ஞாயிறு, 7 டிசம்பர், 2025

அப்பா - ஓடிய ஒரு வருடம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******




7-ஆம் தேதி 2024-ஆம் வருடம்… இந்தப் பதிவினை வெளியிடும் இதே நேரம் என் அப்பா எங்களை எல்லாம் விட்டுச் சென்று விட்டார்.  இரவு தூங்கியவர், இரவு இரண்டு மணிக்குக் கூட உயிருடன் இருந்தவர், காலை ஐந்து மணிக்கு இல்லை.  எப்போது இறந்தார் என்பது தெரியாமல் துயிலிலேயே, மீளாத் துயிலை தழுவிக் கொண்டார்.  கிட்டத்தட்ட ஒரு மாத காலம் மருத்துவமனை, வீடு என மாற்றி மாற்றி கஷ்டப்பட்டு, இதே நாளில் சென்ற வருடம் இறைவனடி சேர்ந்தார்.  காலம் தான் எத்தனை வேகமாக ஓடி விடுகிறது.  ஏதோ நேற்று தான் நடந்தது போல நடக்கும் விஷயங்கள், நம்மை கலங்க வைக்கும் விஷயங்கள் எத்தனை வேகமாக நகர்ந்து விடுகின்றன.  காலம் எல்லா பிரச்சனைகளுக்கும், எல்லா வித துயரங்களுக்கும் தீர்வு என்று சொல்வது எத்தனை உண்மை. அந்த நேரத்தில் பிரச்சனையாகத் தெரியும் எந்தவொரு விஷயமும் சில மணித்துளிகள், சில நாட்கள், சில மாதங்கள் என ஏதோ ஒரு காலகட்டத்தில் பெரிதாகத் தெரிவதில்லை - நெருங்கியவரின் இழப்பு உட்பட! 

நமக்கு மிகவும் நெருங்கிய உறவு, நாம் மதிக்கும் ஒருவர் நம்மை விட்டு இயற்கையின் காரணமாக பிரிந்து விட, அந்த நேரத்தில் துயரமாக இருந்தாலும் சில மாதங்களில் மறைந்து, மறந்தும் கூடப் போய்விடுகிறது.  அவ்வப்போது பிரிந்தவர்களின் நினைவு, அவர்கள் குறித்த சிந்தனைகள் வந்து போனாலும், அவர்களையே நினைத்து உருகிப் போகும் மனிதர்கள் லட்சத்தில் ஒருவர் என்று சொல்லும் அளவிலேயே இருப்பார்கள் என்று தோன்றுகிறது.  தில்லி நகரில் நான் இருந்த போது, அதுவும் சில வருடங்களுக்கு முன்பு வரை நான் இருந்த பகுதியில் எந்த தமிழர் வீட்டில் யார் இறந்தாலும் உடனடியாக என்னைப் போன்ற சிலருக்கு அழைப்பு வந்து விடும்! அனைவருக்கும் உதவியாக இருந்து கடைசி வரை எல்லா வேலைகளையும் செய்து முடித்து வீடு திரும்புவோம்.  எத்தனையோ உயிரிழந்த உடல்களை பாடையில் வைத்து கட்டியிருக்கிறேன், எத்தனையோ உடல்களை தூக்கிச் சென்றிருக்கிறேன் - அதற்குக் கணக்கே இல்லை. 


அப்படிச் சென்ற வீடுகளில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் தான் எத்தனை எத்தனை.  இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்த காலத்தில் பிரட் பக்கோடா என்று ஒரு சிறு பதிவு எழுதினேன். இப்போது எழுதுவதாக இருந்தால் இன்னும் விஸ்தாரமாகக் கூட எழுதியிருப்பேன் என்று தோன்றுகிறது.  பெற்ற மகன் இறந்தபோது, குலுங்கிக் குலுங்கி அழுது, அவனோட என்னையும் சேர்த்து கூட்டிண்டு போங்கடா என்று சொன்ன அந்தப் பாட்டி அதே நாள் மாலையில் அவர் சாப்பிட்ட பிரட் பக்கோடாவில் உப்பு ஜாஸ்தி என்று சொன்னது இன்று வரை மனதில் பசுமையாக இருக்கிறது! இது போன்ற எத்தனையோ அனுபவங்கள். ஆனால் அவை அனைத்துமே அடுத்தவர்களுக்கு, வேறொருவர் வீட்டில் நடந்தது.  ஆனால் எங்கள் குடும்பத்தில் - இத்தனை நெருக்கத்தில் ஒரு இறப்பு - அதுவும் நேரடியாக சம்பந்தப்பட்டது எனில் அப்பாவின் இறப்பு தான்.  


