சனி, 27 டிசம்பர், 2025

காஃபி வித் கிட்டு - 221 - Favourite Social Network - திருமலை - மார்கழி கோலங்கள் - மரணப் புன்னகை - விதம் விதமாக - பணம் - பெரியம்மா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட தில்லி போல வராது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : Favourite Social Network


இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்த ரெட் லேபிள் தேநீர் விளம்பரம்.  தேநீர் தான் இந்தியாவின் Favourite Social Network என்ற Tagline-உடன் வெளியிட்ட விளம்பரம்.  எனக்கு இந்த விளம்பரம் பிடித்தது - உங்களுக்கும் பிடிக்கலாம் - பாருங்களேன்.

******



இந்த வாரத்தின் சுற்றுலா ஸ்தலம் :  திருமலை



தமிழகத்தின் தென்காசி அருகே இருக்கும் ஒரு இடம் திருமலை.  இங்கே ஒரு அழகான முருகன் கோவில் இருக்கிறது என்று சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன். மலை மீது சுமார் 650 படிக்கட்டுகள் ஏறிச் சென்றால் ஒரு அற்புதமான சூழலில் கோவில் அமைந்திருக்கிறது என்பதை காணொளிகளில் பார்த்து திருப்திபட்டேன்.  ஆனாலும், என்றாவது ஒரு நாள் இந்த இடத்திற்குச் சென்று வர வேண்டும் என்று தோன்றுகிறது.  உங்களில் எத்தனை பேர் இந்த ஆலயம் குறித்து அறிவீர்கள், எத்தனை பேர் இங்கே சென்று வந்திருக்கிறீர்கள். பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  இணையத்திலிருந்து எடுத்த ஒரு நிழற்படத்தினை இங்கே இணைத்திருக்கிறேன்.  காணொளியாகவும் யூவில் நிறைய கிடைக்கிறது.  மாதிரிக்கு ஒரு காணொளியின் சுட்டி கீழே!


It's enough to climb this mountain and say "Murugan"! 🙏🏻❤️ - YouTube


******

 

பழைய நினைப்புடா பேராண்டி : மார்கழி கோலங்கள் – முதல் பத்து


2019-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - மார்கழி கோலங்கள் – முதல் பத்து - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


மார்கழி மாதம் முதல் பத்து நாள் கழிந்து பதினொன்றாம் நாளான இன்று, கடந்த பத்து நாட்களாக எங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பு வீட்டு வாசலில் இருக்கும் சிறு இடத்தில், தினம் தினம் போட்ட கோலங்களைத் தொகுத்து இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. கோலம் போட்ட உடனேயே முகநூலில் பகிர்ந்து கொண்டாலும், இங்கேயும் ஒரு சேமிப்பாகவும், முகநூலில் தொடராத நண்பர்களுக்காகவும், இங்கேயும் தொகுப்பாக பகிர்ந்து கொள்கிறேன்.  இருக்கும் சின்ன இடத்தில் தினம் தினம் இப்படிக் கோலங்கள் போட்டு வருவதும் மகிழ்ச்சியான விஷயம் தானே.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் சிறுகதை  : மரணப் புன்னகை


சொல்வனம் தளத்தில் சமீபத்தில் படித்த ஒரு சிறுகதை - மரணப் புன்னகை.  அடுத்தவர் வீட்டில் மரணம் எனும்போது அந்த மரணத்திற்கான வேலைகள் செய்பவர்களைப் பொறுத்தவரை சோகம் இருப்பதில்லை.  அவர்களுக்கு இது பிழைப்பு. நாம் சோகமாக இருக்கும் போது கூட அது போன்றவர்கள் காசுகேட்டு ஒரு விதமான புன்னகை புரிவதுண்டு.  சில சமயங்களில் அப்படிப் புன்னகை புரிபவர்களைப் பார்த்து கோபம் கூட வருவதுண்டு - ஆனாலும் சிறிது நேரம் கழித்து அவர்கள் மீதான கோபம் கூட விலகிவிடும் - மரணம் அவர்களுக்குப் பழகிப்போன விஷயம் என்பது உறைக்கும்போது நம் கோபமும், ஆதங்கமும் விலகத்தானே வேண்டும்.  மரணப் புன்னகை எனும் இந்த சிறுகதை - சஜு என்பவர் எழுதிய சிறுகதை கூட மரணம் நிகழ்ந்தபிறகு நடந்த விஷயங்களைச் சொல்லிச் செல்கிறது.  சில வரிகள் மட்டும் இங்கே. முழு கதையும் சுட்டி வழி தளத்திற்குச் சென்று படித்துப் பாருங்களேன். 


