புதன், 17 டிசம்பர், 2025

முகநூல் இற்றைகள் - நடை நல்லது - நடைபாதை கடைகள் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மாற்றங்கள் மட்டுமே மாறாதது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


நடை நல்லது - 15-12-2025:




நடப்பது நல்லது என்று தான் எப்போதும் சொல்கிறேன்.  ஆனாலும் சில நாட்களாகவே காலை நேர நடைக்குத் தடை. தினமும் காலை ஐந்தரை மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டு விடுவோம்.  ஆனால் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக அப்படி காலை வேளைகளில் நடப்பதெற்கென வெளியே வரவே முடியவில்லை.  காலை நேரங்களில் அதீத அளவில் பனி இருக்கிறது.  இதைவிட கடுமையான குளிர் பிரதேசங்களில் அதற்கான உடைகள் அணிந்து சர்வ சாதாரணமாக திரிந்திருக்கிறேன் என்றாலும் அப்போதெல்லாம் அந்தக் குளிர் என்னைப் பாதித்ததில்லை.  ஆனால் இங்கே இந்த காலை நேரங்களில் நடந்து விட்டு வந்தால் உடனடியாக ஜலதோஷம், இருமல் என்று வரப் பார்க்கிறது.  ஒரு வாரத்திலேயே அப்படி நடந்து வந்த பின்னர், வேண்டாம் இந்த விளையாட்டு என விட்டு விட்டோம்.  மாலை நேரங்களில் நடக்கலாம் என்றால் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பின்னர் வெளிவேலைகளை முடித்துக் கொண்ட பின்னர் நடக்க மனம் ஒப்புவதில்லை.  


நேற்று எப்படியானாலும் பரவாயில்லை என மாலை நேரத்தில் கொஞ்சம் நடந்தேன் - நான் மட்டும்! வீட்டை விட்டு வெளியே வந்ததும் யானையின் தரிசனம்.  இங்கே ஒரு ஜோசியரின் வீடு இருக்கிறது.  அவர் வீட்டில் அவ்வப்போது இப்படி யானைகளை வரவழைத்து பூஜைகள் நடக்கும்.  கோ பூஜை மட்டுமல்லாது கஜ பூஜையும் நடப்பதை அடிக்கடி பார்க்க நேரிடுகிறது.  பூஜைக்கு காத்திருந்த யானையை போகிற போக்கில் ஒரு படம் எடுத்துக் கொண்டேன்.  வழியில் பார்த்த காட்சிகளை எல்லாம் மனதில் அசைபோட்டபடி நடை தொடர்ந்தது.  கார்த்திகை மாதத்தின் கடைசிக்கு வந்து விட்டோம்.  கொஞ்சம் கொஞ்சமாக ஐயப்ப பக்தர்களின் கூட்டம் குறைய ஆரம்பித்து இருக்கிறது.  ஆனால் மேல்மருவத்தூர் பக்தர்கள் கூட்டம் வர ஆரம்பித்து இருக்கிறது.  இன்னும் அடுத்த சில நாட்களில் வைகுண்ட ஏகாதசி வர இருப்பதால் திருவரங்கம் முழுவதும் பக்தர்கள் வந்த வண்ணமே இருப்பார்கள்.  திருவரங்கத்தில் எல்லா நாட்களும் திருவிழா கோலம் தான்!


ஐயப்ப சாமிகளைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் நிறைய கடைகள் போட்டிருக்கிறார்கள்.  ஒலிபெருக்கி வைத்து “ஐயப்ப சாமி, ரெயின் கோட் வாங்கிக்கோ சாமி” என்று கடையிலிருந்து தொடர்ந்து ஒலி எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள்.  Recorded Voice தான் என்றாலும் தொடர்ந்து கேட்டால் அலுப்புத் தட்டக்கூடும்.  இன்னும் விதம் விதமான கடைகள்.  மாலைகள், துணி, பைகள், உணவுப் பொருட்கள் என அனைத்தும் கிடைக்கிறது.  இந்தப் பகுதிகளில் ஒரு உலா வந்தால் நன்றாக பொழுது போகும்.  எந்த நிகழ்வென்றாலும் அதிலும் சம்பாதிக்க வழி இருக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.  ஆனாலும் சம்பாதிக்க வழியில்லை என்று புலம்பும் மக்களையும் இங்கே பார்க்கத்தான் செய்கிறோம்.  உழைப்பின்றி சுலபமாக, இலவசமாக அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். 