அப்பா இறந்தபோது ஏனோ நான் அழவேயில்லை - அழத் தோன்றவும் இல்லை.  அவர் மருத்துவமனையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது பார்க்க வேதனையாகவே இருந்தது.  “என்னை வீட்டுக்குக் கூட்டிண்டு போடா” என்று ICU-வில் இருந்தபோது கேட்டது இன்றைக்கும் மனதில் அப்படியே உட்கார்ந்து கொண்டு மனதை விட்டு அகலமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.  அவரை மேலும் கஷ்டப்பட விடாமல் ஆண்டவன் அழைத்துக் கொண்டானே என்று தான் அப்போது தோன்றியது.  நான் அழாமல் இருந்தது பலருக்கும் - எனது உறவினர்களில் பலருக்கும் ஒரு குறையாகவே இருந்தது.  சிலர் முதுகுக்குப் பின்னர் சொல்லவும் செய்தார்கள்.  ஆனாலும் எனக்கு அழுகை வரவில்லை.  என்னைப் பொறுத்தவரை அவர் நெடுநாட்கள் கஷ்டப்படாமல் போனாரே என்ற எண்ணம் மட்டுமே அப்போது இருந்தது.  இது போன்ற சமயங்களில் அழுவதும், அழாமல் இருப்பதும் அவரவர் மனநிலையைப் பொறுத்ததே என்பதைப் புரியாத மனிதர்கள் அவர்கள் என்று தான் தோன்றுகிறது எனக்கு. 


அப்பா - அவருடனான எனது நினைவுகள் பல விதங்களில் இன்றைக்கும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த நினைவுகள் எனது கடைசி மூச்சு வரை இருந்து கொண்டே தான் இருக்கும்.  எத்தனையோ விஷயங்கள் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாதவையாக இருக்கும்.  அது போலவே அப்பா - மகன் உறவும்.  வீட்டில் யாரும் இல்லாமல் நானும் அப்பாவும் மட்டுமே இருக்கும்போது மனம் திறந்து பேசியிருக்கிறார் - அதுவும் கடைசி காலங்களில். அந்த சம்பாஷணைகளை நான் யாரிடமும் பிரஸ்தாபித்தது கிடையாது.  அது தேவையற்றதும் கூட!  அந்த மாதிரி நேரங்களில் நாங்கள் பேசிக் கொண்டது அவ்வப்போது நினைத்துக் கொள்கிறேன்.  அவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்பதே அவர் எனக்கு அந்த நேரங்களில் சொன்னதும் கூட! பொதுவாகவே அப்பா - மகன் உறவென்பது பெரிதாகச் சொல்லிக் கொள்ளப்படுவதில்லை.  அது போலவே எங்களின் உறவும். 


அவர் எனக்கு எழுதிய கடிதங்கள், அதுவும் அம்மாவுக்குத் தெரியாமல் எழுதிய கடிதங்கள், வீட்டில் அவர் தனிமையில் இருக்கும் போது என்னை தொலை(அலை)பேசியில் அழைத்து பேசிய விஷயங்கள் என எத்தனையோ நினைவுகள் என்னிடம் உண்டு.  நேரடியாக சொல்ல முடியாத விஷயங்களை கடிதத்தில் எழுதி அனுப்புவது அவருக்குக் கைவந்த கலை - என்ன ஒன்று, ஆரம்பகாலத்தில் அவர் எழுதியதெல்லாம் 15 பைசா போஸ்ட் கார்டில்! கீழ் வீட்டில் இருந்த பெண்மணி, அலுவலகத்தில் கடிதம் எடுத்துத் தரும் அசோகன் எனும் மலையாளி என ஒரு சிலர் எனக்கு முன்னதாகவே அந்த போஸ்ட் கார்டை படித்து விஷயங்களைத் தெரிந்து கொள்வார்கள் என்பது தான் அதில் இருந்த ஒரு வேதனை! இப்போது நினைத்தால் அவரது இந்தச் செயல் கூட தவறாகப் படுவதில்லை.  பல முறை அவரிடம் சொன்ன பிறகு தான் போஸ்ட் காரிலிருந்து Inland Letter-க்கு மாறினார்.  நிறைய விஷயங்கள் எழுத வேண்டியிருந்தால் ஐந்து ரூபாய்க்கு Cover வாங்கி உள்ளே பேப்பரில் எழுதி வைத்து அனுப்புவார்.  யாருக்கும் தெரிய வேண்டாம் என “படித்ததும் கிழித்து விடு!” என்று வேறு பின்குறிப்பு எழுதி இருப்பார்!