இனி அணியும் புதுத் துணியை அவனும் பார்க்கப் போவதில்லை, அந்த துணி அவன் உடலிலிருந்து  இனி ஒரு போதும் அகலுவதுமில்லை. சம்பிரதாய நிகழ்வுக்காக மனதில் பெரும் பாரத்துடனே  வயதைச் சொல்லி ஒரு சட்டையையும், பேன்ட்டையும் கடைக்காரரிடம் கேட்டோம்.  அளவு எவ்வளவு என்ற கடைக்காரரின் கேள்வியில் நாங்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டப் போது ” சட்ட எம் சைஸ் தானே வரும்” என்றான் விஜய் அண்ணன். “ஆமா! ஆமா! எம் தான் வரும் ” என்று அதை உறுதிப்படுத்தும் வகையில் பேசினான் அண்ணன் விமல். அவர்கள் இருவரும் சேர்ந்து முடிவெடுத்துக்  கொண்டதுப்போல் கடைக்காரரைப் பார்த்து ” எம் சைஸ்” என்றனர். குறைந்த ரேட்டில் எடுக்கவா  அல்லது கூடியது எடுக்கவா என்று கடைக்காரர் கேட்டதும். கோவில் திருவிழாவிற்கு மட்டும் தான் தன் வாழ்நாளில் புது துணி உடுக்கும் பாக்கியம் கொண்டவன் அவன். முதல் முதலாக திருவிழா அல்லாமல் வேறொரு நாளில் உடுக்கிறான். ஆனால் அதைக் காண மட்டும் தான் அவனில்லை. இனி திருவிழாவுக்கு அண்ணனிடம் சென்று காசு கேட்கவும் அவன் வரப் போவதில்லை. கடைசியாக அவன் அணிவது விலை கூடியதாகவே இருக்கட்டும் என்று கூடியது பார்த்து எடுங்க என்றேன் நான். பேன்ட் சைஸ் என்று கடைக்காரர் கேட்டதும் மீண்டும் எங்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. அவன் இடுப்புப் பெரியது அதனால் முப்பத்தி நான்கு வரும் என்று விஜய் அண்ணனும், இல்லை முப்பத்தி இரண்டு தான் என்று விமல் அண்ணனும் சொல்லிக் கொள்ளப் பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை சிறியதாக இருக்கக் கூடாது என்றான் குமார் அண்ணன். ஒருவழியாக முப்பத்தி நான்கு அளவுடைய ஜீன்ஸ் பேன்டும், நீலநிறச் சட்டையையும் வாங்கிக்கொண்டு அந்தக் கடையை விட்டு வெளியேறினோம்.


******


இந்த வாரத்தின் உணவு :  விதம் விதமாக…







தலைநகரில் இருந்தவரை தனி ஆவர்த்தனம். அன்றாட உணவுக்கு அதிகம் மெனக்கெடுவது அவசியமில்லை - அதுவும் தனியொருவனுக்காக உணவு எனும்போது புதிய முயற்சிகள் செய்வது குறைவு தான் - அதுவும் பலகாரங்கள் செய்வது இல்லை.  சப்பாத்தி, விதம் விதமான சப்ஜி என்று செய்தாலும், சிற்றுண்டி வகைகள், தேநீருடன் கொறிப்பதற்கான உணவு வகைகள் எதுவும் முயற்சித்தது இல்லை.  தலைநகரிலிருந்து பணிமாற்றம் காரணமாக வீடு திரும்பிய பிறகு இங்கே இல்லத்தரசி அவ்வப்போது ஏதேனும் செய்து கொண்டேதான் இருக்கிறார்.  சமீபத்தில் கூட Sweet Corn Balls, குணுக்கு, பூஸ்ட் மைசூர்பாக் என விதம் விதமாக செய்து தந்தார்.  இதுவும் நல்லாத்தான் இருக்கு என்றாலும் உடல் எடை அதிகம் ஆகிவிடுமோ என்ற எண்ணமும் வராமல் இல்லை!  சமீபத்தில் இல்லத்தரசி செய்த சில பதார்த்தங்களின் படங்கள் மேலே!


******


வாகனத்தில் வாசகங்கள் - பணம் :



வாகனத்தில் வாசகங்கள் பகுதியில் இந்த வாரம் பார்த்த ஒரு வாசகம் - ஆட்டோ ஒன்றில் பின் பக்கம் எழுதியிருந்தது. அந்த வாசகம் கீழே!


