திங்கள், 22 டிசம்பர், 2025

கடைசியில் - சிவசங்கரி - வாசிப்பனுபவம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******




கடந்த சில வாரங்களாக திங்கள் கிழமைகளில் வாசிப்பனுபவம் பதிவுகளை எழுதி வருகிறேன்.  அந்த வரிசையில் இந்த வாரமும் ஒரு வாசிப்பனுபவம் பகிர்வு.  மீண்டும் அமேசான் கிண்டில் வழி மின்புத்தகங்களை வரிசையாக வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.  நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்பதால் வேறுபட்ட பல எழுத்தாளர்களின் நூல்களை வாசித்து அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் எழுதிய ஒரு நூல் “கடைசியில்”.  அந்த நூல் குறித்த வாசிப்பனுபவம் தான் இன்றைக்கு. அச்சு நூலாகவும், மின்னூலாகவும் இந்த நூல் கிடைக்கிறது.  அச்சு நூல் 120 ரூபாய்.  புஸ்தகா வெளியீடு. அமேசான் தளத்திலும் கிடைக்கிறது.  அச்சு நூல் இங்கே வாங்கலாம்.  கிண்டில் வழி படிக்க நினைத்தால் இங்கே தரவிறக்கம் செய்யலாம்.  சரி இப்போது வாசிப்பனுபவம் குறித்து பார்க்கலாம். 


சென்னை நகரில் வசிக்கும் ஒரு குடும்பம்.  வங்கியில் பணிபுரியும் குடும்பத்தலைவருக்கு ஒரு கிராமத்தில் பணி மாற்றம் நடக்கிறது.  அங்கே செல்ல விருப்பமில்லாமல் இருக்கிறார் அந்தக் குடும்பத்தலைவரின் இல்லத்தரசி.  எனது எல்லா பணிகளும் தடைபடுமே, மகளின் படிப்பு வீணாகுமே என்றெல்லாம் யோசிக்கிறார்.  மகளை பெற்றோர்களிடம் விட்டு விட்டு கணவன் - மனைவி மட்டும் கிராமத்திற்குச் செல்கிறார்கள்.  கதையின் பிரதான கதாபாத்திரமான உமாவிற்கு அந்தக் கிராமமும், அங்கே வாழ்வதும் பிடிக்கவேயில்லை.  ஆனால் வேறு வழியில்லாமல் அங்கே வாழத் தொடங்குகிறார்கள்.  வங்கி, வீடு என இரண்டுமே ஒரே இடத்தில் இருக்கிறது.  அதைத் தவிர பெரிய காலியிடமும் அங்கே இருக்கிறது.  அந்த காலியிடத்தில் ஒரு தோட்டம் போட்டால் பொழுது போகுமே என்று கணவன் சொல்ல, அதற்காக ஐம்பது ரூபாய் மாதக் கூலியில் தோட்ட வேலை செய்ய வந்து சேர்கிறார் பாவாடை.  


இதைத் தவிர வீட்டு வேலைகள் செய்ய அஞ்சலை என்ற பெண்ணும் இருக்கிறார்.  இப்படி அஞ்சலை, பாவாடை ஆகிய இருவர் வழி கிராமிய வாழ்க்கை, அவர்களின் வாழ்வாதாரம், அந்த மனிதர்களின் எளிமை என பல விஷயங்கள் படிப்படியாக உமாவிற்கு பிடித்துப் போகிறது.  பாவாடை எனும் அந்த மனிதருக்கு முதலில் ஒரு கல்யாணம் நடந்தது, அதன் பிறகு முதலாம் மனைவியிடமிருந்து பிரிந்தது, மீண்டும் மணம் புரிந்தது என எல்லா விஷயங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மணம் புரிந்த பெண் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக தெரியவர, தீர விசாரிக்காமல் பஞ்சாயத்தைக் கூட்டி, கல்யாண செலவு என எண்ணூறு ரூபாய் பாவாடைக்குக் கொடுத்து பெண்ணின் தந்தையே அந்த வேற்று மனிதருடன் பாவாடையின் மனைவியை அனுப்பி வைக்கிறார்கள். அதுவும் அந்தப் பெண் அப்போது கர்ப்பமாக வேறு இருக்கிறார்…  என்ன வேதனை இது, இது என்னடா கதை… இப்படியெல்லாம் நடக்குமா என்று தோன்றுகிறது நமக்கு.  