இப்படியான எண்ணங்களுடன் நேற்றைய மாலை நேர நடை நன்றாகவே கழிந்தது. விரைவில் நடை தொடர வேண்டும்.  அப்படித் தொடர்ந்தால் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 


*******


நடைபாதை கடைகள் - 16-12-2025:


மலைக்கோட்டை தெப்பக்குளத்தினைச் சுற்றி இருந்த அனைத்து நடைபாதைக் கடைகளையும் அகற்றி விட்டார்கள். Non Vending Zone என்று சொல்லி இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் அந்தப் பக்கம் சென்ற போது அந்தக் காட்சிகளைப் பார்த்தேன். ஏனோ மனம் ஒப்பவில்லை. அங்கிருந்த கடைக்காரர்களுக்கு வாழ்வாதாரம் காரணமாக வேறு இடம் கொடுத்து விட்டனர் என்றாலும் இந்த மீட்கப்பட்ட இடம் என்ன ஆகும் என்ற கேள்வி மனதில் எழுந்தது.


ஏற்கனவே அந்த இடங்களில் நிறைய இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி இருப்பதை பார்க்க நேர்ந்தது. வேறு ஏதும் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனில் மீண்டும் அந்த இடம் வேறு வித பயன்பாட்டிற்கு வந்துவிடக்கூடும். தெப்பக்குளத்தைச் சுற்றிலும் பெரிய கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தி உள்ளார்கள். அங்கே சென்று குளத்தை சில படங்கள் எடுத்தேன். எப்போதும் குளத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கவலை இருக்கும். கடைகள் அகற்றப்பட்ட பின்பும் குளத்தில் குப்பை போடுவது நிற்கவில்லை என்றே தோன்றியது. 


வழக்கம் போல கடைவீதி உலா, தேவையானவற்றை வாங்குவது, ஜிகர்தண்டா சுவைப்பது, என வழமையான வேலைகள் தான். வருடம் முடியப்போகிறது..... அடுத்த வருடம் வரப் போகிறது என்பதால் பல இடங்களில் Daily Sheet Calendar, Monthly Calendar விநியோகம் நடக்கிறது. தேவையோ இல்லையோ போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறார்கள். எப்படியும் ஒரு Calendar அல்லது இரண்டு பயன்படலாம்..... நிறைய வாங்கினால் என்ன செய்வார்கள் என்று தோன்றியது..... எனக்கு எப்போதுமே இந்த Calendar, டைரி போன்றவற்றின் மீது ஆர்வம் இருந்ததில்லை. தில்லியில் இருந்தவரை கிடைத்த டைரி அனைத்தையும் விநியோகம் செய்து விடுவதே வழக்கமாக இருந்தது. உங்களுக்கு Calendar, டைரி வாங்கிக் கொள்ளும் பழக்கம், அதன் மீது மோகம் இருக்கிறதா? சொல்லுங்களேன்.....


தெப்பக்குளம் அருகே எடுத்த சில நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு....





*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

17 டிசம்பர் 2025


10 கருத்துகள்:

  1. அந்தக் கால திருச்சிவாசி என்ற முறையில் தெப்பக்குளத்தை சுற்றி இருந்த நடைபாதை கடைகள் நீக்கப் பட்டது எனக்கு சந்தோஷமே. அந்தக் கடைகள் அதன் தோற்றத்தை கெடுத்துக் கொண்டிருந்தன.