பணம்…

இருப்பவனைத் தூங்கவிடாது!

இல்லாதவனை வாழவிடாது!


எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்.  பணம் என்பது என்னவெல்லாம் வித்தைகள் காட்ட வைக்கிறது! பணத்திற்காகத் தானே இத்தனை ஓட்டமும் ஆட்டமும்! இங்கே உள்ள அனைவருக்குமே அவர்கள் போகும்போது எடுத்துக் கொண்டுப் போகப்போவதில்லை என்று தெரிந்தேயிருந்தாலும் பணத்தின் மீதான மோகம் ஏனோ குறைவதே இல்லை.  இது குறித்த உங்கள் எண்ணங்கள் என்ன, பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! 


******


இந்த வாரத்தின் எண்ணங்கள் - பெரியம்மா :



சமீபத்தில் ஒரு நாள் பெரியம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது “யாருமே கடிதங்கள் போடுவதே இல்லை, என்ன செய்யறது? ஃபோன்லயும் பேசறது இல்லை! நம்ம பேசணும்னா நம்மகிட்ட ஃபோன் இல்லை” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  வயது காரணமாக பல விஷயங்கள் அவருக்கு நினைவில் இல்லை.  அவ்வப்போது பழைய விஷயங்களைத் தானாக சொல்லிக் கொண்டிருப்பார்.  இருக்கும் நபர்களை இறந்ததாகவும், இறந்த நபர்களை இருப்பதாகவும் குழப்பம் அவருக்கு, மூப்பு காரணமாக உண்டு. “ஃபோன் வாங்கித் தரட்டா, வாங்கித் தந்தா யார் கிட்ட பேசுவீங்க?” என்று கேட்க, “ஃபோன் எல்லாம் வேணாம். நான் யார் கிட்ட பேசப்போறேன்.  எப்பவாது ஜெயமா கிட்ட தான் பேசுவேன்” என்றார். ஜெயமா என்பது அவரது இளைய சகோதரியான என் அம்மா… அம்மா இறந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது என்பதை அவ்வப்போது மறந்து விடுகிறார்.  நிறைய விஷயங்கள் - அதுவும் அவரது இளமைக்கால நினைவுகள் கூட அவருக்கு நினைவுக்கு இருக்கிறது ஆனால் சமீப நாட்களில் நடந்த நிகழ்வுகள் நினைவில் இருப்பது இல்லை. என்னுடைய அலைபேசியிலிருந்து அவருக்குத் தெரிந்தவர்களுடன் பேச வைப்பதுண்டு.  ஆனாலும் பலரை நினைவில் இருப்பதில்லை.  அவ்வப்போது என்னை கரையேத்திடுடா என்று அழுதுகொண்டே சொல்வார்.  முதுமை - இது குறித்த நிறைய சிந்தனைகள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கிறது.  அவரைப் பார்க்கும்போதெல்லாம், நம்முடைய முதுமைக் காலம் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.  யார் யாருக்கு என்ன எழுதியிருக்கிறதோ அது நடந்தே தீரும் என்று கடந்து போகிறேன். 

  

******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

27 டிசம்பர் 2025


11 கருத்துகள்:

  1. விளம்பரம் நன்றாக இருக்கிறது. இதுபோல ஏர்டெல் அல்லது டோக்கோமோ? ஏதோ இப்படியான அலைபேசி விளம்பரமும் கிட்டத்தட்ட இதே கருத்தில் எடுக்கப்பட்டதோ? ஏதோ பார்த்த நினைவு

    கீதா

    பதிலளிநீக்கு
  2. தேநீர் விளம்பரம் சுருக்கமாக நன்றாக இருக்கிறது.

    திருமலை பற்றி இப்போது நீங்கள் சொல்லியே அறிகிறேன்.  தென்காசியே சென்றதில்லை!

    பதிலளிநீக்கு
  3. அருமையான வாசகத்துடன் அழகான கோலங்களை மீண்டும் பார்த்து வந்தேன்.

    மரணப்புன்னகை அன்றே படித்தேன்.  கவரவில்லை.

    பதிலளிநீக்கு
  4. உணவு படங்களில் ஒன்றும், நான்கும் ஈர்க்கிறது!