அதன் பிறகு, பாவாடைக்கு வேறு ஒரு திருமணம் நடக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக, தோட்டம் முழுமையாக வளர, பாவாடை வாழ்க்கை குறித்த அனைத்தும் உமாவிற்குப் புரிகிறது.  கிராமத்து மனிதர்கள் எளிமையானவர்கள், ஆசை அதிகம் இல்லாதவர்கள், நகரத்து மாந்தர்களைப் போல வஞ்சனை செய்பவர்கள் அல்ல என்றெல்லாம் உமாவிற்குத் தோன்றும் அளவுக்கு அந்த பாவாடையின் நடவடிக்கைகள் இருக்கின்றன.  


கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தி பேச்சு, அவர்களின் நம்பிக்கைகள் என பல விஷயங்களைக் கேட்டுக் கேட்டு, கிராமத்து மக்கள் அனைவருமே நல்லவர்கள் என்று கணவனிடம் கூட சொல்கிறார்.  ஆனால்  அவரது கணவரோ, “ஒட்டு மொத்தமா பட்டணத்துக் காரங்க மோசம், கிராமத்து ஜனங்க ரொம்ப ஒசத்தின்னு சொல்ல முடியாது, உமா… நல்லவங்களும் கெட்டவங்களும் எங்கயும் தான் இருக்காங்க… எல்லாத்துக்கும் சூழ்நிலை, தேவைகள் கூட முக்கியமான காரணங்கள்…” என்று சொல்ல, அவரிடமும் தனது பக்கம் தான் சரி என்று விவாதம் செய்கிறார். ஆனால் கடைசியில் என்ன ஆனது, உமாவின் வாதம் சரியா, இல்லை அவரது கணவரின் வாதம் சரியானதா என்று போகப் போகத் தெரிகிறது.  கதையின் போக்கு ஒரு புறம் இருக்கட்டும், ஆனால் கதை வழியாக பல கிராமத்து வாழ்க்கை முறையை, அங்கே இருக்கும் விஷயங்கள் என பலவற்றை வாசிக்கும் நம் கண்முன்னர் நிறுத்துகிறார் எழுத்தாளர் சிவசங்கரி.  


“தை மாசத்துல எங்க ஆயாவுக்கு இன்னான்னு புரியாம காதுலே சீயான் சீய் வடிஞ்சிது… பச்சிலை சாறுவுட்டுப் பாத்தம், எண்ணெய் விட்டுப் பாத்தம் - ஒண்ணும் பலிக்கல! அப்பால, நல்லபாம்பு வாலை காதுக்குள்ளார விட்டு ரெண்டு தபா குடைஞ்சா சரியாப் பூடும்னாங்க… சரினுட்டு ஒரு ஆளை இட்டுகிட்டு வந்தோம். அவரு சொம்பு தண்ணி கொண்டா, மொறத்துலே அரிசி கொண்டானு கூத்தடிச்சிட்டு, கையாலியே பாம்பைப் பிடிக்கறாறேன்னு பாத்தா, அப்பாலதான் தெரிஞ்சிது, அது பல்லுபிடிங்கின பாம்புனு! இதுக்கு என்னா சொல்றீங்க?” 