    பதிலளிநீக்கு
  2. திருச்சி பனிக்கு கோபம்...  'என்னை சந்திக்க இவ்வளவு வருடங்கள் ஆச்சா?  டெல்லி குளிர்தான் உங்களுக்கு ஒஸ்தியா போச்சா?' என்று.  அதுதான் செல்லமாக பாதிக்கிறது!!  எப்படியும் போகி வரை பனி இருக்கும் என்று நம்பலாம்.  

    பதிலளிநீக்கு
  3. மேல்மருவத்தூருக்குக் கூட அடிகளார் இருந்தபோது இருந்த கூட்டம் வருவதில்லை.  சமீபத்து பயணங்களில் இதைப் பார்த்து நாங்கள் இதைப்பற்றி பேசிக்கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  4. // Recorded Voice தான் என்றாலும் தொடர்ந்து கேட்டால் அலுப்புத் தட்டக்கூடும். //

    இருபது இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வாசகங்களைத் தேர்வு செய்து கொண்டு, அதை பேசி பதிவு செய்து ஒலிபரப்பினால் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்.  முதலில் கேட்ட வார்த்தை ரிப்பீட் ஆக நேரம் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  5. குளங்களின் அருகே இருந்த கடைகளை பெரிய கர்மவீரர்கள் போல காலி செய்து, அரசாங்க அராஜகவாதிகள் அந்த இடத்தை ஆக்ரமிக்கக் கூடும்.   சமீபத்தில் நான் கூட GRT சென்று வந்தபோது ஐந்து கேலண்டர்கள் கேட்டு வாங்கி கொண்டேன்.  GRT காலெண்டர்கள் விசேஷம்.  நன்றாயிருக்கும்.  நெருங்கிய உறவுகளுக்கோ, நட்புகளுக்கோ கொடுத்து விடுவோம்.

    பதிலளிநீக்கு
  6. உண்மையிலேயே வடக்கில் பனியை விட இங்கு பனி கொஞ்சம் படுத்துகிறதுதான். ஆனால் இங்கும் இப்போது பழகிவிட்டது. பெங்களூரில் இந்த வருடம் சற்று கூடுதல்தான் என்றாலும் பல வருடங்களுக்கு முன்னான பெங்களூர் போன்று குளிர் இல்லைதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு வித கடைகள் வந்துவிடுகின்றன. சீசனல் வியாபாரிகளுக்கு அது அவர்களின் வாழ்வாதாரம்.

    புலம்புபவர்களில் ஒரு சிலருக்கு ஒன்று அவர்களுக்கு வியாபார நுணுக்கங்கள் தெரியாததால் இருக்கலாம் இல்லைனா அவங்க பக்கம் காத்து அடிக்காததாலும் இருக்கலாம். அதாவது என்ன தொடங்கினாலும் வருவாய் இல்லாமல்.

    ஆனால் உழைக்காமல் புலம்புபவர்களை என்ன சொல்ல?

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கோவில்களின் அருகே கடைகள் இருந்தால் அது ஒரு தனி அழகு என்று தோன்றும். கலகலப்பு பொழுது போகும் ஒன்றாகவும்.

    இப்படிக் கடைகளை அகற்றிவிட்டு என்ன செய்யப் போகிறார்களோ?

    குளத்தின் படங்கள் அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. குளத்தின் படத்தில் அந்த சர்ச் வடிவம் சூப்பராக இருக்கு. குளத்தில் மண்டம் அருகில் என்னவோ எல்லைக் கோடு போல போட்டு வைச்சிருக்காங்க? எதுக்காக இருக்கும்?

    கீதா

    பதிலளிநீக்கு
  10. மாலை வேளைகளில் இங்கே Light and Sound Show நடந்தது. அப்போது செய்யப்பட்ட வேலை இது. இப்போது நடப்பதில்லை. விளக்குகள் மட்டுமே இருக்கிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....