அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நெய்வேலி பயணம் - நீங்காத நினைவுகள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
திருச்சி விமான நிலையம் :
சில முறையாக தில்லியிலிருந்து திருச்சி வரும்போது, திருச்சியின் புதிய விமான நிலையம் வழி வந்தேன். சில மாதங்களுக்கு முன்னரே இந்தப் புதிய விமான முனையம் திறந்திருக்கிறார்கள். அட்டகாசமாக வடிவமைத்து இருக்கிறார்கள். குறிப்பாக இங்கே இருக்கும் ஓவியங்கள் மற்றும் வடிவமைப்பு கண்களைக் கவரும் விதத்தில் இருக்கிறது. நிறைய சிலைகளும், மரத்தில் செதுக்கப்பட்ட சிலை வடிவங்களும் வைத்திருக்கிறார்கள். தஞ்சாவூர் ஓவியங்கள் பார்க்கவே பிரமிப்பாக இருந்தது. அங்கே எடுத்த இரண்டு படங்கள் உங்கள் பார்வைக்கு. வேறு சில படங்களும் எடுத்தேன் என்றாலும் இங்கே இரண்டு படங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு!
******
இந்த வாரத்தின் சிறுகதை : தீர்ந்த கடன்
இந்த வாரத்தின் சிறுகதையாக கா. சிவா என்பவர் சொல்வனம் பக்கத்தில் எழுதிய சிறுகதை ஒன்று உங்கள் பார்வைக்கு. கதை என்று சொல்லாமல் ஒரு குடும்பத்தில் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணத்திலேயே படிக்க முடிந்தது. கதையிலிருந்து சில வரிகள் ஒரு முன்னோட்டமாக…
திலகா, உறங்கும் நேரம் தவிர எப்போதும் அமர்ந்த நிலையில் கைகளால் தரையை தட்டியபடியே இருப்பாள். அதனால் கைகள் காய்த்து தடிமனாக இருக்கும். எப்போதாவது கோபத்தில் கையை ஓங்கி அடித்தால் ராமினால் கூட தாங்க முடியாத அளவிற்கு இருக்கும். கோபத்தினால் மட்டுமல்ல செவியில் கேட்கும் ஏதேனும் சத்தம், நாசியைத் துளைக்கும் வாசனை போன்றவற்றால் சிலவேளைகளில் நிலையழிந்து ஒருவித பதட்டத்துடன் இருப்பாள். அப்போது கைகளால் தரையில் தட்டும் சத்தம் பலமாகக் கேட்கும். அப்போது அருகில் செல்லாமல் கைக்கெட்டாத தூரத்தில் இருந்து மெல்லப்பேசி சாந்தப்படுத்துவாள் ராணி. சத்யா வீட்டிலிருந்தால் அருகில் சென்று அணைத்துக் கொண்டு தணிப்பான்.
ராம், சென்னைக்கு வந்து ஒருமாத காலம் ஊருக்கும் அதன் பிறகு உறவினர்கள் வீடுகளில் நடந்த விசேசங்களுக்கும் சென்று வந்தனர். எல்லா இடங்களுக்கும் திலகாவையும் அழைத்துச் செல்ல வேண்டுமென ராணி கூறினாள். மிகப் பருமனாகிவிட்டவளை காரில் ஏற்றுவதும் இறக்குவதும் ஒவ்வொருவருக்குமே மிகவும் சிரமமாயிருந்தது. ஆனாலும், சிரமத்தை சொன்னால் அடுத்தவர்கள் மனம் வேதனையுறும் என்ற எண்ணத்தால் யாரும் பிறரிடத்தில் கூறவில்லை.