இப்படி நிறையவே சொல்லிக் கொண்டே போகலாம்.  அப்பா - மகன் உறவு குறித்து வேறு யாருக்கும் புரிவதில்லை - அம்மா உட்பட! எத்தனையோ விஷயங்களில் அவர் என்னிடமும், நான் அவரிடமும் கோபத்தினை காட்டியிருக்கலாம் என்றாலும் என்றைக்கும் எங்களிடையே இருந்த பரஸ்பர அன்பு மாறவில்லை.  அதனை மற்றவர்கள் உணர வேண்டும் என்ற எண்ணமும் இருந்ததில்லை! பொதுவாகவே அப்பா - மகன் உறவென்பது இப்படித்தான் பேசப்படாமலேயே போய்விடுகிறது என்று தோன்றுகிறது.  இன்றைக்கு இந்தப் பதிவினை பார்க்கும் சிலர் நினைக்கலாம் “ஏன் இப்படி எழுதியிருக்கிறான்? எல்லாம் வெளி வேஷம்!” என்று கூட நினைக்கலாம்.  அது தான் உலகம்.  அப்பா மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.  ஒரு வருடம் ஆவதற்குள், “மல்லிகாப்பா! நானும் வந்துடறேன்” என்று அம்மாவும் சென்று விட்டார்.  எங்கேயிருந்தாலும் இணைந்தே இருக்கட்டும்… 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

7 டிசம்பர் 2025


2 கருத்துகள்:

  1. ஒருவரால் மறக்கமுடியாதவர்கள் அவர்களின் பெற்றோர்.

    நிகழ் காலம், ஒருவரை, அவரது குழந்தைகள், மனைவி என பாசத்தைக் காண்பிக்க வைத்தாலும், அப்பா, அம்மாவிற்கு ஈடு இணை இருக்கமுடியாது. நம்மை வளர்த்தவர்கள் அவர்கள்.

    அந்த உறவு, மனதின் நெருக்கம், என்றும் மறையாது. நாம் கோபித்துக்கொண்ட தருணங்கள், நாம் அவர்கள்மீது வெறுப்புற்ற தருணங்கள், இப்போது நினைத்தால் நாம் எவ்வளவு குழந்தைத்தனமாக நடந்திருக்கிறோம் எனப் புரியும்.

    காலம் நினைவுகளை மாத்திரமே நம்மிடம் இருக்கவைத்துவிட்டு ஓடிவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  2. உண்மையிலேயே, அப்பா மகன் உறவு தனி அது பேசப்படுவதில்லை என்பதும் உண்மை.

    இருவரின் அதுவும் நம் நெருங்கிய சொந்தங்களின் இழப்பின் போது அழ வேண்டும் என்பதெல்லாம் இந்த சமூகம் சொல்லும் கோட்பாடுகள். மனதில் நெருக்கமும் அன்பும் இருக்கும்...அதை வெளிப்படுத்த வேண்டும் என்பதும் இல்லை.

    பாருங்கள் உங்களோடு அவர் தன் உணர்வுகளை இரகசியமாகப் பகிர்ந்து கொண்டதே கூட உங்கள் மீதான அசாத்திய நம்பிக்கை..அன்பு...நண்பன் போன தோழமை....வாவ்....அது எவ்வளவு பெரிய விஷயம் இல்லையா...கிரேட்....

    நான் அப்பா மகன் அன்பு ஓர் வடிவத்தில் எழுதி வைத்திருக்கிறேன் கிட்டத்தட்ட இதே பாயிண்ட் கல் தான்...

    சமூகத்தைப் பற்றி கவலை வேண்டாம்...என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கட்டும் ...நான் நாமாக இருப்போம்....நம் மன உணர்வுகள் நமக்கு மட்டுமே புரியும்...

    உணர்வுபூர்வமான பதிவு ஜி

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....