    ஆட்டோ வாசங்களுக்கு அவரவர் அனுபவங்களே காரணமாயிருக்கும் என்று யோசித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. பெரியம்மாவின் நிலை நெகிழ்வு. சாதாரணமாகவே மூளையின் (நினைவு) நியூரான்கள் செயலிழக்கத் தொடங்கும்போது சமீப நினைவுகள் மறந்து போகும். பழைய நினைவுகள் பளிச்சென்று நினைவுக்கு வரும்.

    பதிலளிநீக்கு
  6. உங்களில் எத்தனை பேர் இந்த ஆலயம் குறித்து அறிவீர்கள், எத்தனை பேர் இங்கே சென்று வந்திருக்கிறீர்கள். பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.//

    இக்கோவில் பற்றி தெரியும் ஜி. செங்கோட்டை அருகில்...கேரள எல்லைன்னும் சொல்லலாம் மேற்குத் தொடர்ச்சி மலை... பைம்பொழில்...

    எனக்கு செங்கோட்டை கொல்லம் ரயிலில் ரொம்ப வருஷம் முன்னர் பயணித்திருக்கிறேன். ஆனால் இக்கோவில் போனதில்லை...

    சமீபத்தில் என் தங்கை திருவனந்தபுரத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொல்லத்திலிருந்து செங்கோட்டை வழி ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்லும் ரயிலில் சில தடவை சென்று வந்த போது, சரியாக தென்மலா என்ற காடு வழிதான் (இது கேரளத்துப் பகுதி. கொல்லம் அருகில் இருக்கும் சுற்றுலாதலம்) பயணம்..அப்போது என்னைக் கூப்பிட்டுப் பேசினாள். நீ அடிக்கடி சொல்லும் பகுதி வழியா போயிட்டுருக்கேன் ரயிலில்...நீ வந்திருந்தா நல்லாருந்திருக்கும்....இங்க தங்கி இந்த இடங்கள் எல்லாம் போய்ட்டு வரலாம்னு. அவள் இப்போதுதான் இந்த வழி பயணித்ததால் அதிசயித்துப் போனாள். ஆனால் இப்போதைக்கு என்னால் செல்ல முடியாதே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஜி உங்களுக்கு ஒரு வேளை இக்கோவில் போகும் வாய்ப்பு கிடைத்தால் 4 நாட்களேனும் இப்பகுதிக்குப் ப்ளான் பண்ணிக்கோங்க. தென்மலா வும் போய்ட்டு வரலாம்...குற்றாலமும் பார்த்த்துவிட்டு முடிந்தால் செண்பகாதேவி அருவிக்கு trek பண்ணியும் சென்றுவிட்டு வரலாம். அழகான இடங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கோலங்கள் - பழைய நினைப்பைப் பார்த்தேன் ஏனென்றால் பார்த்த நினைவு வரலை... கோலங்கள் அனைத்தும் ரசித்தேன்.

    அப்துல்கலாம் - வாசகம் ரொம்ப சரி என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. சொல்வனம் கதையை பார்க்கிறேன் ஜி.

    இதுவும் நல்லாத்தான் இருக்கு என்றாலும் உடல் எடை அதிகம் ஆகிவிடுமோ என்ற எண்ணமும் வராமல் இல்லை! //

    ஹாஹாஹா....பதார்த்தங்கள் கவர்கின்றன. நம் வீட்டில் செய்வதே இல்லை என்றாகிவிட்டது. எல்லாம் நீங்கள் சொல்லியிருக்கும் காரணமேதான்!!! ஹாஹாஹா கூடவே நான் இனியவளாகிட்டேனே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. பணம்…
    இருப்பவனைத் தூங்கவிடாது!
    இல்லாதவனை வாழவிடாது!//

    இருப்பவனைத் தூங்கவிடாது என்பது நமக்கு அனுபவம் இல்லையே!!!! சொல்லத் தெரியலை..

    இல்லாதவனுக்கும் தூக்கம் இருக்காது ஏனென்றால் அவனுக்கு அடுத்த நாள் வயிற்றுப் பிழைப்புக்கான வழியைத் தேட வேண்டுமே...அதாவன் மனம் சிந்தித்துக் கொண்டே இருக்கும்.

    இரண்டுபேருமே வாழவில்லை எனலாம். இருந்தாலும் இல்லாவிட்டாலும் 'வாழ்வது' என்பதன் அர்த்தம் அது பெரிய விஷயம்..அந்த மனநிலை என்பது எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. பெரியம்மா மனதை என்னவோ செய்துவிட்டார்.

    இப்படியான அடிப்படையில் ஒன்று எழுதி பாதியில் நிற்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....