திலகாவிற்கு புத்தாடைகளுடன் தங்க நகையும் அணிவித்தே ராணி அழைத்து செல்வாள். ஆனாலும், திலகாவை எதிர் கொள்வது விசேசங்களுக்கு வருபவர்களுக்கு ஒருவித அசூசையாகவும் வேதனையளிப்பதாகவும் இருந்தது. திலகா, அப்பா அம்மாவிற்கு சம்பந்தம் இல்லாத வகையில் நல்ல கருமையான நிறத்தில் பருமனாக இருப்பாள். புதிதாக பார்ப்பவர்கள் திகைக்கும் வகையில் உடலே ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். குட்டையான கால்களுடன், கண்கள் அகன்று கருவிழி விரிந்திருக்க, கருநாக்கு துறுத்தியபடியோ மடித்தோ இருக்கும். கோயில் தூண்களில் சிற்பமாக இருக்கும் பூதகி தரையில் நிற்பதாகத் தோன்றும். பார்ப்பவர்களின் மனம் பெண் எனச் சொல்லும்போதும் காணும் காட்சியால் மூளை நம்ப மறுத்து தவிக்கும்.
முழுக்கதையும் படிக்க சுட்டி கீழே!
******
பழைய நினைப்புடா பேராண்டி : கருப்புக் கண்ணாடி ரகசியம் – த்ரில் பயணம்
2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - கருப்புக் கண்ணாடி ரகசியம் – த்ரில் பயணம் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
ஷில்லாங்க் மலையுச்சியிலிருந்து ஷில்லாங்க் நகருக்கு வந்து சில நினைவுப் பரிசுகளை வாங்க மார்க்கெட் சென்றோம். அங்கே மூங்கிலால் ஆன, கைக்கு அடக்கமான, சிறிய பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு மார்க்கெட்டில் கொஞ்சம் சுற்றினோம். எங்கு பார்த்தாலும் பெண்கள் பான் கடைகள் வைத்திருந்தார்கள் – ஒரு ஸ்டூல், ஒரு சிறிய மேஜை, அதன் மேல் வெற்றிலை, சுண்ணாம்பு தடவி, லாகிரி வஸ்துக்கள் சேர்த்து பான்! பான் விற்கும் பெண்களும் பான் சாப்பிட்ட வாயுடன் தான் இருக்கிறார்கள்.
சில இடங்களில் உயிருடன் முயல்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் புகைப்படம் எடுப்பதைப் பார்த்தால் உடனே முயல்களை மூடிக்கொண்டு இடத்தினை விட்டு அகன்றார்கள். ஏனென்று புரியவில்லை. இப்படியாக மார்க்கெட் காட்சிகளைப் பார்த்தபடியே வண்டி நிறுத்தி இருக்கும் இடத்திற்கு வந்தால் ஓட்டுனர் ராஜேஷ் “ஏன் இவ்வளவு லேட், சீக்கிரம் போகணும் வாங்க!” என்று சொல்ல, வாங்கிய பொருட்களை டிக்கியில் வைத்து ஷில்லாங்க் நகருக்கு Bye Bye சொன்னோம்.
எப்போதும் போல, ஓட்டுனருக்குப் பக்கத்து இருக்கையில், அதாவது அவருக்கு இடது புற இருக்கையில் நான் அமர்ந்து கொள்ள, நண்பர்கள் பின் இருக்கைகளில் அமர்ந்து கொள்ள கௌஹாத்தி நோக்கிப் பயணிக்கத் துவங்கினோம். எல்லாம் சரியாகத் தான் போய்க்கொண்டிருந்தது. வேகமாகச் செலுத்திக் கொண்டிருந்தார் ஓட்டுனர் ராஜேஷ். ஒவ்வொரு முறை முன்னால் செல்லும் வாகனத்தினை Overtake செய்யும்போதும் இடது புறம் இடித்து விடுமோ என்ற அளவுக்குத் தான் ஓட்டினார். என்னடா இது என்று அவரைப் பார்த்தால் எனக்கு பயங்கர அதிர்ச்சி….