என்னது காதுல சீய் வந்தா நல்லபாம்பு வாலை காதுல உட்டு ரெண்டு தபா குடையறதா! ரொம்ப டெரரா இருக்குதே இந்த வைத்தியம் என்று தோன்றியது.  கதையில் சொல்லும் இந்த விஷயம் உண்மையோ பொய்யோ, எப்படி இருந்தாலும் அந்தக் காட்சியை மனதில் நினைக்கும்போதே அப்படிச் செய்தபோது எப்படி இருந்திருக்கும் என்று தோன்றியது எனக்கு.  இப்படி நிறைய விஷயங்கள் கிராமிய மக்களின் பழக்க வழக்கங்கள் குறித்து ஆங்காங்கே சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.  கதையின் போக்கிலேயே பல விஷயங்களைச் சொல்லிச் சென்று கடைசியில் மனிதர்கள் - கிராமிய மனிதராக இருந்தாலும், நகரத்து மனிதராக இருந்தாலும் அவர்களுக்குள் வித்தியாசம் இருக்குமா இருக்காதா என்பதை நமக்குச் சொல்லி இருக்கிறார் “கடைசியில்” எனும் இந்தக் கதையில்.  கதையின் முடிவுக்காக இல்லை என்றாலும், கிராமிய மக்களின் வாழ்வு குறித்து படிக்கவேனும், நீங்களும் இந்த நூலை வாசித்துப் பாருங்களேன்.  மீண்டும் வேறொரு நூல் வாசிப்பனுபவத்துடன் உங்களை அடுத்த திங்களன்று சந்திக்கிறேன். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

22 டிசம்பர் 2025


5 கருத்துகள்:

  1. அதுவும் அந்தப் பெண் அப்போது கர்ப்பமாக வேறு இருக்கிறார்… என்ன வேதனை இது, இது என்னடா கதை… இப்படியெல்லாம் நடக்குமா என்று தோன்றுகிறது நமக்கு. //

    நடக்கிறது, ஜி. நிறைய நடக்கிறது. இப்போதும் படித்த மக்களிடையேயும்...

    அது போல கிராமத்து நம்பிக்கைகள் பல வினோதமாகத்தான் இருக்கும்.

    கதை சுவாரசியமாக இருக்கிறது. நல்ல விமர்சனம். வாசிக்கத் தூண்டுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு அறிமுகம். ஒரு கதை அன்று படித்தாலும் சுவாரஸ்யம் இன்று படித்தாலும் சுவாரஸ்யம் என்று இருந்தால்தான் மனதில் நிற்கிறது. கதையினூடாக இப்படி இன்னபிற விஷயங்களையும் சொல்லிப்போவது சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பாம்பின் வால்...  அதென்ன குறிப்பாக நல்ல பாம்பு?  மற்ற பாம்புகள் என்ன வாலை சுழற்றாதா என்ன!!! 

    இதைப் படிக்கும்போது எனக்கு இன்னொரு வைத்தியம் ஞாபகத்துக்கு வருகிறது.  ஆந்திராவில் ஆஸ்துமாவுக்கு ஒரு வைத்தியம் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  அதற்கு மக்கள் கியூ வரிசையில் நிற்பார்கள்.  இது ஒரு குடும்பத்தார் செய்வது.  அதாவது ஒரு குறிப்பிட்ட வகை மீனைப் பிடித்து அதை உயிருடன் வைத்திருந்து ஆஸ்துமா காரர்கள் தொண்டையில் அப்படியே போட்டு விழுங்கச் சொல்வார்களாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மீன் வைத்தியத்தை பற்றி அப்பாவிடம் யாரோ சொல்லிக் கொண்டிருந்ததாக நினைவு! ஹைதராபாத் என்று நினைக்கிறேன்! கோவையில் வசித்த வரை தம்பிக்கு அடிக்கடி வீசிங் தொந்தரவு ஏற்படும்! மிகவும் சிரமப்படுவான்! ஒரு குட்டி மீனுக்குள் மருந்தை வைத்து அதை அப்படியே விழுங்கச் சொல்வார்களாம்!

      நீக்கு
  4. நிறைய பேரிடம் பேசி தகவல்கள் சேகரித்துக்கொண்டு கதையை எழுதியிருக்கிறார்.

    நல்ல பாம்பு வால் காதுல - நினைக்கவே நடுக்கம்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....