகள் மட்டுமே. தோசை கிடைத்தாலும் அதை சாப்பிடாமல் இருப்பது மேல் :)

      ட்ரெக்கிங் போக வேண்டியதில்லை. தங்க வசதிகள் - குறிப்பாக Home Stay வசதிகளும் உண்டு என்பதால் முயற்சிக்கலாம் நெல்லைத் தமிழன்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. நல்ல கட்டுரை.. அழகான படங்கள்...
    இணையம் அங்கே இயங்காது என்பது கூடுதல் மஅழகு...

    நாம் அதை விட்டு விட்டாலும் அது நம்மை விடாத சூழ்நிலை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையம் இயங்காது என்பது பல விதங்களில் நிம்மதி தான் துரை செல்வராஜூ ஐயா. ஹிமாச்சலப் பிரதேசத்தின் சித்குல் கிராமத்தில் இருந்தபோது இரண்டு நாட்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தேன்! நிம்மதியாக இருந்தது.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. //ஒரு முறையேனும் இங்கே பயணிக்க வேண்டும் என்பது எனது ஆசை. இந்த ஆசை நிறைவேறுமா இல்லையா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.//


    உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.
    அழகிய இடம்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசைகள் - நிறைவேறட்டும் - நிறைவேற வேண்டும் என்பதும் ஒரு ஆசை. பார்க்கலாம் கோமதிம்மா.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. எழில் மிகு இடம். படங்கள் யாவும் அருமை. உங்கள் ஆசை நிறைவேறட்டுமாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....