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் தகவல் : பஞ்சமுக வாத்தியம்
சமீபத்தில் ஒரு பழமையான வாத்தியம் குறித்து தெரிந்து கொள்ள முடிந்தது. திருவாரூர் ஆலயத்தில் இருக்கும் ஒரு வாத்தியமான பஞ்சமுக வாத்தியம் தான் அது. ”திருத்துறைப்பூண்டி அருமருந்தீசர் திருக்கோயிலில் 3½ அடி உயரமும் 90 கிலோ எடையும் உள்ள பஞ்சமகா தாதுக் களால் (பஞ்சலோகம்) உருவாக்கப்பட்ட பஞ்சமுக வாத்தியம் உள்ளது” என்று தெரிந்த போது அது குறித்து தேட கிடைத்தது ஒரு பக்கம் - தினகரனில் கடந்த வருடம் வெளியான செய்தி அது. இந்த வாத்தியம் குறித்து உங்களுக்குத் தெரியுமா? இதை இசைத்து கேட்டிருக்கிறீர்களா? சொல்லுங்களேன். செய்தி படிக்க ஏதுவாக சுட்டி கீழே!
பஞ்சமுக வாத்தியம் - Dinakaran - Dinakaran
******
இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : Amaze
Amaze என்று ஒரு பேட்டரி இருக்கிறது. அதன் விளம்பரம் இரண்டு வருடங்கள் முன்னர் தீபாவளி சமயத்தில் வந்தது. மிகவும் அருமையான விளம்பரம். அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு குறித்து ஒரு குறும்படம் போலச் சொல்லிச் செல்லும் விளம்பரம் இது. ஹிந்தி மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் சப் டைட்டில் உண்டு. அதனால் அனைவருக்கும் புரியும். பாருங்களேன்.
******
ராஜா காது கழுதை காது - பன்னிப்பய :
சமீபத்தில் நெய்வேலி சென்று வந்த போது நான் பயணித்த பேருந்தின் ஓட்டுநர், பேருந்தினை மிக வேகமாக இயக்கிக் கொண்டு வந்தார். தொடர்ந்து ஒலி எழுப்பியவண்ணமே இயக்கினாலும் சில இடங்களில் பேருந்தின் வேகத்தினை குறைக்க வேண்டியிருந்தது. அந்தச் சமயங்களில் அந்த ஓட்டுநர் வாயிலிருந்து விதம் விதமான வாசகங்கள் வந்த வண்ணமே இருந்தன. ”நான் தான் ஹாரன் அடிச்சுக்கிட்டே வரேனே… காது கேக்காதா உனக்கு? பின்னாடி போ, பின்னாடி போ…” ஒரு வழியாக எதிரில் வந்த பேருந்து பின்னர் சென்று எங்கள் பேருந்தினைக் கடக்க, அதன் பிறகு சொன்ன வார்த்தைகள் - ”பன்னிப்பய… காது கேக்காதா? எவ்வளவு ஹாரன் அடிச்சேன்… பன்னிப்பய!” பாவம் பன்னி என்று எனக்குத் தோன்றியது. ஏன் இந்த வார்த்தைகள், ஏன் இந்த வேகம்! இத்தனை வேகம் தேவையா? இப்படி அடுத்தவரை திட்டுவது தேவையா? தேவையில்லை என்பதே எனது எண்ணம். உங்களுக்கு என்ன தோன்றுகிறது சொல்லுங்களேன்…
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
13 டிசம்பர் 2025




விமான நிலைய ஓவியங்கள் அருமை.
பதிலளிநீக்குதீர்ந்த கடன் சிறுகதையின் மாதிரியே ஒரு மாதிரி வித்தியாசமாக இருக்கிறது. சென்று வாசிக்க வேண்டும்.
திகில் பயணம் நானும் வாசித்திருக்கிறேன் என்று அங்கு சென்ற பார்த்தபின் தெரிந்தது. ஒற்றைக்கண் ஓட்டுநர் திகில் கிளப்பி இருந்தார்.
நேற்று நான் சென்று வந்த வாடகை ஓட்டுநர் வேகமாக சென்றாலும் விவேகமாக சென்றார். ஆனால் அவரும் அடிக்கடி ஒலியெழுப்பிக் கொண்டே இருந்தது எனக்கே அசௌகரியமாக இருந்தது.
திருச்சியில் புது விமான நிலையத்தின் தஞ்சாவூர் ஓவியம் மற்றும் சிலை சூப்பராக இருக்கிறது. இப்போது பல விமான நிலையங்களிலும் இப்படிச் செய்கிறார்கள். அழகுபடுத்துகிறார்கள்.
பதிலளிநீக்குகருப்புக் கண்ணாடி ரகசியம் இங்கு பார்த்ததும் நினைவுக்கு வந்துவிட்டது ஏழுமாநில சகோதரிகள் பயணக் கட்டுரையில் ஒற்றைக் கண் ஓட்டுநர்!! திகில்.
கீதா
சொல்வனத்தில் வந்த தீர்ந்த கடன் கதையின் பகுதியை இங்கு வாசிக்கும் போது அப்பெண்ணிற்கு misophonia and olphactophobia இரண்டும் இருக்கும் ஒரு கதாபத்திரம் என்று தெரிகிறது. ஆசிரியர் எப்படி இதை ஹேண்டில் செய்கிறார் எனும் ஆர்வம் எழுந்தது. வாசிக்க வேண்டும்.
பதிலளிநீக்குஇதில் இரண்டாவது பிரச்சனை இன்னும் நிறைய ஆராய்சிகள் போய்க் கொண்டிருக்கின்றன. அப்பிரச்சனை OCD, anxiety disorder இருப்பவர்கள் ஒரு சிலருக்கு இருக்க வாய்ப்புகள் உண்டு.
ஆனால் இரண்டும் சொல்லப்பட்டிருப்பதால், hypersensitive nervous system மூளையில் உள்ள உணர்வுகளுக்குக் காரணமான பகுதி மற்றும் நுகர் திறன் பகுதி இரண்டும் சேர்ந்து செய்லபடும் விதத்தில் ஒரு அப்னார்மல் செயல்பாடு என்று தெரிகிறது.
கதை எப்படி நடகர்கிறது என்று பார்க்கிறேன் ஜி
கீதா
பஞ்சமுக வாத்தியம் நேரில் வாசித்துக் கேட்டதில்லை ஆனால் சிவன் பாடல் ஒன்றில் இசையோடு கேட்டிருக்கிறேன் என்று என் அனுமானம்.
பதிலளிநீக்குதமிழ்நாட்டில் பஞ்சமுகம் என்றால் கேரளத்தில் ஒரு முக வாத்தியம் மிழா.
கீதா
விளம்பரம் சூப்பர். அந்த இளைஞர் கொஞ்சம் துல்கர் போன்று பார்க்கறப்ப டக்குனு அப்படித் தோன்றியது.
பதிலளிநீக்குகீதா
வேகம் விவேகம் அல்ல என்பதைப் பல ஓட்டுநர்கள் கவனத்தில் கொள்வதில்லை. எதையோ பிடிக்கப் போவது போல...
பதிலளிநீக்குஇரு சக்கரம் குறிப்பாக பைக்கில் செல்லும் இளைஞர்களும் அப்படித்தான் செல்கிறார்கள்.
கீதா
கதையை வாசித்தேன் ஜி. நீங்கள் சொல்லியிருப்பது போல் ஜஸ்ட் வீட்டு விஷயத்தைச் சொல்லியிருப்பது போலதான் போகிறது. முக்கியமான விஷயம் அப்பெண் திலகா. அது பற்றி அவ்வளவாக இல்லாமல், வீட்டில் நடப்பதைச் சொல்வதாகச் செல்கிறது.
பதிலளிநீக்குகீதா
விமான நிலைய ஓவியங்கள் அருமை ஏழு மாநில சகோதரிகள் திகில் பயண கட்டுரை நினைவு வந்தன
பதிலளிநீக்கு